About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, March 22, 2011

1944 இலிருந்து 1952 வரை ஒரு குடும்ப வரலாறு ---1

காரடையான் நோம்பும்  நம் லக்ஷ்மியும்
பங்குனி   உத்திர நிலா.
பெற்றோர் இட்ட பிக்ஷை அன்பு
இப்போது
பிள்ளைகள் இடும் பிக்ஷையாகிறது.
. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

கதை நடக்கும் இடம்  நெல்லை.
காலம் வருடம்1944.
திருமணம் முடிந்து ஒருவருடம் கழித்து பூப்பெய்தின பிறகுஅம்மாவும்,
அவரைப் புக்ககத்தில் கொண்டுவிடஅவரது தந்தையும்
சீர்வரிசைகளோடு  நெல்லைக்கு வந்தார்கள்.

அப்போது  அப்பாவின்  தந்தை நெல்லையில் தபால் அலுவலக
 போஸ்ட்மாஸ்டராக இருந்தார். இரண்டு வகைப்பாட்டிகளின் தங்கைகளும்
அங்கே பக்கத்தில் கல்லிடைக் குறிச்சியிலும், காருகுறிச்சியிலும் இருந்தார்கள்.
திருநெல்வேலியில் வண்ணாரப் பேட்டை என்னும் இடம்.
அதில் ஒரு ஸ்டோர் என்று சொல்லப் படும் முதலியார் ஸ்டோர் வரிசை
வீடுகளில் ஒன்றில்
தாத்தா தன் பிள்ளைகளோடு  குடியிருந்தார்.
முதல் மருமகள் வரும் நேரம் தனக்கு வெகு  நல்ல பதவி உயர்வு கிடைத்ததாக
எங்களிடம் மிகவும் பிரியத்துடன் சொல்வார்.


 அம்மாவுக்கு 15 வயது.அப்பாவுக்கு தபால் அலுவகத்தில் குமாஸ்தாவாக
வேலை கிடைத்துக் கயத்தாறு என்கிற கிராமத்துக்கு மாற்றலாகி இருந்தது.
அம்மாவின் அப்பாவுக்கு(மெட்ராஸ் தாத்தா)  அம்மாவை விட்டுச் செல்ல ஏகத்தயக்கம். பூப்போல
மென்மையான குணம் என்பதால்  அம்மாவுக்குப் புஷ்பா என்று கூட ஒரு பெயர்.
அது அவர் படித்த
ப்ரசண்டேஷன் கிறித்தவப்பள்ளியில் அவருக்கு  வைக்கப் பட்ட பெயர்.
(பின்ன  பாப்பா என்கிற பெயரோடு பள்ளிக்குப் போனால் ?):0)
செல்லமகளை அவ்வப்போது வந்து பார்த்துப் போகும்படி தன்
மைத்துனரான வரதாச்சாரியிடம் சொல்லி இருந்தார்.
அவரும்  தன் மகனை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை
வண்ணாரப் பேட்டைக்கு அனுப்பி அக்காவுக்குப் பூ பழங்கள்
கொண்டுபோய்க் கொடுத்து
அக்காவுடன் அரைமணிநேரம் பேச முயற்சிப்பார்.
அந்த மாதிரி ஒரு தடவை போகும்போதுதான் அக்கா கர்ப்பிணியாக
இருந்தது தெரிய வந்தது.

மதிய வேளையில் தம்பி ராகவன் வருவான் என்று தெரியாத, புஷ்பா என்கிற பாப்பா ,
 பின்கட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்தவண்ணம் இருந்திருக்கிறார்.
அக்கா பக்கத்தில் போனதும்தான் தம்பிக்கு அக்காவின்
கைகளின் சிவப்புக் கண்ணில் பட்டது.
''சேச்சிப் பாப்பா ஏன் உன்கை இப்படிச் சிவந்திருக்கு, என்ற சொல்லியபடியே
 அக்காவின் கால்களையும் பார்த்திருக்கிறார்.
அவையும் வெய்யிலில் நின்று பித்தவெடிப்பால் பிளந்து சிவப்பாக இருந்திருக்கின்றன.

அக்கா மேல் மிகவும் பாசம் கொண்ட தம்பி. என்ன செய்வார் சிறுவயது 13 வருடங்களான
பள்ளிப் பையன்.
அக்காவை உள்ளே கொண்டுவந்து உட்காரச் சொல்லிவிட்டு, மிச்சம் இருக்கும்
அண்டா தவலைகளை நிரப்பி  உள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிறார்.

