Blog Archive

Tuesday, September 20, 2011

அன்பாலே வளரும் உறவுகள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1966இல் ஒரு  ஆண்டு நிறைவு.
ஐப்பசி மழை  விடாமல்  கொட்டுகிறது.
இன்னும் 4  நாட்களில்  எங்கள் முதல் மகனுக்கு   முதலாம் ஆண்டு   நிறைவு
  வருகிறது.
சேலத்திலிருந்து சென்னைக்கு வரச் சொல்லி மாமியார் சொல்லிவிட்டார்.

குடும்பத்துக்கு முதல் பேரன் .அவனுக்கு ஆண்டுவிழா சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டும். ஆடம்பரம் வேண்டாம்.

அந்தப் பெரிய வீடுகொள்ளும் அளவுக்கு மனிதர்கள் வந்தால் போதும்.
மறையுணர்ந்த முதியோர் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்லி மந்திரங்கள்
உரைத்தால் போதும் என்றதும்
,  சேதி தாங்கி வந்த கடிதத்திற்கு ''சரி''  சொல்லிப் பதிலும் எழுதிவிட்டேன்.

எப்பொழுதும் பெரியவன் பிறந்தநாளுக்கு முதல் நாள் தீபாவளி வரும்.
அதனால்
தீபாவளிக்கு வாங்கின  துணிமணிகள். அப்பொழுது பிரபலமாக இருந்த
ரயான் மிக்ஸ் (சின்னாளப்பட்டு இல்லை) புடவை  30 ரூபாய்க்கு வாங்கியாச்சு.
குழந்தைக்கும் குட்டி குட்டி சட்டைகளும் காலை இறுக்கப் பிடிக்கும் ட்ரௌசரும் வாங்கியாச்சு.
சிங்கத்துக்குக் கால்சராயும் வெள்ளை வர்ண டெரிகாட்டன்  சட்டை(அலுவலகத்துக்கு அதுதான் தோதுப்படும்.)

சேலம் ரயில் நிலையத்திலிருந்து வெகு பக்கத்தில் இருந்த
ஒரு இடத்தில் தான் அப்போது குடியிருந்தோம்.

எப்பவும் போல ரயில் கிளம்ப ஒரு மணி நேரம் இருக்கும் போது
வந்தவர், தான் குளித்து எங்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு
போய் நிற்கவும் சென்னை செல்லும்  இரவு ரயில் வரவும்  சரியாக இருந்தது.

நீலகிரி எக்ஸ்ப்ரஸ் என்று நினைக்கிறேன்.
ஒரே பெட்டி  மூன்று பேரின் துணிமணிகள் அடங்கியாச்சு.

ஒரு பிரம்புக்கூடை. வெந்நீர்  கொட்டி வைத்த  ஃப்ளாஸ்க்.
அமுல்ஸ்ப்ரெ  டப்பா.
எதுக்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஃபீடிங் பாட்டில்கள்.

எப்பப் பார்த்தாலும் அப்பா தோளில் தான் சவாரி பையனுக்கு.
அம்மாவிடம் சாப்பிட மட்டும்தான்   வருவார்.

சென்னை வந்து இறங்கினதிலிருந்து மழைதான். டாக்ஸி பிடித்து மைலாப்பூர்
வந்துசேர்ந்தோம்.
வாயில் கேட்டிலிருந்து வீட்டுக்குள் போவதற்கே ஐந்து நிமிடம் பிடிக்கும்.
குடையை எடுத்துக் கொண்டுவந்த மாமனார், என்னடா உன் பிள்ளை இத்தனை ச்சோனியா இருக்கான்!

சரியாக் கவனிப்பது இல்லையா.
அடுத்தாப்பில தாத்தா, (மாமனாரின் தந்தை)குழந்தையை ஒண்ணும் சொல்லாதடா. பாவம் பாலாரிஷ்டமா இருக்கும்.
வெங்கட்ரமண வைத்திய சாலையில் எண்ணெய் வாங்கித் தேய்த்துக் குளிப்பாட்டினால்  நிகு நிகுனு  ஆகிடுவான்.

