About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, November 24, 2011

மாமல்லை தலசயனப் பெருமாள்

அருள்மிகு பூதத்தாழ்வார்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மகனின் குடும்பம்  இங்கு வந்து   தங்கின  அக்டோபர் மாதம்  எப்படியாவது என்னை ஸ்ரீரங்கமாவது அழைத்துப் போக வேண்டும் என்று  சொல்லி இருந்தான்.


பலப்பல  வேலைகளைக்கு நடுவில் அந்த இரண்டு நாட்கள் விடுப்பு எடுப்பது கூடச்   சிரமமாக   இருந்தது.
அதனால் சோர்ந்து போய்விட்டேன்.
அப்பொழுதுதான்   விஜய் தொலைக்காட்சியில்  ஆழ்வார்கள்
தரிசனம்  தொடரில்   பூதத்தாழ்வார்   சம்பந்தப் பட்ட செய்திகளைத் தொகுத்துக் கொடுத்ததைப் பார்க்க நேர்ந்தது.
கடல்மல்லை சிறப்பையும் , பூதத்தாழ்வார்   அவதரித்த   பெருமைகளையும்
வெகு அழகாகச்   சொல்லி, மல்லையில் உறையும் தல  சயனப் பெருமாளின் அவதார    வைபவத்தையும்  சொன்னார்கள்.

பல் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையாக இருக்க வேண்டும்.

கடவுளே   நேரே வந்தார் என்றால் , அந்தக் காலமாகத்தான்  இருக்கும்.
புண்டரீக மஹரிஷி என்ற முனிவர் திருமாலிடம்     அளவிறந்த   பாசம் வைத்தவர்.
கடல்மல்லையில் வசித்துவந்தவருக்கு நாளுக்கு  நாள் பெருமாளை நேரில் காணும்  ஆசையும் ஏக்கமும் அதிகரிக்க,
பாற்கடலில் தானே அவன் இருக்கிறான்,  இதோ கண்முன்னால் கடல் இருக்கிறது, இந்தத் தண்ணீரை  இறைத்துவிட்டால்  அவனைத் தரிசித்து விடலாம் என்று முழு முயற்சியில் இறங்கினார்.
அந்தச் சித்திரம் தான் மேலே   இருக்கிறது.

சற்று யோசித்தால்  நம் போன்றவர்களுக்கு   இந்த நடவடிக்கை
சாதாரண   மனநிலையில்   இருப்பவர்கள் செய்யும் காரியமாகத் தெரியாது.
அவரோ மனித எல்லையைக் கடந்த பூரணர்.
தன்   பெருமாள் தன்னை ஆளவருவான் என்ற பரிபூரண  நம்பிக்கை
அவரை அசராமல்  உழைக்க வைத்தது. எத்தனை ஆண்டுகள் கடந்தனவோ
...தண்ணீர் வற்றும்   அடையாளமே தெரியவில்லை.
போகிறவர்கள் வருகிறவர்கள்  எல்லாம் சிரித்துவிட்டுப் போனார்கள்.

அசராமல்  தண்ணீரை இறைப்பதும்   கரையில் கொண்டு போய்க் கொட்டிக்
கொண்டிருக்கும் தன் அடியானைப் பார்த்து மனம் கரைந்தார் பகவான்.

ஒரு நல்ல பகல்  வேளையில் ஒரு வயோதிகராக முனிவர்  முன் தோன்றினார்.
கருமமே கண்ணாயிருந்தவர் கண்ணுக்கு இந்தப் பெரியவர் எதற்கு வந்திருக்கிறாரோ என்று  விசாரம் எழுந்தது.
வேலையை நிறுத்தாமல் என்ன வேண்டும் ஸ்வாமி  என்று வினவ,
மிகவும் பசியாக இருக்கிறது,.