சென்னையில் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் அப்போது நிறையக் கிடைக்கும் .
அதனால் வீடுகளில் குளிக்கும் அறையிலும்,  சமையல் அறையிலும்
இரண்டு இணைப்புகள் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
அப்படி வளர்ந்த பெண்ணுக்குப் புத்தம்புது தாம்புக் கயிறைக் கையாளத் தெரியவில்லை.

உங்கள் வீட்டில் வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளவில்லையா என்று ஆரம்பித்த தம்பியை
 ஆசுவாசப் படுத்த முனைந்த  அக்காவைப் பார்த்து அந்தப் பிள்ளை அழ ஆரம்பித்துவிட்டது.
 புறா மாதிரி உன் கால்கள் இருக்குமே அக்கா,இப்படி ஆகியிருக்கிறதே.''என்று விசும்பியபடியே
 ஓடிவிட்ட தம்பியைப் பிந்நாட்களில் அம்மா,
எங்களிடம்  காட்டி''அன்னிக்கு ஓடினவந்தான் ,இன்னிக்கு உன்
கல்யாண விஷயம் கேட்டுவந்திருக்கிறான்'' என்று  என்னிடம் சொல்லிச் சிரிப்பார்.
அந்த மாமா இப்போது இல்லை. அவர் எழுதின கடிதம் சென்னைக்கு அம்பாய்ப் பாய்ந்து
தாத்தாவே நெல்லைக்கு வந்துவிட்டார்.
கையோடு  பூச்சூட்டல்,ஸ்ரீமந்தம் எல்லாம் செய்து அழைத்துச் சென்று விட்டார் பெண்ணை.

எங்கள் மதுரைப் பாட்டியும் இந்த அதிசயத்தை என்னிடம் சொல்லுவார்.
 உங்க மெட்ராஸ் தாத்தாவுக்குப் பெண்கள் கடுமையான வேலைகள் செய்வது
பிடிக்காது போல்ருக்கு.
நாங்க எல்லாம் இறைக்காத தண்ணீரா, தேய்க்காத பாத்திரமா என்று
  கன்னத்தில் கைவைத்துக் கொண்டு  என்னிடத்தில் சொல்லுவார்.
அவர் நல்ல  உழைப்பாளி. அதே போல எல்லோரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் .
அவ்வளவுதான்.:)
*8******************
6:32 AM 9/4/1948  லிருந்து 1954 வரை
*****************************************

திருமணமாகி நாலு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு

ஜயலக்ஷ்மியாகப் பேர் சூட்டப் பட்ட ஜயா ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தாள்.
இரண்டு மச்சினர்கள் .மாமனார்மாமியார்,வேலைக்குச்   செல்லும் கணவன்
எல்லோரையும்   கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தானாக வந்து சேர்ந்தது.
நெல்லையில்  இருந்த குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு,

புதுப் பேத்தியுடன்   இருக்க பாட்டி தாத்தா இங்கு வந்த போது மச்சினர்கள்
இருவருக்கும் மதுரையில் இருந்த டிவிஎஸ் கம்பெனியில்  வேலை கிடைத்தது.

அப்போதுதான் தங்கள் சாதுவான  மகன்  நாராயணன்  தன் பெண்ணைப் பார்ப்பதற்காக
மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரும் அழகையும், தூளியில் குழந்தை அழுதால்
ஆட்டிவிட்டுப் போவதையும் பார்த்து வியந்தார்கள்.

''பார்த்தியோ இந்த நாராயணனை!!

என்ன ஆசை என்ன ஆசை!!   என் வீட்டுக்காரரோ உன் வீட்டுக்காரரோ , இந்த மாதிரி வேலை செய்திருப்பார்களோ !!
என்று மதுரைப் பாட்டி தன் தங்கையிடம்  பேசுவதைக் கேட்ட அம்மாவுக்கு ரோசமாக இருந்ததாம்:)
ஏன் என்று நமக்குத் தோன்றும். அம்மாவுக்கு ஏன் ரோஷம் வரணும்.
அந்தக் காலத்தில்  கூட்டுக் குடும்பமாக இருந்த வேளைகளில் மருமகள்களின் வேலைகள் சமையலறை,
அதை விட்டால் பின்னால் கிணற்றங்கரை.

