Blog Archive

Saturday, January 30, 2010

குழந்தைகளின் எண்ணமும் செய்கையும்




வரிசையாக அணி வகுத்து நிற்கும் பத்து பூனைகளையும் பெயர் வைத்து அறிமுகம் செய்து வைத்தாள்  பேத்தி .


புரிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்து கணினியில் தெரியும் தாத்தி தாத்தாவைப் பார்க்கிறாள் எங்கள் (இப்போதைக்கு) கடைசிப் பேத்தி.
இரண்டு வயது நிரம்பியாச்சு.வெள்ளிக்கிழமை வந்தால் தாத்தியும் தாத்தாவும் இந்தப் பெட்டிக்குள் வந்துவிடுவார்கள் என்று எப்படித் தெரியுமோ.:)முதலாவதாக அப்பா அலுவலக உடை அணியவில்லை,
சூ (ஷூ) அணியவில்லை. span>
வெள்ளிக்கிழமை வந்தால் தாத்தியும் தாத்தாவும் கம்ப்யூட்டரில் வருவார்கள்
என்று எப்படித் தெரியுமோ.

முதலில் அது விடுமுறை நாள் என்று எப்படித் தெரிந்து கொள்கிறாள் என்று
மகன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.
வழக்கமாக அலுவலகத்துக்கு அணியும் சூட் கோட் அவன் அணியாமல் இருந்தால், ஷூ போடாவிட்டால் ,
மொபைல் போன்,ஐடி கார்ட் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளாமல் அப்பா இருந்தால்
சரி இன்று ஹாலிடே ஜாலிடே என்று ஒரே உற்சாகம் அவளைப் பிடித்துக் கொள்ளுமாம்:)

கிரீக் பார்க் அழைத்துப் போவார். பூவா,(பூ) புத்தா ( புறா )(பூனை) காக்கா எல்லாம் பார்க்கலாம் என்று யோசனை ஓடுகிறது. அப்போ அப்பாதான் தனக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறார்.நல்லா ஏமாத்தலாம் ,அப்பாவுக்கு வாயில மம்முவைத் திணிக்கப் பிடிக்காது :)


ஜோசு புத்தா , தூது புத்தா ,திதா புத்தா எல்லாத்தோடையும் விளையாடலாம் . இந்த எண்ணமெல்லாம் முகத்தில் சிரிப்பாய் விளையாட அப்பாவைச் சுற்றி வருகிறாள்.
கைக்குள்ள அடக்கமாக இருக்கிற ஜோஜோ புத்தாவையும் , இருக்கிரதிலியே பெருசா இருக்கும் தூது புத்தாவையும் எடுத்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கி கணினி முன்னால் வந்து அப்பாவின் நாற்காலி அருகில் நின்னாச்சு.
தாத்தி வரலியே !!

அப்பாவும், பாப்பா செய்யற வேலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். சரியாக பன்னிரண்டு மணி சென்னை நேரத்துக்கு ,பாப்பா சாப்பிட்ட பிறகு ,அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டு எல்லாப் பூனைகளையும் அறிமுகப் படுத்துகிறது பாப்பா.

அப்பாவுக்கும் பெண்ணுக்கும் உரையாடல் கீழே.

''யார் வந்துருக்காம்மா.

தாத்தா தாத்தி.

பாப்பா கைல என்ன இருக்கு. ஜோசு புத்தா .

பாப்பா ஹேப்பி பர்த்டே எப்ப?
தத்தித்து (முப்பதாம் தேதி)

பாப்பாக்கு என்ன புடிக்கும்
புத்தா.

அப்பா பேரு என்ன
பாபு.

அம்மா பேரு
கியா .
டாங்கி எப்படி கத்தும்?
தோச்சு தோச்சு.:))
டாக்கி?(நாய்)பவ் பவ் !!

இப்பப் பூனை விவரங்கள்.
பால் மாதிரி வெள்ளையாக இருப்பது தூது புத்தா ,
கண்ணை மூடித் திறப்பது ஜோஜோ ,
சத்தம் போடுகிற பூனை தத்துப் புத்தா:) மத்தப் பூனை விவரங்கள் சொல்ல அம்மாவுக்கு அலுத்துவிட்டது. தாத்தி தாத்தாவுக்கு பைபை சொல்லி ஓடிப் போய் விட்டது..








எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, January 24, 2010

தீப்பெட்டி லேபல்களைச் சேர்த்தது உண்டா















இந்த நீலப் பறவையும் ஐந்து தம்படிதான்





ஐந்து தம்படி தீப்பெட்டி .
சிறிய வயது பழக்கங்கள்,ஆசைகள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
திருமங்கலத்தில் நங்கள் இருந்தபோது ,சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலையின் ஆதிக்கம் எங்கள் ஊர் வரை நீண்டிருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தாண்டியிருந்த ஒரு சின்ன போர்ஷனில்,திண்ணையில் வைத்து
இந்தத் தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் சட்டங்களும் தீக்குச்சிகளும்
ஒரு பெரிய லாரியில் வந்து இறங்கும். அந்த வீட்டிலிருந்த அனைவரும்

உடனே முனைப்பாக வேலையில் இறங்கி விடுவார்கள்.
நான் ,விடுமுறை நாட்களில் ,
பெற்றோர் மத்தியான தூக்கத்தில் ,ஆழ்ந்ததும் உச்சிவெயில் சுட்டெரிக்கும் 1 மணிக்கு,நான் வாயில் கதவைச் சத்தம் போடமல் திறந்து ,ஓடி விடுவேன் அந்த வீட்டிற்கு.

அம்மாவும் ,பெண்பிள்ளைகளும்,ஒரு அண்ணனுமாக கட்டைகளில் உள்ள பள்ளங்களில் ,
மருந்து இடப்படாத குச்சிகளை அவர்கள் அடுக்கும் வேகம் என்னை அதிசயிக்க வைக்கும்.
மிகவும் கெஞ்சிய பிறகு எனக்கு ஒரு சிறிய வேலை கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு குச்சியாக அத இடத்தில் வைத்து முப்பது குச்சிகள் கொண்ட

மரத்தகடை கொடுப்பதற்குள், அவர்கள் இருபது முடித்திருப்பார்கள்.
சரியாக நான்கு மணிக்கு,
அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் வண்டி வரும்.
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு ஐம்பது மரப் போர்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்குஒரு சிறிய தொகை கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு அன்றைக்கான மளி''சாமான்களை வாங்கப் பறக்கும் சிறுமிசெல்வியோடு நானும் போவேன்.

