About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, January 13, 2011

1982 ஜனவரி 14, ஒரு பொங்கல் நாள்

  மத்தியானம்  சாப்பிட்ட போளியே  இன்னும் ஜீரணம்  ஆகவில்லை, அதுக்குள்ள இன்னோரு  மண்டை வெல்லத்தை எடுத்தாச்சு உன் மாமியார்,  போ போ !"" விரட்டினார் மாமியார்.

அவரது மாமியார்  என் மாமியார் ஆவது இந்த மாதிரி சமயங்களில் தான்.;)
''ஏன்  மா, நாளைக்குத் தானே பொங்கல் ,இன்னிக்கே என்ன ஏற்பாடு'' இது
என்' ஞே'  டைப்  கேள்வி:)
பொங்கப் பானைகார்த்தாலை 9 மணிக்கு வைக்கணும். அதுக்கு மத்த விஷயமெல்லாம் ரெடியாக் வேண்டாமா.
இருக்கிறதிலியே நீ தானே யங்கஸ்ட்....போ போ.
இல்லாட்ட  பாட்டி எங்களையும் அழைத்து விடப் போகிறார்;'' கிண்டல் தொனிக்க விரட்டும் நாத்தனார்.


சரிடா சாமி.என்னதான் செய்யறாங்க பார்க்கலாம்  என்று நினைத்த வண்ணம்,
''வரேன் ஆஜி'' என்று குரல் கொடுத்தேன்.

87 வயசு ஆஜிப்பாட்டி,
அரிவாள் மணை, பெரிய   தினமணி பேப்பர் விரித்துவைக்கப் பட்ட நிலையில்...,ஏலக்காய்  25  எண்ணம்,மண்டை வெல்லம் இரண்டு  பங்களூரிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்டது.,
பெரிய வகை முந்திரிப் பருப்பு.(ஏதாவது ஒரு பேத்தி  குவைத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்திருப்பார்.)
''வா வா வா, சின்னப் பெண்ணெல்லாம் மத்யானம் தூங்கக் கூடாது பார்.

இப்ப இதெல்லாம் தயார் செய்துட்டால் நாளைக்குப் பொங்கல் பானைக்கு ரெடியா  இருக்கும் இல்லையா என்று என்னை ஆஜி பார்க்கும் பார்வையில் ,என் தலை சரி சரி என்று நாலு தடவை ஆடும்.

அந்த மத்யான வேளையில் தை மாத இள வெய்யிலில் அலுப்புத் தெரியாமல் இருக்கப் பழைய கதைகளை ஆஜி சொல்ல ஆரம்பிப்பார்.
நானும் அவர் சொன்ன பிரகாரம்,  சின்னக் குழவியால்  ஏலக்காயை  முதலில் பொடிப்பேன்.
இரண்டாவதாக  வெல்லம். ஏலக்காய்ப் பொடித்த இடத்திலேயே வைத்து மண்டை வெல்லத்தை உடைக்க வேண்டும். அதில் ஒரு பாதியை அந்த அரிவாள் மணையில் செதுக்கி எடுக்க வேண்டும்.
மிச்சத்தைப் பொடி வெல்லம் ஆக்க வேண்டும்.
பிறகு வரும் பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய்  வகையறா.

இதெல்லாம் செய்து முடிக்க  இரண்டு மணி நேரம் ஆகுமா.?
உடனே   காபிக்கடை.
ஆஜிக்கு நிறைய டிகாஷன் கஷாயம். எருமைப் பால் அப்போ கறந்து
வந்தது  தனியாகக் காய்ச்சி, அவருடைய வெள்ளி  டம்ப்ளரில் கொதிக்க கொதிக்கக் கொடுக்கணும்.
அப்பாடா என்று அவர் தன் பெரிய ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார்.