தம்பதிகளுக்குத் தனி அறை கிடைப்பதே அதிசயம்.
அதில் குழந்தைக்குத் தூளி அமைத்து அகத்துக்காரரும் கொஞ்சுவது அதிசயத்திலும்
அதிசயம். தன் கணவர் குழந்தையைக் கொஞ்சுவது ஒரு சந்தோஷம். அதை மற்றவர்கள் கேலிக்குரிய
விஷயமாக எடுத்துக் கொண்டது அவளுக்கு வருத்தமாகிவிட்டது. அவ்வளவுதான்.
அடுத்த நாள் குளத்தில் குளிக்கப் போகும்போது  இந்தவிஷயம் துணிகளோடு அலசப்பட்டது:)


குழந்தைக்குத் திருவேங்கட வல்லி  என்ற பெயரும், வில்லிபுத்தூரில்  இருந்த போது பிறந்ததால்
ஆண்டாள் என்றும் நாமகரணம் செய்து மகிழ்ந்தார்கள்.
குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியானதும் ,

தாத்தா பாட்டி இருவரும் மதுரையில் பழங்கானத்தத்தில்  வீடெடுத்து
 அங்கு போய்  வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்
இரண்டாவது பிள்ளைக்குப் பெண்பேசி முடித்தார்கள்.
அந்த அழகான பெண்ணும்  நாங்குநேரி எனும் இடத்தைச் சேர்ந்தவர்  தான்.

திருமணத்துக்குப் போய்வந்த  ஒரு மாதத்தில் தம்பிக்குக்
கோயம்பத்தூருக்கு வேலை மாற்றம் கிடைத்தது.
மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணா  மன்னியிடம்

ஆசிகள் வாங்கி  இருவரும் கிளம்பினர்.
அண்ணா தம்பி இருவருக்கும்  சில மாத வித்தியாசங்களில்
குழந்தைகள் பிறந்தன.
அண்ணா நாராயணனுக்கு முரளிதரனும் ,
தம்பி சுந்தரராஜனுக்குச் சந்திராவும்  பிறந்தார்கள்.

மெட்ராஸில் தாத்தாவுக்குத்  திடீரென்று உடல் நலம் கெட்டது.

குழந்தை முரளிதரன் பிறக்கும் முன்பே அவர் மறைந்தார்.
.
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு 17 வயது மாமாவின்  பொறுப்பில் வந்தது.
இப்பொழுது புதிதாகப் பிறந்த குழந்தையையும் , முதல் குழந்தை ஆண்டாளையும்
ஜயாவையும் சீர்செனத்தியோடு மாமா, மதுரைக்கு அவர்களை
அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்..

தங்க விக்கிரகம் போல என்ன அழகு குழந்தை என்று
மதுரைத் தாத்தாவிற்கு இந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு பிரியம்.

நினைத்தால் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் குழந்தைகளைப் பார்க்க வந்துவிடுவார்கள்.
கை நிறைய மதுரை மல்லி, அரக்கில் கட்டம் போட்ட ஒன்பது கஜம் பட்டுப் புடவை,
பேத்திக்கு புதிதாக வந்திருந்த ரப்பர் வாத்து, பேரனுக்குத் தொட்டில் என்று
ஒரே  பரிசுகள் தான்.

முரளிதரனுக்கும் இரண்டு வயதானது.
அக்கா  பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துக்குப் போவதைப்
பார்த்துத் தானும் போக வேண்டும் என்று அடம் பிடிப்பான்.
அக்காவுக்குப்  பள்ளிக்குப் போவதைவிட பக்கத்தில்  கோவிலில் என்ன நடக்கிறது.

எந்தக் கடையில் மிக்சர்  நன்றாகச் செய்வார்கள், , பால்கோவா கடை வாசனை
என்று  ரசித்து நடந்து செல்வாள்.
 பள்ளியில் தான் ஒன்றும்
நடக்கவில்லையே என்று தோள் பையை(உள்ளே ஒரு ஸ்லேட்டும் குச்சியும்) எடுத்துக் கொண்டு
நட்டநடு மதியத்தில்  வீட்டுத் திண்ணைக்குத் தோழியரோடு வந்து விடுவாள்.
அம்மா உள்ளே  தம்பியோடு  தூங்குவது ஜன்னல் வழியே தெரியும்.

