Blog Archive

Wednesday, September 29, 2010

பேசலாம் கேட்கலாம்...4

பேத்தியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டேன்.

எனக்கு இந்தப் பையன் தன் சிநேகிதர்களைப் பார்த்து விட்டு அவர்களுடன்


போய்விட்டால் நாமல்லவா பொறுப்பாகிவிடுவோம்

என்று கவலை.

இவர் எந்த முரட்டுத் தனமான நடத்தையையும் அனுமதிக்க

மாட்டார் என்ற ஆறுதலும்

என்னைக் காத்திருக்க வைத்தன.

இரண்டு மணிநேரம் ஆச்சு. காணவில்லை

ஃப்லோமியும் குழந்தை ஈவாவும் வந்தார்கள் .அவர்களுக்கு

வாசலில் நிற்கும் செக்யூரிடி சொல்லி இருக்கிறான்.

கெவின் இவருடன் போனதை.

'மம் வில் கால் மி நௌ வாட் டூ ஐ சே' என்று

தவித்தாள்.

அவளுக்கு ஒரு சாய் போட்டுக் கொடுத்துவிட்டு,

எஜமானரை செல் நம்பரில் கூப்பிட்டேன்.



நான் இங்க பர்ஜுமான் செந்தருக்கு வந்திருக்கேன்மா.

கெவினுக்கு அனிமல்ஸ் ரொம்பப் பிடிக்குமாம். அதனால் ''ஜரால்ட் டர்ரல்''

புஸ்தகம் வாங்கிக் கொடுத்து இருக்கேன்.

இதோ டாக்சி பிடித்து வந்துடறோம்.

என்றதும் ஃபிலோமி அமைதியானாள்.

நான் அவளை மெதுவாக விசாரித்தேன்.

;;ஏன் கெவினைத் தனியாக விடுகிறாய்''

உன்னை நம்பித் தானே விட்டுப் போயிருக்கிறார்கள்''

என்றதும் ஒரே கோபம் வந்துவிட்டது அவளுக்கு.



தன்னை விட உறுதியும் பலமும் கொண்ட ஒரு பையனை

எப்படி அடக்குவது. அவன் நான் சொல்வதை லட்சியமே

செய்வதில்லை. நான் அவனுடைய உண்வுக்கு மட்டும் தான்

பொறுப்பு. மற்றபடி அவனைப் பற்றி என்னால் கவலைப்

பட முடியாது என்று பொரிந்தாள்.

பத்து நிமிடங்களில் சிங்கமும் கெவினும் வரவும் , ஃபிலோமியின்

போன் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பட் படவென்று பேசிய பிலோமியின் மொழி

எங்களுக்குப் புரியவில்லை. அவசரமாகக் கெவினையும்,ஈவாவையும்

அழைத்துச் சென்றுவிட்டாள்.

அடுத்த வந்த நாட்களில் சாண்ட்ராவையோ அவள் குடும்பத்தையோ பார்க்கவில்லை.


கீழே சூப்பர்மார்க்கெட்டில் சாண்ட்ராவைப் பார்த்த மருமகள்

பேசியபோது,
கெவின் மட்டும் இல்லாமல் தன்கணவனும் தானும் சைக்காலஜி கவுன்சிலிங்கிற்குப் போவதாகச் சொல்லி  இருக்கிறாள்.



இது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்த வாரம் நாங்கள் கிளம்ப வேண்டும் என்ற நிலையில்
கெவினையும் ஈவாவையும் மேல் தளத்தில்
விளையாட்டுக் கூடத்தில் சந்தித்தேன்.
தங்கைக்குத் துணையாகச் சின்ன ஸ்விம்மிங் பூலில்
நீந்திக் கொண்டிருந்தான்.



அங்கிருக்கும் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு
அவர்களைக் கவனித்தேன். மற்ற குழந்தைகளோடு சண்டை போடவில்லை.

''ஹை க்ரான்மா, ஹை மானி பேபி'' என்று எங்கள் இருவரையும்
உற்சாகமாக வரவேற்றான்.
ஃப்லோமி எங்கப்பா,? தனியா வந்திருக்கீங்களே; என்றதும்,
ஓ,அவள் விடுமுறையில் போயிருக்கிறாள்.

எங்கள் அம்மாவும் ஒரு மாசம் லீவு எடுத்திருக்காங்க.
அதனால் தான் நான் ஈவா வோடு வந்தேன்.
யாராவது இவளைக் கவனிக்கணும் ,இல்லாவிட்டால்
யார் வீட்டிலயாவது உட்கார்ந்து கொண்டு வீட்டுக்கே வரமாட்டாள்'
என்று சிரித்தான்.

