Tuesday, March 02, 2010

503 ,பதட்டத்தின் காரணம் என்ன
வயசாகிவிட்டது என்பதற்கு அருமையான அடையாளங்கள்.
நான் உடலை மட்டுமே சொல்கிறேன். அது பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டது.
இப்பொழுது மாத்திரை வம்சங்களும் உடலில் சேர,
எப்போது உற்சாகமாக இருப்போம் ,எப்போது தனிமையாக உணருவோம் என்பது தெரிவதில்லை.
இத்தனைக்கும் இரவு படுக்கும்போது மேலே ரொம்ப உயரத்தில் அண்ட சராசரத்துக்கெல்லாம் தள்ளி இருப்பவனைக் கண்ணில் நிறுத்தித் தூங்குவது தான் ஆகி வந்தது.
கூடவே அன்றைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து,செய்யாமல் விட்டதை எண்ணி முகம் சுளித்து, நாளைக்குச் செய்தே முடிப்பது என்று திட்டமும் போட்டுத் தான் தூங்கும் வழக்கம்.

அநேகமாக அடுத்த நாள் ராத்திரியும் இதே தொடரும்.:)
இப்படியாகத்தானே பெண், பசங்க இவர்களிமெல்லாம் தொலைபேசியிலும், கணினியிலும் பேசிவிட்டுப் படுத்துத் தூங்கியும் ஆச்சு.

பின்மாலை என்று சொல்லப்படும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விட்டது,.
ஒழுங்கா பக்தியோடு இருக்கும் வயதானவர்கள் என்ன செய்வார்கள்??
அப்பா!!,சாமி!!. நல்லபடியா பொழுது விடிந்தது. தூக்கத்திலும் துணை இருந்தாய். இன்று முழுவதும் நான் செய்யும் எல்லாப் பணிகளிலும் நீயே கூடவே இரு. காப்பாத்து சாமி'' என்று சொல்லி
எழுந்து மற்றவேலைகளைப் பார்ப்பார்கள். (நானும் செய்வேன்.)
காப்பி,பால் எல்லாம் ரெடி செய்யவேண்டும், சுவாமி விளக்குகளை அழகா ஏற்றி தீப மங்கள ஜோதி நமோ நம என்று சொல்லி வணங்க வேண்டும் .
சரி .செய்தாச்சு.
ஆனால் நாம் என்ன செய்வோம்...... கட்டிலிலிருந்து முதலில் காலைக் கீழே வைத்ததும் ,வலது கை நேரே கணினியை ஸ்விட்ச் ஆன் செய்யும்.
அது பாஸ்வேர்ட் கேட்டு ,நான் கொடுத்து, பிஎஸ்எனெல் கனெக்ஷனைச் சரி பார்த்து, அப்புறம்தான் பல்லே தேய்க்கப் போவோம்.:)
பேரன்களுக்கு அந்த நான்கு மணி என்பது விளையாட்டு நேரம். நல்ல மூடில் இருப்பார்கள்.
அவர்களிடம் ஒரு ஹலோ சொல்லிவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் ஆகிவிடும் அன்னிக்கு.

காப்பியை ருசி பார்த்தபடி, மாஜிக்ஜாக் என்று சொல்லப் படும் செலவில்லாத தொலைதூரத் தொலைபேசியைக் கையில் எடுத்துக் குப்பிடவும் கூப்பிட்டாச்சு.

ஒரு ரிங் ரெண்டு ரிங் ,மூணு ரிங் போகிறது.பதில் சொல்ல யாரும் இல்லை.
வி ஆர் நாட் அவைலபிள்....இந்த செய்திதான் வருகிறது. அன்று வெளி வேலை ஒன்றும் கிடையாது தெரியும் .வில்வித்தை, கூடைப் பந்து ஒன்றும் கிடையாது. பின்ன எங்க போனார்கள்.

சரி கைபேசியை எடுத்துப் போயிருப்பார்களே.
அதில அழைக்கலாம் என்று கேட்டால் , ....பிரயோசனமில்லை. நாட் ரீச்சபிள்னு வருகிறது.
மாப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கேட்கலாம்.
அவர் ஏதாவது மீட்டிங்ல இருப்பார். 'மாமியார் கொஞ்சம் எக்சைடபிள் லேடி' என்று அவருக்குத் தெரிந்தாலும் நான், அவரை விளித்து, என் பெண் எங்கய்யான்னு கேட்க முடியுமா.
அப்புறம் முழுதாக மறை கழண்டு விட்டது என்று நினைத்து விட்டால்.??ஏனெனில் இந்தியாவில் அப்போ, காலைநாலரை மணி என்று அவருக்கும் தெரியுமில்லையா.
நான் கூப்பிடப் போய் ஏதாவது அவசரமோ என்று நினைக்கவும் வாய்ப்பு உண்டு.
கஷ்டப்பட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தேன்.
எல்லாம் ஒரு பத்து நிமிடத்துக்குத் தான்.
அப்புறம் நடந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் காணவும்:)எல்லோரும் வாழ வேண்டும்.