About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, August 18, 2008

யுஎஸ் ஏ பயணம் 3,,,,பகுதி 1

வீட்டுக்குப் பின்னால் இருக்கும்(எனக்கு) வினோதமான மரம்.பக்கத்தில் இருக்கும் பூங்கா.


வீட்டுத் தோட்டத்தில் பூத்த ரோஜா

இரண்டு மைல் தொலைவில் இருக்கும் நர்சரி.


விதவிதமான (தோட்டத்தில் வைக்கும்) பொம்மைகள்அங்கே பூத்திருந்த அழகிய மலர்கள்.
இது இவர்கள் பாட்டியோ(patio) என்று அழைக்கும் டெக். சாயந்திர வேளைகளில் அமைதியாக உணவு அருந்த உபயோகிக்கிறோம்..
2006 நவம்பரில் அனுபவித்த குளிர் மறந்து போய்விடும் அள்வுக்கு இப்போது வசந்த காலம் செழிப்பாக இருக்கிறது. எங்கும் பூக்கள் அவவப்போது மிரட்டும் மழை.
மற்றபடி நம் கிராமங்களுக்கும் இந்த நேப்பர்வில்லுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. அங்க வண்டியும் மாடும். இங்க வீட்டுக்கு இரண்டு கார்கள்.
கிட்டத்தட்ட ஏழெட்டு தமிழ்க்குடும்பங்கள். இந்தியர்கள். இங்கேயெ பிறந்து வளர்ந்து இந்தக் கலாசாரத்தை உடம்பில் உறிஞ்சிக்கொண்ட பெண் ஆண் குழந்தைகள்.


அவரவர் மதத்துக்கு ஏற்ற வேத வகுப்புகள். பரத நாட்டியம்,பாட்டு,பியானோ வகுப்புகள். கராத்தே ,டாய்சி மற்றும் கிரிக்கெட் குழுக்கள். சைக்கிளில் 'கடலை' போடும் டீனேஜ் பசங்க. அவர்களைத்தாண்டும்போது மட்டும் கிளுகிளுக்கும் பெண்கள்.;)
தொலைக்காட்சியில் வரும் கொஞ்சம் வயதுக்கு மீறின குழந்தைகளுக்கான் நிகழ்ச்சி. நல்லவேளையாக பேரன் இன்னும் ஸ்பன்ஞ் பாப் பார்க்கிறான்.


அதுவும் பின்க் பான்தரும் போதும் அவனுக்கு.

தாத்தாவோடு விஞ்ஞான சானலையும் பார்க்கிறான்.
போதாக்குறைக்கு ஒலிம்பிக்ஸ் வந்துவிட்டது.


