Friday, December 25, 2009

சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்

டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.


அதான் இநவரட்டார் இருக்கு. மின்சாரம் வந்துவிடும் என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,

என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.

அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.

இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அழைத்து, மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அழைத்தால் அவர்கள் இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம். எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,

வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.

அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)எல்லோரும் வாழ வேண்டும்.