பக்கத்துவீட்டு அம்மணியைப் பார்த்தால் கேட்பது கிடைக்கும் என்று ''அம்மணி'' என்றழைத்தபடி
அவர்கள் வீட்டுக்குப் போய்விடுவாள்.
அம்மணி வீட்டில் நல்ல பெரிய ஊஞ்சல் ஒன்று இருக்கும்.
அதில் உட்கார்ந்து  எப்பவும்  பாடம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணா சுந்தரம் இல்லாத
சமயத்தில் , குட்டிக்காலாய் இருந்தாலும் ஏறி உட்கார்ந்து கொண்டுவிடுவாள்.
அம்மணிக்கோ  பெண் குழந்தை இல்லாத குறை.
ஒரு கிண்ணத்தில் பால் கோவாவும், வேக வைத்த வேர்க்கடலையும் கொடுத்து
குட்டி ஆண்டாளைப் பாடச் சொல்லுவாள்.


அம்மணிக்குச் சினிமாப் பைத்தியம் ஜாஸ்தி. இரவு நேரத்தில்  ஆண்டாளைத் துணைக்கு அழைத்துக்
 கொண்டு பாதாள பைரவி, வேதாள உலகம், பராசக்தி என்று  அழைத்துச் சென்று விடுவாள்.
இரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு  கதவு இருக்கும்.

அம்மாவின் கவனம் தம்பி மேல் இருக்கும்போது அந்தக் கதவைத் திறந்துகொண்டு
 பக்கத்துவீட்டுக்குப் போகும் பெண்ணைப் பார்த்து ஜயா அம்மாவுக்குக் கோபம் வரும்.

அதுவும்  மதிய நேரத்தில் 'பெண்ணின் கணீர் குரலில்'' உலகே மாயம், வாழ்வே மாயம் ''
  பாடல் கேட்டதும்அம்மாதீர்மானித்துவிட்டாள்.;)

மூன்றாவது குழந்தை உருவாகிக் கொண்டிருந்த நேரம்.,
உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால்
  மெட்ராஸ் பாட்டிக்குக் கடிதம் அனுப்பினாள்.
முதல் வகுப்பு முடித்திருந்த ஆண்டாள், தனக்கு மிகவும் செல்லமான பிடித்த சீனிம்மாவோடு(மெட்ராஸ் பாட்டி)
சந்தோஷமாகச் சென்னை வந்து புரசவாக்கம் வெள்ளாளத்தெரு
கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்க்கப் பட்டாள்.
பாட்டியோடு கோவில். மாமாக்களோடு மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ் என்று படு  சந்தோஷமாகக் கழிந்தது.
மூன்றாவது பையனின் பிரசவத்துக்கு அம்மாவும் வந்தாள்.

அப்பொழுது இருந்த புரசவாக்கம்   நெரிசல் இல்லாத வீதிகளும், கை ரிக்க்ஷாக்களும்,
எந்த இடத்துக்குப் போனாலும் இரண்டு அணாவுக்கு  மேல் கேட்காத முனுசாமியும்,
நேரு பார்க்கும்,  பஸ் ஏறிப்போனால் புதையப் புதைய மணல் நிறைந்த மெரினா பீச்சும்,
மியூசியமும்  ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குச் சொர்க்க பூமியாகத் தெரிந்திருக்க வேண்டும்.

நீண்ட நாட்கள், அம்மா பெண்ணை சென்னையில் விடவில்லை.
புதிதாகப் பிறந்த
ரங்கநாதன் என்று நாமம் சூட்டப்பட்ட கொழுக் மொழுக் குழந்தையோடு,
ஜயலக்ஷ்மி நாராயணனின்   வாழ்க்கை மீண்டும் கணவன் இல்லத்தில் ஆரம்பித்தது.
இந்த வரலாறு  என் அம்மாவின்   வாழ்வில்  நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
அம்மாவோடு  நடத்தின சம்பாஷணைகளில் நான் கிரஹித்துக் கொண்டது.

