Blog Archive

Thursday, March 31, 2011

திருமங்கலம் 1955லிருந்து 60 வரை குடும்ப நிகழ்வுகள்

கிணறு, தண்ணீர் இறைத்து விடும் தொட்டி, பக்கத்திலேயே தோய்க்கிற கல்.

மதுரை  திருமங்கலம்  சாலை
கண்மாய்   தடாகம்
மீனாக்ஷியின்  மண்டபம்
ரோஜா  மல்லிகை வாசம்.நூறு நூறாகக் கட்டி விற்கும் லாவகம். இதெல்லாம் திருமங்கலத்துக்கே உண்டான விசேஷங்கள்.
அப்பாவிற்கு  உதவியாள் தங்கமணி என்று பெயர்.

வீட்டில்   வந்து வேண்டும் என்கிற மின்சாரம்  சம்பந்தப்பட்ட உதவிகளைச் செய்வார்.
மற்றபடி   காய்கறி,கீரை,மோர்,தயிர் வெண்ணெய் எல்லாம் வாசலில்  கூவி விற்பார்கள்.



  எல்லோருக்கும் என் இரண்டாவது தம்பியிடம் பிரியம் ஜாஸ்தி. இன்னும்  கொஞ்சம் வெண்ணேய் எடுத்துக்கோ  ராஜா என்று வேறு கொடுப்பார்கள். இதை எல்லாம் நாங்கள் பள்ளி விட்டு வந்ததும் சொல்லி
கடுப்படிப்பான்.:)

திருமங்கலம் வந்து ஒரு வருடத்தில் ஒரு  சன்யாசி ஒருவர்
வாயிலில்  தென்பட ஆரம்பித்தார். கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பார். செக்கச்செவேல் என்று ஆறடிக்கு ஒரு ஆஜானு பாகுவான தோற்றம்.
அநேகமாக விடுமுறை நாட்களில் தான் காலை வேளைகளில் வந்து
;பவதி பிக்ஷாம் தேஹி''  என்று குரல் கொடுப்பார்.
அந்த வேளையில்  வாயில் கதவைச் சாத்திதான் வைத்திருப்போம்.

திண்ணைகளில் உட்கார்ந்து பாடம் எழுதிக் கொண்டிருப்போம்.

அவர் தலையில் சிகப்புக் கலர் முண்டாசு   (நம் சாயிபாபா    மாதிரி)
வேறு கட்டி இருப்பாரா. எனக்குப் பகீர்னு பயம் பிடித்துக் கொள்ளும்.
வாயில்  ஜன்னலில் அவர் முகம் தெரிந்ததும் நான் அலறி அடித்து அம்மாவிடம் ஓடிவிடுவேன்.

அவரோ தீர்க்கமாக, தம்பி முரளியைச்  சத்தமாக விளிப்பார்.
அதென்னவோ அவன் மேல் அவருக்கு மிகவும் பிரியம்.
அம்மாவோ  அப்படியெல்லாம்  வெளியே வரும் வழக்கம் கிடையாது.
ஒரு தாம்பாளத்தில்  ஒரு ஆழாக்கு அரிசியைக் கொட்டி,
 தம்பியிடம் கொடுத்து வாசல்   கதவைத் திறந்து கொடுக்கச் சொல்லுவார்,.
அவனும் அப்படியே செய்வான்.


நாங்கள் மிச்ச   ரெண்டு பேரும் கதவுக்குப் பின்னால்  ஒளிந்து கொண்டிருப்போம்.

''நன்னா இருப்பே  முரளி. நிறையப் படி;  என்ற படி அவர் போய் விடுவார்''

பிறகு விசாரித்த போது அவர் ஒரு செல்வந்தர் குடும்பந்தைச் சேர்ந்தவர் என்றும்
மதுரையில் எம்.ஏ  படித்துக் கொண்டிருந்தவர் திடீரென  இப்படி(!!!)  ஆகிவிட்டதாகவும் சொன்னார்கள்.
அதாவது கொஞ்சம் சித்தம் கலங்கியவர்(?) என்று பேசினது காதில் விழுந்தது. அந்த நாளையக் கணிப்பு.
இப்பொழுது புரிகிறது.அவரும் ஒரு சித்தராக இருந்திருக்கணும்
இப்போதாக இருந்தால்  வேறு  பெயர் கிடைத்திருக்கக் கூடும்.
ஆனால் இன்னும் அவர் கண்களின் தீக்ஷண்யத்தை என்னால் மறக்க முடியவில்லை.

திருமங்கலத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்.

இரண்டாவது சித்தப்பாவுக்கு   மிக அழகான பெண்ணை மதுரையில் பார்த்துப் பேசி முடித்தார்கள். மதுரையில் ராஜம்மாள் சுந்தரராஜன் என்று பிரபல
திருப்பாவைப் பள்ளி ஒன்றை நடத்திவந்தவரின்   தம்பி  மகள்.
மங்கம்மா  சத்திரத்தில் திருமணம் நடந்தது.


சித்தப்பா எனக்கும், என் சிறிய கசின்  சந்திராவுக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகள் வாங்கி வந்தார்.
மாம்பழக்கலர் பட்டின் மேல் எனக்குப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.


எம் எஸ் ப்ளூ  பட்டுப் பாவாடையை   என் கையில் கொடுத்ததும்   முழ நீளம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது நினைத்து  சிரிப்பு வருகிறது.
நீதான் விட்டுக் கொடுக்கணும் நீதானே எல்லாருக்கும் அக்கா  என்னும் அறிவுரைகள் அப்போது கசந்தன.

அம்மாதான் இன்னும் எவ்வளவோ பண்டிகைகள் வரும் .மாமாக்கள் திருமணத்துக்கு  எல்லாம் உனக்குப் பட்டு கிடைக்கப் போகிறது. இப்படி
எல்லோர்  முன்னாலும் அசட்டுத்தனம் செய்யாதெ  என்றதும் அடங்கி விட்டேன்.
அத்தையம்மா  என்று அழைக்கப் பட்ட, சித்தியின் பாடல்வகுப்புகளில்
 என் திருப்பாவைப் பாட்டுகள்   மனனம் செய்து பாடக் கற்றுக் கொண்டேன்.

