About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Wednesday, August 06, 2008

அமெரிக்கா!! திரும்புகிறோம்ஜுலை19,
ஜுங்ஃப்ரௌவிலிருந்து திரும்ப சாயந்திரம் ஆகிவிட்டது.
அங்கே சந்திக்கக் கிடைத்த தமிழர்கள் தான் ஒரே காரணம்.....
சீதா ட்ராவல்ஸ் மூலம் வந்த ஒரு குழுவும்,தாமஸ்குக் குழுவொன்றும் நிறைய இந்தியர்களை இறக்கியது.
அவர்களைக் காபந்து செய்து கூட்டிக் கொண்டு வந்தவர் கிட்டத்தட்ட ஆடு மாடுகளை மேய்ப்பது போல் காட்சி அளித்தார்,.
அங்கேயும் ஒரு பாலிவுட் ரெஸ்டாரந்த், இந்திய சாப்பாடு தயராக வைத்திருந்தது. அதில் ஜெயின் சாப்பாடு வேற.
என் திலகத்தைப் பார்த்து இரண்டு(என்னைவிட வயதான) பாட்டிகள் ஜாக்கிரதையாக விசாரித்துக் கொண்டார்கள். ''நோ கார்லிக் நோ ஆனியன்''
இதுதான் தாரக மந்திரம்.
நம்மைவிட இவர்கள் இன்னும் மகா ஆசாரம் உணவு விஷயத்தில்
என்று புரிந்து கொண்டேன்.
மரபு முறையைப் பின்பற்றுவதில் அவர்கள் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருப்பதை என் பெண் ஏற்கனவே சொல்லி இருக்கிறாள்.
அவளுடைய வீட்டு மனையைத் தேடிக்கொடுத்த ஒரு ஏஜண்ட்
ஜெயின் தானாம்.
கிரண் என்று பேரு. அந்த அம்மாவும் ஒரு தடவை இங்க
நேபர்வில் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார்கள்.
அப்போதுதான் அஹமதாபாத் போய் வந்திருந்தார்கள். அங்கே துவாரகா பக்கத்தில் ஒரு கோவில் அவங்களோட சமண மத குருக்களோடது இருக்காம்.
தன் பெண் திருமணம் நல்ல படியா நடக்க வேண்டும் என்பதற்காக,
மூன்று மாதம் அங்கே ஒரு குடில்(காட்டேஜ்) எடுத்துத் தங்கி,
தினம் காலையில் குளித்து விட்டு உணவு அருந்தாமல் அந்த மலையை ஏறி சாமி கும்பிட்டுவிட்டுக் கீழே இறங்கி மதியம் மூன்று மணிக்குத் தான் உணவு அருந்துவார்களாம்.!!
சேனு போச்சுப்பா.
நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமே, இந்த அம்மாவை ப் பார்த்துக் கத்துக் கொள்ளணும்னு நினைத்தேன்.
இவர்களுக்குப் பணம் குறைவில்லை. படிப்பக் குறைவில்லை.
ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.
என்னையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள் சாப்பிட.
கைகால் நகம் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போகவேண்டும்.:)
கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.
சரி இப்ப நாம ஜுங்ஃப்ரௌவில இருக்கிற பனிக்கட்டி குகைக்குப் போகலாமா.
அங்கே இருக்கும் சிற்பங்களைப் போன பதிவில் போட்டிருந்தேன்.
அந்தக் குகைக்குள் நான் போகவில்லை.
ஆக்சிஜன் குறைவு,குளிர் அதிகம்.
ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இருந்த போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தாச்சு.
அங்கே உள்ளே போய்விட்டு முகம் வெளுத்து வருபவர்களைப் பார்த்தேன்....ம்ஹூம் நமக்கு ஒத்து வராது. வழி நெடுகக் கைப்பிடி இருக்கும். என்ன தொந்தரவு என்றால் அதுவும் வழுக்கும்.
ஐஸ் மாதிரி இருக்கும்.ஐஸ் மாதிரி என்ன ஐசேதான்.
இந்த அழகில நாட்டியக் குதிரை மாதிரி நாம் போயி,அங்க வேற யாராவது சைனீஸையோ,ஜப்பான்காரனையோ பிடித்துத தள்ளி....நினைக்கவே பயமாக இருந்தது.:)
அதுகள் பேசுவதே ஏதோ கீச்சு கீசென்று ஆனைச்சாத்தன் மாதிரி இருக்கு.கொஞ்சம் கட்டை ஆனைச்சாத்தான் வச்சுக்கலாமே:)
இன்னும் ....வேண்டாம்பா, இருக்குமிடம் வைகுந்தம் என்று நல்லா வெயில் உறைக்கும் இடத்தில் பேத்தி தூங்க நானும் காவலுக்கு ஒரு சூடான காப்பியோடு உட்கார்ந்து விட்டேன்.
அப்போதுதான் மைலாப்பூரிலிருந்து வந்த இரண்டு பெண்களைப் பார்த்தேன். கணவர்களை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
இருவரும் விடுமுறை எடுத்து வந்திருந்தார்களாம்.
ஆளுக்கு முறையே ஒரு பெண்ணும் பையனும். கல்லூரியில் படிக்கிறார்களாம்.
அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
நாட்கள் மாறிவிட்டன.!!
இன்னிக்கு நாம பாசல் திரும்புகிறோம். நாளைக்கு (ஜூலை 20)மீண்டும் ஸ்விஸ் ஏரில் சிகாகோ பயணம்.
ஒன்பதரை மணி நேரம்!!!
ம்றுபடி சந்திக்கும் வரை............தொடரும்.