கொஞ்சம்  உணவு  ஏதாவது  கிடைத்தால் தான் உயிர் தங்கும்  என்று
சொல்கிறார்.
புண்டரீக  ரிஷிக்கோ  தர்மசங்கடம்.
கைவேலை அதுவும் கடவுளைக் காணும்  வேலை , இதை விட்டுச் செல்வதா என்று  யோசிப்பதைப் பார்த்ததும் நான் உங்கள் வேலையைப் பார்க்கிறேன் ,
நீங்கள்   உணவு  எடுத்து வாருங்கள்'' என்று சொல்ல, சரிவயோதிகரைப் பட்டினி போடுவது   மிகவும் பாவம் என்று,'இதோ வருகிறேன்' என்று ஊருக்குள் சென்று     உணவுக்கு ஏற்பாடு செய்து
திரும்புகிறார்.
கடற்கரையில் கிழவரைக் காணோம்,
கூவி அழைத்துப் பார்க்கும் போது இன்னோரு குரல் கேட்கிறது. ''இங்கெ
வாரும்  ரிஷியே  என்ற  குரல் வந்த திசையைப் பார்த்தவருக்கு உடலெல்லாம் பரவசத்தில் நடுங்குகிறது. அங்கெ தரையிலேயே   படுத்திருக்கிறான்
கார்வண்ணன்.
வலது   கரம் சற்றே மேலே தூக்கி  வா என்று அழைக்கிறது.

பாற்கடலில் , ஆதிசேஷனின்  அரவணையில் ஸ்ரீதேவி பூதேவி  சேவை செய்ய
துயில் கொள்ளும் பரந்தாமன்
தனக்காக  இங்கே தரையில் படுத்துத் தரிசனம் கொடுத்தானே  என்று உருகுகிறார்.

இவ்விதம் உருவான கோவில் தான் கடல் மல்லை ஸ்தல சயனப் பெருமாள்
  சரிதான்  அந்த ரங்கனைப் போய்ப் பார்க்க முடியாவிட்டால் என்ன,  இவரும் தான் சயனம் கொண்டிருக்கிறார்.
எல்லாம்  ஒன்றுதானே   என்று மகனிடம் கேட்க அவனும் சரியென்று சொல்ல
ஒரு மாலை நேரம்  ஒரு மணி நேரப் பயணத்தில் மாமல்லபுரம் அடைந்தோம்.
  கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது போல. நான் பத்துவருடங்களுக்கு முன் பார்த்த போது   இருந்த பழைய கோவில் இல்லை. எல்லா சந்நிதிகளும் பளிச்சென்று இருந்தன.
பெருமாளுக்கு அர்ச்சனை செய்பவரும்    பொறுமையாகத் தலபுராணம் சொல்லி, பெருமாளின் அழைக்கும்  வலக் கரத்துக்கும் தீப தரிசனம் செய்து வைத்தார்.

முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வார்
சந்நிதியையும்  திறந்து  காணக் கொடுத்தார்.

மனதில் அவனை இருத்திவிட்டால்  வேறேங்கும் தேடவேண்டாம்
என்று என்னையே சமாதானப் படுத்திய  அந்தக்   கடல்மல்லையானுக்கு நமஸ்காரங்கள்.20 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இவரும் தான் சயனம் கொண்டிருக்கிறார்.
எல்லாம் ஒன்றுதானே:)
அதானே.. பேரை ஊரை,மாத்திட்டா ஆச்சா.. போஸ் எதோ அதே தானே...சமாதானமாப்போய்டுவோம்..:))

அமைதிச்சாரல் said...

அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வு வல்லிம்மா.. மனசில் இருப்பவந்தானே கோயிலிலும் இருக்கிறான் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க..

கணேஷ் said...

உங்கள் மூலம் ஸ்தல சயனப் பெருமாளை மீண்டும் தரிசித்து மகிழ்ந்தேன். நன்றிம்மா...

ஸ்ரீராம். said...

அழகிய படங்களுடன் நல்ல பகிர்வு.
"அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்...அவன்தான் வைகுண்டனே..."

இராஜராஜேஸ்வரி said...

