About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, August 01, 2008

சின்னாளப்பட்டிச் சேலையக் கட்டி வந்தாளே ஒரு சித்தி!

என் அப்பா வழிப்பாட்டிக்குச் சர்க்கரை மிகுதியாக இருக்கு என்று தெரிந்ததும்

எல்லாருக்கும் எப்படி அதற்கு வைத்தியம் செய்யலாம் என்றேல்லாம்
அதிகமாகத் தெரியவில்லை.
வெறும் சாக்கரின் என்கிற காப்பிக்கு போட்டுக்கிற
மாத்திரையோடு , அதைத்தவிர வேறு ஏதும் அவர் எடுத்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை.

பாட்டிக்கு காலில் எக்ஸிமா வந்து மிகவும் சிரமப்பட்டார்,.
அம்மாதான் பாட்டிக்கு எல்லாவிதமான உபசாரங்களையும் உதவிகளையும் செய்து கவனித்துக் கொண்டார்கள்.

அப்போது பாட்டியை விசிட் செய்ய வந்த
இன்னோரு பாட்டிச் சின்னாளப் பட்டி பாட்டி,
ஒரு கஞ்சி செய்யச் சொல்லி யொசனை சொன்னார்
அந்தக் கஞ்சிதான் கீழெ கொடுத்திருக்கும் செய்முறை.


இது சர்க்கரை மிகுதியால் சிரமப்படுகிறவர்களுக்கும்,
மற்றும் எல்லோருக்கும் உதவும்,பலம் கொடுக்கும் ,காலை வேளைக் கஞ்சி.
மெந்தியம் சேர்த்திருப்பதால் நீரிழவு கட்டுப்பாட்டிற்கு மிகவும் நன்மை செய்யும்.
கீழே கொடுத்துள்ளபடி உணவுப் பொருட்கள் அளவு இருக்க வேண்டும்.

1,புழுங்கலரிசி ஒரு பாகம்
2,கோதுமை ஒரு பாகம்
3,பச்சப்பயறு அரை பாகம்
4,மெந்தியம் கால் பங்கு
5,தனியா கால்பங்கு
வாசனைக்கு சுக்கு,ஏலக்காய் ,சீரகம் போட்டுக் கொள்ளலாம்
எல்லாப் பொருட்களையும் தனித் தனியாக வறுத்து
பொன்னிறத்துக்கு முன்னாலியே எடுத்துக் கொண்டு
மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
அதுவும் ரவை பதத்தில் இருந்தால் நல்லது.
ஒரு டம்ப்ளர் அளவு ரவைக்கு நான்கு பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்து
வேக விடலாம். கட்டி தட்டாது இருந்தாலும் குறைந்த சூட்டிலியே வேக வைப்பது
நல்லது.
வெந்ததும் உப்பும் பெருங்காயமும் மோரும் சேர்த்து அருந்தலாம்.
மைக்ரோவேவ் என்றால் எக்ஸ்ப்ரஸ் பட்டனைத் தட்டி 10 நிமிடம் போதும்.
3 மணி நேரம் பசி தாங்கும்:)

இது சின்னாளாப்பட்டிச் சித்தி சொன்ன வைத்தியப் பத்தியம்.
எல்லோருக்கும் நல்லதுதான்.
சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
பாட்டிக்கு மருந்து ,எனக்கு நாலு பாவாடைத் துண்டுகளோடு அந்தச் சித்திப் பாட்டி வந்தது
இன்று நினைவுக்கு வந்தது.
அப்போ பாவாடை விலை என்ன தெரியுமா. ஆறு ரூபாய்.
புடவை 12 ரூபாய்.:)
ஆடி அமாவாசை, சூரிய கிரகணம் என்று நம்ம ஊரில் எல்லோரும் இந்நேரம் குளித்து முடித்திருப்பார்கள்.
ஆடி மூன்றாம் வெள்ளி வாழ்த்துகள் அனைவருக்கும்.
அன்னையின் அருள் பொலிந்து இருக்கட்டும்.