சின்னத் தம்பிக்கு    அக்ஷ்ராப் யசம்  ஆயிற்று.
வீட்டிற்கு வந்து ஆசான் ஒருவர் நெல்லில் அ,ஆ  எழுதச் சொல்லிக் கொடுத்தார்.
அன்று அம்மாவிடம் சண்டை போட்டேன். எனக்கு மட்டும் நீ இந்த மாதிரி செய்யவில்லை என்று(;) )) .





.
எங்கள் வீடு   திருமங்கலம்
மீண்டும் பார்க்கலாம்:)









.













  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, March 28, 2011

1954 லிருந்து 1960 வரை தொடர்கிறது வாழ்க்கை.திருமங்கலம்

செம்பருத்தி  அப்பாவின் கைவளம்
நித்யமல்லி  அம்மாவுக்கு
நந்தியாவட்டைப் பூ  கோவிலுக்கு


6:17 AM 3/28/2011
வரலாறு  1954 லிருந்து 1960 வரை திருமங்கலம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்  இந்தக்கதையை எழுதலாம் என்ற யோசனையை
எனக்கு  உணர்த்திய,
வல்லமை இதழ் ஆசிரியர்

திரு அண்ணா கண்ணனுக்கு என் நன்றிகள் பல.
************************************************************
1954இல்  திருமங்கலம் இப்பொழுது போலப் பெருமைகள் எல்லாம் (!!)
இல்லாமல் ஒரு சாதாரணமான டவுன் மாதிரியும் இல்லாமல் கிராமம்
ஆகவும் இல்லாமல்  ஒரு தாலுகா ஆஃபீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரே ஒரு தபால் அலுவலகம், ஒரு பி.டபிள்.யு.டி
ஆபீஸ்,
நகரத்துக்குப் பிரதானமாக ஒரு சொக்கநாதர் மீனாட்சி கோவில்,
ஆனந்தா தியேட்டர், ஒரு கஸ்தூரிபாகாந்தி ஆதாரப் பள்ளி, ஒரு பெண்களுக்கான
ஹைஸ்கூல்,
ஆண்களுக்கான  பி.கே.என் பள்ளி.
ஒரு தரமான ஆனந்தபவன் ஹோட்டல், கோவிலை ஒட்டி ஒரு சத்திரம்,
அதைத் தாண்டிப் போனால் ஒரு ஆறு.
 அப்போது அது பழையாறு என்று சொல்வார்கள்.
வைகை ஆற்றின் கிளை என்று நினைக்கிறேன். அதில் நாங்கள்
 நடந்தே கடப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் தான்:)
ஒரு அரசு மேற்பார்வையில் இயங்கும் நல்ல ஆஸ்பத்திரி.
 என்னுடைய பல காயங்களுக்கு  மருந்து போட்டுக் குணப்படுத்திய
 மருத்துவர் அம்மாவும்,கம்பவுண்டரும் அங்கே இருந்தார்கள்.

ஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து அப்பாவுக்குத் திருமங்கலத்துக்கு மாற்றியது,
அம்மாவுக்குத்தான் மிகவும் சந்தோஷம்.
நீண்ட நெடும் பயணமாகச் சென்னைக்கு எங்களை அழைத்துப் போவது அவருக்குக் கொஞ்சம் சிரமம்
என்பதற்காக இல்லை.
சென்னைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் வந்துவிட்டோம் என்று சொல்வார்.

எங்களை உற்சாகப் படுத்தவோ ,நோயுற்ற நாட்களில்,கூடவே உட்கார்ந்து நேரங்களில்
தலைவலியோ,உடம்பு வலியோ அம்மாவின் வார்த்தைகளில் ஓடிவிடும்.
இதோ முழுப்பரீட்சை வந்துடும். அப்புறம் என்ன பண்ணனும்???
என்று ஒரு கேள்வி வைப்பார்.
மெட்ராஸ் போணும்'' என்று ஒரே கோரஸாக நாங்கள் பதில் சொல்ல.

ஓ!! அப்படின்னால் இந்த மருந்தெல்லாம் சீக்கிரம் சாப்பிட்டு மூணுநாளில்
சரியாகப் போகணும் சரியா' என்றபடி கசப்பு மிக்ஸரையும்
 விழுங்கவைத்துவிடுவார்,

திருமங்கலம் வீடு அமைந்தது ஒரு அதிர்ஷ்டம். வெகு அழகான வீடு.
 ''அங்குவிலாஸ்'' என்று எழுதப் பட்டிருக்கும் கட்டிடம் இன்னும் அங்கேதான் இருக்கிறது.
 அந்தப் புகையிலைக் கம்பெனியின் கோடவுன் அங்கே இயங்கி வந்தது.

எங்களுக்குப் பிடித்தது அந்த வீட்டின் பெரிய முற்றம் தான். வாயில் கதவுக்கும்
 வீட்டின் கதவுக்கும் நடுவில் நீண்ட பாதையாக சிமெண்ட் தளத்தில்
போடப்பட்டிருந்த அந்த முற்றமும் அதில் நிழலுக்கு  அப்பா போடச்சொன்ன பந்தலும்
மதுரையிலிருந்து வரும் தாத்தா பாட்டிக்கு
மிகவும் பிடிக்கும். ஒரு ஈஸிச்சேரில் தாத்தா படுத்துக் கொள்வார்.
பாட்டி அந்தப் பந்தலின் குளிர்ச்சியில் இரவு வெக்கையைத் தாக்குப் பிடிக்க
 ஒரு பனைவிசிறியைக் கையில் பிடித்துப் பாயில் படுத்துக் கொள்வார்,.
மாமியார் மாமனாருக்கு வேண்டும் உபசாரங்களைச் செய்துவிட்டு அம்மா
சமையல் அறையைச் சுத்தம் செய்வார்.

