Blog Archive

Monday, November 22, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும்..3

அந்தக் கதை பரத்தின் அம்மாவைப் பொறுத்த வரை கண்டிப்பாக ஒரு திருப்புமுனை.
தினசரி சண்டைகள்,பட்டினிகள்,வேலை இழப்பு, 

 உறவினர்கள் வந்தால்
அவமானம் எல்லாவற்றையும் தாண்டுவதற்கான   பொறுமையை அவள் பயிற்சி செய்து வந்தாள்.  குழந்தை பரத்தின் நிலைமைதான்  அவளை மிகவும் வருத்தியது.
எப்பவும் சந்தோஷமாக விளையாடும் அப்பாவை  கிட்டத்தட்ட   மறந்தே விட்டான்.
அப்பா ஒரு பயம் தரக் கூடிய  உருவமாகத் தான் தெரிந்தார்.
மாமாவீட்டில் போய் இருக்கவும் அவன் கவுரவம் இடம்
கொடுக்கவில்லை.
.
அம்மா சொல்லித்தந்த கந்தசஷ்டிக் கவசம்
சொல்லும்போது கூட   மது வாசனை வந்தால் அவனால் தியானம் செய்ய முடியாமல் போகும்.
சிநேகிதர்களை  வீட்டுக்கு அழைத்து வரவும் தயக்கம்.
அப்பா எந்த நிலைமையில் இருப்பாரோ என்று. முடிந்த வரை அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாடப்  போய்விடுவான்.
இப்படியே பதினைந்து வரை கடந்துவிட்டான்.
அந்தக் சமயத்தில்தான் பரத்தின் அம்மா  சென்னையில்
நடக்கும்  மறுவாழ்வு மையத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு
அங்கு செல்ல  ஆசைப் பட்டாள். கணவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே.!
இன்னும் அவன் தான் ஒரு ஆல்கஹாலிக் என்பதையே ஒத்துக் கொள்ளவில்லை.
நான் என்ன  பாதையில் விழுந்து கிடக்கிறேனா.
வீட்டிலேயே என்  ஏஜென்சி நடத்துகிறேன்.
நஷ்டமாக இருந்தாலும்,,,,, நாமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதானே
இருக்கிறோம்.
இதெல்லாம் அவனது வாதம்.

அந்தச்  சாப்பாடு எப்படியெல்லாம் வருகிறது என்று பரத் அம்மா மட்டுமே
அறிந்த உண்மை.
 தன் அப்பாவுக்கு எழுதிப்போட்டுக் சில நாட்கள்
பணம் வரும். சில நாட்கள் தம்பியின் தயவில்.
சிலநாட்கள் ,
திரு கிறிஸ்டோபரின்    வண்டியில் வந்து இறங்கும்.
எத்தனை நாட்களுக்கு இது சரிப்படும் என்று நினைத்த
பரத்தின் அம்மா ,அவனது பத்தாம் வகுப்பு முடிந்ததும்,
தன் கணவனை அணுகி , எனக்காக ஒரு தடவை சென்னை வாருங்கள் .
என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
துணைக்கு என் தம்பி வருவான்.
என் மாமாவின் வீட்டுக்குப் போய் இறங்கலாம்.
இரண்டு மூன்று நாளைக்காவது நீங்க  கொஞ்சம்   கண்ட்ரோலில்   இருக்கணும்.

இது நடக்கவில்லையானால் உங்களை சைக்கிட்டியாரிஸ்ட் கிட்ட தான் அழைத்துப் போக வேண்டும்.
அவரிடம் பேசிவிட்டேன்.
மூளைக்குப் போகும் நரம்பு மண்டலத்தில் சின்ன ஆப்பரேஷன் செய்தால்
சரியாகிவிடும். சைட்  எபெக்ட்ஸ் எல்லாம் இருக்குச் சந்தர்ப்பம் உண்டு என்று
சொன்னார். மனசைத் திடமாக்கி இந்த விவரங்களை   அவள் சொல்லும்போது 
சில்லென்ற பயம் புகுந்தது பரத்தின் அப்பாவுக்கு.
இல்லை இந்த கவுன்சிலிங் சென்டருக்கு  வருகிறேன்.
இரண்டு நாள் ! நாம் திரும்பி விடவேண்டும்.!

