About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, September 06, 2010

கதையல்ல நிஜம்!

முன் போல் இல்லை .உலகம்  மாறி வருகிறது என்று
நான் நினைக்கும் நேரம் இதைப் போல

செய்தி கிடைக்கிறது. பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்

ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது

அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.


வீட்டுக்குச்  சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.

அவருக்கு இரண்டு மகள்கள்.

பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.

அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.

பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.

மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்

அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.

பெண்ணுக்கு மாமனார் இல்லை.

மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ

ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.


இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை

அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு

சென்னைக்கு வந்துவிட்டது.

அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து  இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு

நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.

முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.

திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்

வந்தார்கள்.

'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா

என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை

'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு

சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை

மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.

''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,

நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,

நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.

அவளை வெளில போகச் சொல்லிட்டு,

நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.

அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா

நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்

விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்

பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்

பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.

உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு

சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா

நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்

கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.

படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்

நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்

சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே

விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,

அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.

முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.

இப்ப பேத்திக்கு  முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா

அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.

பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்

நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்

என்று என் மனம் தத்தளித்தது.

இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.

'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்

சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது

தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''

என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா

அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு

முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.

அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த

மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.

திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி

காதும் குத்திவிட்டுத்  திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.

கோயிலில்  முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன்
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு

வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!

கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''

என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்

உறுதி கொடுத்திருக்கிறான்.


சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே

இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து''   வேலைதான்  செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு

என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது

கொடுத்து உதவணும் அம்மாதான்""

என்றாளே பார்க்கணும்!!

இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.

எதற்கு வம்பு!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

28 comments:

LK said...

hmm

சந்தனமுல்லை said...

:-(( Sigh.....

ராம்ஜி_யாஹூ said...

மனிதர்களை அது இது என்று அழைத்து, அஹ்ரினை உயரத்தினை பாகுபாடு இன்றி லாரி ஏத்தி அடிக்கிறீர்கள்.

தொடர்ந்து படிக்க முடிய வில்லை, என்னால்.

நானானி said...

அடி சக்கை!!!

வல்லிசிம்ஹன் said...

Thanks L.K.

வல்லிசிம்ஹன் said...

வருத்தமாகத் தான் இருக்கிறது முல்லை. வேல்விழிக்கு இருந்து இருந்து 20 வயதுதான் ஆகிறது.பார்க்க அழகா வேற இருக்கிற பொண்ணு.

வல்லிசிம்ஹன் said...

ராம்ஜி யாஹு இது வரை படித்ததற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. அட்ரா சக்கை எதுக்கு:) கடைசி வரிகளுக்கா.

துளசி கோபால் said...

அட ராமா............

தமிழ்ப் பழமொழிகளில் அண்ணன் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி, அக்காள் புருசன் இப்படி எல்லோரையும் கேலி செய்து பழமொழிகள் ஏராளமா இருக்கு. அதையெல்லாம் மெய்யென்று நினைச்சுக்கிட்டார் போல நம்ம பூங்காவின் கணவர்:(

Sumathi said...

வருத்தமான விஷயம்தான் வல்லிம்மா ஆனால் விளையாட்டுக்கு சொன்னேன் என்பதால் பரவாயில்லை.

திவா said...

ஏன் அதிர்ச்சி? பணமும் நல்ல வேலையும் உடனே ஆளை மாத்திவிடாது. இதெல்லாம் அங்கே சகஜம். கட்டிவெச்சுட்டேன்மா ன்னு வந்து சொல்லி இருந்தாக்கூட எனக்கு ஆச்சரியமா இராது! நம் வேல்யூஸை எல்லார் மேலேயும் ஏற்றிப்பாத்தா வேதனைதான் மிஞ்சும். என் 2 காசு...

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவனுக்கு நிதர்சன உண்மை புரிந்திருக்கிறது. இப்ப எனக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை:)ஏதோ ஒரு நாடகம் நடந்து முடிந்த மாதிரி இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா துளசி. அதே அதே. எல்லா இடத்திலியும் இந்த நோக்கு இருக்கிறது. இது ஏற்கப்படவும் செய்கிறது என்பதுதான் வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி.
இல்லப்பா.அவர் விளையாட்டுக்குச் சொல்லவில்லை.
பெரியவர்கள் சேர்ந்து பஞ்சாயத்து வைத்ததும் வழிக்கு வந்திருகிறார்.

இனியும் நிலைமை மாற சந்தர்ப்பம் இருக்கிறது. நான் தலையிட மாட்டேன்.:(

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம் இப்படித் தான் நடக்கிறது. மாற்ற முடியவில்லை. எங்க வீட்டிலே வேலை செய்யும் பெண்ணுக்கே இப்படித் தான் நடந்திருக்கு. அக்காவும், தங்கையும் ஒரே கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். என்னனு சொல்றது?? இன்னொரு பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறந்ததும் கணவன் அவளை விட்டுட்டுப் போய் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு செளகரியமாய் இருக்கிறான். முதல் மனைவியின் இரண்டாவது குழந்தை இறந்தப்போக் கூட அப்பா என்ற முறையில் வரலை!