இரவு எட்டுமணிக்கெல்லாம் பெரியதம்பி படுத்துக் கொள்வான் தூங்கியும் விடுவான்.
 சின்னவனுக்கு அப்பாவிடம்
 கதை கேட்காமல் தூங்க முடியாது.
அப்பாவின் பனியனை ஒரு கையில்  பிடித்துக் கொண்டு, ஒரு விரலைச் சூப்பியபடி
ராமாயண மஹாபாரதைக் கதைகளையும்,
பவான்ஸ் ஜர்னல் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் வழி தான்
அறிந்து கொள்ளும் முற்றும் புதிதான கதைகளை அப்பா சுவை படச் சொல்லுவார்.
தாத்தவும் நாராயணா குழந்தைகளுக்கு எப்பவும் நல்ல சத்துள்ள
ஆகாரம் இந்த மாதிரி நீதிக் கதைகள் தான்.
வளர்ந்த பிறகு தப்பு செய்யக் கூடத் தோன்றாது'' என்று சொல்வார்.
முற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக
நிலா தெரிந்து கொண்டே இருக்கும்.

நிலாவின் இதமும் அப்பாவின் குரலும் தூக்காத்துக்குத் தாலாட்டு.
அதற்குப் பிறகு அப்பா அம்மாஅவுக்கு உதவியாச் சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு
ஒன்பது மணி ஆங்கிலச் செய்தியில் மெல்வின் டிமெல்லொ அன்றைய நிலவரத்தைச் சொல்ல
அத்துடன் அன்றையப் பொழுது முடியும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது அம்மாவையே நடுங்க வைத்த
இரு நிகழ்ச்சிகள்.
ஒரு கட்டுவிரியன் பாம்பின் வருகையும்,
திருடன் கிணற்றங்கரையில் வைத்திருந்த வெண்கல  பெரிய
 அரிக்கன் சட்டியையும், வெந்நீர்ப்பானையையும்
எடுத்துச் சென்றதுதான்.
எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு எல்லைச் சாமிகள் கோவில் இருந்தது. அதில் சாதாரணமாக
மாலை நான்கு மணியிலிருந்து உறுமி மேளச் சத்தமும் ,உடுக்கைச் சத்தமும்
 மெதுவாக ஆரம்பித்து இரவு பன்னிரண்டு மணிஅளவில் உச்ச கட்டத்தை அடையும்.
இது வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடப்பது வழக்கம்.

அந்தக் கோவில் சுவரிலிறுந்து எட்டிப்பார்க்கும் கொடுக்காப்புளிப் பழம் நன்றாக
இருக்கும்.
ஒரு மதிய வேளையில் பக்கத்துவீட்டுக்குப் போககொல்லைப் புறக் கதவின்
அருகே வந்த போது ஏதோ வித்தியாசமான டிசைனில் அச்சுப்
 பதித்தாற்போல் பதிந்திருந்த  பழுப்பும் கறுப்பான அந்த
 ஜந்துவைப் பார்த்ததும் பயத்தில் கலவரப் பட்டவர்,
உடனே சுதாரித்துக் கொண்டு மாடிப் படிகள் வழியாக மொட்டை மாடியில் ஏறி
 அடுத்த வீட்டைப் பார்த்து அழைத்திருக்கிறார்,.
கூடவே அங்கு விலாஸ்  லாரிப் பணியாளர்களையும் அழைக்க
அவர்கள் அந்தப் பாம்பை அடித்திருக்கிறார்கள்.
நாங்கள் வரும் வரை அம்மா சின்னத்தம்பியை வைத்துக் கொண்டு
 வீட்டிற்கு உள்ளயே இருந்தார்கள்.
எங்களையும் வெளியெ விடவில்லை.
அப்பா வந்ததும் முதல் வேலையாக  வீட்டின் சமையலறைக் கிணற்றுக்கு மேலே
 நெருக்கமான வலை போடச் சொன்னதுதான்.
ஒரே கிணற்றுக்கு இரண்டு பக்கம் இறைக்கும் வசதி இருந்தது.
கிணற்றின் ஒரு பக்கம் சமையல் அறையும் ,பாத்திரம் தேய்க்கும் முற்றமும்.
மறுபக்கம் தோய்க்கும் கல்,  தண்ணீர்த்தொட்டி,அதனருகே  வெளியே
 தோட்டத்துக்கான பாத்திகள் கட்டின வழித்தடங்கள்.
அப்போதெல்லாம் ட்ரை லெட்ரின் தான். அதற்குத் தனியாக ஒரு அம்மா  வருவார்.
 அவரிடம் அம்மா அரிசி கழுவிய நீரையும் கொஞ்சம் வடித்த சாதத்தையும் போட்டு
 அவருடைய பானையில்  கொடுப்பார். அடுத்த நாள் பசும் சாணம்
வாசலில் ரெடியாக உட்கார்ந்திருக்கும் .பண்ட மாற்று.

நாகம்மா என்பவர் வந்து எல்லா உதவியும் செய்துவிட்டுப் போவார்.
உமி வேண்டுமா இதோ என்று ஒரு ஓட்டம்.
வெந்நீர்  அடுப்புக்கு  வரட்டி வேண்டுமா அதற்கும் ஓட்டம்.
அவர் ஓடினால் கூடவே நானும் ஓடுவேன்.

அம்மா  உமியைக் குமித்துக் கற்பூரம் ஏற்றி உள்ளே வைத்து
அது உமிக்கரி ஆகும் வரை நானும் கூட இருந்து பார்த்துக் கொள்வேன்.
ஒவ்வொரு மாதத்துக்கும் அதுதான் பல்பொடி. அம்மா அதில் உப்பும் சேர்ப்பார்.
மணக்க மணக்க  வாயில் போட்டுப் பற்களைத் தேய்த்தால் அந்த சுகானுபவமே தனி.


இன்னும் வரும்:0)












எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 24, 2011

பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)



அன்பு  சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)
நன்றி  மா

அம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.

தாயார் வீடு  சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு  புதிதாகப் பிறந்த பேத்தியின்
மீது  மிகுந்த  பாசம்.
புண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.
நெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்
 சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள்.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்தார்.
புரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற
ஏற்பாடு செய்து  வீடு களை கட்டியது.
அம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.
அம்மாவின் அத்தை,மாமாக்களும் அங்கே.
சேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.