திருமங்கலத்தில் 1954இல்  மீண்டும்  இல்லறம் தொடர்ந்தது.
 அப்பாவுக்கு  வேலை மாற்றல் ஆகித் திருமங்கலம் டவுனுக்கு(மதுரை அருகில்) வந்திருந்தார்.
ஒரு அழகான குடித்தனம் ஆரம்பித்தது.
டிஸ்கி,
நண்பர்களே  இந்த  பழைய காலக் கதையைத்
தொடரக் கொஞ்ச காலம் ஆகும்..
எப்படி இருக்கிறது என்ற உங்கள் மதிப்பீடுகளைப் பொறுத்தே
அது அமையும்.

--

32 comments:

அப்பாதுரை said...

பிரமாத விஷயமொன்றுமில்லை என்றாலும் - may be period details - இன்னதென்று இனம் காண முடியாத ஒரு நிறைவு படித்ததும். தொடருங்கள்.

ராமலக்ஷ்மி said...

குடும்ப வரலாறு என்றாலும் ஒரு சந்ததியின் வாழ்க்கை முறைகளையும் சொல்லுவதாக உள்ளது.

அப்படியே அந்த காலத்துக்குள் இழுத்துச் சென்று விட்டீர்கள்.

// நெரிசல் இல்லாத வீதிகளும், கை ரிக்க்ஷாக்களும்,
எந்த இடத்துக்குப் போனாலும் இரண்டு அணாவுக்கு மேல் கேட்காத முனுசாமியும்,//

சுவாரஸ்யம். தொடருங்கள்.

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நல்லா இருக்குங்க வல்லிம்மா... உடன்பிறப்புகளின் பாசத்தை விவரிச்ச விதம் ரெம்ப நெகிழ்வா இருந்தது... எனக்கு பாட்டி காலத்து கதைகள் கேட்க ரெம்ப பிடிக்கும்... எங்க பாட்டிம்மா'வை கேட்டுட்டே இருப்பேன் பள்ளி நாட்களில்... உங்க பதிவு படிச்சதும் சிவசங்கரி எழுதின "பாலங்கள்" நோவேல் ஏனோ கண் முன் வந்தது... ஒரு பிராமண குடும்பத்தின் 1901 ல இருந்து 2000 வரைக்கும் மூணு தலைமுறையோட வாழ்க்கை முறை, திருமணம், உறவுகள் பத்தி அவ்ளோ அழகான கதை அது... அந்த கதை நெறைய வாட்டி படிச்சு இருக்கேன்... இன்னும் சலிக்காம படிப்பேன்... நீங்க விவரிச்ச விதம் அதே போல் அழகா இருந்தது... மீதி கதையையும் படிக்க ஆவலா இருக்கேன்... :)))

துளசி கோபால் said...

நல்லா வந்துருக்குப்பா. சட்னு மூணு குழந்தைகளை....... இன்னும் இடையில் நல்லா விஸ்தரிச்சு இருக்கலாம்.

ஆமாம் பாப்பா என்கிற புஷ்பாதான் ஜயாவோ!!!!!!!

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:-)))))

மாதேவி said...

அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்.

தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ராமலக்ஷ்மி said...

@ புவனா,

பள்ளி நாட்களில் நானும் வாசித்திருக்கிறேன் ’பாலங்கள்’, தொடராக வந்த போது:)!

ஸ்ரீராம். said...

வரிகளில் வருடங்களை எளிதில் கடக்க முடிகிறது! தொடருங்கள்.

திவா said...

ம்ம்ம்ம் நல்ல நெரேஷன்!
பாலங்கள் வேறே. எப்பவுமே அம்மா பெண்னுக்கு நடுவே பாட்டி ஒருத்தி பாலமாக இருப்பாள்ன்னு சொல்ல வந்தது அது.

அமைதிச்சாரல் said...

பெயர்புராணமும் இதுல இழைஞ்சு வர்றமாதிரி தோணுது... சரிதானே வல்லிம்மா :-))

Samy said...

Intha paddikal illayentral uravil palame irukkathu. Nalla nadai. samy

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.எல்லோர் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.
இன்னும் நிறைய டீட்டெயில்ஸ் விட்டுப் போயிருக்கு மா. என்னுடைய மற்ற வேலைகள் குறுக்கே வருகின்றன.

