About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Sunday, September 21, 2008

புரட்டாசி..சனிக்கிழமை,அரிசிப்பாகு,மாவிளக்கு

இவருக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு ஏற்றுவது, குடும்பங்களில் வழக்கம். தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.
சீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.

அவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.
இத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,
ஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,
அந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து
நாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.

வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.
கையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.
காப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.
போனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.

தங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,
இரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,
தயிர்சாதமும் முடித்து உறங்கிவிட்டோம்.

சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.
அப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.
அங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.

பெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.
அப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான
பொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,
அங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,
ஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.

ஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.
புரட்டாசியும் பெருமாளும் மாவிளக்கும் இங்கேயும் நினைவு வரத்தான் செய்கிறது.
ஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.
அதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்
வெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி
செய்தேன்.

செய்த விதம் பார்க்கலாமா.

அரிசிமாவு வறுத்துக் கொண்டு,
அதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
200கிராம் வெண்ணெயும் கலந்து
வாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை அப்படியே எடுத்து
மைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.
அதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.

பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா!!!

Posted by Picasa