Friday, January 08, 2010

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,சிவகாமி

முதல் அத்தியாயம்

ரிஷபம்


கலங்கரைவிளக்கம்

கோவில் யானை

சிவகாமி இருந்தால் இப்படி இருந்திருப்பாளோ !

முதல் அத்தியாயத்திலியே, காஞ்சி மாநகர வீதிகளில் பரஞ்சோதியும் புத்த பிக்ஷுவும் பிரிகிறார்கள்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு யானை பிளிருவதும், ஆயனரும் அவர் மகள் சிவகாமியும் வந்த பல்லக்கு வீதியில் இறக்கப் படுவதும் ,அவர்களைக் காப்பாற்ற ,மின்னல் வேகத்தில் தன் கை வேலை யானையின் மீது எறிவதும்
யானை அவனை நோக்கித் திரும்பி அவனைத்துரத்துவதும் நடக்கின்றன. கல்கியின் எழுத்துவண்ணம் ஒவ்வொரு வரிகளிலும் ஒளிவிடும்.

இதைத் தொடர்ந்து மஹேந்திர வர்மரும், அவர் புதல்வன், இளவரசர் நரசிம்மரும் வெண் குதிரைகளில் வருகிறார்கள்.
இதோ கல்கியின் வார்த்தைகளில்:

//
சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரை மீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின//

ஆயனச் சிற்பியின் வீட்டுக்கு அருகில் தாமரைக் குளம் அருகே இருவரது சந்திப்பும் நிகழ்கிறது.

புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கிப் போர் தொடுக்கவந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிலைமையில் சிவகாமி, நரசிம்ம பல்லவரிடம் தன்னை மறக்கக் கூடாது என்ற சத்தியத்தை வாங்கிக் கொள்ளுகிறாள்.
*****************************************************************

சரி, இந்தக் கதைக்கும் எங்கள் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?
சிவகாமியின் மாமல்ல பல்லவன் எனக்கும் பிடித்து விட்டார். அதிலிருந்து

சிம்மக்கல் ஸ்டாப் என்று மதுரை பஸ்ஸில் கண்டக்டர் சொன்னால் கூட
திரும்பிப் பார்ப்பேன்.

1965,
அப்போது வந்தது ஒரு சினிமா.கலங்கரை விளக்கம் என்ற பெயரோடு.
ரேடியோ சிலோனில் பொன்னெழில் பூத்தது புதுவானில் '
பாடல் ஒலித்த நாளிலிருந்து அந்தப் பாட்டின் மீது ஒரே பைத்தியம்.
அந்தப் பாட்டின் ஆரம்பத்தில்,''சிவகாமி....'' என்று டி.எம்.எஸ்

அழைக்கும் போதே நான் சுசீலா அம்மாவின் பதில் குரலுக்காகக் காத்திருப்பேன்.
அந்தப் படம் பார்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்கவில்லை.
படம் பற்றிச் சொல்ல தோழிகளும் இல்லை.

பாட்டை மட்டும் கேட்டு ரசித்து,அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
பத்திரிகை ரெவ்யூக்களில், சிவகாமியின் சபதம் படித்த ஒரு பெண் ,மனம் கலங்கித் தன்னையே சிவகாமியாக நினைத்துக் கொண்டு, நரசிம்ம பல்லவனைத் தேடுவதாக அரைகுறை செய்திகள் மட்டும் கிடைத்தன.
சரோஜாதேவி,எம்.ஜி ஆர் படம்.

இதற்குப் பிறகு வந்ததுதான் அத்தையின் கடிதமும், அவர் பிள்ளையின் ஜாதகமும்.

அதிலிருந்த பெயரைப் பார்த்ததும் சரி என்று சொல்லிவிட்டேன்.

அதற்குப் பிறகு திருமணம்,குழந்தைகள் வாழ்க்கை தொடர்ந்தது.
************************************************************************************
எப்பவாவது சிவகாமியின் நினைப்பு வரும். பாவம் என்ன சுகம் கண்டாள். நாகநந்தியால் வாதாபியில் சிறை வைக்கப் பட்டாள்.

புலிகேசியின் சாம்ராஜ்யத்தை அழித்தபிறகே நாடு திரும்புவேன் என்று சபதமும் செய்தாள்.
நரசிம்ம பல்லவரும் ஆட்சிக்கு வந்து தன் தலமைத் தளபதி பரஞ்சோதியோடு
வாதாபி வந்து போரிட்டுச் சிவகாமியை மீட்டுச் செல்கிறார்.

காஞ்சிக்கு வருவதற்குள் அவளுக்கு அவரிடம் இருந்த மாற்றம் புரிகிறது.
தன் தோழி கமலி வீட்டில் இருக்கும் போது,வீதியில் அரச ஊர்வலம் ,பட்டணப் பிரவேசமாக,சாளுக்கியர்களை வென்று திரும்பும் சக்கரவர்த்திக்காக நடக்கிறது, கமலி வீட்டுக்கு அருகில் வருகிறது. அதில் பல்லவ சக்கரவர்த்தியோடு அவரது பட்ட மகிஷியும் இரு குழந்தைகளும்
வருவதைப் பார்க்கிறாள்.

மனதில் சோகம் மண்டுகிறது. ஆயனச் சிற்பியின் அஜந்தா ஓவிய ஆசையும் ,நாகநந்தியின் (சிவகாமியின் மேல் கொண்ட) நிறைவேறாக் காதலும் சேர்ந்து,
தன்னுள் மூட்டிய கோபத் தீ தன்னையே கருக்கிவிட்டதை உணர்கிறாள்.
ஒன்பது வருடங்களில் உலகே தலை கீழாகி இருந்தது.

அமைதியாக முடிவெடுக்கிறாள். ஊனமுற்ற தந்தை ஆயனச் சிற்பியிடம்
தான் ஏகாம்பரேஸ்வரரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கிறாள்.
அவள் விருப்பத்தை (நால்வரில் ஒருவரான) திருநாவுக்கரசரும் ஆதரித்து ஆசீர்வதிக்கிறார்.

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புஷ்ப மாலையையும் ,பெருமானிடமிருந்து கொடுக்கப் படும் திருமாங்கல்யத்தையும் அணிந்து கொண்டு,

'' முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் ''
என்ற பதிகத்தில் மனம் நிறைந்த அமைதியோடு நடனம் ஆடுகிறாள்.

பாதி நடனத்தில் நரசிம்ம பல்லவர் வந்து,பார்த்துக் கண்ணீர் சிந்திப் போவதைக் கூட அவள் கவனத்தைக் கவரவில்லை.
பாடல் முடிவில்
''தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே'' என்று திரு கல்கி சிவகாமியின் நிறைவேறாக் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.


*****************************************************************************************************
ஆனால் எனக்கு மட்டும் திரு கல்கியின் மேல் வருத்தம்தான்.
சரித்திரத்தைக் கொஞ்சம் மாற்றி எழுதாமல், இப்படி முடித்துவிட்டாரே என்று:))


எல்லோரும் வாழ வேண்டும்.