கொஞ்சம் வெங்காயம்,கொஞ்சம் பயறு, கொஞ்சம் கடலைப் பருப்பு, பொறுக்கி எடுத்த சின்னக் கத்திரிக்காய்,தக்காளி,மிளகாய்த்தூள்.மல்லித்தூள்,பூண்டு ரெண்டு பல்லு.,கொஞ்சம் மஞ்சள்தூள் என்று சிறிய பொட்டலங்களாகவே பையில் போட்டு வாங்கி வருவாள்.

என்ன செய்யப் போறீங்க செல்வின்னு நான் கேட்டால் ''குளம்பும் ,சோறும்தான்'' என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மறைவாள்.
சற்று நேரத்தில் விறகு வாசனை, புழுங்கல் அரிசி கொதிக்கும் அருமையான மணம், அதற்கு மேல் கத்திரிக்காயும், குழம்பு மசால அரைத்துவிட்ட கலவையின் மணம் மூக்கைத் தாக்கும்.

அப்போது வருவான் சின்னத்தம்பி,
'அப்பா...... ஆண்டாள் இங்க இருக்கான்னு ''கத்திக் கொண்டே வீட்டுக்கு விரைவான்.
நேரமாகிவிட்டதையும்,
அப்பா போட்டு வைத்த கணக்குப் பாடங்களையும் முடிக்காததை அப்போதுதான் உணர்வேன்.
பிறகென்ன ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு.

இது போல நாலைந்து ஞாயிறுகள் ஓடியபின், ஒரு நாள் செல்வி என்னிடம் சில தீப்பெட்டிப் படங்களைக் கொடுத்தாள்.
முன் பின் அது போலப் பார்த்ததில்லையா.'என்னப்பா இது?" என்று கேட்டால் தீபாவளி சமயத்தில் அந்தத் தீக்குச்சிகள் வைத்து வரும் அட்டைப் பெட்டியில் இந்தப் படங்கள் ஒட்டிவரும் என்று சொன்னாள்.
அதில் கிடைத்த படங்களின் அளவு,மூன்று அங்குலம் இண்டு இரண்டு அங்குலம் அளவில் இருக்கும். மறக்கமுடியாத தத்ரூபம்
ஒரு புலித்தலை, ஒரு சிறுத்தையும் மரவெட்டியும், இரண்டு அணில்கள், இப்படி வித விதமான படங்களை அவைகளின் புது கந்தக வாசத்துடன் கொடுத்ததை இன்று வரை மறக்க முடியவில்லை.

என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு
இவற்றையும் சேர்த்து நெடு நாட்கள் கவனமாகப் பாதுகாத்தேன்.

பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை.
இப்பொழுது பேரன் அனுப்பிய
அவனுடைய கலெக்ஷன் போட்டோக்களைப் பார்த்ததும் பழைய படங்கள் நினைவு வந்தது.:)
கூகிளில் கிடைத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


































பாரத மாதாவைப் போற்றும் யானை .

இதெல்லாம் விட நாங்கள் விரும்பிச் சேகரித்தது, பெரிய அளவில் வரும்

புலி போட்ட அட்டைகள் தான்.




எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, January 21, 2010

எழுபத்தினாலில் ஒரு கடிதம் ..






492, ஆம் பதிவு .

வழக்கம்போல் எதையோத் தேடப் போய், இந்தக் கடிதம் அகப்பட்டது:)
1974ல் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மிக மிகச் சுவையான ஒரு கால கட்டத்தை நான் கடந்து வந்திருப்பதை, கோடிட்டுக் காண்பித்தது.

கடிதம் எழுதினவரை நான் மறக்கவில்லை என்றாலும் ஒரு கடிதத்திலியே இவ்வளவு செய்தி பரிமாறிக் கொண்டோம் என்றால்
மாடியும் கீழுமாகக் குடித்தனம் இருந்த போது எவ்வளவு பேசியிருப்போம் என்று அதிசயமாக இருக்கிறது.!!

பேரு,ஊர் எல்லாம் மாற்றி இருக்கிறேன். ஏனெனில் நமக்குத் தேவை என்கிறது சுவைதானே ஒழிய விவரங்கள் இல்லை.:)

சேலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டு மாடியில் இந்த சுறு சுறுப்பு மாமி குடியிருந்தார்,. பெயர் கோமதி. களக்காடு என்ற ஊரில் பிறந்து சென்னையில் திருமணம் செய்து இப்போது கணவர் இரு குழந்தைகளுடன் சேலத்துக்கு வந்தவர். என்னை விட ஒரு ஏழு வயது மூத்தவர்.
கலகலப்பு ,வாய் ஓயாமல் பேச்சு, மூச்சுக்கு மூச்சு,"கோந்தே!! என்று பெண்ணை விளிப்பது.ஸ்ஸ்ஸ்ஸ். களைகட்டிவிடும் அந்த இடம். மெட்டி ஒலி வேற சலங் சலங் என்று இசைக்குமா!:)

எங்க கடைக்குட்டி மாடியத்தை வராங்க என்பான் சத்தம் கேட்டதுமே.
அவன் தான் அத்தை என்று பெயர் வைத்தவன். ஏன் என்ன என்று மூணு வயசுப் பையனிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நாங்கள் அனைவரும் அவர்களை கோமதிஅத்தையாகவே ஏற்றுக்கொண்டோம்.

மூன்று குழந்தைகளையும் நான் மேய்த்துக் கட்டுவதற்கு அவ்வப்போது உதவி செய்வார். வெளியில் போகும்போது தேவையான பொருட்களை
வாங்கி வந்து தருவார்.
அப்போது வீட்டு எஜமானருக்குத் தொழிற்சாலை வேலைகள் மிக அதிகம்.(ஹ்ம்ம் எப்பத்தான் இல்லை)!!