அந்த மாலை வேளை வெய்யிலில் பிரகாசமாக இருந்த அவன் முகத்தைப் பார்த்ததும் மனசு பூரித்தது.
அப்பா ஊரில் இருக்கிறாராப்பா?
அப்பா இனிமேல் பைலட் வேலையில் இல்ல க்ராண்ட்மா.
ஹி இஸ் வித் த க்ரௌண்ட் ஸ்டாஃப்.
ஹி கம்ஸ் ஹோம் எவ்ரிடே'' என்று
சொல்லும்போதே அவன் மகிழ்ச்சி அந்த இடம் பூராவும் பரவுவது போலத் தோன்றியது எனக்கு.

இப்படிக் கூட மாற்றம் நிகழுமா என்று அதிசயமாக இருந்தது.

கண்ணால் காணாத அந்த மனநல வைத்தியருக்கு
நன்றி சொல்லிக் கொண்டேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

தேவதையில் நம் பதிவர்களும் அவர்கள் நவராத்திரியும்

இன்று    கிடைத்த தேவதை   இதழில்   நம் பதிவர்களின் கொலுக் கொண்டாட்டம் இடம் பெற்றிருக்கிறது.
அதுவும் அமேரிக்கா,நியுசிலாந்த் என்று தூள் பரத்தி இருக்கிறார்கள்.
படங்களை  ஸ்கான் செய்து போட முடியவில்லையே என்று வருத்தமாக
இருக்கிறது.

பூர்ணா ராஜாராமின்  கொலு  முதலில்.கலிபோர்னியாவில் இருந்து  எழுதி இருக்கிறார் . இந்த தடவை மூன்று நாள் கொண்டாட்டமாக
கொலு வைக்கப் போவதாக அவரது ப்ளான்.
அடுத்தது நம் துளசி. நியூசிலாந்த்  நவராத்திரிக் கொண்டாட்டங்களை அழகாக வர்ணித்து எழுதி இருக்கிறார். இவர் வீட்டுப் பூஜையில்  சுண்டல் மட்டும் என்றில்லாமல் ஒரு ஐம்பது நண்பர்கள் கலந்து கொள்ளும் விருந்து+ விழாவாக   நடப்பதை அவர் பதிவில் நான் படித்திருக்கிறேன்.
அதையே   சுருக்கி  எளிமையாக கொலு நாளை விவரித்திருக்கிறார்.
வெள்ளைக்கார சினேகிதர் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு  அமைதியும் பரவசமும்  அடைந்ததையும் சுவைபடச்  சொல்லி இருக்கிறார்.

அடுத்தாற்போல்  நம் சுவாதி .  குழம தோழமைகளின் மூலம் தனக்குக் கிடைத்த கொலு அனுபவத்தை   விஸ்தாரமாக எழுதி இருக்கிறார்.

அவருக்குப்   பார்க்கக் கிடைத்தக் கொலுவில் 108 பிள்ளையார்  அலங்கரிக்கும்  படியையும், பல்லாங்குழி  அருமையையும் விவரித்திருக்கிறார்.
முடிந்தால் அனைவரும் தேவதை இதழை வாங்கிப் படிக்கலாம்.அக்டோபர் முதல் தேதி இதழ்

அனைவருக்கும் வாழ்த்துகள்,  மா.
துளசி,சுவாதி ,பூர்ணா.
மிகப் பெருமையாக இருக்கிறது.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, September 27, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பு மட்டுமே உனக்குத் தெரியும்


அளவில்லாமல் அள்ளிக் கொடுத்துவிட்டு  பாசம்  மட்டும் போதும் .பெட்டகத்தில் பூட்டிவை.அடுத்த பிறவியில் நாம்சந்திக்கும் போது  உன் ஸ்கூட்டர் ஒலி யையும், கடைசியாக நீ வரேம்மா நு சொன்ன வார்த்தையையும்
உன்னிடம் திருப்பிக் கொடுக்கிறேன்.
இனிக் கனவிலாவது வந்து போ.
அப்பா மரியாதையை எப்பவும் அவர் குழந்தைகள் நாம் காக்க வேண்டும் என்று  அறிவுரையும் சொல்லித் தூக்கத்திலேயே   இறைவனை அடைந்துவிட்டாய்.
நீ கெட்டிக்காரன் என்று தெரியும்.
இவ்வளவு சாமர்த்தியம்  உனக்கு எங்கேயிருந்து வந்தது.
நொடியில் விட்டாயே உலகை.
இருந்தும் நாளை உனக்கு 58   வயது பூர்த்தியாகிறது.
எப்பவும் போல உன்னிடம் சண்டையிட மனதில்லைடா. என் செல்லத் தம்பி.
எங்கேயிருந்தாலும் யாருக்காவது உதவிக் கொண்டிருப்பாய். அங்கே நலமாக இரு. பிறந்த நாள் வாழ்த்துகள்.
28 செப்டம்பர் 2010 .