21 comments:

வடுவூர் குமார் said...

மண்டையில் போட்டு வைத்துக்கொள்கிறேன்,எப்போதாவது தேவைப்பட்டால் “சின்னாளப்பட்டி பாட்டி” யை நினைத்துக்கொள்கிறேன்.
நன்றி.

இலவசக்கொத்தனார் said...

நாங்க ஓட்ஸ் சாப்பிடறோமே.....

கோவை விஜய் said...

பாட்டி வைத்தியம் தரும் கஞ்சி .

பயனுள்ள தகவல்.

இப்போதான் வயது வித்யாசமில்லாமமால்

சர்க்கரையார் வரமாய் வந்து விடுகிறாரே

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.

இது நல்லா நார்மலா இருக்கறவங்களும் சாப்பிடலாம்.

ருசியா இருக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கஞ்சியில் உப்புக்குப் பதில் சர்க்கரையும் பாலும் சேர்த்தே சாப்பிடலாமே:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோவை விஜய்.
நீங்கள் சொல்வது உண்மை.

ஒன்றும் பிரமாதக் கஷ்டமில்லை. உடல் பேணி உள்ளமும் பேணினால் எல்லாம் நலமே.

வல்லிசிம்ஹன் said...

சாபிடுங்களேன் கொத்ஸ் சார்.
சாயந்திரத்துக்கு இந்தக் கஞ்சி சாப்பிட்டாப் போறது. சத்து மாவுக் கஞ்சி மாதிரி:)

Vinavu said...

http://vinavu.wordpress.com

கீதா சாம்பசிவம் said...

அட, இது குழந்தைகளுக்குக் கூடக் கொடுக்கிறது தானே கூடவே கேழ்வரகும், ஓமமும் சேர்க்கணும் இல்லையா???
நல்ல கஞ்சி தான்,

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அம்மா கிட்ட சொல்லி வைக்கிறேன்.. இந்த சத்துமாவு கஞ்சி எல்லாம் அவங்க தான் கொரியர் செய்வாங்க இங்க..
நான் செய்துகுடுக்க இன்னும் காலம் ஆகும்ல..

ஆயில்யன் said...

எல்லாம் இருக்கு! (சர்க்கரையும் கூட இருக்கலாம் அம்மாம் சர்க்கரை தின்னுருக்கேன் தின்னுக்கிட்டும் இருக்கேன்! :) )

டிரைப்பண்ணிடவேண்டியதுதான் பட் அடுத்த வெள்ளி வரைக்கும் வெயீட்டிஸ் ( அன்னிக்குத்தான் எனக்கு கிச்சன் லேப்! )

நன்றி அம்மா!

வெந்தயம் - மெந்தியம் எல்லாம் 1தானே?
அப்புறம் கோதுமை இல்லாட்டி டைரக்டா மாவு யூஸ்பண்ணிக்கிலாமா?

:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. சத்துமாவுல இன்னும் பார்லி இத்தியாதிகளைச் சேர்க்கணும். இதில மெந்தியமும் புழுங்கலரிசியும் முக்கியம்.
பயறு இரூக்கிறதனால வயிற்றுக்கும் ஒண்ணும் செய்யாது.

அந்தப் பாட்டி செய்து கொடுத்த ரவையை நாங்கள் உப்புமா செய்து கூடச் சாப்பிட்டோம். ரொம்பவே நன்றாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முத்துலக்ஷ்மி.

சத்து மாவு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதைப் பெரியவர்கள் சாப்பிடலாம்.
சீக்கிரம் பசிக்காது.

இன்னும் ஒரு 15 வருஷமாவது ஆக வேண்டாமா உங்களுக்குப்ப் பாட்டி ட்யூட்டி வர:)

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன் வரணும்மா. அதெல்லாம் ஒண்ணும் நோய் வரவேண்டாம். சாப்பிடுவதை ஒழுங்கச் சாப்பிடுங்க போதும். சர்க்கரை சாப்பிட்டதனால சர்க்கரை வியாதி எல்லாம் வராது.