சிலசமயங்களில் டவுன் பஸ்ஸிலும் அழைத்துச் சென்று பத்திரமாகப் பார்த்துக் கொள்வார். அவரது இரண்டு குழந்தைகளும் ,எங்கள் மூன்றும்
கைகளைப் பிணைத்துக் கொண்டு ஒரு முனையில் கோமதி அத்தையும்,மறுமுனையில் நானும் சேலம் வீதிகளில் போவதைப் பார்த்தவர்கள் ஒரு சிறிய புன்னகையாவது உதிர்த்திருப்பார்கள்.
ஒரு பனிரண்டு வயது ஆராதனா(அந்தப் படம் வந்த புதுசு.அதனால் பெண்ணின் பெயரை அத்தை மாற்றிவிட்டார்.),
8 வயசு ஈஸ்வர், ஏழு வயசில் எங்க பாபு, ஐந்து வயசுல எங்க பொண்ணு பாப்பு, மூணு வயசில எங்க கடைக்குட்டி, குட்டி.
அவர்களுக்கு எங்கள் இருவரிடமும் பிடிக்காதது இதுதான். குழந்தைகளுக்கு நல்ல பெயர்களை வைத்துவிட்டு, பாப்பு,பாபு,குட்டின்னு என்ன கொஞ்சல் என்று முகம் சுளிப்பார்.:))

அவர்களிடமிருந்து பிரிந்து மாற்றலாகி நாங்கள் திருச்சி வந்ததும் அவர்
எழுதிய பல கடிதங்களை ஒரு மஞ்சள் துணிப்பையில் போட்டு வைத்திருந்தேன்,.
நமக்குத்தான் கடிதங்களைப் பிரியும் வழக்கம் கிடையாது.

அந்த மாதிரி ஒரு கடிதத்திலிருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)

தேதி 9/4/74,சேலம்
*************************

அன்புள்ள ரேவதிக்கு,
உங்கள் பல பக்கக் கடிதத்தைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி.
பதில் எழுதத்தான் தாமதமாச்சு. வீடு நிறைய விருந்தாளிகள்.

குழந்தைகளுக்கு ஏப்ரில் 18லிருந்து லீவு. களக்காடு போக அதுகளுக்கு இஷ்டமில்லை.சென்னையில் மாமனார் வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. நடுவில் ராமன்(அவரது கணவர்) மாட்டிக்காம கோவாவுக்கு டூர் போயாச்சு.
என்ன இருந்தாலும் இந்த ஆம்பிளைகளுக்கு இருக்கிற சுதந்திரம் நமக்கு இருக்கா பாருங்க. இன்னும் இருபது நாட்களுக்கு இதுகளைக் கட்டி மேய்ப்பது எப்படி? வெய்யில் வேற கொளுத்துகிறது.
எத்தனை தடவை, டவுனுக்கும்,ராஜகணபதி கோவிலுக்கும் போறது.
நீங்க இல்லாதது இப்பத்தான் கஷ்டமா இருக்கு.
நம்ம தெரு செய்தியை முதல்ல சொல்லிடறேன்.
முன்னி(எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகாத இன்னோரு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணுக்கு நாங்க வைய்த்த பெயர். ஏன்னெனில் அந்த அம்ம தமிழே பேசாது. ஒரே அச்சா, பச்சாதான்:) ) யை நான் பார்த்தே நாலு மாசமாச்சு. அதுக்கும் நர்சரி மிஸ் டிசூசாவுக்கும் சண்டையாம்!

சு.மாலினிக்கு மாப்பிள்ளை வீட்டொட வந்துட்டான்.மோட்டார்சைகிளை வைத்துக் கொண்டு காலனியைச் சுற்றிச் சுற்றி ஓட்டி ஒரே சத்தம் போடுகிறான். அவர்களோட அந்த டார்சான் (பேரு)நாயும் ஓடி வந்து ஒரேயடியாக் குலைக்கிறது பார்த்தியோ.!!
எதிர் வீட்டு ராஜிக்கு மே மாசம் ஒண்ணாம் தேதி பழனியில் கல்யாணம்.
நம்ம ஜோடிப்புறா(:))) ரிடையராகிப் பங்களூர் போகிறார்கள்.

அடுத்தவீட்டுப் பழனியப்பர் வீட்டில் மருமகள் எக்ஸ்பெக்டிங்கா இல்லை, இயல்பாவே இப்படி குண்டாக இருக்கிறாளான்னு தெரியவில்லை!!!
நீங்கள் புதிதாக ஐஸ் பெட்டி வாங்கி இருப்பது சந்தோஷம்.முன்னிகிட்ட சொன்னால் முகம் சகிக்காதேன்னு சொல்லவில்லை.
வாரப் பத்திரிக்கைகள் படிப்பதை விடவில்லை அல்லவா.
தொடர்கள், இளந்தளிர்,ரகசியம்,கதவு,கிண்டிரேஸ்,நீல நயனங்கள் எல்லாம் படிக்கிறீர்களா.????
(இதற்குப் பிறகு சினிமா கிசு கிசு)
இந்த சவம்(!).ஒரு நடிகை .......பார்த்தீர்களா. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிடுத்தாம்.
.இன்னொரு நடிகை ............பாஸ்கரை விவாகரத்துச் செய்தாச்சாம்.
நாட்டியம் ஆடுமே அது தற்கொலை பண்ணிக் கொண்டதாம். பாவங்கள்மா இதெல்லாம். சந்திரபாபு போய்ட்டாராமே. என்னமாப் பாடுவான்.பாவம்.
இவ்வளவு விஷயத்தையும் நேரில் வந்து அலச ஆசையா இருக்கு.
கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை பார்த்தாச்சா.
நான் பார்த்துவிட்டேன்.
(அத்தை எதிர் நீச்சல் பட்டுமாமி மாதிரி. ஒரு சினிமா விடமாட்டார்:) )
உங்க தம்பி ரங்கன் இதையெல்லாம் பார்த்து இருப்பான். அவனுக்கு சிவாஜி ரொம்பப் பிடிக்குமே!!

மற்றதெல்லாம் அடுத்த லெட்டர்ல எழுதறேன். குட்டிகளைப் பத்திரமாப் பார்த்துக் கொள்ளவும். ஹரி அடிக்கடி வெளில ஓடிடுவான். ஜாக்கிரதை.
அன்புடன்,
கோமதி.

ரசித்தீங்களா.அதற்கப்புறமா இந்த மாதிரி, கலகலா பெண்ணை நான் பார்க்கவில்லை.:)






எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, January 19, 2010

491 சினிமாவின் இரண்டாவது பாகம்

விஞ்ஞானியும் அவரின் குழந்தைகளும்



நூற்றைம்பது நாட்கள் பசியிலும் குளிரிலும் அலைந்த ஹச்கீஸ்


மாயாவும் காப்பாற்றப்பட்ட விஞ்ஞானியும்





மெதுவாக நகரும் மாயா.