முத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.
''ஆமாம் முதல்  குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்
கவனிக்கணும்.
 இதுவும்  சின்னக் குழந்தையத்தான் இருக்கு.
பரவாயில்லை  தேத்தி விட்டுடலாம். ''
தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு
 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.
ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.
இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல
ஒரு சின்னக் குழந்தை.

பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.
 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்
அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""
என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு
தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.
அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!
அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்
ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.

மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்
வெளிவந்தது.

அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.
ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.
வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ
தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.

கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற
ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு
மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்
 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.
எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு
என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)
ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.
பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்
தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.
அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.
தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்
அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.
பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்
வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.
அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.

''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.

இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''
 இருக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.
திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.
ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான
கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!

பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு
முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.
பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)

மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த
நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்
நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))

என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))

இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை
அழைக்கிறேன்.
ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.

அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''
அன்பு  துளசிகோபால்
அன்பு  கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, March 22, 2011

1944 இலிருந்து 1952 வரை ஒரு குடும்ப வரலாறு ---1

காரடையான் நோம்பும்  நம் லக்ஷ்மியும்
பங்குனி   உத்திர நிலா.
பெற்றோர் இட்ட பிக்ஷை அன்பு
இப்போது
பிள்ளைகள் இடும் பிக்ஷையாகிறது.
. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

கதை நடக்கும் இடம்  நெல்லை.
காலம் வருடம்1944.
திருமணம் முடிந்து ஒருவருடம் கழித்து பூப்பெய்தின பிறகுஅம்மாவும்,
அவரைப் புக்ககத்தில் கொண்டுவிடஅவரது தந்தையும்
சீர்வரிசைகளோடு  நெல்லைக்கு வந்தார்கள்.

அப்போது  அப்பாவின்  தந்தை நெல்லையில் தபால் அலுவலக
 போஸ்ட்மாஸ்டராக இருந்தார். இரண்டு வகைப்பாட்டிகளின் தங்கைகளும்
அங்கே பக்கத்தில் கல்லிடைக் குறிச்சியிலும், காருகுறிச்சியிலும் இருந்தார்கள்.
திருநெல்வேலியில் வண்ணாரப் பேட்டை என்னும் இடம்.
அதில் ஒரு ஸ்டோர் என்று சொல்லப் படும் முதலியார் ஸ்டோர் வரிசை
வீடுகளில் ஒன்றில்
தாத்தா தன் பிள்ளைகளோடு  குடியிருந்தார்.
முதல் மருமகள் வரும் நேரம் தனக்கு வெகு  நல்ல பதவி உயர்வு கிடைத்ததாக
எங்களிடம் மிகவும் பிரியத்துடன் சொல்வார்.


 அம்மாவுக்கு 15 வயது.அப்பாவுக்கு தபால் அலுவகத்தில் குமாஸ்தாவாக
வேலை கிடைத்துக் கயத்தாறு என்கிற கிராமத்துக்கு மாற்றலாகி இருந்தது.
அம்மாவின் அப்பாவுக்கு(மெட்ராஸ் தாத்தா)  அம்மாவை விட்டுச் செல்ல ஏகத்தயக்கம். பூப்போல
மென்மையான குணம் என்பதால்  அம்மாவுக்குப் புஷ்பா என்று கூட ஒரு பெயர்.
அது அவர் படித்த
ப்ரசண்டேஷன் கிறித்தவப்பள்ளியில் அவருக்கு  வைக்கப் பட்ட பெயர்.
(பின்ன  பாப்பா என்கிற பெயரோடு பள்ளிக்குப் போனால் ?):0)
செல்லமகளை அவ்வப்போது வந்து பார்த்துப் போகும்படி தன்
மைத்துனரான வரதாச்சாரியிடம் சொல்லி இருந்தார்.
அவரும்  தன் மகனை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை
வண்ணாரப் பேட்டைக்கு அனுப்பி அக்காவுக்குப் பூ பழங்கள்
கொண்டுபோய்க் கொடுத்து
அக்காவுடன் அரைமணிநேரம் பேச முயற்சிப்பார்.
அந்த மாதிரி ஒரு தடவை போகும்போதுதான் அக்கா கர்ப்பிணியாக
இருந்தது தெரிய வந்தது.

மதிய வேளையில் தம்பி ராகவன் வருவான் என்று தெரியாத, புஷ்பா என்கிற பாப்பா ,
 பின்கட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்தவண்ணம் இருந்திருக்கிறார்.
அக்கா பக்கத்தில் போனதும்தான் தம்பிக்கு அக்காவின்
கைகளின் சிவப்புக் கண்ணில் பட்டது.
''சேச்சிப் பாப்பா ஏன் உன்கை இப்படிச் சிவந்திருக்கு, என்ற சொல்லியபடியே
 அக்காவின் கால்களையும் பார்த்திருக்கிறார்.
அவையும் வெய்யிலில் நின்று பித்தவெடிப்பால் பிளந்து சிவப்பாக இருந்திருக்கின்றன.

அக்கா மேல் மிகவும் பாசம் கொண்ட தம்பி. என்ன செய்வார் சிறுவயது 13 வருடங்களான
பள்ளிப் பையன்.
அக்காவை உள்ளே கொண்டுவந்து உட்காரச் சொல்லிவிட்டு, மிச்சம் இருக்கும்
அண்டா தவலைகளை நிரப்பி  உள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிறார்.

சென்னையில் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் அப்போது நிறையக் கிடைக்கும் .
அதனால் வீடுகளில் குளிக்கும் அறையிலும்,  சமையல் அறையிலும்
இரண்டு இணைப்புகள் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
அப்படி வளர்ந்த பெண்ணுக்குப் புத்தம்புது தாம்புக் கயிறைக் கையாளத் தெரியவில்லை.

