Thursday, February 11, 2010

பதினாறு வயது பறந்தது ...

அன்பு அமைதிச்சாரல் விடுத்த அழைப்பு தித்திக்கிறது.
நன்றிப்பா.

இணையத்தில் இருக்கும் நட்புகளை எப்பவும் வியந்து கொண்டே இருப்பேன். நான் அதிகமாகப் பின்னூட்டமிட நிறைய பதிவுகளுக்குப் போவதில்லை.
இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நான் இடும் பதிவுகளுக்கு விடாமல் வந்து
ஆதரவுப் பின்னூட்டங்களும் இடுவதுதான் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது.
இப்போது இந்தப் பதின்ம வயது கொண்டாட்டங்களை எழுதச் சொல்ல அழைப்பு, அதுவும்
இவ்வளவு வயது தாண்டிய பிறகு!:)

ஆனாலும் அந்த யூனிஃபார்ம், ப்ரேயர் பாட்டு, மார்ச் பாஸ்ட், திறந்தவெளி அரங்கு , மேடை நாட்டியம்( :-) )
இதோட, போனசா ஒரு வருட கல்லூரி வாழ்க்கை.
இதில வாலுத்தனம் காட்ட அனுமதி கிடையாது. ஸோ அது அவுட்.

2,ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.
நீண்ட பின்னலை மடித்துக் கட்டி இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி அம்மாவைப் பின்னிவிடச் சொல்லி
பள்ளிக்குச் சென்ற நினைவு இருக்கிறது. தலை நிறைய மல்லிகைப்பூ அம்மா வைத்து விட்டாலும் எடுத்து விட்டு
ஒரே ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்ட நிழலும் கண்ணில் ஆடுகிறது.

3,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல்,''கட்டான கட்டழகுக் கண்ணா ' பாட்டு ரேடியோ சிலோனில் கேட்கும் போது இருவரில் ஒருவர் வந்து விட்டால் , மதராஸ் ஏ வுக்கோ, திருச்சி வானொலிக்கொ டயலைத் திருப்பும் புத்தி இருந்தது.
4, ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும் என்ற நினைப்பில்
பள்ளிவிட்ட கையோடு கூடப் படித்த கமருன்னிசா வீட்டுக்குப் போய்த் தேனீர் அருந்தும் நேரம் ,
நான்கு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டிய மகள்,வராத காரணத்தால்,பள்ளி வாட்ச் மேனிடம் விசாரித்துக் கொண்டு
கமருன்னிசா வீட்டு வாசலுக்கே வந்து விட்ட அப்பாவைப் பார்த்ததும் ஏற்பட்டது பயமா, இல்லை நிம்மதியா என்று தெரியவில்லை. ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.

அம்மாவாவது நாலு திட்டுப் போடுவார். அப்பா அதுவும் செய்ய மாட்டார்.:)

5,தோழிகளோடு புதிய பறவை படம் பார்த்துவிட்டு சிவாஜிக்காக வருத்தப் பட்ட நாளும் உண்டு.
பரீட்சை நாட்களில் திண்டுக்கல் வெள்ளைப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம்,
பள்ளிக்குள் இருக்கும் சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும் உண்டு.
மற்றபடி ரொம்ப சாதுவான வருடங்கள் தான் அவை. ரிப்பன், ஜார்ஜெட் தாவணி,வளையல்கள்,
சென்னை வந்தால் வாங்கும் மணி மாலைகள் இவையே அலங்காரம்.
பரிசாகக் கிடைத்த ருபாய் 100க்கு வாட்ச் வாங்கினதும் அப்பாதான். அதைக் கட்டிக் கொண்டு பரீட்சை
எழுதினது மற்றதொரு மறக்க முடியாத அனுபவம்.

அமைதிச் சாரல்,

என் பதின்ம வயது 17 வயதோடு முடிந்தது.
18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)

அதற்குப் பிறகு நான் செய்த குறும்புகள் குழந்தைகளோடுதான்!!

எல்லோரும் வாழ வேண்டும்.