எயிட் பிலோ படத்தின் கதை.
இந்தப் படத்தை யு டியூபில் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=NXkoGlxVbLY
********************************************
ஜெர்ரியின் சின்ன விமானம் புறப்பட்டு ஒரு வட்டமெடுத்துப் பறந்து சின்ன புள்ளியாகும் வரை இந்த ஹஸ்கீஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவன் சொன்னது மட்டும் அவர்களுக்கு அப்படியே பதிந்து விடுகிறது. ,கடுமையான பனிப் பொழிவிலும் அவை அமைதியாகப் பொறுமையாக் அந்த ஐஸ்கட்டி மலையில் கண்களையும் காதுகளையும் மூடியபடி படுத்துக் கிடக்கின்றன.
ஓல்ட் ஜாக் என்கிற நாய்க்கு உண்மையிலியே வயதாகிவிட்டது. பசியும் குளிரும் தாங்கவில்லை.
உடனே எல்லா நாய்களும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துத் தங்கள் மொழியில் சங்கிலியிலிருந்து விடுபடும் எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொள்கின்றன.

அருமையான உணர்ச்சி அவைகளின் முகத்தில்.
இப்படிக் கூட நடிக்க முடியுமா. பார்வையிலியே இத்தனை பரிமாற்றம் நடக்க முடியுமா என்று யோசித்தேன்.

முடிய வேண்டும். இல்லாவிடில் ஒரு குழுவாக இந்த ஆள் அரவமில்லாத பனிக்காட்டில்,எலும்பு உறையும் குளிரில் ஒரு ஸ்லெட் வண்டியைச் சீராக இழுத்துப்
போக முடியுமா....ஒன்று ,இரண்டு மைல்கள் இல்லை... நூற்றுக்கணக்கான மைல்கள் கணக்கில் பனிப்பிரதேசத்தில் கண்களை மறைக்கும் புயல் நடுவே போகவேண்டும்.

ஒன்றன் பின் ஒன்றாக, மாயா, ஓல்ட் ஜாக்,டியூயி,மாக்ஸ்(ஸ்லெட் டாக்ஸ்) என்று அவர்களின் பயணத்தைதொடங்குகிறார்கள். ஓரிரு கடல் பறவைகள் அவர்களுக்கு உண்வாகின்றன. ஓல்ட் ஜாக் நடக்கமுடியாமல் இறந்துவிடுகிறது.
ஓரிரவில் னார்தர்ன் லைட்ஸ் எனப்படும் அரோரா போரியோலிஸ் என்னும் வடதுருவ ஒளிக்கற்றைகளைக் கண்டு
உற்சாக மிகுதியால் ஓடும் 'டியுயி'' கால் வழுக்கி ஆழ்பள்ளத்தில் விழுந்து இறக்கிறது.
மாயா ,தன் எஜமானன் ஜெர்ரியின் நினைவில் உணவெடுக்க மறுக்கும் நிலையில் தான்
அவர்களை விட்டுச் சென்ற ஜெர்ரி ஷெபர்ட் திரும்புகிறான்.
தாய்நாடு சென்றதிலிருந்து தான் விட்டு வந்த நாய்களை நினைத்துத் தினமும் வருந்தும் அவன், மீண்டும் அங்கே திரும்ப பலரிடம் உதவி கேட்டுப் பார்க்கிறான்.
கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ''மாயா''வினால் காப்பாற்றப்பட்ட விஞ்ஞாஆனிக்கு,அவரது கண்டுபிடிப்புக்காகப் பட்டம் வழங்கப் படுகிறது.
அவரையும் ஜெர்ரி சந்தித்து,மீண்டும் அண்டார்டிகா போக உதவி கேட்கிறான். அவர் மறுத்துவிட,
மனிதர்களின் நன்றி மறத்தல் குணத்தை எண்ணி விரக்தி அடைகிறான் ஜெர்ரி.

விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் டாக்டர், தன் மகன் படுத்திருக்கும் அறைக்கு ,வருகிறார்.
தூங்கும் மகனருகில் உட்காரும் போதுதான் அவனது எழுதி வைத்திருக்கும் குறிப்பு ஒன்று கண்ணில் படுகிறது.
அதில் ''என் தந்தையைக் காப்பாற்றிய நாய்கள் தான் எனக்கு ஹீரோ'' என்ற வாசகம் இருக்கிறது. அடுத்த காட்சியில் விஞ்ஞானியும்,ஜெர்ரி ஷெபர்ட்,அவந்து உதவியாளர்,அவனது காதலியான விமான ஓட்டி அனைவரும் 155 நாட்கள் முடியும் தருவாயில் அண்டார்டிகாவை வந்து அடைகிறார்கள்.

எஞ்சியிருக்கும் மாயா,மாக்ஸ் இன்னும் இரண்டு நாய்களுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்.
அதே வேகத்தில் அவற்றை அழைத்துக் கொண்டு திரும்புகிறார்கள்.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தது இந்த நாய்களின் நடிப்புதான். என்னதான் பயிற்சி கொடுத்திருந்தாலும்,அவைகளின்
அபார சக்தியும் புத்திசால்த்தனமும் என்னை மிகவும் கவர்ந்தன,.
அதே சமயம் உதவி கிடைக்கும் போது லகுவாக ஏற்றுக் கொண்டு, பிறகு அதை முழுவதும் மறந்துவிடும் மனித குணமும்,
நாய்கள் தானே என்று அலட்சியமாக இல்லாமல் , முயற்சி எடுத்துக் காப்பாற்றும் ஜெர்ரி ஷெப்பர்டின்
அளவுக்கு மீறிய அன்பு சுபாவமும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கின்றன,.


இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது உண்மையாகவே நடந்த சம்பவம் என்ற செய்திதான்.

எல்லோரும் வாழ வேண்டும்.


















Sunday, January 17, 2010

490 சினிமா ,எயிட் பிலோ,

அரோரா பொரியாலிஸ்

ஜெர்ரியின் செல்லங்கள்.

ஞாயிறுகளில் பொழுது
போவது சிறிது சிரமம் . வழக்கமாக வரும் ,அக்கம்பக்கத்து தோழிகள் அவரவர் விடுமுறையை அனுபவிக்கும் நாள்.

நமக்கோ எல்லா நாட்களுமே ஞாயிறு தானே :) அப்படியொரு நாள் வாய்த்தது.
சிறிது நாட்களுக்கு முன்னால் ஒரு ஞாயிறு ,எதோ ஒரு ஆங்கிலச் சானலில் ''எயிட் பிலோ'' என்ற இந்தப் படத்தைப் பார்த்தேன் .


வால்ட் டிஸ்னியின் படம். எயிட் பிலோ .... இதை எப்படி தமிழில் மொழி பெயர்க்கிறது??

அர்த்தம் புரிகிறது. ஆனால் புரிந்து சொல்லத் தெரியவில்லை..
கதை இப்படிப் போகிறது.

ஒருவிஞ்ஞானி , வானிலிருந்து விழும் எரிகற்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய அண்டார்டிகா போக ,அமெரிக்கன் அரசிடமிருந்து பொருள் உதவி பெறுகிறார்.