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, September 26, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.



*******************************************************

இப்ப சாண்ட்ராவின் பக்கம் வரலாம், என்னிடம்

சொல்லிவிட்டுச் சென்றவள் இரண்டு மூன்று நாட்கள்

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வரவில்லை.


மருமகளைக் கேட்டால் வீக் எண்டிற்கு எங்கியாவது போயிருப்பார்கள் மா
என்றாள். வீட்டுக் கதவைத் திறந்தால் நீளமான குளிர்ச்சியூட்டப்பட்ட
வராந்தா இருக்கும்.

வராந்தாவின் முடிவில் லிஃப்ட் இருக்கும்.

இது போல நான்கு ப்ளாக்கிற்கும் போய் வர
ஏதுவாக சௌகர்யம் உண்டு.

ஒரு சாயந்திர வேளை பேத்தி  வற்புத்தியதால் இன்னொரு
லிஃப்டில் கீழே இறங்கினோம்.
அது கடைகள் இருக்கும் தெருவின் நடைபாதையில்
முடியும்.

''பாப்பா இங்க கார் எல்லாம் ரொம்ப வேகமா வரும் ,நாம்
மாடிக்கே போயிடலாம்பா'' என்றாலும் அவள் கேட்கவில்லை.

'அண்ணா பாரு'' என்று கைகாண்பித்தாள்.அங்கே கெவின்!.
ஹலோ கெவின்,எப்படி இருக்கமா' என்றபடி
அவன் பக்கம் சென்றேன்.

எப்பவும் என்னிடம் மரியாதையாகவே பேசுவான். அவன்
அப்பாவின் சாயல் அப்படியே அந்தப் பிஞ்சு முகத்தில் தெரியும்.
உட்காருங்கள் க்ராண்ட்மா' என்றபடி எழுந்திருந்தான்.
''நீயும் இருப்பா. எனக்கு மீண்டும் எந்த லிஃப்டில் எங்கள்
அபார்ட்மெண்டிற்குப் போக வேண்டும் என்று தெரியவில்லை''
உதவி செய்கிறாயா'' என்று அவன் முகத்தைப் பார்த்தேன்.
முதல் முறையாக அவன் முகத்தில் புன்னகை.

அச்சொ எவ்வளவு அழகா இருக்கு இந்த பையன் சிரித்தால்!
சொல்லவும் செய்தேன். உன் புன்னகை அழகா இருக்கு கெவின், நீ நிறைய
சிரிக்கணுமென்று அவனைக் கொஞ்சம் நல்ல மூட்' உக்கு
கொண்டுவரலாம் என்று நினைத்தேன்.

ஓ தட்ஸ் ஓகே க்ராண்டமா' ஐ டூ லாஃப் அண்ட் ப்ளே.
டூ நாட் டேக் மை மாம்'ஸ் வேர்ட்ஸ் லிடரல்லி'' என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கு அந்தப் பிள்ளை சிரிப்பதே சந்தோஷமாக இருந்தது.


பின்னாலயே இவர் வரும் சத்தமும் கேட்டது.

''ஹலோ, க்ரான்பா' என்றபடி அவரிடம் நெருங்கி

உட்கார்ந்து கொண்டான் கெவின்.

நீ எங்கயாவது தெரியாமல் தொலைந்து விடப் போகிறாய் என்று

வந்தேன் ''என்று என்னைப் பார்த்துச் சொன்னவர்,

கெவினை நோக்கி நோக்கி,'' யூ நோ கெவின்,ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி

டென் மினட்ஸ்'' என்று பெரிய ஜோக் ஒன்றை உதிர்த்தார்.