பிறகு எழுதலாம் என்றால் I want to write when the spiriit is with me;)
எவ்வளவு நினைவுகள். !!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

இன்னும் கொஞ்சம் திறம்பட எழுத வேண்டும். ஆனால் பழைய காலத்துக்குப் போவது ஒரு இமோஷனல் பயிற்சி.கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கோபம்,நிறைய சந்தோஷம் எல்லாம் இருக்கிறது. அதை மீண்டும் உணரும்போது மனம் அசைந்து உடல்நலம் சிறிதே பாதிக்கப் படுகிறது. எழுதணும் என்கிற ஆசை மட்டும் விடவில்லை.:)
மிக்க நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சரியான பாயிண்ட் ! புவனா! அம்மாவின் சகோதரர்கள் அவள் மேல் பொழிந்த பாசம் அளவிட முடியாதது.
இன்னோரு அம்மாவாகவே தங்கள் அக்காவைப் பார்த்தார்கள்.
அம்மாவும் எந்த வித பாகுபாடோ ,இல்லை வம்பு பேசுவதோ செய்ய மாட்டார்.
சிவசங்கரியின் பாலங்கள் அந்தக் காலங்களின் அருமையான விவரிப்பு, அம்மாடி!!அபாரம். என்னுடைய எழுத்து வெறும் விவரங்கள்:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா துளசி. கொஞ்சம் வேகமாகப் பயணித்துவிட்டேன்.
சேச்சிப் பாப்பா, புஷ்பா ஆகி ,ஜயலக்ஷ்மி ஆன கதை . இனிமேல் விவரங்களைச் சேகரிக்கிறேன்.:)
ஏதோ ஒரு இம்பல்ஸில் ஆரம்பித்தேன். ஒழுங்க முடிந்த வரை எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி, என் மூன்று வயதில் நினைவில் இருப்பதை எழ்த ஆரம்பித்திருக்கிறேன்.
அம்மாவின் கண்பர்வையில் எழுதுவதால் நிறையவே யோசிக்க வேண்டி இருக்கிறது.
மிக மிக நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் சரித்திரமே அப்படித்தான் அமைகிறது. இன்று
காலை வேளுக்குடி பாகவதம் சொல்லும்போது இரண்டு வம்சங்களைப் பற்றியே சொல்லி பதினைந்து நிமிடங்களைச் சொல்லி விட்டார்:)
சொல்வன்மை இருந்தால் எழுத்தில் இன்னும் வளப்பம் கூடும்.
முயற்சிக்கிறேன்.
ரொம்ப நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தம்பி வாசுதேவன்.
பாலங்கள் அற்புதமான வரலாற்றுப் படைப்பு.
நான் எழுத ஆரம்பித்தது
என் அருமை அம்மாவுக்காக.
பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல். 5 நாட்களுக்கு முன் எழுதினது. ஒரு மிரகிள் மாதிரி நீங்களும் பேரைச் சொல்லணும்னு கேட்கறீங்க:)

வல்லிசிம்ஹன் said...

Hello Samy,
padippadiyaakath thaane
நம் முன்னேற்றத்துக்குப் பெற்றோர் பாடுபடுகிறார்கள்.
அவர்களை மறக்காமல் பதியத்தான் இந்த ஆரம்பம். மிக நன்றி மா.

கோமதி அரசு said...

குடும்ப வரலாறு அருமை.
அம்மா,பாட்டியிடம் கேட்டவைகளை நினைவுகூர்ந்து அதை தொகுத்து கொடுப்பது பெரிய விஷயம் தான். அதை நன்றாக செய்து விட்டீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Jayashree said...

“”அந்த மாதிரி ஒரு தடவை போகும்போதுதான் அக்கா கர்ப்பிணியாகஇருந்தது தெரிய வந்தது”” –?? அண்ணா சுந்தரம்?

“திருமணமாகி நாலு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தையை” - நீங்க?

“”அண்ணா நாராயணனுக்கு முரளிதரனும்””—அடிக்கடி தம்பியைப்பத்தி எழுதுவேளே அவரா?

மூன்றாவது குழந்தை- ??? 4 ரங்கநாதன்

பழக்கப்பட்ட ஊர் பேர்கள் , பழக்கப்பட்ட வாழ்க்கை முறைகள் படிக்கவே ஆசையாதானே இருக்கும்!!

கீதா சாம்பசிவம் said...