உள்ளே அரட்டை கலாட்டா நடக்கும் இடத்துக்கு நானும் போய்க் கலந்து கொள்வேன்.
''காரியக் கப்பல் வந்துவிட்டது.''என்று கலாட்டா  செய்வார்கள்.:)
ரங்காச்சாரி  கடையிலிருந்து  எடுத்து வந்திருந்த  புடவைகளைப் போட்டி  போட்டு ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்ளுவோம்.


எனக்கோ மறு நாள் பொழுது விடிவதற்கு முன்னால் நடக்க வேண்டிய வேலைகளை எண்ணி இப்பவே களைப்புச் சேர்ந்தது போல இருக்கும்!
பொங்கல்  முடிந்து அடுத்த நாள் கனுப்பொங்கல். வீட்டில் இருக்கும் நண்டு,குஞ்சு குளுவான்கள்(பெண்கள்)   இருந்து என் பெரிய மாமியார் வரை அனைவரும்,   குளித்து முடித்த கையோடு புத்தாடை புனைந்து ஆஜி முன்னால்  நிற்க வேண்டும். அத்தனை பேர் நெற்றியிலும் கன்னத்திலும் பசு மஞ்சளை அழகாகத் தீற்றி விடுவார்.
திருமணமானவர்கள் தாலியை வெளியில் எடுத்து அவரிடம் காட்ட அதிலும் மஞ்சள் பூசுவார்.


ஒரு இருபது நபர்கள் இருப்போமா?

அத்தனை பேரும் வாழை இலை கரும்புத் துண்டுகள், முதல் நாள் வைத்த பொங்கல் பானை அத்தனையும்  மொட்டை  மாடியில் கொண்டு போய் வைத்து விட்டு, மாடியைக் கழுவித் தரையில் பத்து  எண்ணிக்கை  கோலங்கள் போட்டு அதில் மஞ்சள் இலைகளைப்    பரத்த வேண்டும்.
வயதில் மூத்தவர் ஆரம்பிக்க, இளையவர் வரை ஐந்து வரிசையாக சர்க்கரைப் பொங்கல்,வெள்ளை சாதம், மஞ்சள் சாதம், சிவப்பு சாதம்   என்று  ஐந்து ஐந்தாக நாலு வரிசை வைக்க வேண்டும்.

தட்டில் வைத்திருக்கும் வெற்றிலை,பாக்கு,மஞ்சள் ,வாழைப்பழ வரிசை எல்லாவற்றையும் சூரிய பகவானுக்குக் கை காண்பித்து விட்டு, ஆரத்தி எடுத்து,கனுப்பிடி வச்சேன்,காக்காய்ப் பிடி வச்சேன்,காக்காய்க்கும் குருவிக்கும்  கல்யாணம் என்று கோரசாக முழங்க வேண்டும்.
மனதில் அவரவர் சகோதரர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து கொள்ளணும்.

கீழேயிருந்து வரும் ஏழு கறிக் குழம்பு வாசனையும், மற்ற சித்ரான்னக்களின் வரிசையும் பசியைக் கிளப்பிக் கீழெ  துரத்தும்.
ஆஜி எங்கள் எல்லோரையும் அமரவைத்து,  சமையல்காரரைப் பரிமாறச் சொல்லுவார்.
வயிறு நிறையச்  சாப்பிடுங்கோ    பொண்டுகளா'' என்னும் அன்புக்குரல்   இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நன்னாள்  வாழ்த்துகள்.
பால் பொங்கி இன்பம் பெருகட்டும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல மலரும் நினைவுகள்..

காரியக்கப்பல் ஹஹ்ஹ்ஹா..

கோபிநாத் said...

மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா ;-))

ஸ்ரீராம். said...

நல்ல நினைவுகள்... இப்போ கனுப் பொங்கல் நாங்கள் எல்லாம் சித்ரான்னம் போல செய்து ஏழு தான் கூட்டு செய்து சகோதரிகளை வீட்டுக்கழைத்து சகோதரிகளுக்கு புடைவை ரவிக்கை வாங்கிக் கொடுத்துக் கொண்டாடுகிறோம். வழக்கங்கள் சுருங்கி விட்டன.

