Tuesday, February 16, 2010

500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)

selina,gordanகோர்டன்
************************
சமீபத்தில் டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை.
பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ்
செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார்.
கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு.

அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா.
செலினாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி,பாசி மணி மாலைகளைக் கோர்த்து அதை இன்னொரு அன்புள்ளம் கொண்டவர் மூலம் விற்று அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான்.

அந்தச் சினேகிதரே சிலசமயங்கள் அருகில் இருக்கும் பார்க்கில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்,..அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அன்று மாலை வரைச் சந்தோஷமாகப் பலவித பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டே மாலைகளைக் கோர்த்து முடிப்பாள்.
இரவு நேரம் நெருங்கும்போது அவளது தாத்தா குடி போதையோடு அங்கு வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இதைக் கண்டுபிடிக்கும் அம்மா அவளைப் பார்க்குக்குப் போகத்தடை விதிக்கிறாள்.
அதையும் மீறி தாத்தாவுடன் வெளியே வரும்போதுதான்,அந்தப் பார்க்கில் மேற்பார்வையாளராக இருக்கும் கோர்டனைச் சந்திக்கிறாள்.
இருவருக்கும் அழகான நேசம் மலர்கிறது. கோர்டன், செலினாவின் வெகுளித்தனத்தையும், பொறுமையையும் கண்டு வியக்கிறான். அவளுக்குக் கண்பார்வையின் குறைப்பாடுகளை நீக மிகவும் முயற்சிக்கிறான். சாலையைக் கடப்பதற்கும்,,ப்ரெயில் முறையில் கல்வி அனுபவம் பெறுவதற்கும் பாடு படுகிறான்.
கண்பார்வையில்லாத அந்தச் சிறுமிக்கு உலகின் வெளிச்சமான பகுதியைக் காண்பிக்கிறான். இவர்களின் நட்பை அறியவரும், ரோசலின்(செலினாவின் அம்மா) கோர்டன் ஒரு கறுப்பு இனத்தவர் என்று சொல்லி செலினாவை மிரட்டி அடிக்கிறாள் .


இரண்டு நாட்களுக்கு மேல் செலினாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வெளியே வந்து பார்க்குக்குச் செல்ல முயற்சிக்கிறாள். தோல்வியே ஏற்படுகிறது. ஒரு மழை இரவில் கோர்டனின் தொலைபேசி எண்ணை வாங்கிக் . கொள்கிறாள் .
கோர்டனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும் ,அவள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான்.
அவளோ அவனை விட்டுப் போவதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவன் ஏற்பாடு செய்யும் கண்தெரியாதவர்கள் பள்ளிக்குப் போகச் சம்மதிக்கிறாள்.

கடைசிக் காட்சியில் அவளுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட மியூசிக் பாக்ஸை எடுத்துக் கொண்டு படியிறங்குகிறான் கோர்டான்.
அவன் வாயிலுக்கு வருவதற்குள் அழைத்துச் செல்ல வந்த பள்ளி வண்டி கிளம்பிவிடுகிறது. கண்களில் இன்னதென்று தெரியாத உணர்ச்சியோடு பார்த்தவண்ணம் நிற்கிறான் கோர்டன்.

அருமையான முடிவு. மற்ற காதல் படங்களைப் போல், உன்னை நான் திருமணம் செய்து வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கோர்டன்….சிட்னி பாட்டரின். நடிப்பு மனதில் நிற்கிறது . ஆஸ்கார் வாங்கின படமென்று திரையில் காண்பித்தார்கள்.

இந்தப் படத்தில் , அந்த நாளைய வெள்ளை கறுப்பர்களின் இன பேதத்தை ஒட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும் , வார்த்தைகளும் மனதில் பதிகின்றன,.
இவர்களது நேசம் நிறைவேறாமல் போவதற்கும் இந்த பேதமே காரணமாகிறது.:(
வெகு இயற்கையாக அவர்களது மெல்லிய உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன.
வெகுநாளைக்கப்புறம் மிக நல்ல படமொன்றைப் பார்த்த நிறைவு எனக்குக் கிடைத்தது.

எல்லோரும் வாழ வேண்டும்.