About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Wednesday, October 20, 2010

ஆண்டுகள் கடந்து ஆண்டு விழா(தொடர் அழைப்பு-சந்தனமுல்லை)

8:03 AM 10/20/2010

மீண்டும் கொசுவத்தி சுத்த அழைத்த முல்லைக்கு நன்றி.

எழுதத்தான் நாட்கள் எடுத்துக் கொண்டுவிட்டேன்.

எத்தனையோ காரணங்களில் முழங்கால் வலியும் ஒன்று.

ஆனால் இதே கால்கள்  ஓடிய பள்ளி நாட்களை நினைக்கும் போது இந்த வலி
ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

நன்றி முல்லை.

*****************************************************************************************

என் பள்ளிப் படிப்பு மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல் மூன்று வகுப்புகளை முடிக்கும்போது ஆண்டுவிழா

நடந்த நினைவு இல்லை.

கோவில் அருகே இருக்கும் பால்கோவா கடை வாசனையும், ஆண்டாள்
ஸ்நான பொடி மணமும், கொட்டிக் கொடுக்கும் பூக்களின் மலர்ச்சியும்,

எந்நாளும் திருநாளாகக் காணப்படும் தெருக்களும், விரிந்து கொண்டே வரும்
கோலங்களும், ஆண்டாளின் தேரும், அவள்கைக்கிளியும்,
ஆடிப் பூர மாலையுமே நெஞ்சில் நிற்கின்றன.

இவ்வளவு அருள் காட்டிய அன்னை

கோதைக்கும் ரங்கமன்னாருக்கும் நமஸ்காரங்கள்.

*****************************************************************************************

அடுத்து இடம் பெயர்ந்தது திருமங்கலத்துக்கு . மதுரையின்

அருகே விருதுநகர் செல்லும் வழியில் 12 மைல்கள் தொலைவில்

இருக்கின்ற ஒரு சிறிய ஊர்.

அதில் கஸ்தூரிபாய் காந்தி ஆதாரக் கல்வி நிலையத்தில்
படிப்பு தொடர்ந்தது.
குறும்பும் வம்பும் அதிகமானது இங்கேதான்.
பெரிய டீச்சர் என்பவரே அங்கே ஆல் இன் ஆல்.

பெயர் நினைவில்லை.
ஆனால் என் வகுப்புக்குப் பக்கத்திலியே முற்றத்தில்
சகமாணவியரோடு அவங்களும் ஒரு கோழியை
உரித்த நினைவும்,அதற்கு மஞ்சள் தடவிய விநோதமும்

ஞாபகத்திலிருக்கின்றன. கொஞ்சம் என்னைவிட வயதான பெண்கள்

அந்த டீச்சரின் குழந்தை அழும்போது தூளி ஆட்டியதும்

நினைவுக்கு வருகிறது.
பள்ளி ஆண்டுவிழாவுக்காக
ஒழுங்காக இருந்த இரண்டு கரும்பலகைகளுக்கு,
ஊமத்தை இலை பறித்து வந்து பளபளவென்று தேய்த்து
ஒரு அழகிய ரோஜாவும் இலைகளும் வண்ண சாக்பீஸ்களால் அலங்கரித்ததும்
பார்ட் ஆஃப் த ஷோ.;)

ஆண்டு விழாவை தாலுக்கா ஆபீஸ் வளாகத்தில் நடத்த அனுமதி கிடைத்தது.
நாங்களோ ஒரு
நாற்பது பசங்கள் இருப்போம்.
பெண்கள் 15 ம், ஆண்பிள்ளைகள் 25 பேரும் இருந்திருப்போம்.

எட்டு, ஒன்பது வயதுக்கான கோலாட்டம் கும்மி பெண்கள் செய்வதாகவும்,
பசங்கள் ஒயில் கும்மி ஆடுவதாகவும் தீர்மானிக்கப் பட்டது.

ஓயாமல் வாயடித்துக் கொண்டே இடுக்கும் என்னைப் பெரிய டீச்சர்
ஒரு நாள்பார்த்துக் கண்டித்தார். ''என்ன அளந்து கொண்டே இருக்கே,

உருப்படியாக ஆண்டுவிழாவுக்கு ஏதாவது செய்யேன் என்று அதட்டினார்.

ஒரு அதிசயமான பேய்க்கதையை மசாலாவோடு சொல்லிக்
கொண்டிருந்த எனக்கு,ஒரே அதிர்ச்சி.

நான் நான் நான்...என்ற(நான் சொன்ன) உளறலை அவர் மகா எரிச்சலோடு பார்த்தாலும்

உன் கண்கள் இருக்குமிடமே தெரியவில்லை.சரியான ஜப்பான்

பொம்மைப் பொண்ணு,என்று திரும்பியவர்

''சரி மாறு வேடப் போட்டியில் நீ ஜப்பான் பெண்ணாக

வா'' அம்மா அப்பாவிடம் ஏற்பாடு செய்துகொள் '' என்று

சிரிப்பை அடக்க முடியாமல் சென்றுவிட்டார்.

அப்போது நான் எப்படி விழித்தேன் என்று எனக்கு நினைவில்லை:)

'என்னடா, ஜாலியாக ஆண்டுவிழா பார்க்கலாம், என்றால் இந்த டீச்சர்

இப்படி மாட்டிவிட்டார்களே' என்று பயம் வந்தது.

பதிவு நீண்டு வீட்டது.மற்றதை நாளை எழுதட்டுமா?
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்