குலதெய்வம் முருகனை  வேண்டி அவர்களது சென்னைப் பயணம் ஆரம்பித்தது.
சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடியாத
கணவனை, அவனது உளறலையும், பரத்தின் கண்ணீரையும் சகித்துக் கொண்டு சென்னை வந்து இறங்கினாள் பரத்தின் அம்மா.
மாமா வீடு வருவதற்கு முன்பே வழியில் தனக்கு வேண்டிய மதுவை வாங்கினவனைக் கண்டு மனம் தளராமல்,
மாமா வீட்டுக்கு வந்தார்கள்.
அதிசயமாக  மாமா கண்டு கொள்ளவில்லை. அவர் மிலிட்டரியில் இருந்தவர்.
இது போல என்ன என்ன பார்த்திருப்பாரோ.!
அவருடன் ஒரு சிநேகிதரும் இருந்தார்.
பரத்தை உள்ளே போகச் சொல்லிவிட்டு இவர்களை நிறுத்தினார்.
அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கணவன் நின்றதுதான் பரத் அம்மாவுக்கு அதிசயமாக இருந்தது.
எதோ பாரம் இறங்கியது போல உணர்ந்தாள்.
கட்டுக்கு அடங்காமல் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மாமியைப் பார்க்க
உள்ளே சென்றாள்.  மாமி அவளை ஆசவாசப் படுத்திக் கவலைப் படாதம்மா
மாமாவோட சிநேகிதரும் 
குடிப் பழக்கத்திலிருந்து  மீண்டவர் தான். அவருக்கு எப்படிப் பேசுவது,அழைத்துப் போவது எல்லாம் தெரியும்.
குளித்துவிட்டு வண்டி ஏறுங்கள் . மியூசிக் அகாடமி பக்கத்தில் சாந்திரங்கனாதன் என்ற பெண்   இந்த மாதிரி சென்டரை ஆரம்பித்திருக்கிறாள்.
அவள் சொல்கிறபடி செய்யுங்கள் என்று நால்வரையும் வீடு வண்டியிலயே அனுப்பி வைத்தாள்.
இது ஆரம்பம்தான்.
முதலில் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தனியார் மருத்துமனையில்
உடலில் இருந்த  டாக்சின்ஸ்   எல்லாம் வெளியேற்ற ஏற்பாடு நடந்தது.
அது முடிந்து டாக்டர் ஒருவரின் தெரபி
ஆரம்பித்தது. அங்க இருந்த 6 நாட்களும்  குழந்தை பரத்
பெற்றோர் இருவருக்கும் ஒரு தூக்க முடியாத
டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு வருவான். அதுவும் இரண்டு
பஸ்கள் ஏறி இறங்க வேண்டும்.
பரத் அம்மாவின் வேதனை சொல்லி முடியாது. பெற்றது ஒரு பிள்ளை. அதற்கு இப்படி ஒரு நிலைமை வந்ததே.
பதினைந்து வயது  என்றாலும்  போஷாக்குப் போதாதால் 
நறுங்கலாக இருப்பான். கைகள்  சிவக்க வெய்யிலில் அவன் வரும்
கோலம்  அம்மாவை இன்னும் வருத்தும்.
அம்மா அப்பாவுக்குக் சரியாகிடுமாம்மா
என்று கேட்பான்.
இதற்கப்புறம்   நான்கைந்து  தடவை சிகித்சை எடுத்துக் கொண்டபிறகுதான் ஒரு தெளிவிற்கு வந்தார் அப்பா.  வயது  நாற்பத்தைந்து.
முருகன்  கண் திறந்தான்..
அரபு நாடுகள்   ஒன்றில்  பைனான்ஸ்  கம்பனியில் வேலை கிடைத்தது.
அதிசயத்திலும் அதிசயம் அதற்குப் பிறகு பரத்திற்கு ஒரு தங்கையும் பிறந்தாள்.!