மிக அருமை, இனிமை, எளிமை, சிக்கன வார்த்தைகளில் ஒரு சகாப்தமே காண முடிந்தது. நன்றி. உங்களோட எழுத்துக்கு விசேஷமே இந்தப் பக்கத்திலே இருந்து பேசறாப்போல் எழுதும் அழகு தான் . படிக்கும்போது உங்கள் குரலோடு கேட்கும், உணர்வேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.அப்பாவைப் பற்றி நினைவு கூரும் பதிவில் அம்மாவைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றியது.நல்லவற்றைப் பதிய வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,
அப்பாக்கு இரு தம்பிகள். முதல் தம்பி சுந்தரராஜன்,கோயம்பத்தூர் சென்றவர் அவரது மகள் சந்திரா.
எனக்கு இரண்டு தம்பிகள். அடிக்கடி சொல்பவன் ரங்கன் என்ற ரங்கநாதன் ரெண்டாவது தம்பி. அவனுக்கு அவசரம் எங்களைவிட்டுக் கிளம்பி விட்டான்.
முதல் தம்பி முரளிதரன் .இப்போதுதான் 60க்கு அறுபது செய்து கொண்டான். நன்றாக இருக்கணும்.
அம்மாவுக்கு முதலில் பிறந்த ஆண் குழந்தை (ரங்கராஜன்)ஆறு மாதங்கள் இருந்துவிட்டுப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு தான் நான்.;)உங்களுக்கும் இந்த ஊர்கள் பழக்கமா.!அட.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, எவ்வளவு நல்ல வார்த்தைகள். மனசாரப் பாராட்டும் உங்கள் தாராள மனசுக்கு, நெகிழ்கிறேன்.மிகவும் நன்றி மா.

அப்பாவி தங்கமணி said...

//ராமலக்ஷ்மி said... @ புவனா,பள்ளி நாட்களில் நானும் வாசித்திருக்கிறேன் ’பாலங்கள்’, தொடராக வந்த போது:)!//

ஆமாங்க ராமலக்ஷ்மி.. அருமையான கதை அது... எங்க அத்தை ஒருத்தர் விகடன்ல வந்ததை கத்தரிச்சு பைண்ட் பண்ணி வெச்சு இருந்தாங்க... அதை படிச்சேன்... I thank her for that now... அதுக்கு பின்ன எனக்கே அந்த புக் சொந்தமா ஒண்ணு வேணும்னு 2008ல இந்தியா போனப்ப வாங்கினேன்... ஆனாலும் அந்த பைண்ட் புக்ல இருந்த ஒரு Peculiar வாசனை மிஸ்ஸிங் you know....:)))

மடிசார் மாமி, அலை ஓசை போன்ற நாவல்களும் அப்படி படிச்சது தான்... இந்த புத்தகங்கள் இந்த வாட்டி ஊருக்கு போனப்பவும் தேடினேன், கிடைக்கல :(

அப்பாதுரை said...

நெகிழ வைத்தீர்கள். how true!
>>>I want to write when the spiriit is with me;)

வல்லிசிம்ஹன் said...

Dhurai, I meant to write the MUSE.
Then I thought I am not into that catagory yet :)
So wantonly the spirit came in!!!!

பாலராஜன்கீதா said...

தொடருங்கள் வல்லிம்மா. வாசிக்க ஆவலுடன் உள்ளோம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலராஜன் கீதா. நினைவுகள் சரியாக் உதவி செய்ய வேண்டும்.

நானானி said...

சின்னச்சின்ன வார்த்தைகளில் ஒரு குடும்ப வரலாறே படைத்து விட்டீர்கள்! வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத்தான் நமக்கெல்லாம் (எனக்கெல்லாம்) பழைய நிகழ்வுகளெல்லாம் அறியமுடிகிறது. ஆனால் நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன். நிறய டிடேயில்கள் சேகரித்திருக்கிறீர்கள்.
குறிப்பாக 'அக்காவின் புண்ணான கைகளைப்பார்த்து கண்ணீர் வடித்த தம்பி' நால்ல நிதர்சானம்.

தொடரட்டும் வரலாறு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, நானும் நினைவிலிருந்தும், பாட்டி சொன்ன வார்த்தைகளாலும் தான் தொடருகிறேன்.பிற்காலத்தில் சந்ததிகளுக்குத் தமிழ் தெரிந்து படிக்கட்டுமே என்கிற நினைப்புதான்.:)
55 வருஷத்துக்கு முன்னால நடந்தது.
பார்க்கலாம்:))நன்றி மா.