எனக்கு இனிப்பே பிடிக்காது. இப்ப எப்படி இது வந்தது?.

தேகப் பயிற்சி போதாது. எதையாவது நினச்சுக் கவலைப் பட வேண்டியது.
இந்த ரெண்டும் சரி செய்துட்டு வருஷத்துக்கு ஒரு மாஸ்டர் செக் அப் செய்திட்டால் போதூம்மா. பிறகு கடவுள் விட்ட வழி.
ஓகேயா.:)

வல்லிசிம்ஹன் said...

வரணூம் வினவு. உங்க பதிவில ஒண்ணும் தெரியலையே.

நானானி said...

சின்னாளப்பட்டி சேலை கட்டிய
பாட்டி..கொடுத்தாளே ஒரு சுட்டி!
அருமையன தகவல் வல்லி!
செஞ்சுடறேன். சேரியா?

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா, நல்ல ஒரு தெம்பான ரெசிபி. செஞ்சு பார்த்திடுவோம் :))

வல்லிசிம்ஹன் said...

அவ சிரிச்ச முகம் இனிப்புத் தரும் சீனிச் சக்கரக் கட்டி,படு சுட்டி தங்கக் கட்டி.:)
செய்யூ....னு நானும் சொல்லிட்டேன் நானானி. உங்களுக்குத் தெரியாததா:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா. நல்லா செய்து சாப்பிடுங்கோ/.
வறுக்கும் போதே வாசனை மூக்கைத் துளைக்கும்.

ஷைலஜா said...

எல்லாப் பொருட்களையும் தனித் தனியாக வறுத்து
பொன்னிறத்துக்கு முன்னாலியே எடுத்துக் கொண்டு
மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
அதுவும் ரவை பதத்தில் இருந்தால் நல்லது.
ஒரு டம்ப்ளர் அளவு ரவைக்கு நான்கு பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்து
..>>>>>>>

வல்லிமா எல்லாத்தியும் மிக்சி அரைக்குமா ப்ளேடு போயிடாதா மிஷின்ல கொடுத்து அரைச்சிடலாம் தானே

நல்ல குறிப்பு.. ஓட்ஸ் சாப்ட்டு போர் அடிக்கறப்போ நடுல இதையும் செய்துக்கலாம்... சின்னாளப்பட்டு சேலயக்கட்டி வந்தாளே ஒரு குட்டி என்கிற பழையபாடலையும் இங்க நைசா நினைவுபடுத்திட்டீங்க.... :):)எங்கம்மா கூட கட்டிப்பாங்க முன்னல்லாம் நிஜப்பட்டு மாதிரி பள பளன்னு இருக்கும் இல்லையா என்னாச்சு இப்போ அந்த சேலைகள் எல்லாம்!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும்ம் ஷைலஜா.

மெஷீன்லயும் அரைக்கலாம். என் ஒருத்திக்கு மட்டும் செய்யறதனாலியும்,
எங்க வீட்டுக்கும் மெஷினுக்கும் ரொம்ப தூரம் என்பதாலும். கொஞ்சம் கொஞ்சமா அரைத்து வைக்கிறேன்.
வெந்தயம் நல்ல குளிர்ச்சி தருகிறது.
சின்னாளப்பட்டுதான் இப்ப பாலிசில்காகவும்,பாலிகாட்டனாகவும் ஆகிவிட்டதே.
நம் அம்மாக்களுக்கு அது உழைத்து வந்தது,. ஒரு வேளை திண்டுக்கல் ரங்காச்சாரி கடையில் கிடைக்குமோ என்னவோ.:)

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//அம்மா கிட்ட சொல்லி வைக்கிறேன்.. இந்த சத்துமாவு கஞ்சி எல்லாம் அவங்க தான் கொரியர் செய்வாங்க இங்க..//

எனக்கும் அம்மாவிடம் இருந்து கொரியர்தான்:))!

நல்ல பதிவு வல்லிம்மா! குறிச்சு வச்சுக்குறேன் [அம்மாவிடம் சொல்ல:)))!]