மனதில் அவனை இருத்திவிட்டால் வேறேங்கும் தேடவேண்டாம்
என்று என்னையே சமாதானப் படுத்திய அந்தக் கடல்மல்லையானுக்கு நமஸ்காரங்கள்.

நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கயல்.வீட்டை விட்டு நகர முடியவில்லை என்று எப்ப பார்த்தாலும் மறுபாதியைப் படுத்தி எடுத்துவிடுவேன். அவருக்கோ என்னை மாதிரி பயணங்கள் அவ்வளவாகப் பிடிக்காது.
பசங்க வரும்போது கோவில் குளம் கிளம்ப ஒன்றும் சொல்லமாட்டார்:)

வல்லிசிம்ஹன் said...

அது உண்மைதான் சாரல்.மனசில் இருப்பவனை அலங்காரங்களுடன் நேரில் பார்த்தால் ஆஹா என்று புது உற்சாகம் கிளம்புகிறது. கோவில்களில் கிடைக்கும் நிம்மதியே தனிதான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். நீங்களும் அந்தப் பெருமானைத் தரிசித்திருக்கிறீர்களா. பக்கத்தில் திருவல வெந்தையும் இருக்கிறார். நேரமானதால் போக முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அந்தரங்கம் அறிந்தவன் அவன் ஒருவந்தான். அடிக்கடி அழைத்தால் போகலாம் ஸ்ரீராம்.பெட்ரோல் விலை எல்லாம் பார்த்து வீடே கோவில் என்று இரும்மான்னு சொல்கிறானோ என்னவோ:)

Kailashi said...

பெருமாளின் அருமையான தரிசன்ம் கிட்டியது வல்லிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்... நல்லதோர் பகிர்வும்மா....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்! நல்ல பதிவு. விரும்பிப் பார்த்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

கோமதி அரசு said...

மனதில் அவனை இருத்திவிட்டால் வேறேங்கும் தேடவேண்டாம்
என்று என்னையே சமாதானப் படுத்திய அந்தக் கடல்மல்லையானுக்கு நமஸ்காரங்கள்.//

நானும் சொல்லிக்கிறேன் கட்ல்மல்லையனுக்கு நமஸ்காரங்கள் அக்கா.


ரங்கனை நினைத்து கடல்மல்லையனை சேவித்தீர்களா!

சிவகுமாரன் said...

நான் அறியாத கதை.
கடவுளை காண கடலையே இறைத்த கதை. பிரமிக்க வைக்கிறது.
நன்றி மேடம்.
www.arutkavi.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

வரணும் கைலாஷ்ஜி.
உங்கள் கருத்து மிகப் பெருமைப்பட வைக்கிறது. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிகமிக நன்றி வெங்கட். காமிராவை எடுத்துப் போகவில்லை.
அது கையில் இருந்தால் இன்னும் படங்கள் எடுத்திருக்கலாம்.
கைகளைக் கும்பிட மட்டும் உபயோகப் படுத்த வைத்தார் இந்தப் பெருமாள்:)

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன்.
தங்கள் முதல் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி.
ஸ்ரீரங்கனார் பெரிய பெருமாள். அவரை அணுக இன்னும் கூடக் கொஞ்சம் பிரயத்தனம் எடுக்கணும்.
இவரோ அருகிலும் இருக்கிறார்.சயனக் கோலமும் வேற.அப்படி நினைத்துத் தான் போனேன்.அவரைப் பார்த்த பிறகு
மனம் ஒருமைப் பட்டு ஆநந்தம் மிகுந்தது. அதுதான் அங்க ரங்கவிஷயம்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவகுமரன். இன்னும் தெரியாத கதைகள் எத்தனையோ இருக்கிறது. தேடத் தேட அரியவிஷயங்கள் கிடைக்கின்றன.
வருகைக்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, கிடைப்பதைத் தான் அனுபவிக்கணும். வேற வழி?அந்தப் பெருமாள் அருள் அன்று எனக்குக் கிடைக்க அவன் நினைத்துவிட்டான்.