பரத்தும் வெளிநாடு  போய்ப  படித்துவந்து சென்னை தனியார் 
அலுவலகத்தில்  வேலைக்கு அமர்ந்தான். 
முப்பது வயது இருக்கும்போது   தன்னுடன் வேலை பார்த்த பெண்ணையே  
திருமணம் செய்ய ஆசைப்பட்டான்.
பரத்தின் மாமா  எல்லாம் விசாரித்து தலை அசைத்தார்.
மருமகளும் நல்லவளாக அமைந்தாள்.

பரத் தன் மாமா  மாமியைத் தன்னோட வரவழைத்துக் கொண்டான்.
இவ்வளவு பெரிய  கதையை , இந்தப் பரத் என்னும் குழந்தை தன் அப்பாவின் அன்பை எப்படி  தொலைத்தது. மீண்டும் கிடைக்கப் பெற்றாலும்  ஒட்டாமல் போனது   எல்லாம் உங்களுக்கும் எனக்கும் புரியும்.பரத்தின் மனைவிக்குச் சொல்வது அவ்வளவு எளிதில்லையே .தனக்குக் கிடைக்காத சலுகையும் செல்லமும் பரிவும்,தன் மகனிடம் காண்பிக்கிறான். அவ்வளவுதான். இன்னொரு குழந்தையும் பிறந்தால் ,  இதுவும் மாறலாம்:)
 தொடரும்  




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

வல்லிசிம்ஹன் said...

கதை ரொம்ப நீண்டு போச்சோ.!
ஈ யாடறதுன்னு கூட சொல்ல முடியவில்லை:)

துளசி கோபால் said...

ஹேப்பி எண்டிங் மனசுக்கு நிறைவைத் தந்தது.


குடின்னாலே எனக்கு மகா வெறுப்பு.

Unknown said...

கதை நல்லருக்கு வல்லிம்மா,குடிப்பவர்கள் என்றால் எனக்கு சிறு வயதில் இருந்தே பயம்,அருவருப்பு வந்துவிடும் பாவம் கதையின் நாயகன் சிறு வயதிலிருந்தே இதையெல்லாம் அனுபவித்திருக்கிறார்.

மாதேவி said...

வைத்தியமில்லாமல் திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.

வைத்தியம் செய்யவெளிக்கிட்டு மீண்டும் மாண்டவர்கள் என கதைகள் ஏராளம்.

அப்பாதுரை said...

சுபமாக இருந்தால் சரி :)

ஒவ்வொரு வீட்டிலும் இதைப் பற்றி அன்பாகவும் அடித்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு தலைமுறையிலும் போதைப் பொருளுக்கான சப்ளை டிமேன்ட் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. disturbing inverse trend, என்ன சொல்கிறீர்கள்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுபம் :) சுபத்துல முடிஞ்சாதாங்க நிம்மதி.. கதை படிக்குமோது கூட..

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
மதுவில் சுகம் கண்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் எத்தனை! அது கண்டும் மீண்டும் மயங்குபவர்களை என்ன செய்ய முடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி,
அவர்கள் மனிதர்களாக இருந்தால் பயப்பட வேண்டாம்.அசுரர்களாக இருந்தால் ஒதுங்கித்தான் போகணும். இப்பவும் அந்தப் பையனைப் பார்க்கும்போது மனசு சங்கடப்படும்.முழுவதும் படித்ததற்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நீங்கள் சொல்வது பெரிய உண்மை.
தானாக விட்டுவிட்டால்
முழுதும் விட்டவர்களாக
வாழ்கிறார்கள். வைத்தியத்தில் திருந்தியவர்கள் மனம் திருந்தாமல் உடல் மட்டும் மாறினால்,அது மீண்டும் மதுவுக்கு ஆசைப்படுகிறது.