அவருடன் பயணிக்க உதவியாளர்களாகவும் விமான ஓட்டிகளாகவும் ஒரு பெண்ணும், அலாச்கன் ஹச்கீஸ் என்னும் ஒரு வகை நாய்களின் முழு விவரம் அறிந்த ஜெர்ரியும் ,இன்னும் ஒருவரும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு அன்டார்டிகாவை அடைகிறார்கள்.
அந்த மீட்டீயோரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானி இறங்குகிறார். ஜெர்ரியும் அவருடைய ஹஸ்கீஸ் குழுவும் அவர் தேடும் இடங்களுக்கெல்லாம்
அழைத்துப் போகிறார்கள்.
ஒரு ஸ்லெட்ஜில் வேண்டுகிற உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு சீரோ டிக்ரீயை எப்பவொ கடந்துவிட்ட மைனஸ்
குளிர்.
ஜெர்ரியின் ஹஸ்கி நாய்கள் உழைப்புக்கு அஞ்சாமல் இருவரையும் அழைத்துப் போகின்றன.

ஒரு இடத்தில் எதிர்பாராத குளிர்ப் புயல் அடிக்கப் போவதாக அவர்களுக்கு ரேடியோ செய்தி வருகிறது.
அப்போதுதான் அந்த விஞ்ஞானி வெகு மும்முரமாக்,அவரது புதிஉஅ கண்டுபிடிப்பை அராய்ந்து கொண்டு இருக்கிறார்.
ஜெர்ரியின் நாய் ஒன்றுக்கு காலில் அடிபடுகிகிறது.

அதைக் கவனிக்க அவன் திரும்பும்போது விஞ்ஞானி பனிக்கட்டிகள் நிறைந்த குளத்தில் விழுந்துவிடுகிறார்.விழுந்த வேகத்தில் அவரது கால் எலும்பு முறிந்து விடுகிறது.

நிலமையின் அவசரத்தைப் புரிந்து கொண்ட ஜெர்ரி,தன் லீட்நாயான மாயாவை கீழெ அனுப்பி அவரைச் சுற்றி ஒரு கயிற்றுச் சுருக்கைப் போட்டு,
மெள்ள மெள்ள மற்ற நாய்களின் உதவியோடு வெளியே இழுத்துக் காப்பாற்றி விடுகிறான்.
அனைத்து நாய்களுடன் மிகவும் சிரமப்பட்டு பேஸ் காம்ப் வந்து சேருகிறார்கள். கண்மண் தெரியாமல் அடிக்கு பனிச் சூறாவளிக்கு நடுவில் அந்த ஹஸ்கி நாய்களின் வீரம் மிகுந்த தளராத செயலுக்கு எல்லோரும் நன்றி சொல்கிறார்கள்.
விஞ்ஞாஆனிக்கோ உடல் நிலையை உடனே கவனிக்க வேண்டிய நிலை.
பனிப்புயலோ அதிகமாகிறது. அந்தக் குட்டி விமானத்தில் இந்த ஹஸ்கீஸையும் ஏற்றிச் செல்ல முடியாத நிலை.
ஜெர்ரியின் மனம் படாத பாடு படுகிறது.
மற்றவர்களின் வற்புறத்தலின் பாதிப்பில் அந்த நாய்களை சங்கிலியில் பிணைத்து,
அவைகளிடம் தான் மீண்டு வந்து அவர்களை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் விமானத்தில் ஏறுகிறான்.


அண்டார்டிக்



கதை நீளுகிறது. அதனால் நாளை மீதிக் கதையைப் பார்க்கலாமா/.












எல்லொரும் வாழ வேண்டும்.



























அண்டார்டிக்















எல்லோரும் வாழ வேண்டும்

Tuesday, January 12, 2010

௪௮௯, தைப் பொங்கல் நல் நாள் வாழ்த்துகள்


ஆரோக்கியம் பெருகி, வளம் நிறைய ,நலம் வளர
இறையருள் கூட எல்லோருக்கும் தைப் பொங்கல் நல்நாள் வாழ்த்துகள் .

எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, January 10, 2010

181,கல்யாணமே வைபோகமே,இன்னொரு மீள் பதிவு

முதல்ல டிஸ்கி.....இவை...இணையத்தில எடுத்த படங்கள்.

யாரு என்னனு தெரியாது.அதனால நீங்களாவே இருந்தாலும் கண்டுக்காதீங்க.







இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.
திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.
சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.
அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.
சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி
சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்
அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.
நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.
சிவாஜி,சரோஜாதேவி
ஜெமினி சாவித்திரி
பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.
ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.
அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.
இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை
ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.
அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.


கசமுச என்று பேச்சு.
இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.
அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.
அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.


சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.
''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''
நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு
மனசு வரவில்லை.
''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.
என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????
என்று அம்மா வருத்தப்பட ,
சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.
தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..
என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.
சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.
சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.
மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....
சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.
படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே
டிகிரிக்குப் படிக்கலாம்.
அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.
அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."
இதுதான் சாரம்.
அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.
பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.
அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.
தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்
இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்
சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.
எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!
ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்
ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.
உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)
கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.
ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)




ஒரே கல்யாண கொண்டாட்டம்தான் !!!மீள் பதிவு

அறிவிப்பு ...இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது.

**********************************************************************

இந்தப் பதிவுக்குக் காரணம் திருமதி கீதா சாம்பசிவமும், தம்பி வாசுதேவனும்  தான்

**********************************************************************************************

.

எப்பவும் ஸ்கூல்பசங்களோட லீவு ஒட்டியே முன்னாளில் கல்யாணங்கள் நடக்கும். நாத்தனார் முடிச்சு போட வரணும்னால் அவங்க குழந்தைகளுக்கு லீவ் விட்டாத்தான் வரமுடியும்.

அதால கூட இருக்கலாம்.இப்பத்திக் கல்யாணம் மாதிரி இல்லையே.

வீட்டுக்கு முன்னாடி பந்தல். பந்தக் கால்போட்ட அன்னிலேருந்தே உற்சாகம் கிளம்பிடும்.

வண்டியில் வந்திருங்கும் கீற்றுகள்,வாழைமரம்,சரம் கட்டிவிடும் பழங்கள்

விதானம் கட்டும் துணி எல்லாமே ஒரே த்ரில்லிங்காக இருக்கும்.

வாசனை,பஜ்ஜி,பட்சண வகையறா செய்யப் போட்டக் கோட்டை அடுப்பு.பிரமாதமான சூழ்நிலை.