அதனால் மிச்சமிருக்கும் ஒரு வாரம் ஓடிவிடும்.அப்புறம்
இருக்கவே இருக்கு பள்ளிப்பாடங்களும் ப்ராஜெக்டுகளும்:)
சின்னவனுக்குப் பல்லும் நகமும் நல்ல சுறுசுறுப்பு.
யாரையாவது படம் பார்க்கும் அராய்ச்சியில் இருக்கிறான். நேத்துதான் நகம் வெட்டினேன்,இன்னிக்கு இப்படிப் பிறாண்டறானேன்னு யோசிக்கிறாள். பெண்.
வச்ச பேரோட மகிமை.
லூட்டிக்குக் குறைவே இல்லை.
அவன் மாடிக்குப் போகாமல் இருக்கப் போட்டிருக்கும் தடுப்புகளை யாராவது தெரியாமல் திறந்தால் போச்சு.
எங்கேயிருந்துதான் வருவானோ ஒரு செகண்டுக்குள்ளுக்குள் படியேறிவிட்டு'பாட்டினு கத்தல் வேற. ஏன்னால் ஏறத்தெரிந்தவனுக்கு, இறங்கத் தெரியாது:)
எப்படியோ நமக்கு நல்ல எக்சர்சைஸ்:)
அவனுக்கு என்று பாம்பே சகோதரிகளோட தாலாட்டுப் பாட்டு வாங்கி வைத்திருக்கிறது.
தூக்கம் வரும்போது 'தானே 'அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு அரும்பு முடிந்ததார்ரூஊஊஊ'
என்று மழலையில் பாடிக்கொள்ளுவான்.
நாம் மிச்சப் பாட்டைப் போட்டால் தூக்கம்தான்.
மீண்டும் இந்தக் குட்டிச் சூறாவளி எழுந்திருப்பதற்குள்
நாமும் ஒரு தூக்கம் போடவேண்டும்:)
பெண் தன் மூத்த பையனை எதற்காவது கடிந்து கொண்டால் இதுவும் ''ம்ம்'........அண்ணா!!!
என்று மிரட்டுகிறது.:)
மற்றபடி அதே ரொடீன். தினம் தரை கார்ப்பெட் சுத்தம்,
மாடியில் துணிதுவைக்கும் மெஷின். ரெண்டு குடித்தனம் மாதிரி வேலை நடக்கிறது.
நேரம் தான் போதவில்லை.
நடுவே இணையத்துக்கு வரலாம் என்றால், பெரிய பேரன் தன் டி.எஸ் (D.S)ஐ எடுத்துக்கொண்டு வந்து எதையொ நெட்டில் தரவிறக்கம் செய்து கொள்வான்.
நடுநடுவே தனக்குத்தானே ஒரே சிரிப்பு.
என்னடா னு கேட்டு முடியாது. 'ஜோக் பாட்டி'ன்னு பதில் வரும்.
அதாவது ஒரு 500மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அவன் தோழர்களோடு
சாட்டிங் என்று நினைக்கிறேன்.
சரி ''டிரேக் அண்ட் ஜாஷ்' பார்க்கிறதுக்கு இது பரவாயில்லைனு விட்டு விடுவேன்.
ஒரு நாள் சாயந்திரம் எல்லாக் குழந்தைகளும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது திடீரென இரண்டு ஆம்புலன்ஸ் வரும் சத்தம் ,சைரன் கேட்டது.
நல்லவேளையாக ஒரே ஒரு ஜன்னல் திறந்துவைத்ததால் இந்த சத்தமாவது உள்ளே வந்தது.
இல்லாவிட்டால் ஒன்றும் காதில் விழாது.
அவசரமாக வெளியில் படபடப்போடு வந்தோம். இரண்டு வீடு தள்ளி, பாக்யார்டில் ஒரே கூட்டம். அங்கே ட்ராம்போலின் இருப்பதால் குழந்தைகள் நிறைய அங்கே போய்  விளையாடும்.
யாருக்கு அடி பட்டதோ தெரியவில்லையே என்று ,விஷ்ணுவை முதலில் தேடினேன். அவனும் அங்கெ நிற்பதைப் பார்த்து என்ன விஷயம் என்று சைகையில் கேட்டால், ஓடி வந்துவிட்டான்.
பில்லி  காட் ஹர்ட் பாட்டி.
ஹிஸ் லெக் இஸ் ப்ரோகன்''
என்ன விஷயம் என்று விசாரித்தால் ஏகப்பட்ட குழந்தைகள் அந்த ட்ராம்போலின் மேல ஏறிக் குதித்ததில் இந்த ப்ரையன் வழுக்கி,
கால்மடங்கி விழுந்திருக்கிறான். பாவம் தொடையிலிருக்கும் எலும்பு முறிந்துவிட்டது.
இத்தனைக்கும் அவன் பெற்றோர்கள் வீட்டில் தான் இருந்தார்கள்.
இருவரும் வேலைக்குப் போகிறவர்கள்.
அன்று அந்தப் பையனோட நல்ல நேரம்,அவர்களும் 911க்கு போன் செய்ய ,பாராமெடிக்ஸும் உடனே வர அவனைப் பக்கத்தில இருக்கும் ''ரஷ் காப்லி'' மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர அறுவை சிகிச்சை செய்தார்கள்.
அவன் கால் சரியாகி நடக்க நான்கு மாசம் ஆகுமாம்.
நானும் அதுக்கு ரொம்பப் பிடித்த இட்டிலியும் சாம்பாரும் செய்து கொண்டு ,அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன்.
அதுமாட்டுக்கு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு 'வீ'' கேம் விளையாடிக்கொண்டிருந்தது.
அந்தப் பையனோட அம்மா அப்பா முகம் தான் பார்க்க சகிக்கவில்லை.
இங்கே இருக்கும் அவனொத்த வயசுப் பிள்ளைகள் எல்லோரும்
ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என்று போய் அவனோடு உட்கார்ந்து விளையாடுகிறார்கள். ஒருமணி நேரம் கணக்கு.
பள்ளியிலும் அவனுக்காக சிறப்பு டியூட்டர் ஏற்பாடு செய்துவிட்டார்கள். நல்ல குழந்தை.
சீக்கிரம் எழுந்து நிற்க வேண்டும்.
பில்லி  விழுந்த நாளிலிருந்து ஒரு அம்மா அப்பாகூட அந்த ட்ராம்போலின் பக்கம் தன் குழந்தைகளை அனுப்பவில்லை.
ஒருகால் கொஞ்சம் பயம் தெளிந்த பிறகு அது நடக்குமோ என்னவோ.:(
யாராவது பெரியவர்கள் கூட இருந்து கவனித்துக் கொண்டால் ஒழிய
இந்த மாதிரி விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.