வல்லிசிம்ஹன் said...

''அன்பு துரை,
இந்த பயம் நிஜமானது.
ஒரு பக்கம் என் தோழி கவலைப் பட்டது பரத்துக்கும் இந்த பழக்கம் வந்துவிடப் போகிறதே என்று.
ஏதோ இறையருள் தான் காப்பாற்றி வருகிறது அந்தக் குடும்பத்தை.

இப்போது வளர்கிற தலைமுறைக்கு பள்ளிகளிலிருந்தே இந்தப் போதை எத்தனையோ விதத்தில் அறிமுகப் படுத்தப் படுகிறது.
ஜெயகாந்தன் நாவலில் எட்டுவயது சிறுவன் பீடி பிடிப்பதைக் கண்டு கவலைப் பட்டது எங்கள் தலைமுறை. அதற்குப் பிறகு எத்தனையோ மாற்றம். அடுத்த தலை முறை என் தோழி.
இப்போது எத்தனையோ ரூபங்களில் அந்த அரக்கன் நடமாடுகிறான். பான் பராக் இல் ஆரம்பித்து இன்னும் எத்தனையோ. தப்பிய பிள்ளைகள் பிழைக்கிறார்கள். மாட்டியவர்களின் பெற்றோருக்கு வேறு வேதனை வேண்டுமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முத்து, கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்தவர்தான் பரத்தின் அப்பா.
இப்போதும் என் தோழி சௌதியில் இருப்பதால்தான் தன் மனம் கொஞ்சமாவது பயமில்லாமல் இருக்கிறது என்று ,அதாவது அவர் நிறுத்தி பத்துவருடங்களுக்கு அப்புறமும் சொல்கிறாள்.

ஈசியான விஷயமே இல்லம்மா.

Jayashree said...

“more money,more education,more power.I AM BIG ,I CAN HANDLE IT.:( “

With all due respect I beg to differ. Alcoholism or addiction is not because of these. In fact it is our judgemental view. Alcoholism has multiple reasons. குட்டிபசங்க இப்ப கண்டது காணதது மாதிரி சினிமா பாத்துட்டு குடிக்கறது வேற தான் . ஆல்கஹாலிஸமோட psychodynamics is different from this. படிச்சவா எல்லாம் குடிக்கறதில்லை, படிக்காதவா குடிக்காம இருக்கறதில்லை. தான் தனக்கு, என்னால முடியும் ங்கற தோணல் படிச்சவா படிக்காதவா ஏழை, பணக்காரன் வித்யாசம் பாக்கறதில்லையே ?



Alcoholism is a psychogenic symptom. It represents an attempt to cure. Attempt @ solution of an emotional conflict. இதை தீர்கமா பாத்தா இதுக்கு கீழ அடிமட்டத்துல இருக்கற personality disorder, over indulgent mother, over affectionate mum தெரியும். (இதை தாயின் குறை , வளர்ப்பு நு தப்பா புரிஞ்சுண்டுட வேணாம் . parenting நம்ப யாருக்கும் universitla சொல்லிதறல்லையே!! ஏதோ அவாஅவாளுக்கு தெரிஞ்சது பாவம் ) childhood experiences would have given a child excessive demands for indulgence. Excessive demands doomed to frustration in adulthood. This leads to reaction to frustration with intolerable disappointment and rage அது hostile actions ஆ ஆகி அதன் விளைவான guilt leads to punishing himself masochistically.Alcohol is a pacifier for disappointment and rage.தாழ்வு மனப்பான்மையிலிருந்து விளைவது Potent means of carrying out hostile impulses to spite near and dear ones, as a method of securing a masochistic debasement and as a symbolic gratification of the need for affection.குணமாக உதவிபுரிந்தால் ஒரு சுகமான டாப்பிக். ஒரு சக மனிதனின் உணர்வுகளை நுணுக்கமாக புரிந்து கொள்வதில் உண்டான சுகம் . . tough to be compassionate and kind. அது தரும் நிறைவு. இது ஒரு காம்ப்ளெக்ஸ் டாப்பிக். எழுதினா வாழ்க்கை பூரா எழுதலாம் அதை உங்களெல்லாம் மாதிரி தமிழ்ல விளக்கி சொல்ல தெரியல :((

வல்லிசிம்ஹன் said...