(இங்க என் பல் கடிக்கிற சத்தம் போட்டுக் கொள்ளவும்)



ரியல்லி!! க்ரான்மா டூ யூ டூ தட்?'' என்றவனைப் பார்த்து ஒரு

அசட்டுச் சிரிப்பைச் சிரித்துவைத்தேன். எல்லாம்,

அந்த நல்ல நேரத்தைக் கெடுக்கவேண்டாமே என்ற

நல்ல எண்ணம்தான்:)

இவருக்கு கெவின் பற்றின விஷயம் ஒன்றும் தெரியாது.

தெரிந்தாலும் 'ஓ பாய்ஸ் வில் பி பாய்ஸ்'' என்ற

உலகமறியாத தத்துவம் சொல்லிவிடுவார்.!!

நான் இப்படி ஒரு வாக் போயிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.

நீ வருகிறாயா ''என்று என்னைப் பார்த்தார்.

நான் பாப்பாவுக்கு சாப்பாட்டு நேரம் வந்துவிடும்''என்று தயங்கினேன்.

ஓ,க்ரான்பா கேன் ஐ கம் வித் யூ'

என்றதும் இவர் உன் அம்மா அப்பா கிட்டச் சொல்லிவிட்டு வா.

நாம் போகலாம்'' என்றார்.

உடனே அவன் முகம் மாறிவிட்டது. அவர்கள் டெஸ்ஸர்ட் சஃபாரி

போயிருக்கிறார்கள், நாளை சாயந்திரம் தான்

வருவார்கள்''என்றான்.

வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றதும், ஃபிலோமியும், (உதவி செய்யும் ஆயா)

ஈவாவும் தான் இருக்கிறார்கள்.

அதனால் நான் யாரையும் கேட்கவேண்டாம். உங்களுடன் வருகிறேன்,
என்று அவன் அவரைப் பார்த்ததும், ஓகே,லெட்ஸ் கோ' என்றவர்

என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்தபடி
நடக்கலானார்.''இல்லை ,என்று ஆரம்பித்த என்னை,நான் பாத்துக்கறேன் மா'
என்று   கையசைத்துவிட்டுக் கிளம்பினார்கள். எனக்குதான் ஏதூ கவலையாக இருந்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, September 25, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்----2

முதலில் சாண்ட்ராவின் குடும்பத்தைப் பார்க்கலாம்.


சாண்ட்ராவுக்கு வட அமெரிக்காவின் டென்னசியில் அம்மா

இருக்கிறாள். வயது 70 அப்பா ஃப்லாரிடாவில் முதியவர்களுக்கான

விடுதியில் இன்னோரு மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

சாண்ட்ராவின் அம்மா அப்பா அவளுடைய 15 ஆவது வயதில்

விவாகரத்து செய்துவிட்டு சாண்ட்ராவின் அண்ணனை

அப்பாவும்,சாண்ட்ராவை அம்மாவும் பிரித்துக் கொண்டார்கள்.

அவ்வப்போது குடும்பமாக ஒன்று சேர்ந்தாலும் சாண்ட்ரா தன் அம்மாவை மன்னிக்கவே இல்லை.
கல்லூரியை முடித்ததும் தன்னுடன் படித்த கோல் விட்மன்.
என்ற தோழனைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டாள்.


இருவருக்கும் பயணம் செய்வதில் ஆசை இருந்ததால்
விமான பைலட்டுக்கான பயிற்சியையும் கோல் எடுத்துக் கொண்டான்,.

திருமணமாகிய நான்கு ஆண்டுகளில்
துபாய் வந்துசேர்ந்தார்கள். கோல் வேலை பார்த்த கம்பெனி அவனிடம்
மிகுந்த நம்பிக்கை வந்திருந்தது,
அதனால் அவன் வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது.

சாண்ட்ராவும் வானொலி நிலையம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள்.
கெவின் பிறந்தான்,. வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றது.

கெவின் அவர்களின் அருமைச் செல்லமாக இருந்தாலும்,


அவர்கள் இருந்த இடத்தில் அவனுடைய சிநேகிதர்கள்

பெரும்பாலும் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நட்பு கொஞ்சம்

தடுமாற்றத்தைத் தான் சந்தித்தது. அளவுக்கு மீறிய பணப்புழக்கம்,சாப்பாடு,

சப்தமாகப் பேசுவது என்று கெவினும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்.

இந்த நிலையில் ஈவாவும் பிறந்தாள்.

இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வீட்டோட இருக்கும்படி ஒரு

ஃபிலிப்பினோ பெண்ணையும் உதவிக்கு வைத்துக் கொண்டாள் சாண்ட்ரா.
அந்தப் பெண்ணும் கண்ணும் கருத்துமாக ஈவாவைப் பார்த்துக் கொண்டாள்.
வாழ்க்கை முறை எல்லாம் மாறியது. குடும்பமாக ஒன்றாக
இருப்பதே குறைந்தது.
கெவின் தனியாக உணர்ந்தான்.
சகவாசம் மாறியது. பார்ப்பத்ற்கும் பெரியவனாக இருந்ததால்
வெளியே போய் வர, மால்களில் பொழுது போக்கப்
பழகிக் கொண்டான்.
துன்புறுத்துவது என்பது உடல் பலத்தோடு வளர்ந்தது.

அது வாய்ச் சொல்லாகவோ,பலப் பரிட்சையாகவோ வெளிப்பட்டது.
அதற்கு முதல் குறி சாண்ட்ராதான்.
சாண்ட்ராவும் அவனை அடக்குவதில் காட்டிய தீவிரம் அவனிடம் பேசிப்
பார்ப்பதில் காட்டவில்லை.
இணையதளம்தான் ஒன்று இருக்கிறதே. அதில் தேடி, மகனுக்கு
மனநல மருத்துவர் தேவை என்று அவளே தீர்மானித்தாள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, September 21, 2010

டிரங்குப் பெட்டியின் பயணம்

சந்தனப் பேலா,கல்கண்டு கிண்ணம்

                                பெட்டி  அதனுடைய பயணத்தைத் தொடங்கிய இடம்:)    
கூகிளில் கிடைத்த குடம்

இப்படியாகத்தானே பசுமலைக்கும்  மதுரை டவுனுக்கும்  இரண்டு மூணு
 ட்ரிப் போயி 
வந்தார்கள். புதிதாக வென்னிர்த்தவலை அதற்கு மூடி வந்தது. அப்போ  எங்க ஊரில காஸ் கனெக்ஷன் எல்லாம் வரவில்லை. அதனால ஒரு இரும்புக் கரிஅடுப்பு .
சில பொருட்கள் சாக்குகளில் அடைக்கலம் புகுந்தன.
நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் இந்த   தரங்கில் இடம் பிடித்தன.
பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் அம்மாவின்      இன்னொரு பெட்டியில் புகுந்து கொண்டன.


புக்கக ஸ்டாண்டர்ட் படி இது சின்னப் பெட்டிதான்.:)

இதுவும் நாகப்பட்டினத்தில் சொல்லிச் செய்து வந்த பெட்டி.

மறதியாக பெயர் பொறிக்கும் போது என்.ரேவதி என்றே பொறித்து அனுப்பி இருந்தார்கள்.என்னப்பா,என்'' போட்டு இருக்கு என்று நான் கேட்டால்,

மாப்பிள்ளை நரசிம்மன் தானே மா,

அதனால் உன் முதலெழுத்து மாறவே இல்லை. நாராயணனுக்குப் பதில்
நரசிம்ஹன் என்று அப்பா சிரித்தார்.

இப்பொழுது(அதாவது  2010il   புதுப்பிக்கும்போது பெயிண்ட் அடிக்கிறவர் கிட்ட சொன்னதை நெளிவுசுளிவோடு எழுதிக் கொண்டுவந்து வைத்து விட்டார்.

தினசரி கட்டிக் கொள்ள கடாவ் வாயிலில் (19 ரூபாய் ஒரு புடவை)
ஒரு நாலு புடவை,
சின்னாளப் பட்டில்(7 ரூபாய்) நாலு புடவை. இவைதான்
என் ஜவுளி.

வைரத்தோடு மாமியாரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்று
சொன்னதால்
சென்னை வந்தப் பிறகு அந்த வேலை நடந்தது.

நானும், அம்மா,அப்பா ,சின்னத்தம்பி நால்வரும் ஜனவரி 27 ஆம்தேதி
அப்போதைய திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்ஸில்
ஏறினோம்.
அம்மாவும் அப்பாவும் ரயிலில் தூங்கவே இல்லை.
நான் எப்போதும்போல அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் புகுந்த வீட்டுக்கு பிரச்சண்ட் சார் சொல்ல அப்பா
என்னை அழைத்து வந்தார் மைலாப்பூருக்கு.

கட்டத் தெரியாத புடவையை தசபுசா என்று கட்டிக் கொண்டு
''அன்னத்தைவிட படு ஸ்லோவாக ' நடந்துவிட்டு அந்தப் பெரிய பங்களாவுக்குள் நுழைந்தோம்.