உங்கள் வீட்டில் வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளவில்லையா என்று ஆரம்பித்த தம்பியை
 ஆசுவாசப் படுத்த முனைந்த  அக்காவைப் பார்த்து அந்தப் பிள்ளை அழ ஆரம்பித்துவிட்டது.
 புறா மாதிரி உன் கால்கள் இருக்குமே அக்கா,இப்படி ஆகியிருக்கிறதே.''என்று விசும்பியபடியே
 ஓடிவிட்ட தம்பியைப் பிந்நாட்களில் அம்மா,
எங்களிடம்  காட்டி''அன்னிக்கு ஓடினவந்தான் ,இன்னிக்கு உன்
கல்யாண விஷயம் கேட்டுவந்திருக்கிறான்'' என்று  என்னிடம் சொல்லிச் சிரிப்பார்.
அந்த மாமா இப்போது இல்லை. அவர் எழுதின கடிதம் சென்னைக்கு அம்பாய்ப் பாய்ந்து
தாத்தாவே நெல்லைக்கு வந்துவிட்டார்.
கையோடு  பூச்சூட்டல்,ஸ்ரீமந்தம் எல்லாம் செய்து அழைத்துச் சென்று விட்டார் பெண்ணை.

எங்கள் மதுரைப் பாட்டியும் இந்த அதிசயத்தை என்னிடம் சொல்லுவார்.
 உங்க மெட்ராஸ் தாத்தாவுக்குப் பெண்கள் கடுமையான வேலைகள் செய்வது
பிடிக்காது போல்ருக்கு.
நாங்க எல்லாம் இறைக்காத தண்ணீரா, தேய்க்காத பாத்திரமா என்று
  கன்னத்தில் கைவைத்துக் கொண்டு  என்னிடத்தில் சொல்லுவார்.
அவர் நல்ல  உழைப்பாளி. அதே போல எல்லோரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் .
அவ்வளவுதான்.:)
*8******************
6:32 AM 9/4/1948  லிருந்து 1954 வரை
*****************************************

திருமணமாகி நாலு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு

ஜயலக்ஷ்மியாகப் பேர் சூட்டப் பட்ட ஜயா ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தாள்.
இரண்டு மச்சினர்கள் .மாமனார்மாமியார்,வேலைக்குச்   செல்லும் கணவன்
எல்லோரையும்   கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தானாக வந்து சேர்ந்தது.
நெல்லையில்  இருந்த குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு,

புதுப் பேத்தியுடன்   இருக்க பாட்டி தாத்தா இங்கு வந்த போது மச்சினர்கள்
இருவருக்கும் மதுரையில் இருந்த டிவிஎஸ் கம்பெனியில்  வேலை கிடைத்தது.

அப்போதுதான் தங்கள் சாதுவான  மகன்  நாராயணன்  தன் பெண்ணைப் பார்ப்பதற்காக
மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரும் அழகையும், தூளியில் குழந்தை அழுதால்
ஆட்டிவிட்டுப் போவதையும் பார்த்து வியந்தார்கள்.

''பார்த்தியோ இந்த நாராயணனை!!

என்ன ஆசை என்ன ஆசை!!   என் வீட்டுக்காரரோ உன் வீட்டுக்காரரோ , இந்த மாதிரி வேலை செய்திருப்பார்களோ !!
என்று மதுரைப் பாட்டி தன் தங்கையிடம்  பேசுவதைக் கேட்ட அம்மாவுக்கு ரோசமாக இருந்ததாம்:)
ஏன் என்று நமக்குத் தோன்றும். அம்மாவுக்கு ஏன் ரோஷம் வரணும்.
அந்தக் காலத்தில்  கூட்டுக் குடும்பமாக இருந்த வேளைகளில் மருமகள்களின் வேலைகள் சமையலறை,
அதை விட்டால் பின்னால் கிணற்றங்கரை.

தம்பதிகளுக்குத் தனி அறை கிடைப்பதே அதிசயம்.
அதில் குழந்தைக்குத் தூளி அமைத்து அகத்துக்காரரும் கொஞ்சுவது அதிசயத்திலும்
அதிசயம். தன் கணவர் குழந்தையைக் கொஞ்சுவது ஒரு சந்தோஷம். அதை மற்றவர்கள் கேலிக்குரிய
விஷயமாக எடுத்துக் கொண்டது அவளுக்கு வருத்தமாகிவிட்டது. அவ்வளவுதான்.
அடுத்த நாள் குளத்தில் குளிக்கப் போகும்போது  இந்தவிஷயம் துணிகளோடு அலசப்பட்டது:)


குழந்தைக்குத் திருவேங்கட வல்லி  என்ற பெயரும், வில்லிபுத்தூரில்  இருந்த போது பிறந்ததால்
ஆண்டாள் என்றும் நாமகரணம் செய்து மகிழ்ந்தார்கள்.
குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியானதும் ,

தாத்தா பாட்டி இருவரும் மதுரையில் பழங்கானத்தத்தில்  வீடெடுத்து
 அங்கு போய்  வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்
இரண்டாவது பிள்ளைக்குப் பெண்பேசி முடித்தார்கள்.
அந்த அழகான பெண்ணும்  நாங்குநேரி எனும் இடத்தைச் சேர்ந்தவர்  தான்.

திருமணத்துக்குப் போய்வந்த  ஒரு மாதத்தில் தம்பிக்குக்
கோயம்பத்தூருக்கு வேலை மாற்றம் கிடைத்தது.
மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணா  மன்னியிடம்

ஆசிகள் வாங்கி  இருவரும் கிளம்பினர்.
அண்ணா தம்பி இருவருக்கும்  சில மாத வித்தியாசங்களில்
குழந்தைகள் பிறந்தன.
அண்ணா நாராயணனுக்கு முரளிதரனும் ,
தம்பி சுந்தரராஜனுக்குச் சந்திராவும்  பிறந்தார்கள்.

மெட்ராஸில் தாத்தாவுக்குத்  திடீரென்று உடல் நலம் கெட்டது.