ஆல்கஹாலிசம் பற்றி முழுவதும் தெரிந்தவள் நான் இல்லை ஜயஷ்ரீ.
நான் ஒரு அப்சர்வர் ஆக இருந்தேன். வேண்டும் என்கிற நேரத்தில் பரத் அம்மாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு பக்கத்து வீட்டுக்காரி.அது ஒரு வியாதி,பலவித காரணங்களால் பூதமாக உருவாகிறது.
உருவான பின்னால் அதற்கு உணவாகக் கற்பனைகள் அந்த மனதில் புகுந்து அதைக காயப் படுத்தி,அந்தக் காயம் அருகில் நிற்கும் அறியாதவர்களையும் தாக்குகிறது.
தன் வாழ்வு அழிந்ததற்கே மனைவிதான் காரணம் என்று தெளிந்த அறிவோடு சொல்லும் கணவனையும் நான் பார்த்திருக்கிறேன்:) வெகு வெகு சிரமம் ஜயஷ்ரீ.குடிக்காத குடும்பம் கொடுத்தவைத்த குடும்பம்.நான் சொன்ன தம்பதிகளுக்குப் பணத்தின் ஆதரவு இருந்தது. பெரியவர்கள் துணை இருந்தது. இதுவே இப்போதும் இளைஞார்களிடம்,ஏழை இளைஞர்களிடமும் பெருகிவருகிறது. தினம் ஒரு காயத்தோடு வரும் வேலைசெய்பவர்களையும் பார்க்கீறேன்.நீண்ட நாட்கள் பேச வேண்டிய விஷயம் பா.

அப்பாதுரை said...

Jayashree சொல்வதும் புரிகிறது என்றாலும் 'அதீதம்' ஒரு அடிப்படை காரணம். அது செல்வம், சோகம், கல்வி, துக்கம், பலவீனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது தான். எதுவும் முழுமையாக alcoholisத்துக்குக் காரணமாகச் சொல்ல முடியாது. சில பேர் வேற மாதிரி வழிகளிலும் போகிறார்கள் - தொடர்கொலை, கற்பழிப்பு, சிறுவர் காமம், போதைப்பொருள்... alcoholism என்பது தனிப்பட்டு ஒரு பிறரை மனதளவில் பாதிக்கும் வரம்புக்குள் இருப்பதால் இதைப் பற்றிய awareness or social disorder potential அத்தனை பலமாக சென்றயடையவில்லை. இது போல் அதீதங்கள் dna வரை பரவியிருக்கிறது. அதீதம் எந்த வகையில் வெளிப்படுகிறது என்பது தான் புதிர். இருபத்தெட்டு வயது வரை குடிப்பழக்கம், மாமிசப்பழக்கம் இல்லாதவர்கள் திடீரென்று குடியோ குடி, ரெட் மீட் என்று இறங்கியிருப்பதையும் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
ஒரு சின்ன அளவு போதை உள்ளே போனாலே போதும்,உடனே மாறிவிடுகிறார்களே அவர்கள் தான் ஆபத்தானவர்கள். அதாவது தன் நிலையை இழந்துவிடுபவர்கள்.
நீங்கள் சொல்வது போல மற்ற பழக்கங்கள் கொண்டவர்களை என்ன என்று சொல்வது.இப்போது பத்திரிகைகளில் வரும் க்ரைம் ரிப்போர்ட்கள் கதி கலங்க வைக்கிறது.

பரத் அம்மா ஒரு தடவை சொன்னது நினைவுக்கு வருகிறது.'' நல்ல வேளை அப்போது எங்களுக்கு இன்னோரு பெண் குழந்தை இல்லாமல் காப்பாற்றினார் முருகன்''.

என்று:(