பிறகு எல்லாம் வேகமாக நடந்தன.புடவைகள்   மணிசங்கர் கடையில் (பாரீஸ் கார்னரில்  ஒரு கடை)  என்  விருப்பப்படி வாங்கிக் கொண்டேன்.

நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டேன்.

திருமணம் முடிந்து புதுக்கோட்டைக்கு வந்தோம். எங்களுக்கு முன்னால்

பெட்டிகள் வந்துவிட்டன, சதர்ன் ரோட்வேஸில்.

பாத்திரப் பெட்டியைத் திறக்கலாம் என்றால் சாவி அதனோடு வரவில்லை.

அதான் நம் வீட்டு ஹாண்டிமான் இருக்காரே, ஒரு நெம்பு நெம்பி
க்ரோபாரினால்
மேல் மூடியைத் திறந்துவிட்டார்.

இப்படியாக இனிதே திறப்பு விழா நடந்து முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டேனே. மாமியார் வீட்டிலும் ஒரு பழைய ட்ரங்குப் பெட்டி கிடைத்தது.அதைத்தான் சிங்கம் உடைத்து எடுத்தார்:))

இரண்டு நாட்கள் கழித்து என் அம்மாவும் அப்பாவும்

புதுக் குடித்தனம் செட் அப் செய்ய வந்துவிட்டு,

எல்லாவற்றையும் முறையாக அடுக்கி வைத்துவிட்டு அந்த மதியமே

மதுரைக்குக் கிளம்பி போனார்கள்.

சுபம்.






இது சின்னக் குடம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, September 17, 2010

பழைய டிரன்க் பெட்டி 1

இது எங்க மாமியாரின் பெட்டி யின் மாடல்
இது எங்கள் திருமண அழைப்பிதழ்
இது அம்மாவுக்கு அவங்க வீட்டில் கொடுத்த மரப் பெட்டியின் மாடல்.
***********************************************************************************************
எப்பவோ ஆரம்பித்த பதிவை இப்பதான்   எழுத தொடர்கிறேன்.
என் திருமணம் நிச்சயிக்கப் பட்ட உடனே ,நகை லிஸ்ட்,பாத்திரங்கள் வெள்ளிவகை,பித்தளை வகை ,ஸ்டெயின்லஸ்
ஸ்டீல் என்றுநீண்ட லிஸ்ட்
நகைகள் பாட்டியின் பழைய செயின் நெக்லஸ் ஆகியது.

என் அம்மாவின் மாங்காய் மாலையை
மாற்றி தோடுகளாக என் மறுத்தலையும் மீறி என் காதுகளை வந்து அடைந்து விட்டன.

அப்போது திரு.ராமனாதன் நகைக் கடை இருந்தது.
இப்பவும் இருக்கலாம்.

எப்படியோ லிஸ்ட் போட்டு நகைப் பட்டியலை
அன்பு அப்பா எழுதிவைத்தார்.
அடுத்தது பித்தளை வெங்கலப் பாத்திரங்கள்

ஒரு சின்னக் குடம்,வெங்கலப் பானை,சிப்பல் தட்டு, இரண்டு வெண்கலவிளக்குகள், கார்த்திகை அகல்கள்,சாதக் கரண்டிகள், குழிக் கரண்டிகள்,
ஊஞ்சல் சுற்றிவர தட்டும், சின்ன செம்புகளும்,ஒரு தாம்பாளமும்

(மாப்பிள்ளைக்குப் பாத பூஜை செய்ய.)

வெள்ளியில் சாப்பிடும் தட்டு,நான்கு காப்பி சாப்பிடும் டபரா தம்ப்ளர்கள்,
மன்னார்குடி சொம்பும்,குளபாத்திரமும்.
கற்பூரத்தட்டு,சந்தனக் கிண்ணம்,குங்குமச் சிமிழ்,கூஜா,பன்னீர் சொம்பு
மாப்பிள்ளைக்கு மையிட மயில் வடிவில் மைடப்பா.

அடுத்தாப்பில எவர்சில்வர் பாத்திரங்கள்.
அரிசி,பருப்பு வகையறா கொட்டி வைக்க பெரிய டப்பாக்கள்.