28 comments:

வல்லிசிம்ஹன் said...

பயணத்துக்குள் மேற்கொண்ட பயணத்தில், சாப்பிட்ட ஏதோ ஒன்று உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை;0)
அநேகமாக ஆலப்பினோ வாக இருக்கலாம்.

நிதானத்துக்கு வந்து கொண்டு இருக்கிறேன். இது ஒரு டிஸ்கி:)

வடுவூர் குமார் said...

”மைல்” கணக்குக்கு வந்திட்டிங்களா?
படங்கள் நன்றாக இருக்கு.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ரொம்ப ரசித்தேன். //தூக்கம் வரும்போது 'தானே '// "குட்டிச் சூறாவளி" குல்ஃபி கிருஷ்ணனுக்கு என் சார்பா முத்தங்கள்.

//சைக்கிளில் 'கடலை' போடும் டீனேஜ் பசங்க. அவர்களைத்தாண்டும்போது மட்டும் கிளுகிளுக்கும் பெண்கள்.;)// இதுவும். இப்ப அம்மா-நோக்கோடு பார்த்துட்டிருக்கேன், என் குழந்தைகளுக்கு பதின்ம வயது அடைய இன்னும் வருடங்கள் பல இருந்தாலும்! ஆனால், உங்க "பாட்டி பார்வை" அருமை!

ட்ராம்போலின் சுத்தி வலை/'நெட்' போடலியா? இல்லை அதுவும் மீறியா? இங்க ஒரு (இந்தியத்) தோழி வீட்டுல நெட் இல்லாம போட்டிருந்தாங்க, சுத்தி கற்கள் நிறைய. சரின்னு நம்ம பங்குக்கு, "லையபிலிடி"/"லாஸூட்"னு பயமுறுத்தினேன் (குழந்தைகளுக்கு அடிபடக் கூடாதுங்கற தன்னலம் தான்; ஒரு குழந்தைக்கு அடிபட்டாலும் பார்க்கச் சகிக்கறதில்லை).

உடம்பைப் பார்த்துக்கோங்க. போன "பயணத்துக்குள்-பயணம்" குளிர்ச்சியா இருந்ததா?

இலவசக்கொத்தனார் said...

ஹாலப்பீனோவில்தான் என்னமோ வைரஸ் இருந்துதாம். தக்காளியா ஹாலப்பீனோவான்னு தெரியாம அதெல்லாம் வாங்காமலேயே கொஞ்ச நாள் ஓட்டினோம். உடம்பைப் பார்த்துக்குங்க.

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. ரொம்ப நல்ல பதிவு. குட்டிப் பேரனின் குறும்புகள், அங்கு பொழுது போதாமல் (கவனிக்க போகாமல் அல்ல) கழியும் பொழுது என..
ப்ரையன் சீக்கிரம் தேறி வர எல்லோரும் வேண்டிக் கொள்வோம்.

//ரொம்பப் பிடித்த இட்டிலியும் சாம்பாரும் செய்து கொண்டு ,அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன்.//

பிடித்திருந்தது.

//ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என்று போய் அவனோடு உட்கார்ந்து விளையாடுகிறார்கள். //

ரொம்பப் பிடித்திருந்தது.

ராமலக்ஷ்மி said...

//நிதானத்துக்கு வந்து கொண்டு இருக்கிறேன்.//

நிதானத்துக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமார்.மைலுக்கும்,அவுன்ஸுக்கும் வரவேண்டி யாச்சு:)
படங்கள் இன்மேல்தான் சரியாகப் போட வேண்டும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

குல்ஃபி கிருஷ்ணன் சிரிச்செ மயக்கப் பார்க்கீறது. வாலு.
கெ.பி.
குழந்தைகளுக்கு ட்ராம்போலினில் நெட் இருக்கிறது. இந்தப் பையன் ஏதோ பந்தை உதைக்கப் போய்ச் சறுக்கி அந்த கம்பிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு விட்டதாம்.
இப்போ பரவாயில்லை.

நாங்க எல்லாருமே பேபிசிட் செய்ய ஆஃப்ர் செய்திருக்கோம்.