மருதாணி இட ஒரு நாள். அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் முற்றுகையிட்டுவிடுவார்கள். பகல் மருதாணி,இரவு மருதாணி என்று எல்லோரும் பறித்துக் கொண்டுவந்த இலைகளை அம்மியில் வைத்து,பாக்குகளைஅதில் பொடித்துப் போட்டு,துளி எலுமிச்சஞ்சாறு பிழிந்து

ம்ம்ம் மருதாணிக்கே உண்டான ஸ்பெஷல் வாசனை வீட்டை நிரப்பும்.

அந்த மாமி,இந்த அத்தை,பாட்டிகள் குழுமிவிடுவார்கள்.

சின்னப் பெண்களிலிருந்து,பையன்கள் ,முதிர்ந்தவர்கள் எல்லோரும் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டுதிரியும் அழகு தனி.

மருதாணி இட்ட கைகள் காயும் வரை

அடுத்தவர்கள்,(சில பேருக்கு மருதாணி அலர்ஜி அப்பவே உண்டு) உதவி

சகல விஷயத்துக்கும் தேவைப்படும்.

இவ்வளவு நினைவும் வரக்காரணம் இந்த அனிவர்சரிப் பதிவுகள்தான்.

அப்படியே போற போக்கில எங்க கல்யாணம் நிச்சயமான கதையையும் சொல்லலாமே என்று தோன்றியது:-)

*******************************************************

மதுரையின் அருகே பசுமலை என்கிற ஊர் .அப்போது...41 வருடங்களுக்கு முன்னால் வயல்கள் ஒரு பத்துப் பதினைந்து புதிதாகக்கட்டிய வீடுகள் மெயின் ஹைவே(மதுரை/திருமங்கலம் சாலை)யை ஒட்டித்

இருந்தன.(பசுமலை பைக்காராவுக்கும் திருப்பரங்குன்றத்துக்கும்

இடையில் இருக்கும்.)

அவைகளில் ஒன்று தபால் அலுவலகம். இப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.அப்பா போஸ்ட்மாஸ்டர்.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறிக்கொண்டே இருப்போம்.

அப்படி வந்த இடம் பசுமலை.ஏற்கனவே பழங்காநத்தம்

இடத்தில் பாட்டியும் தாத்தாவும் இருந்ததால் மதுரை பழகின இடமாயிருந்தாலும் அப்பா என்னைத் தனியே அனுப்பமாட்டார்.

கொசுறு மாதிரி சின்னத் தம்பி கூட வந்தால், நான் போகலாம் .டவுன் என்று அழைக்கப் படும்

செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டைச் சுற்றியுள்ள உறவினர்களைப் பார்த்துப் பேசிவரச் சொல்லுவார்,.

அவனும் பெரிய மனது பண்ணி,தன் (சேதுபதி உயர்னிலைப்பள்ளிக்குப் ) போவதற்கு முன்னால்,என்னை எங்கள் சித்தப்பா வீட்டில் (சந்தைப்பேட்டை)விட்டு விட்டுப் போவான்.

இப்போது நினைத்தால் சிரிப்பக இருக்கிறது. அப்பொது சுதந்திரம் பறிபோன மாதிரி இருப்பேன்.

என்ன இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் தங்கிக் கல்லூரிக்குப்

போய்வந்து விட்டேன்,எனக்கு இந்த அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

போய்வரத் தெரியாதா என்று தோன்றும்.

கேட்க முடியுமா??

அத்தனை பயப்பட்டு இருக்க வேண்டாம்.

அதுபோல ஒரு தடவை டவுனு பக்கம் போனபோது சின்னப்பாட்டி வீட்டுக்குப் போனொம்.

அங்க வந்த தபால்களைப் படித்துக் காண்பிக்க ,மற்றும் அவங்களுக்கு வேணும் என்கிற ஏவல்கள் ,வேலைகள் எல்லாம் செய்து முடிக்கணும்.இதெல்லாம் நாமா எடுத்துச் செய்கிற வேலைகள்.

அப்படி வந்த ஒரு கடிதத்தில் நான் இது வரை கண்ணால் கூடப் பார்த்திராத

ஒரு அத்தை, ''தன் உயரமான சிவப்பான 26 வயசு ஆன பையனுக்கு

ஒரு ஒல்லியான, உயரமான,சிவப்பான,அழகான (!!!!)

பெண் யாராவது இருந்தால் பார்த்து எழுதவும் .ஜாதகம் அனுப்புகிறேன்

என்று எழுதி இருந்தார். எனக்கும் எங்க சித்தப்பா மகளுக்கும்

தாங்க முடியாத வம்பு பிடித்துக்கொண்டது.

" அதென்ன பேச்சு.ஏன் கொஞ்சம் அழகு குறஞ்சா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களோ. இவங்க எல்லாம் மன்மத ஜாதியோ "என்றெல்லாம் பேசி அந்தப் பாட்டியை உண்டு இல்லைனு செய்துட்டோம்.

அவங்க அசரவில்லை.

ஏன் நீங்க தான் ரெண்டு பேரு மாமா பெண்ணுங்க இருக்கீங்களே

இவ்வளவு பேசறவங்க பதில் கடிதம் எழுதுங்களேன்னு சொல்ல,

உடனே பேனாவை எடுத்தது நான்தான்..

அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)

இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி

இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ

இருக்கிறாள்.

சிவப்பிலேயும் சிவப்பு .

உயரத்திலேயும் உயரம்.

கிளி போல அழகு.(:))நீ ஜாதகத்தை அனுப்பு.
நான்

கோபாலன் கிட்டப் பேசிக்கறேன்.

இப்படிக்கு,

ஆசீர்வாதங்களுடன்

அம்முச் சித்தி.

இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.

நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.

இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும்

எங்க பாட்டி அவ்வப்போது பேசும் பேச்சுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.

பாட்டிக்கு சிரிப்பு ஒருபக்கம். என் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.

அதைப் பார்த்துவிட்டு நான் அவங்களைச் சமாதானப் படுத்தி

இதுக்கெல்லாம் பதிலே வராது என்று சொல்லி அடுத்த நிமிடம்

மறந்தும் விட்டேன்.

அதைவிட அப்போது வெளிவர இருந்த அடிமைப்பெண் திரைப்படம்,

எங்க வயசே இருக்கும் ஒரு பெண் நடிக்க வருவது பற்றிப் பேச்சு

என்று போய் விட்டது பொழுது.

பிறகு நடந்தது இன்னும் சுவாரசியம்.