அஞ்சறைப் பெட்டி,
சப்பாத்தி போட்டு வைக்க வட்ட டப்பா.
பால் சொம்பு.
ஒரு கிண்டி(சாஸ்திரமாம்)

இரண்டு பேருக்கு வேண்டிய காப்பி ஃபில்டர், காப்பிப் பாத்திரங்கள்,
இப்படி நீண்டு கொண்டே போயிற்று.
தயிர் உரை குத்த கல்கத்தா மங்கு எனப்படும் பீங்கான்

பெரிய கிண்ணங்கள்.(என்ன ஆச்சு அதற்கெல்லாம்)?

சரி இதை எல்லாம் பத்திரமாக மாமியார் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு பெட்டி வேண்டாமா.

அதை அடுத்த பதிவில பார்க்கலாம்.:)







 





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, September 15, 2010

அஞ்சலி ஒரு மௌன ராகத்துக்கு

 குமுதம் இதழில்  ஆர். சூடாமணியின் படம்.
என்னை  வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர்களில்   திருமதி.சூடாமணி ராகவனும் ஒருவர்.
சிறு வயதிலிருந்து   அவர்களின் சிறுகதைகளையும் நாவல்களையும்  படித்துவந்திருக்கிறேன்.
அவர் படங்களை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் யாரையும் நேரில் பார்க்க  விரும்பியதில்லை என்று அறிந்தேன்.
ஆனால் அவருடைய எழுத்துக்கள் அவருடைய உருவமாக  என் மனதில் பதிந்தன.

எங்கேயாவது அவர் கதை வந்திருக்கிறது என்றால்  உடனே படிக்கும் ஆர்வம் எப்போதும் கொழுந்து விட்டுத துளிர்க்கும்.
மனம,மன நலம்  சம்பந்தப்பட்ட  கதைகள் என்னைப் பிரமிக்கவைக்கும்.
இரண்டு மூன்று நாட்கள் முன்னால் தான் ஒரு வலைப்பதிவில் அவரது கதை ஒன்றைப் படித்தேன்.
சுட்டி ஒன்றும் கொடுக்க முடியாத இயலாமையை இப்போது நொந்துகொள்கிறேன்.
இதோ அந்தச் சுட்டி கிடைத்துவிட்டது.
http://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_27.html?showComment=௧௨௮௪௨௦௪௨௯௫௬௮௧


வணக்கங்கள் சூடாமணி.

 மனநிறைவைக் கொடுத்த எழுத்தாளர்கள் வரிசையில் அடக்கத்தின்
உருவமாக இருந்துவிட்டு ஆரவாரமில்லாமல் கிளம்பிவிட்டீர்கள்.உங்களின் ஒரு மிகச்  சாதாரண ரசிகையின் அஞ்சலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, September 10, 2010

கணபதியே வருவாய்



அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளின் இனிய வாழ்த்துகள்.


வினை தீர்க்கும் விநாயகன் அடி போற்றி.அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளின் இனிய வாழ்த்துகள்.



 

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

Thursday, September 09, 2010

கவனமாகப் பதிவு எழுதப் பயிற்சி

ஆயிரங்களுக்கு மேல் பதிவர்கள் தமிழில் இருக்கிறார்கள்.




அனுபவங்களை எழுதுபவர்கள்.

சமூக சிந்தனையோடு எழுதுபவர்கள்.

கணினி தொடர்பாக உதவி செய்கிறவர்கள்,

புதிர் போட்டு ,பாட்டுகள் அளித்து மகிழ்விக்கிறவர்கள்,

ஆன்மீகம் தொட்டு இறைவனை அருகில் கொண்டு வருபவர்கள்,

கவிதை எழுதுபவர்கள்,

சமையல் குறிப்புகள் கொடுத்து நம் வாழ்க்கையை

வளப்படுத்துபவர்கள்.

மருத்துவக் குறிப்பு எழுதி நம் விழிப்புணர்வைத் தட்டி எழுப்புபவர்கள்...



நகைச்சுவையை மைய்யமாக வைத்துத் தொடர்ந்து

சிரிக்க வைப்பவர்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி என்னைப் போல்

அவ்வப் பொழுது மொக்கையாகவும்,

கதைகளாகவும்,கொஞ்சம் கோர்வையில்லாத சம்பவங்களையும், கலந்து கட்டி எழுதும்



அதிர்ஷ்டம் வாய்த்தவர்களும் இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம் என்



வகையைச் சேர்ந்தவர்களை.