குழந்தை முரளிதரன் பிறக்கும் முன்பே அவர் மறைந்தார்.
.
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு 17 வயது மாமாவின்  பொறுப்பில் வந்தது.
இப்பொழுது புதிதாகப் பிறந்த குழந்தையையும் , முதல் குழந்தை ஆண்டாளையும்
ஜயாவையும் சீர்செனத்தியோடு மாமா, மதுரைக்கு அவர்களை
அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்..

தங்க விக்கிரகம் போல என்ன அழகு குழந்தை என்று
மதுரைத் தாத்தாவிற்கு இந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு பிரியம்.

நினைத்தால் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் குழந்தைகளைப் பார்க்க வந்துவிடுவார்கள்.
கை நிறைய மதுரை மல்லி, அரக்கில் கட்டம் போட்ட ஒன்பது கஜம் பட்டுப் புடவை,
பேத்திக்கு புதிதாக வந்திருந்த ரப்பர் வாத்து, பேரனுக்குத் தொட்டில் என்று
ஒரே  பரிசுகள் தான்.

முரளிதரனுக்கும் இரண்டு வயதானது.
அக்கா  பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துக்குப் போவதைப்
பார்த்துத் தானும் போக வேண்டும் என்று அடம் பிடிப்பான்.
அக்காவுக்குப்  பள்ளிக்குப் போவதைவிட பக்கத்தில்  கோவிலில் என்ன நடக்கிறது.

எந்தக் கடையில் மிக்சர்  நன்றாகச் செய்வார்கள், , பால்கோவா கடை வாசனை
என்று  ரசித்து நடந்து செல்வாள்.
 பள்ளியில் தான் ஒன்றும்
நடக்கவில்லையே என்று தோள் பையை(உள்ளே ஒரு ஸ்லேட்டும் குச்சியும்) எடுத்துக் கொண்டு
நட்டநடு மதியத்தில்  வீட்டுத் திண்ணைக்குத் தோழியரோடு வந்து விடுவாள்.
அம்மா உள்ளே  தம்பியோடு  தூங்குவது ஜன்னல் வழியே தெரியும்.

பக்கத்துவீட்டு அம்மணியைப் பார்த்தால் கேட்பது கிடைக்கும் என்று ''அம்மணி'' என்றழைத்தபடி
அவர்கள் வீட்டுக்குப் போய்விடுவாள்.
அம்மணி வீட்டில் நல்ல பெரிய ஊஞ்சல் ஒன்று இருக்கும்.
அதில் உட்கார்ந்து  எப்பவும்  பாடம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணா சுந்தரம் இல்லாத
சமயத்தில் , குட்டிக்காலாய் இருந்தாலும் ஏறி உட்கார்ந்து கொண்டுவிடுவாள்.
அம்மணிக்கோ  பெண் குழந்தை இல்லாத குறை.
ஒரு கிண்ணத்தில் பால் கோவாவும், வேக வைத்த வேர்க்கடலையும் கொடுத்து
குட்டி ஆண்டாளைப் பாடச் சொல்லுவாள்.


அம்மணிக்குச் சினிமாப் பைத்தியம் ஜாஸ்தி. இரவு நேரத்தில்  ஆண்டாளைத் துணைக்கு அழைத்துக்
 கொண்டு பாதாள பைரவி, வேதாள உலகம், பராசக்தி என்று  அழைத்துச் சென்று விடுவாள்.
இரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு  கதவு இருக்கும்.

அம்மாவின் கவனம் தம்பி மேல் இருக்கும்போது அந்தக் கதவைத் திறந்துகொண்டு
 பக்கத்துவீட்டுக்குப் போகும் பெண்ணைப் பார்த்து ஜயா அம்மாவுக்குக் கோபம் வரும்.

அதுவும்  மதிய நேரத்தில் 'பெண்ணின் கணீர் குரலில்'' உலகே மாயம், வாழ்வே மாயம் ''
  பாடல் கேட்டதும்அம்மாதீர்மானித்துவிட்டாள்.;)

மூன்றாவது குழந்தை உருவாகிக் கொண்டிருந்த நேரம்.,
உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால்
  மெட்ராஸ் பாட்டிக்குக் கடிதம் அனுப்பினாள்.
முதல் வகுப்பு முடித்திருந்த ஆண்டாள், தனக்கு மிகவும் செல்லமான பிடித்த சீனிம்மாவோடு(மெட்ராஸ் பாட்டி)
சந்தோஷமாகச் சென்னை வந்து புரசவாக்கம் வெள்ளாளத்தெரு
கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்க்கப் பட்டாள்.
பாட்டியோடு கோவில். மாமாக்களோடு மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ் என்று படு  சந்தோஷமாகக் கழிந்தது.
மூன்றாவது பையனின் பிரசவத்துக்கு அம்மாவும் வந்தாள்.

அப்பொழுது இருந்த புரசவாக்கம்   நெரிசல் இல்லாத வீதிகளும், கை ரிக்க்ஷாக்களும்,
எந்த இடத்துக்குப் போனாலும் இரண்டு அணாவுக்கு  மேல் கேட்காத முனுசாமியும்,
நேரு பார்க்கும்,  பஸ் ஏறிப்போனால் புதையப் புதைய மணல் நிறைந்த மெரினா பீச்சும்,
மியூசியமும்  ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குச் சொர்க்க பூமியாகத் தெரிந்திருக்க வேண்டும்.

நீண்ட நாட்கள், அம்மா பெண்ணை சென்னையில் விடவில்லை.
புதிதாகப் பிறந்த
ரங்கநாதன் என்று நாமம் சூட்டப்பட்ட கொழுக் மொழுக் குழந்தையோடு,
ஜயலக்ஷ்மி நாராயணனின்   வாழ்க்கை மீண்டும் கணவன் இல்லத்தில் ஆரம்பித்தது.
இந்த வரலாறு  என் அம்மாவின்   வாழ்வில்  நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
அம்மாவோடு  நடத்தின சம்பாஷணைகளில் நான் கிரஹித்துக் கொண்டது.