பதின்ம வயது 'ஐகார்லி'க்கள் இங்க நிறைய:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்ம கொத்ஸ்.
நாங்கள் வந்தபோது ,ஆலப்பினோவும் தக்காளியும் இல்லை. பிறகு சரியாகிவிட்டது என்றார்கள். இத்தனைக்கும் பீட்சாவில் ஆலப்பினோவை எடுத்துவிட்டுத்தான் சாப்பிட்டேன்.

வீட்டு சாப்பாடு இரண்டு நாளைக்குத்தான் வந்தது.
இல்லாவிட்டால் அடுத்த தடவை பாண்ட்ரி கார் கொண்டு போகலாம்னு யோசிக்கிறேன்:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
இப்போது பத்திய சாப்பாடு.
லங்கணம் பரம ஔஷதம் இல்லையா.
ரெண்டு நாளில் சரியாகி விடும்.

வந்த இடத்தில் பெண்ணுக்குக் கவலை கொடுத்து விட்டேன்.
நொ வொரீஸ். இனியெல்லாம் சுகமே.
குட்டிக் கிருஷ்ணன் முகம் பார்த்தால் கோடி துன்பம் போய்விடும்:0)
ப்ரையன் இப்போது போன் செய்ய ஆரம்பித்திருக்கிறான்.
இளவயது. எலும்புகள் சீக்கிரம் குணமாகிவிடும்.
பெற்றொருக்கு அவனை டாய்லெட் அழைத்துப்போவதிலிருந்து எல்லா வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.
எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை உணர்வைக் கொடுத்து இருக்கிறது.

நானானி said...

எங்கே போனாலும் நாம் நாமாகவே
இருக்கிறோம், வல்லி!
காலோடிந்த சிறுவன் ப்ரையனுக்கு
அவனுக்குப் பிடித்த இட்லி சாம்பார்
கொண்டுபோய் கொடுத்த நேயம்...மனதுக்கு இதம்!!

அபி அப்பா said...

வல்லிம்மா! அதே கதை தான் இங்கயும் ஓடுது!!! தானே பாடிகிட்டு தூங்குது! அதிலும் ஆண்டாள் பாசுரம்னா அலாதி விருப்பம். அதிலும் இன்னிக்கு அவங்க அம்மா சொல்லி குடுத்த எல்லாம் சொல்லுது போனில். ஆனா அபிஅப்பான்னு சொல்லி கொடுத்த போது "நானாம் நானாம் நட்டுப்பா"ங்குது

வீட்டம்மா சொல்லி கொடுத்த பாட்டு என்ன தெரியுமா?

"சூடிக்கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய்- நாடி நீ
வேங்கடவற்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு!!! :-(((((((((((((((((((((((((

அபி அப்பா said...

வல்லிம்மா! நீங்க போட்ட மெயிலுக்கு பதில் மெயில் மட்டும் அனுப்ப நெரமில்லையா என கேட்கபிடாது! அத்தன வேலை போங்க!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.

இங்க வந்து ஒரு நாள் ஸ்லீப் ஓவர் செய்தது அந்தப் பிள்ளை. அப்ப,காலை வேளைக்கு இட்லியும் சாம்பாரும் ரசித்து சாப்பிட்டது. அதான் அவனோட அம்மாவிடம் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு போனோம்.
இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் நிறையவே உதவி செய்து கொள்கிறார்கள். மெச்ச வேண்டிய விஷயம்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா அதெல்லாம் கேட்க மாட்டேன். பசங்களோட சண்டை போடறதாவே இல்லை நான்:)
நட்டு சொல்றதில என்ன ஆச்சரியம் இருக்கு??
அவனுக்கு நீங்க நட்டு அப்பா தான். வேணும்னா நீங்க இன்னோரு ப்ளாக் ஆரம்பிங்க அவன் பேரில.
அதான் நியாயம்.
அவன் இன்னும் கொஞ்ச நாளில வாரணமாயிரமே சொன்னாலும் சொன்னாலும் சொல்லுவான். யாரோட பிள்ளை!!!:))

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ......

ஒவ்வொரு வரியும் ரசிச்சேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

குட்டிக்கண்ணனுக்கு அன்பு முத்தமும், ப்ரையனுக்கு 'கெட்வெல் ஸூன்' வாழ்த்துமா நான் அனுப்புனேன்னு சொல்லுங்க.

சாம்பார் பிடிச்சதாமா? பேஷ் பேஷ்.