புதுகைத் தென்றல் said...

வயிறு நிறையச் சாப்பிடுங்கோ பொண்டுகளா'' என்னும் அன்புக்குரல் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.//

ஏக்க கொசுவத்தி சுத்துது வல்லிம்மா. இனிமையான நினைவுகள். வெல்லத்தின் சுவை போல. மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

//காரியக்கப்பல்..//

ரசித்தேன் வல்லிம்மா..:-))))))

வல்லிசிம்ஹன் said...

முன்னமேயே சொல்லிட்டேனோ கயல்.:)
ஒண்ணுமில்லாஅம குறுக்கும் எடுக்கும் நடக்கறவங்களுக்கு ,அதாவது சீன் போடறவங்களுக்கு எங்க வீட்டுச் செல்லப் பேருதான் காரியக் கப்பல்.:)

இனிய பொங்கல் வாழ்த்துகள் பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபி.
நல்லா இருக்க்கீங்களா. உங்களுக்கும் தை மாத வாழ்த்துகள்.தைப்பெண் நல்ல சேதி கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். இதுதான் கனுப்பொங்கல்.

இதை நன்றாகச் செய்தாலே போதுமே அப்பா.சகோதரிகளின் வாழ்த்துகளோடு இந்த அம்மாவின் வாழ்த்துகளும் உங்களுக்கு இந்தப் பொங்க்கலுக்குக் கிடைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல்.
நாம் வளர்வது உண்மைதான். ஆனாலும் பெரியவர்களின் பாதுகாப்பு எனும் நல்ல சுவர் எவ்வளவு இனிமை.
புது வீட்டில் நல்ல பால் பொங்கி சங்கராந்தி கொண்டாடுங்கள் பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். ஆமாம் இந்தக் கப்பல் கோஸ்ட் கார்ட் மாதிரி போய் வரும்.:0
மனம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

ஆஜியின் அரட்டை நிறைவாக இருந்தது. போளியின் பின்னே இத்தனை சூட்சுமமா? பெண்களுக்கு முதலில் உபசாரம் நடந்த காணும் பொங்கலைக் கடுப்புடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தது.

பொங்கல் வாழ்த்துக்கள்.

சுமதி said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் வல்லிம்மா :))))

அப்பாவி தங்கமணி said...

மலரும் நினைவுகள் அழகு... கண் முன்னே கொண்டு வந்தது போன்ற வர்ணனை இன்னும் அழகு... பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்

ஸ்ரீராம். said...

//"சகோதரிகளின் வாழ்த்துகளோடு இந்த அம்மாவின் வாழ்த்துகளும் உங்களுக்கு இந்தப் பொங்க்கலுக்குக் கிடைக்கிறது"//

நன்றி மா...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,எங்க பிள்ளைகளும் நாங்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து,அவர்கள் அப்பாவை அழைத்துக் கொண்டு புக் ஃபேர் போய்விடுவார்கள்.:)
நலமோடு வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி. உங்களுக்கும் எங்கள் எல்லோருடைய இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கமணி,
இன்னும் ஆஜியென்னும் சகாப்தத்தைப் பற்றி நிறைய எழுதலாம்.
88 பாகமாக் வர வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.:)

நானானி said...

நன்கு மலர்ந்த நினைவுகள்....மணம் அந்த காலத்துக்கே கூட்டிச் சென்றுவிட்டது. எனக்கும் மாமியார் வீட்டு பொங்கல் நினைவுகள் வந்துடுதுட்டுது!!!

மாதேவி said...

இனிய தைப்பொங்கல்,கனுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

அருவாமணையில் நறுக்கும் மண்டை வெல்லம்.............

மறந்து போயிருந்த விஷயம்!!!!!

சூப்பர் கொசுவத்திப்பா!
ரசிச்சேன்.