திருமங்கலத்தில் 1954இல்  மீண்டும்  இல்லறம் தொடர்ந்தது.
 அப்பாவுக்கு  வேலை மாற்றல் ஆகித் திருமங்கலம் டவுனுக்கு(மதுரை அருகில்) வந்திருந்தார்.
ஒரு அழகான குடித்தனம் ஆரம்பித்தது.
டிஸ்கி,
நண்பர்களே  இந்த  பழைய காலக் கதையைத்
தொடரக் கொஞ்ச காலம் ஆகும்..
எப்படி இருக்கிறது என்ற உங்கள் மதிப்பீடுகளைப் பொறுத்தே
அது அமையும்.

--

Sunday, March 20, 2011

மார்ச் மாதம் தான் பூரண நிலவுதான்...

மேகங்களுக்குள் பாதிநிலா
மரங்களுக்கு நடுவே   பூர்ணிமா
வேலிக்கு  மேல் நிலா
எட்டிப் பார்ப்பதென்ன நிலத்தையே....
தெரு விளக்குகளைத் தோற்கடிக்கும் குளிர் நிலவு
கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம் காலை ஐந்து மணி
இலைகளுடனே  நிலா  இன்று காலை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, March 15, 2011

அணு உலைகள் தரும் பாடங்கள்




ஆழி அலைகள் கண்டு கண்டு கண்ணே பழுதானது.
மனமோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டது.
இத்தனைக்கும் நான் ஒரு  பார்வையாளி மட்டுமே.

ஜப்பானின் பேரிடர் முப்பதடி அரக்கனாக பத்தாயிரம் கரங்கள் கொண்ட
கார்த்தவீர்யார்ஜுனனாக
ஆவேசத்துடன் நகரங்களையும் , உயிர்களையும், பெரிய பேருந்துகளையும்,
கப்பல்களையும் விழுங்கிய காட்சி,இனி மனதை விட்டு அகலுமா என்பது சந்தேகமே.

ஆனால் அதைவிட  மோசமான  செய்தி இந்த அணூலைகளின் வெடிப்பு. ஒன்றல்ல மூன்று.
இன்னும் அதிகார பூர்வமாக அவர்கள் அதை வெளியிடாவிட்டாலும்,

அணு உலைபற்றிய விஞ்ஞானம் அறிந்தவர்கள்   வெளியிடும் அறிக்கைகள்
  மனதைக் கலக்குகின்றன.

நம் ஊரில் சுனாமி வந்த போது ,கல்பாக்கம் அணு உலை  பற்றிய கவலை
இருந்த போதும், அது சீக்கிரமாக அடங்கி விட்டது. அடக்கப் பட்டுவிட்டது.

நமக்குத் தான் நம் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசரம் இருக்கிறதே...
சமூக அலுவலர்கள்,என் ஜி ஓஸ், கருணை உள்ளம் கொண்ட தனிப்பட்ட
மனிதர்கள்.  இவர்களின் சேவைக்கு நம்மால் முடிந்த அளவில்  ,
பணமும் உடைகளும், பாத்திரங்களும் கொடுத்தோம்.

இப்பொழுது நடந்திருக்கும் அழிவு, ஆபத்தையும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கிறது.
எல்லோராலும் போற்றப் பட்டு நாடு முழுவதும் மின்சாரம் அள்ளிக்
கொடுக்கப் போகும் அணு உலைகள்.
அவைகளே இப்பொழுது உயிருக்கும் உலை வைக்கும் அபாயங்களாக நொடிக்கு நொடிக்கு
மாறி வருகின்றன,.

எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு  மஞ்சள் பல்ப்
வெளிச்சம்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பால் வண்ண மெர்க்குரி விளக்கு ஒரே ஒரு கூடத்துக்கு.
நாங்கள் சந்தோஷமாகவே வளர்ந்தோம்.

பிறகு வந்தவை அணு மின் உலையும் அதன் அற்புதங்களும். நாமும் வளர்கிறோமே
என்கிற பெருமை. மும்பையில் பாபா அணு உலை.
போக்ரானில் அணு குண்டு வெடிக்கப் பட்டு நாமும் அணுஇயக்க நாடுகளில்
 பெருமைப் பட்டுக் கொள்ள இன்னோரு  இறகு.
பிறகு வந்தது ரஷ்யாவின் செர்னோபில்.

அதில் இருந்து மீண்டவர்கள் கொஞ்சம். மீண்டவர்களில் புற்று நோயால்
 பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கில்.
இப்போது ஜப்பானின் அணு உலைகளின்(வெடித்தது என்று ஒரு சாரார்)
இல்லை தயார் நிலையில் இருக்கிறோம்  என்று அரசு தரப்பு.) மக்களை
இருபது கிலோ மீட்டருக்குத் தள்ளிச் செல்லுமாறு  உத்தரவிட்டிருக்கிறது.

1 பூகம்பம்,
2,சுனாமி,
3, அணுமின் உலை வெடிக்கும் அபாயம்,
4,நானூறுக்கும் மேற்பட்ட  ஆஃப்டர் ஷாக்ஸ்.

இவ்வளவையும் மீறி குடும்பத்தைப் பிரிந்த பெற்றோர்.
பெற்றொரை இழந்த குழந்தைகள்.
அபூர்வமாகத் தப்பிய மனிதர்கள். அனைவருக்கும் வேண்டியது ஆறுதல், அடுத்த வேளைச் சாப்பாடு,
தண்ணீர்,
குளிருந்து காப்பாற்ற நான்கு சுவர்கள்.
அதற்கு மேல் அணு அபாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை.

நாம் சிந்திக்க வேண்டும். எல்லாத் தண்ணீர் வளங்களையும் அழித்து குளிர்பானங்களை உருவாக்குகிறோம்.
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மின்சாரத்துக்கு
என்று கூடங்குளத்தில் அணுமின் உலை கட்டுகிறோம்.
கடவுள் வேறு அவதாரம் எடுத்துவருவாரோ.
இல்லை நாம்தான் விழித்துக் கொண்டு ஆவன செய்வோமோ.

மனிதம் பிறக்க, நாடு தழைக்கும்.
ஜப்பானின் மனித இனத்துக்காக நாம் பிரார்த்தனை செய்யும் நேரம் இது.
நமக்காகவும் செய்து கொள்வோம்.