இங்கே 'பூரி' பார்த்து பயந்து ஓடுன பொண் இருந்துச்சு:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
அதுக்கு நம்ம சாப்பாடு ரசித்துச் சாப்பிடும்.
இங்க காரமே கிடையாது.
குழந்தைகள் உணவுதான் எங்களுக்கும்.
அதனால் இந்தப் பிள்ளையும் ஆசையா வாங்கிக் கொண்டது:)

கயல்விழி said...

ரொம்ப நல்லாஅ எழுதி இருக்கீங்க வல்லி மேடம், முக்கியமா உங்களுடைய பேரக்குழந்தையின் குறும்புகளை ரொம்ப ரசித்தேன்.

ட்ராம்பொலின் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. ஏதாவது விழாக்களில் பார்க்கும் போதே இது சரியானது அல்ல என்று நினைத்திருக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

வாங்க வல்லி, நயாகரா பார்த்துட்டு அதைப் பத்தி எழுதி இருப்பீங்கனு நினைச்சேன். வந்தால், உங்கள் உடம்பு, அந்தப் பையன் காலை உடைத்துக் கொண்டது என்று கவலை தரும் சமாசாரங்கள், பையனுக்கு எங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கவும். உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொண்டு வாருங்கள், மெதுவா வாங்க, உடம்பு முக்கியம். :(((((((((((

ambi said...

//இப்படிப் பிறாண்டறானேன்னு யோசிக்கிறாள். பெண்.
வச்ச பேரோட மகிமை.
//

ஹிஹி, எனக்கு புரிந்தது. :))

சாம்பார் இட்லி எல்லாருக்குமே பேவரிட் இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் கயல்.
பிள்ளைங்க ட்ராம்போலின் விளையாடும்போது குஷியாகத்தான் இருக்கிறது.
அதற்குப் பயிற்சியும் நிதானமும் தேவை. இன்றுதான் யாரோ சொன்னார்கள்.ப்ரையன் விளையாடும்போது, ஒரு பந்தையும் அதில் இன்னோரு பையன் போட்டு இருக்கிறான். அதனால் பாலன்ஸ் தவறி இருக்கிறது.
சரியாகிவிடும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா கீதா. வந்ததை எழுதியாச்சு. இனிமே பயணக்கதைதான்.

இந்தப் பதிவை முதலிலேயே ட்ராஃப்ட் செய்துட்டேன்.

அப்புறம் டிஸ்கி சேர்த்தேன்;)
பசிக்கிற வேளைக்கு ஏதாவது சப்வே'யாவது சாப்பிட வேண்டி இருக்கு. வெறும் வேகாத மாவைச் சாப்பிடுவது போல அது நம் வயிற்றுக்குச் சரிப்படுவது இல்லை:)
கடவுள் கிருபையில் நலமே.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அம்பி வரணும்.
அங்க குட்டிப் பையன் இப்படித்தான் இருக்கப் போறான். இப்பவே சொல்லிட்டேன்!.
வாட்ச் அவுட்:))
அதுவும் குசும்புக்கார அப்பாவோட பிள்ளை. கேக்கவா வேணும்? பாவம் தங்கமணி.

திவா said...

//பெண் தன் மூத்த பையனை எதற்காவது கடிந்து கொண்டால் இதுவும் ''ம்ம்'........அண்ணா!!!
என்று மிரட்டுகிறது.:)//

செட்டு சேராங்களா?! சுவாரசியமான காலகட்டம்!
:-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா.
ஆமாம் இந்தச் சின்னது சரியான அம்மாக் கோண்டு. கோந்துன்னு கூட சொல்லலாm.அப்படி அவள் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு மற்றவங்களை மிரட்டும்:)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

இதென்ன அநியாயமா இருக்கு? குழந்தையை படுத்திட்டு, அது மிரட்டுகிறது என்று சொல்வதா? ஏதோ நீங்க பதிவு எழுதறீங்க, அவன் இன்னும் படிக்கலைன்னு தைரியம்! :-)

பிறாண்டறான் என்றால், பேர் என்ன நகராஜ் ஆ? :-)

வல்லிசிம்ஹன் said...

பிறாண்டறவர்கள் நாகராஜ் ஆக முடியுமா கெ.பி.:)
இது ஆதிசேஷனோட தம்பி அவதார்ம். கிருஷ்ணானு பேரு.
என் கண்ணாடி ,பொட்டு,கழுத்துச் செயின் எல்லாம் அவனுக்கு ரொம்ப ஃபாசினேட்டிங்கா இருக்கும்.

அது மிரட்டி நீங்க கேக்கணும் அப்புறமா சொல்வீங்க:)