ஆஜிப்பாட்டி வந்தார். குழந்தைக்கு பால் போறாது. நம் வீட்டுப் பால் சாப்பிட்டால் ஒருமாதத்தில் தேறிவிடுவான்.
மாமியார் கமலம்மா வந்தார், என்னைத் தனியாக அழைத்தார்,'முதல்ல போய் மாடியில்
பெட்டியை வைத்துவிட்டுக் குளித்துவிட்டு வா, பிறகு குழந்தையைப் பற்றிப்
பேசலாம்'' என்று எங்களை மாடிக்கு அனுப்பினார்.

இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டே ,பையன்  வாயில் விரலை வைத்துக் கொண்டு  சிரித்தான்.

எனக்குத் தெரியும். அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று.
நீங்க சொல்றதெல்லாம் சொல்லுங்க. நான் சாப்பிட மாட்டேன்''  என்பதுதான்:)

இப்ப  இந்த சம்பவம்  நினைவுக்கு  வருவதற்குக் காரணம்

66இல் பிறந்த  பெரியப்பாவின்  தம்பி பையனுக்குக் கடவுள் கிருபையில்
ஆண்டு நிறைவு இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது.
இப்பொழுதும் அதே மழை.

இந்தக் குழந்தையின் பிறந்த நாளுக்கு உங்கள் எல்லோரிடமும் ஆசி வேண்டி
நிற்கும்

பாட்டியும் தாத்தாவும்.
Posted by Picasa

10 comments:

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

//எப்பொழுதும் பெரியவன் பிறந்தநாளுக்கு முதல் நாள் தீபாவளி வரும்//

என் பையனுக்கும்தான் வல்லிம்மா ;-). அதனாலயே டபுள் கொண்டாட்டம் :-))

ஸ்ரீராம். said...

குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல். வைகுந்த்பாப்பாவின் நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நம் வீட்டில் பெரியவன் தீபாவளி யொட்டிப் பிறந்தான். பெண் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த நாள்.
சின்னவன்(வைகுந்தோட அப்பா) ஆவணி பவுர்ணமிக்கு அடுத்த தினம்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் குழந்தையின் நமஸ்காரங்கள் உங்களுக்கும். நன்றிமா.

Kavinaya said...

வைகுந்த் பாப்பாவிற்கு அன்பான வாழ்த்துகள் அம்மா!

radhakrishnan said...

குழந்தைக்கு நல்லாசிகள்.நல்ல பதிவு.
பெரியப்பாவுக்கு தம்பி

பையன்.புரியலையே.உங்கள் தளத்தில்
புகைப்படங்கள் அற்புதம்.

ஹுஸைனம்மா said...

குழந்தைக்கு இனிய வாழ்த்துகள். உறவுமுறை எனக்கும் புரியவில்லை என்றாலும் அதுவா முக்கியம்?

//அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று. நீங்க சொல்றதெல்லாம் சொல்லுங்க. நான் சாப்பிட மாட்டேன்'' //

அதச் சொல்லுங்க. முதப் பிள்ளையோட, தனிக்குடித்தனமும் என்றால், அம்மாவும் புள்ளையுமா ஒருகூத்தாத்தான் இருக்கும் இவ்வொரு சாப்பட்டு வேளையிலும்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா, குழந்தையின் நமஸ்காரங்களை அனுப்புகிறேன். ஆசிகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராதாகிருஷ்ணன் வருகைக்கு நன்றி.

அப்போது நடந்தது எங்கள் முதல் மகனின் பிறந்தநாள். இப்போது நடந்தேறியது
அவன் தம்பியின் பிள்ளைக்கு முதல் ஆண்டு நிறைவு விழா.:)
பாலச்சந்தர் கதை மாதிரி ஆகிவிட்டதோ.:)

வல்லிசிம்ஹன் said...

நல்லாச் சொன்னீங்க ஹுசைனம்மா.
முதப் பிள்ளையை வளர்த்த ட்ரயினிங்கில் இரண்டாவது மூன்றாவதெல்லாம் ஜுஜூப்பி ஆகிவிட்டது.