About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, October 13, 2010

நவராத்திரி நாட்கள்.

Ramalakshmiyin MURUGAN:)
Add captionஅந்நாள் கொலு பக்திக்காக. இந்நாள் கொலு நாட்டு முன்னேற்றம்,இன்னும் பல துறைகள் சார்ந்த குழு பொம்மைகள் என்று பரந்து காணக்கிடைக்கிறது.


தீம் பார்க், மிருகக் காட்சி சாலை, மலைக்கோட்டை,தெப்பக்குளம், காஞ்சி வரதராஜ சுவாமியின் உத்சசக் காட்சிகள். திருப்பதி பிரம்மோத்சவம்.....இன்னும் எத்தனையோ வித விதமான பொம்மைகளைக் கண்காட்சியில் கண்டேன்.

இன்னும் ஒரு தடவை போய்ப் பார்க்க ஆசைதான்.

ஒவ்வொன்றும் விலை தான் பக்கத்தில் போக முடியவில்லை.

எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு பதினாறு கரங்கள் கொண்ட துர்காமா. அவங்களை வச்சாலே கொலு பூர்த்தியாகிடும்.:)

ஏற்கனவே இரண்டு ஆர்டர் பார்சலாகி நிற்கிறது.

நம் வீட்டில் துர்காமா ஒரு முகம் மட்டும் காட்டி வெகு அழகாகவே இருக்கிறார்கள்.

இந்த வருஷத்துக்கு ஒரே ஒரு முருகன்சாருக்கு மட்டும் பட்ஜெட் ஒதுக்கினேன்.

எங்கள் இருவருக்குமே இந்த விஷய்த்தில் பிரமிப்பும் ,தளர்வும் தோன்றிவிட்டது. குழந்தைகள் இருந்தால் அவர்கள் கற்பனைக்கு ஏற்றது போல ஏதாவது செய்வார்கள்.

இன்னும் பல பொம்மைகள் பெட்டீலிருந்தே எடுக்கவில்லை. அதை மீண்டும் காகிதங்களில் சுற்றி, டேப் போட்டு பத்திரமாக மாடியில் வைக்கணும்.எங்கள் சின்னவயசில் மதுரையில் விதவிதமான

தெப்பக் குளங்கள், ரங்கராட்டினங்கள் எல்லாம் கிடைக்கும்.

அப்பா பொறுமையாக உட்கார்ந்து காகிதச் சங்கிலிகள் பின்னுவார்.நவராத்திரிக்கு முந்தின நாள், கூடையோடு பொம்மை வியாபாரி வருவார்.

கிருஷ்ணன் ஒரு ரூபாய்க்குக் கிடைப்பார்:)

தசாவதாரம் பொம்மைகள் 5 ரூபாய்க்குக் கிடைக்கும்.

ஸ்ரீரங்கநாதர் மட்டும் அப்பவே முறுக்கு செய்து கொள்வார். அவருக்கு 7 ரூபாய் கொடுத்தது நினைவிருக்கிறது:)இப்போது அதே ரங்கநாதர் பேபியர் மாஷ் பொம்மை ரூபாய் 2400ஆம்!!!

இதில் பொம்மை செய்தவர்களுக்கு எத்தனை போய்ச் சேருமோ தெரியவில்லை.முன்னாட்களில் வெற்றிலைபாக்கு மஞ்சள் குங்குமம்,ஒரு எட்டணா,கூடவே சுண்டல் இதுதான் ''குடி பாக்''

இப்ப அப்படியில்லை. எவெர்சில்வர் கிண்ணத்தில் ஆரம்பித்து

அவரவர் பொருளாதாரத்தை உத்தேசித்து நடக்கிறது:)

எல்லா நலன்களையும் நிம்மதியையும் அந்த அம்மா பராசக்தி நமக்குக் கொடுக்கட்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

31 comments:

ராமலக்ஷ்மி said...

கொலு அழகு. நினைவுகளும் அப்படியே.

படங்களை பெரிது படுத்தி ரசித்தாயிற்று. மேல்படியில் மயிலை அணைத்து நிற்கும் ‘முருகன் சார்’ முழுசா தெரியலையே! இன்னொரு படம் ப்ளீஸ்:)!

கோமதி அரசு said...