நல்ல வேளை தமிழ்ப் பதிவுலகம் பிழைத்தது:)

அதனால் இப்பச் சொல்ல வந்த செய்தி

புகைப்படப் பயணங்கள்''னு ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறேன்.

அதில் கொஞ்சம் எழுத்தும் நிறைய படங்களும் இருக்கலாம்.

இந்தப் பதிவை ஆரம்பிக்க உதவியாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த

நன்றி.
இந்த என்ணத்தை   என்னுள் விதைத்த  என் தோழிகளுக்கும் நன்றி.
http://pukaippadapayanangal.blogspot.com/

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Monday, September 06, 2010

கதையல்ல நிஜம்!

முன் போல் இல்லை .உலகம்  மாறி வருகிறது என்று
நான் நினைக்கும் நேரம் இதைப் போல

செய்தி கிடைக்கிறது.



 பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்

ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது

அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.


வீட்டுக்குச்  சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.

அவருக்கு இரண்டு மகள்கள்.

பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.

அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.

பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.

மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்

அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.

பெண்ணுக்கு மாமனார் இல்லை.

மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ

ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.


இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை

அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு

சென்னைக்கு வந்துவிட்டது.

அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.



அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து  இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு

நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.

முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.

திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்

வந்தார்கள்.

'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா

என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை

'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு

சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை

மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.

''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,

நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,

நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.

அவளை வெளில போகச் சொல்லிட்டு,

நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.

அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா

நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்

விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்

பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்

பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.

உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு

சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா

நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்

கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.

படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்

நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்

சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.



என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே

விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,

அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.

முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.

இப்ப பேத்திக்கு  முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா

அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.

பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்

நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்

என்று என் மனம் தத்தளித்தது.

இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.

'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்

சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது

தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''

என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா

அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு

முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.

அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த

மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.

திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி

காதும் குத்திவிட்டுத்  திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.

கோயிலில்  முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன்
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு

வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!

கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''

என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்

உறுதி கொடுத்திருக்கிறான்.


சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே

இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.



மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து''   வேலைதான்  செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு

என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது

கொடுத்து உதவணும் அம்மாதான்""

என்றாளே பார்க்கணும்!!

இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.

எதற்கு வம்பு!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Sunday, September 05, 2010

யாதொன்றும் தீமை இலாத சொல்

பாட்டி,


இன்னும் உனக்கு டிக்கட் கிடைக்கலியா.

இல்ல ராஜாத்தி.



''ஜனவரி மாசம் வரை வெயிட் செய்யணும் கண்ணம்மா.''



ஏன் உனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க.?

பிளேன்ல இடம் இல்லையாம்பா.

எல்லாரும் ஹாலிடேக்கு புக் செய்துட்டாங்களாம்.



அப்ப நீ வரும்போது ரொம்ப குளிருமே பாட்டி.

உனக்கு ஜாக்கெட், வுல் பாண்ட் எல்லாம் இருக்கா.



ஓ வச்சிருக்கேனே.

தாத்தாக்கு>?

இருக்குப்பா.



அப்ப ஒண்ணு பண்ணு.

ஏர்போர்ட்ல மூணு மெஷின் இருக்கும்.

நீ அதில கார்ட் போட்டு ஜனவரிக்கு இப்பவெ டிக்கட் கொடுன்னு சொல்லு.

ரெண்டு டிக்கட் கொடுன்னு சொல்லு.''



சரிப்பா. எவ்வளவு பணம் கொடுக்கணும்.??

''உங்க ஊர் ரூபாய் கொடுக்காதே. எங்க ஊரு ஃப்ரான்க் 60 கொடு

அவ்வளவுதான் டிக்கட் விலை.

ஓ!! அப்படியா. சரிப்பா. செய்யறேன்.

கார்ட் எடுத்து வச்சுக்கோ. டிக்கட் வந்ததும்

எடுத்துண்டு வந்துடு.

பச்சை வளையல், மஞ்ச்ள்,ப்ளூ வளை வாங்கிண்டு வரியா.

சரிம்மா.

''நான் உன்னை எல்லா இடத்துக்கும் அழைச்சுண்டு போறேன்.

பயப்படாதே என்ன,.

சரிம்மா.

ஒரு சின்னக் குழந்தைக்கு தாத்தா பாட்டி எப்படியாவது

தன் வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நினைவு.

போக வேண்டியதுதான்:)






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.