நாளைக்குப் பார்க்கலாம்:-)

எல்லோரும் வாழ வேண்டும்.

இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.

திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.

சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.

அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.

சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி

சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்

அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.

நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.

சிவாஜி,சரோஜாதேவி

ஜெமினி சாவித்திரி

பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.

ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.

அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.

இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை

ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.

கசமுச என்று பேச்சு.

இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.

அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.

அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.

சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.

''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''

நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு

மனசு வரவில்லை.

''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.

என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????

என்று அம்மா வருத்தப்பட ,

சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.

தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..

என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.

சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.

சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.

மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....

சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.

படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே

டிகிரிக்குப் படிக்கலாம்.

அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.

அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."

இதுதான் சாரம்.

அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.

பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.

அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.

தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்

இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்

சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.

எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!

ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்

ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.

உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)

கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.

ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)

Friday, January 08, 2010

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,சிவகாமி

முதல் அத்தியாயம்

ரிஷபம்


கலங்கரைவிளக்கம்

கோவில் யானை

சிவகாமி இருந்தால் இப்படி இருந்திருப்பாளோ !

முதல் அத்தியாயத்திலியே, காஞ்சி மாநகர வீதிகளில் பரஞ்சோதியும் புத்த பிக்ஷுவும் பிரிகிறார்கள்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு யானை பிளிருவதும், ஆயனரும் அவர் மகள் சிவகாமியும் வந்த பல்லக்கு வீதியில் இறக்கப் படுவதும் ,அவர்களைக் காப்பாற்ற ,மின்னல் வேகத்தில் தன் கை வேலை யானையின் மீது எறிவதும்
யானை அவனை நோக்கித் திரும்பி அவனைத்துரத்துவதும் நடக்கின்றன. கல்கியின் எழுத்துவண்ணம் ஒவ்வொரு வரிகளிலும் ஒளிவிடும்.

இதைத் தொடர்ந்து மஹேந்திர வர்மரும், அவர் புதல்வன், இளவரசர் நரசிம்மரும் வெண் குதிரைகளில் வருகிறார்கள்.
இதோ கல்கியின் வார்த்தைகளில்:

//
சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரை மீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின//

ஆயனச் சிற்பியின் வீட்டுக்கு அருகில் தாமரைக் குளம் அருகே இருவரது சந்திப்பும் நிகழ்கிறது.

புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கிப் போர் தொடுக்கவந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிலைமையில் சிவகாமி, நரசிம்ம பல்லவரிடம் தன்னை மறக்கக் கூடாது என்ற சத்தியத்தை வாங்கிக் கொள்ளுகிறாள்.
*****************************************************************

சரி, இந்தக் கதைக்கும் எங்கள் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?
சிவகாமியின் மாமல்ல பல்லவன் எனக்கும் பிடித்து விட்டார். அதிலிருந்து

சிம்மக்கல் ஸ்டாப் என்று மதுரை பஸ்ஸில் கண்டக்டர் சொன்னால் கூட
திரும்பிப் பார்ப்பேன்.

1965,
அப்போது வந்தது ஒரு சினிமா.கலங்கரை விளக்கம் என்ற பெயரோடு.
ரேடியோ சிலோனில் பொன்னெழில் பூத்தது புதுவானில் '
பாடல் ஒலித்த நாளிலிருந்து அந்தப் பாட்டின் மீது ஒரே பைத்தியம்.
அந்தப் பாட்டின் ஆரம்பத்தில்,''சிவகாமி....'' என்று டி.எம்.எஸ்

அழைக்கும் போதே நான் சுசீலா அம்மாவின் பதில் குரலுக்காகக் காத்திருப்பேன்.
அந்தப் படம் பார்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்கவில்லை.
படம் பற்றிச் சொல்ல தோழிகளும் இல்லை.

பாட்டை மட்டும் கேட்டு ரசித்து,அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
பத்திரிகை ரெவ்யூக்களில், சிவகாமியின் சபதம் படித்த ஒரு பெண் ,மனம் கலங்கித் தன்னையே சிவகாமியாக நினைத்துக் கொண்டு, நரசிம்ம பல்லவனைத் தேடுவதாக அரைகுறை செய்திகள் மட்டும் கிடைத்தன.
சரோஜாதேவி,எம்.ஜி ஆர் படம்.

இதற்குப் பிறகு வந்ததுதான் அத்தையின் கடிதமும், அவர் பிள்ளையின் ஜாதகமும்.

அதிலிருந்த பெயரைப் பார்த்ததும் சரி என்று சொல்லிவிட்டேன்.

அதற்குப் பிறகு திருமணம்,குழந்தைகள் வாழ்க்கை தொடர்ந்தது.
************************************************************************************
எப்பவாவது சிவகாமியின் நினைப்பு வரும். பாவம் என்ன சுகம் கண்டாள். நாகநந்தியால் வாதாபியில் சிறை வைக்கப் பட்டாள்.

புலிகேசியின் சாம்ராஜ்யத்தை அழித்தபிறகே நாடு திரும்புவேன் என்று சபதமும் செய்தாள்.
நரசிம்ம பல்லவரும் ஆட்சிக்கு வந்து தன் தலமைத் தளபதி பரஞ்சோதியோடு
வாதாபி வந்து போரிட்டுச் சிவகாமியை மீட்டுச் செல்கிறார்.

காஞ்சிக்கு வருவதற்குள் அவளுக்கு அவரிடம் இருந்த மாற்றம் புரிகிறது.
தன் தோழி கமலி வீட்டில் இருக்கும் போது,வீதியில் அரச ஊர்வலம் ,பட்டணப் பிரவேசமாக,சாளுக்கியர்களை வென்று திரும்பும் சக்கரவர்த்திக்காக நடக்கிறது, கமலி வீட்டுக்கு அருகில் வருகிறது. அதில் பல்லவ சக்கரவர்த்தியோடு அவரது பட்ட மகிஷியும் இரு குழந்தைகளும்
வருவதைப் பார்க்கிறாள்.

மனதில் சோகம் மண்டுகிறது. ஆயனச் சிற்பியின் அஜந்தா ஓவிய ஆசையும் ,நாகநந்தியின் (சிவகாமியின் மேல் கொண்ட) நிறைவேறாக் காதலும் சேர்ந்து,
தன்னுள் மூட்டிய கோபத் தீ தன்னையே கருக்கிவிட்டதை உணர்கிறாள்.
ஒன்பது வருடங்களில் உலகே தலை கீழாகி இருந்தது.