நவராத்திரி சிந்தனை நல்லா இருக்கு அக்கா.

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க அம்பிகை அருள் புரியட்டும் எல்லோருக்கும்.

உங்களுக்கும் நவராத்திரி வணக்கங்கள்.

துளசி கோபால் said...

ஏம்ப்பா....அந்த மூணாவது படம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!!

புது அடிஷனா?

எனக்கு அந்த பேப்பர்மாஷி ரங்கு கிடைக்கலைப்பா .......


கொலு நினைவுகள் சூப்பர்.

என் நினைவுப் பரிசை எடுத்து வையுங்க. அப்புறமா வந்து வாங்கிக்கறேன்:-)))))

அந்த மூணாவது படம் பொம்மையா இருந்தால் இன்னும் தேவலை:-)

சுந்தரா said...

கொலு ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நவராத்ரி வாழ்த்துக்கள் வல்லியம்மா!

Sumathi said...

முருகன்,வெண்ணைதின்னும் கண்ணன்,அரச மரத்திற்கு பூஜை,வாழை மரங்கள் எல்லாமே பார்க்க அழகாக உள்ளன வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமல்க்ஷ்மி, முதல் சுண்டல் பொட்டலம் உங்களுக்குத் தான்:)
முருகனையும் முழுமையாகத் தெரியும்படி படம் போட்டு இருக்கேன்பா. ரசிப்புக்கும் ரசனைக்கும் நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்புதங்கை கோமதிக்கு அன்னையின் அருள் பரிபூர்ணமாகக் கிடைக்கட்டும். உங்கள் கொலு பற்றியும் தெரிய வந்தது.
அங்கே கோவில்களிலும் கொலுவைப்பார்களா. நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்கிற தாயார் கும்பகோணத்தில ஆட்சி செய்கிறார்.
அந்தப் படம்தான் மூன்றாவது படம். அதைக் கேட்டால் நான் எங்கேர்ந்து கொண்டு வரது.!! நினைவுப் பரிசு தனியாக எடுத்து வைத்தாச்சு:)
சின்ன ரங்கநாதரும் இப்ப வந்திருக்கார். 1100 ரூபாயில:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுந்தரா. உங்க ஊரிலயும் கொலு அமர்க்களப்படுமே. நீங்களும் வைத்திருக்கிறீர்களா.
பாராட்டுக்கு நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

தோகைமயில் முன்னே
மாலையணிந்து அருள்பாலிக்கும்
பாலமுருகன் கொள்ளையழகு!

உடனடியாக எடுத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா! படமும் முழுக்கொலுவையும் கவர் செய்து, அருமையான கோணத்தில் அமைந்து விட்டது பாருங்க முருகன் அருளால்! நன்றி நன்றி!!

நானானி said...

நவராத்திரி வாழ்த்துக்கள்!!!வல்லி!

மைலாப்பூர் தெப்பக்குளம் அருகே கொலு பொம்மைகள் வாங்கினேன். ஊருக்கும் எனக்கும். அப்பப்பா...விலை கிட்டயே போக முடியவில்லை. சொன்னா மாதிரி பேப்பர் மாஷ் பொம்மைகள் கூட அம்மா விலை ஆத்தா விலை.
ஆனாலும் சும்மா வர முடியுதா?

கொலு அழகாயிருக்குப்பா!

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவா.அன்னை மீனாட்சி எப்பவும் உங்களுடன் இருந்து அருள் செய்யட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. வெண்ணெய்க் கிருஷ்ணன் உண்மையிலியே ரொம்ப அழகு. அதுவும் நாக்கை வேறைத் துறுத்திக் கொண்டு,உதட்டைக் கடித்து வெண்ணெய் எடுக்க்கும் மும்முரம் பார்க்கணுமே:)நன்றிமா.

ஸ்ரீராம். said...