இதை எல்லாம் விட மோசமான ஒன்று படித்து நல்லவேலையில் இருக்கும் ஒருவர், பையனும் வேலைக்குப் போகிறான், பெண்ணுக்கும் கல்யாண வயது வந்துவிட்டது.25 வருஷம் கழிச்சு முதல் மனைவியைப் பிடிக்கவில்லைனு இரண்டாம் கல்யாணம், சொந்தத்திலேயே பண்ணிக்கொண்டு குழந்தை, குட்டியோடு செளக்கியமாக இருக்கிறார். முதல் மனைவி ரொம்பக் கஷ்டப் பட்டுக் கட்டிய வீட்டையும் அவர் பேருக்கு மாத்திக்க நினைச்சு முடியலை. இப்போ எப்படியோ அந்த அம்மா பெண்ணின் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. ஒண்ணும் கேட்காதீங்க! :(((((((((((

அபி அப்பா said...

:-((

ஹ்ம்ம்

வல்லிசிம்ஹன் said...

கீதா நீங்க சொல்வது ..ஆறாம் அறிவு படைத்தவர்கள் செய்யும் வேலையாகவே இல்லை. அந்தப் பெண்களின் நிலைமையை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.
படித்தவர் படிக்காதவர் பேதம் எல்லாம் ஒன்றும் இல்லை. வசதி இருப்பவர்கள் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். பிழைப்பது மட்டுமே குறிக்கோள் இல்லையே. மகிழ்ச்சியாகவும் இருக்கணுமே. இப்படித்தான் நடக்கும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று எழுதாக் கிளவியாகிவிட்டது.
இரண்டாவதாக நீங்கள் சொல்லி இருப்பது இன்னும் கொடுமை. ஒண்ணுமே செய்ய முடியாது. இறைவன் எல்லோருக்கும் மன அமைதியைக் கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா.
தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் தான் என்று வசனம் உண்டு இல்லையா.:(

ஹுஸைனம்மா said...

//இரண்டு பவுனாவது கொடுத்து உதவணும் அம்மாதான்//

இவங்க சாமர்த்தியமே இதுதான்!! உருக உருக கதை சொல்லி, நம்மகிட்ட பாரத்தையும் தூக்கிக் கொடுத்துடுவாங்க!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
அவங்க கதை உண்மை. அதை அவங்க எடுத்துக் கொண்ட விதம் இன்னும் என்னை ஆச்சரியப் பட வைக்கிறது. நீங்க சொன்ன கடைசி வாக்கியம் உண்மை. எப்படிச் சுத்தி எங்க வந்துட்டாங்க. :(

கோமதி அரசு said...

சிலர் வாழ்க்கையைப் பார்க்கும் போது ஏன் இந்த கஷ்டம் இவர்களுக்கு இதிலிருந்து எப்படி மீள்வார்கள் என்று எண்ண தோன்றும்.

இறைவன் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை தர வேண்டும்.

மோகன்ஜி said...

மனிதரில் எத்தனை நிறங்கள்?அருகாமையை பயன்படுத்தி பெண்டாள நினைப்பதுவும், இரக்கத்தை பயன்படுத்தி பொருள் பறிக்க முயல்வதற்கும் அதிக
வித்தியாசமில்லை.. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம் ??

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கச்சி கோமதி,
மீண்டுவிடுகிறார்கள் இவர்கள். கேட்டுக் கொண்ட நாம் சில சமயம் அசடாகிவிடுவோம். பின் வரும் கமெண்டைப் பாருங்கள். திரு.மோஹன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்படியோ எல்லாம் சரியானால் நல்லதுதான்.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி மோஹன் ஜி.
சரியாகக் கணித்தீர்கள். இது போல நான் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளுவது மூன்றாம் தடவை.
அவர்கள் வருத்தப் படும்போது ,உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை. மிகவும் நன்றி .உங்கள் புரிதலுக்கு.

Mrs.Menagasathia said...

என்ன சொல்ல??கடைசில நம்ம தலையிலயே கைவச்சுட்டாங்க..பவுன் விற்கிற விலையில் 2 பவுன்??ம்ஹூம்....

அப்பாதுரை said...

நகைச்சுவை சம்பவமாக எழுதினீர்களா தெரியவில்லை; கடைசியில் வாய் விட்டுச் சிரித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மேனகா. மூன்று நாட்கள் ,உடல் நலம் சரியில்லை. தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.
உண்மைதான் தாராளமாக உதவலாம். ஆனால் இரண்டு பவுனெல்லாம் டூ மச்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அப்பாதுரை. சீரியசா தான் நினைத்து எழுதினேன்.
ஆனால் அவர்கள் எவ்வளவு சீரியசாக இருக்கிறார்கள் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. கடையில் என் தலை மேலயே கைவைத்ததும் ஞே'' ன்னுதான் முழிச்சேன். நகைதான்.:)