பின் குறிப்பு.

எந்தவகையிலும் விஞ்ஞான வளர்ச்சியை
அலட்சியப் படுத்தவில்லை.

இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, March 11, 2011

இன்னும் கதவுகள்

சுமைகளைச் சுமக்கும்  அலமாரிக் கதவு:)
எங்க வீட்டு இசைத்தட்டுகளையும்  திரைப்பட சிடிக்களையும் காக்கும் கதவுகள்.
ஊறுகாய்களைக் காக்கும் கதவுகள்
பரண்  கதவு. பொக்கிஷங்கள் உள்ளே இருக்கின்றன் என்று சொல்ல ஆசை.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்

அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்
ஒன்று , மருத்துவ மனையில் அப்பா  சரியாகக் கவனிக்கப் படாதது.

அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.
அப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து
நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.
அவரவர் வேலைகளில் மூழ்கி
36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத  உயிரை இழந்தோம்.

ஒரே  ஒரு  பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.

அம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.
ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்
 போல நெற்றியில் திருமண்காப்பு,
''என்னம்மா  சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''
என்ற புன்சிரிப்புடனான கேள்வி.

அம்மா சொன்னது போல்  கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.
அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.
எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.

மதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்
உச்சக் கட்டத்தை  அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து
வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று
சொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.

அப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

என்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.
வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.
அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.
 கண்கள் திறந்திருக்க,பார்வை இல்லை.
அம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே
கைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.
வந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான்.
வேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம்  என்ன ஆச்சு என்று கேட்டதற்கு
''வயசாச்சு இல்லம்மா'',  என்று தன் தொலைபேசியில்  சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
அன்று எங்களுக்கு மிகவும் உறுதியாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.
இன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.

கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு
ஏற்கனவே   வல்லமை மின்னிதழில்  பிரசுரம்  ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு  மிகவும் நன்றி.

பலவருடங்களாக  மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி    சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.
தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.

அவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி 
நடைபாதையில்  உட்கார்ந்துவிட்டார். அதுவும்   சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.
கிட்டத்தட்ட   நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர்  அவர்கையிலிருந்த  டயபெடிஸ் ஐடி   அட்டையைப் பார்த்து அவரை
மருத்துவமனையில்  சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.
50 வயதே   ஆகும் அவரைக் காப்பாற்றிய   நல்ல மருத்துவரும் இருக்கிறார்.
இதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.


மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்'
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.

Monday, March 07, 2011

கதவுகள் பழைய உரை நடை க(*வி)தை

 வீட்டுக்குள்   கடவுளின் அறைக் கதவுகள்
திறக்கும் கதவுகளுக்குப் பின்
நிற்கும் விழிகள்
சிலசமயம் அன்பு
சிலசமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சிலசமயம்  வரவேற்பு.

எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத கதவுகள்.


பாட்டியின் காலத்தில்  கதவை மூடினநாட்கள் இல்லை.
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.

அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.

இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி  மேலும் காவல்
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''


இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(
*********************************
இந்த உரைநடைக் கவிதை  '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது


ஆசிரியருக்கு என் நன்றிகள்.




மூடிக் கிடக்கும் கதவு, திறக்கும் மார்ச் புகைப்படங்கள்

வெளிஉலகத்தை மூடாத கதவு
கதவு திறக்கிறது, மின்விசிறியின் காற்றும் வரும்:0)
அறைகளைப் பிரிக்கும் கதவு
மின்சாரத்தின் மீட்டரைக் காக்க்கும் கதவு
வெளியே  இருக்கும் கதவுகளைக் காட்டும். உள்ளே யாரும் வரும் முன்னே ஓசையிடும் இரும்புக் கதவு.
மழலையைரின்  மாடிப்படிபயணத்தை தடுக்கும்   குழந்தைக் கதவு
அருமையான  உபகரணங்களைத் தன்னுள்ளே  அடுக்கி வைத்திருக்கும்  இன்னுமொரு அலமாரியின் கதவு.
உள்ளே விழும் அழுக்கைச் சுத்தமாக்கித் தானும் பளிச்சென்றிருக்கும்  துணிதுவைக்கும் எந்திரத்தின் கதவு.
இன்னும் வரும்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, March 02, 2011

வல்லமை மின்னிதழில் அம்மாவின் பதிவு

எனது முந்தைய பதிவில் அம்மாவின்   டயரிக் குறிப்பு   ஒன்றை வலையேற்றி இருந்தேன்.

அன்பு சகபதிவர் , தோழி  ''முத்துச்சரம்'' ராமலக்ஷ்மியிடம் எங்க அம்மாவின் எழுத்தாளராக  ஆகும் கனவு பற்றியும் சொல்லி இருந்தேன்.


என்னிடம்  அவர் இந்தப் பதிவை'' வல்லமை  ''  மின்னிதழுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி இருந்தார்.
இன்று அது நிஜமாகிவிட்டது. அம்மாவின் எழுத்து  பத்திரிகையில் வந்துவிட்டது.

என்னால் முடிந்தால் டமாரம் அடிக்காத குறையாக எல்லோரிடமும் போய்ச் சொல்லி இருப்பேன்.
முடிந்தது என் வலைப்பதிவிலேயெ பதிப்பதுதான்.

இன்னும் என்னால் இது நடந்தேறியிருக்கும் விதத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
 வெகு பூரிப்பாக இருக்கிறது.
வயதில் இளையவர் ராமலக்ஷ்மி.
அம்மாவின் சார்பில்   அவருக்கு  என் நமஸ்காரங்களை அளிக்கிறேன்.
காலத்தில் செய்த உதவி.அதற்கே என் வணக்கங்கள்.
வெளியிட்ட ''வல்லமை'' இதழுக்கு நன்றி.
http://www.vallamai.com/?p=2119

அளவற்ற மகிழ்ச்சிக் கடலில் என் அம்மாவையும் அப்பாவையும் வணங்கிக் கொள்ளுகிறேன். மீண்டும் நன்றி ராமலக்ஷ்மி













எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்