அமைதியாக முடிவெடுக்கிறாள். ஊனமுற்ற தந்தை ஆயனச் சிற்பியிடம்
தான் ஏகாம்பரேஸ்வரரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கிறாள்.
அவள் விருப்பத்தை (நால்வரில் ஒருவரான) திருநாவுக்கரசரும் ஆதரித்து ஆசீர்வதிக்கிறார்.

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புஷ்ப மாலையையும் ,பெருமானிடமிருந்து கொடுக்கப் படும் திருமாங்கல்யத்தையும் அணிந்து கொண்டு,

'' முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் ''
என்ற பதிகத்தில் மனம் நிறைந்த அமைதியோடு நடனம் ஆடுகிறாள்.

பாதி நடனத்தில் நரசிம்ம பல்லவர் வந்து,பார்த்துக் கண்ணீர் சிந்திப் போவதைக் கூட அவள் கவனத்தைக் கவரவில்லை.
பாடல் முடிவில்
''தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே'' என்று திரு கல்கி சிவகாமியின் நிறைவேறாக் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.


*****************************************************************************************************
ஆனால் எனக்கு மட்டும் திரு கல்கியின் மேல் வருத்தம்தான்.
சரித்திரத்தைக் கொஞ்சம் மாற்றி எழுதாமல், இப்படி முடித்துவிட்டாரே என்று:))


















எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, January 07, 2010

மார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...











இன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ
விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா !உன்
கோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .
--
ஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.
அவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.
அவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .
மாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.
அதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.
அதன்
கால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.
அது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.??
எல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை!!
தரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.
கொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.
ராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.
அந்த
சிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .
உன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.
ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .
எழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, January 06, 2010

கவிஞன் இல்லை கவிதை உண்டு










கவிதை அமைக்க கவிஞன் முற்பட்டால்
கவிபாட இனிதே கருத்துகளும் உருவெடுக்கும்
இதமான உள்ளத்தில் இணைந்தே இசைபாடும்
பதமான பாடல்கள் பண்ணோடு அமையப் பெறும்.


கற்பனைகள் உருவாகக் கருத்துக்கா பஞ்சம்
கற்றறிந்த இலக்கியத்தில் காணாத கருத்துகளா
காற்றின் ஓசைக்கும் கானல் நீருக்கும்
காரிகையின் இன்மொழிக்கும் காளையின் முரசொலிக்கும்
கடலின் அலைகளுக்கும் கறுத்திருக்கும் மேகத்துக்கும்


கனவுகளின் இனிமைக்கும்காட்சிகளின் தெளிவுக்கும்
மழலையின் சிரிப்புக்கும் மானிடரி மமதைக்கும்
மண்ணின் பெருமைக்கு மாசற்ற சூழலுக்கும்
எளிமையான பதத்தில் ஏற்றமான பாடல்
எளிதாக அமையும் எண்ணத்தில் தெளிவிருந்தால்..

கண்ணிமைக்கும் நேரத்தில் கனிவான வண்ணத்தில்
கவிஞனின் எண்ணம் கவிதையிலே மின்னும்
N.Rengan

1952-2004.


எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, January 03, 2010

484 ,பொன்னெழில் பூத்தது ....


அஜந்தா ஓவியங்கள்


மாவீரன் கல்




பீமன் வெண்ணெய்




சிவகாமியும் சுகப் பிரம்மமும்





குள்ளன்,நாகநந்தி





நரசிம்ஹா நரசிம்ஹா பல்லவன்







மாமல்ல பல்லவன் .


முதல்ல டிஸ்கி!! அப்புறம் உண்மையான பதிவு:)


இந்தப் பதிவு உண்மையாவே என்னுடைய 484 ஆவது பதிவுதான் என்று
உறுதியாகச் சொல்லுகிறேன்.:)
புதுவருஷத்தன்னிக்கு ஒரு பதிவு ஏற்கனவெ ஆரம்பித்ததைப் பூர்த்தி செய்து
பப்ளிஷ் செய்யலாம்னு பதிவைத் திறந்தால் ஏதோ சரியாக இல்லை என்ற உணர்ச்சி.
டாஷ்போர்டில ,எடிட் போஸ்ட் அழுத்தினா 15 பதிவுகள் அதுவும் ட்ராஃப்ட் ஆகவே இருக்கு என்று வருகிறது. அப்படியே ஸ்தம்பிச்சுப் போச்சு இதயம். என்னது மொத்தமே 15 பதிவா.! என்னடா இது
அப்படியே ஒரு சில்லுனு உணர்வு உடம்பெங்கும். திகிலடிச்சாப் போல. சரி பதிவை மூடிட்டு மீண்டும் திறந்தால் 483 என்று காட்டுகிறது.
இல்லையெ நேத்திக்கு 872 பார்த்த மாதிரி இருக்கே.
என்னவோ குழப்பம்.

ஏதோ துக்கம்.இப்படிக் கூட நடக்குமா. என்ன காணாமப் போச்சு. என்ன இருக்கு தெரியவில்லையே.
பகல் ஒரு மணி .
துளசிதளம் தூங்காத பார்ட்டி.
எடுடா போனை, போடுடா நம்பரைன்னு அவசர உதவிக்குக் கால் போட்டாச்சு. துளசி குரல் கேட்டதும் ஒரு பாடு,
திருவிழா கூட்டத்துல தொலஞ்ச குழந்தை மாதிரி ஒரு அழுகை. உண்மையாவே அந்த மனுஷி நடுங்கிப் போயாச்சு.
அப்புறம் நடந்ததெல்லாம் துளசிதளம்''பயப்ப்ராந்தி விசுக்கி விசுக்கி''ல பார்த்து மனசாரச் சிரிங்க:)
பழைய கால டாக்டர் ஸ்ரீதரின் வீட்டு வைத்தியம் புத்தகத்தில்,
மதுமேகம்னோ எதுவோ டயபெடிஸ் பற்றி படித்த நினைவுதான் வந்தது. சில வேளை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானா
பாதிக்கப் பட்டவங்களோட நடவடிக்கையும் சற்றே மாறுபடும்னு எழுதி இருப்பார்.
அன்னிக்குத் திருவாதிரைக் களியைக் கொஞ்சம் ருசி பார்த்ததுதான் காரணம் என்று தோன்றுகிறது. திரு ஸ்ரீதர் எழுதின வார்த்தைகளை
இப்ப முழுசா அதை நம்பறேன்.
மற்றவை அடுத்த பதிவில் சிவகாமி நரசிம்ம வர்மனோடு பார்க்கலாம் :)




எல்லோரும் வாழ வேண்டும்.