//"இதில் பொம்மை செய்தவர்களுக்கு எத்தனை போய்ச் சேருமோ தெரியவில்லை"//

நியாயமான வரிகள். அழகிய கொலு புகைப் படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நீங்க கேட்டதுனால தான் அவன் வந்துட்டான். கண்ணனும் முருகனும் எப்பவுமே செல்லங்கள் தான்.:) நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, இப்பதான் நவராத்திரி ஆன மாதிரி இருந்தது. இன்னோண்ணு வந்து விட்டது பாருங்கப்பா.!!
இந்த முருகன் பொம்மை ஒண்ணே போதுமென்று தோன்றி விட்டது.
பராமரிப்பும் பாதுகாப்பும் சிரமம் இனிமேல். கொஞ்சம் மகள்,மருமகள் கிட்டக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், பக்கத்தில் இருந்தால் கொலுவை முன்னிட்டாவது வீட்டுக்கு வாருங்களேன்.மனைவி ,குழந்தை எல்லோரையும் அழைத்து வாருங்கள்.

துளசி கோபால் said...

எனக்கும் ரெண்டு பொம்மை கொடுங்கப்பா. நியூஸிக்கு எடுத்துப்போவேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ யெஸ். சண்டிராணிக்கு இல்லாததா:)

மாதேவி said...

நவராத்ரி வாழ்த்துகள்.

கொலு கண்ணைக் கவரும் அழகு.

தக்குடுபாண்டி said...

வல்லியம்மா கையால நவராத்ரி சுண்டல் வாங்கிக்கர்த்துக்கு தக்குடு ஒரு குட்டி பேசினும் கையுமா வந்து நின்னுன்டு இருக்கு!!..:)

கொலு கொள்ளை அழகு !!..:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,கொலுவுக்கு வருகை தந்ததற்கு நன்றி. பொம்மைகளைச் செய்தவர்களின் கரங்களுக்கு வணக்கம் சொல்லணும்.
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தக்குடு குட்டி.கவலை வேண்டாம் எங்க வைகுந்த் கூட ஸ்விஸ்ல இருந்து சுண்டல் கேட்டான்.
ரெண்டு பேருக்குமா அராமாக்ஸ் வழியா அனுப்பிடறேன் சரியா. நன்னா இருக்கணும் ராஜா.ஸ்ரிவித்யா பூஜை,விஜயதசமி வாழ்த்துகள் பா.

அமைதிச்சாரல் said...

கொலு சூப்பர் வல்லிம்மா..

Jayashree said...

புராணத்தில், ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி.

இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம். இது நான் தினகரனில் படித்து தெரிந்துகொண்டது:)

அதை பத்திரமா கொண்டு வரணுமே அதுக்கு தாவு தீந்திங்க்!!

ஆமாம்!! பொம்மை விலையெல்லாம் யானை விலை குதிரை விலை .ஆன்லைனில் பாத்தேன்.பாத்துட்டு சந்தோஷப்படணும் போல இருக்கு:((

பொம்மைஸ் அழகா இருக்கு.ஸ்ரீரங்கமா? கோவில் கோபுரம், 2 ஆச்சாரியர்கள் ,
துளசிமாடம் மைனஸ் ராகவேந்திரர் , கருடன் ..துர்கா, 2 முருகன், ம்.. ராஜ வேஷமா!!good good !

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

எல்லாமே செயற்கையை பூசிக்கொண்டு மினுமினுக்கும் இந்த காலத்தில் நவராத்திரி மட்டும் தப்புமா, என்ன?

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல். குழந்தைகளுக்கு அருளும் பொருளும் வாரி வழங்க
சரஸ்வதி பூஜையும்,தொழிலில் சிறக்க ஆயுதபூஜையும் செய்து இனிதே வாழ வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

சில இடங்களில் இயற்கையாக இருக்கிறது. பல இடங்களில் வேறு விதமாகிறது. மொத்தத்தில் அவசர யுகம் ஆர்.ஆர்.ராமமூர்த்தி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. கோபுரம் திருமலை. இப்போ துளசிமாடத்தில் துளசியும் பக்கத்தில் ராகவேந்திரரும் வந்து விட்டார்கள்.இந்தப் படம் முதல் நாள் முதல் ஷாட்:)
ஆமாம் பழனி முருகனுக்கு ராஜ வேஷம். இன்னோருவன் ஏறுமயில் ஏறி விளையாடிவருபவன்:)
கூர்ந்து கவனித்ததற்கு ஒரு சபாஷ்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அலங்கார பூஷிதைகளுக்கு மேலும் நீங்க மாலைகள் பாசிகள் போட்டு விட்டிருகீங்க போலயே..;)

தக்காளிக்கூடையா மினுமினுக்குதே..