Blog Archive

Saturday, April 05, 2008

அது என்ன சாமர்த்தியமோ!!


நமக்குத்தான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய், டாக்டரம்மா சொல்ற புத்திமதி எல்லாம் கேட்டுகிட்டு
ரத்தம் நிறைய:0
கொடுத்துப் பரிசோதனை செய்யற வழக்கம் உண்டு இல்லையா?

இந்தத் தடவையும் காலையில் எழுந்து, அன்னிக்குப் பார்த்து 5 மணிக்கே கண் முழிச்சு விட்டுதா.
ஏழு மணி வரை காப்பி சாப்பிடாமல் (fasting sugar)இருக்கிறதை யோசிச்சு மண்டை காய்ஞ்சு, (வேலை செய்தால் பசிக்காது)
இறைந்து
கிடந்த புத்தகங்களை எடுத்து வைத்து பார்த்தாலும் 7 மணி ஆகவில்லை. சரி எதற்கும் முன்ஜாக்கிரதையா நாம் க்ளினிக் போய்க் கதவுகள் திறந்து வைத்து
அங்க இருக்கிற கதவுகள் எல்லலம் எண்ணலாம்னு போனால் எனக்கு முன்னாலேயெ இரண்டு அம்மாக்கள் இருந்தார்கள்.
அவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு, இடம் பார்த்து உட்கார்ந்து, ரத்தம் எடுப்பவருக்காகக் காத்து இருக்கும்போதுதான் இந்த அம்மா வந்தாங்க.
தூக்கி வாரின தலை(சரியா வார நேரம் இல்லையாம்)
கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரியும்படி, மாட்டல், சிவப்புத்தோடு,,கிழங்கு கிழங்கா வளையல்கள், கொத்துச் சங்கிலி என்று வந்து அமர்ந்தவர், என்னிடம் என்ன சர்க்கரையா என்று கேட்டு விட்டு, தன் குடும்பம் மாமியார்..90 வயசாம், மருமகள்,பேரன்,பேத்தி ஏன் அவர்களைத் தான் தனிக்குடித்தனம் வைத்தார் என்பதையெல்லாம் ஆதியோடுஅந்தமாகச் சொன்னார்.

பொறுப்புகள் முடிந்த பின்னால் பேரன் பேத்திகளொடு ஓடத் தன் வாழ்வில் இடமில்லை எண்றும், நம்மளை நாமே கவனிச்சுக்கலை என்றால் யார் சும்மா இருனு சொல்லப் போறா. நம்ம குழந்தைகள் பின்னால் ஓடியாச்சு. இன்னும் அதுகள் பெத்தது பின்னால் ஓடணுமா???
அதான் நான் அவர்களைத் தனியே போக வைத்து விட்டேன் என்றெல்லாம் அவர் பேச நான் ஒரு புது டைப்பான மாமியாக இருக்கிறாரே என்று திறந்த வாய் மூடாமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன்.

இத்தனை காலைல தி.நகர்லேருந்து தனியா வந்தீங்களானு கேட்டேன்
''அதெதுக்கு. பையந்தான் கார் வச்சிருக்கான்.
நேத்திக்கே சொல்லிட்டேன். அதான் வந்து அழைத்து வந்து விட்டான்.
வெளில கார்ல உட்கார்ந்து இருக்கான்.''
அய்யோ பாவமே (அந்தப் பையந்தான்)
என்று நினைத்துக் கொண்டேன்.
நல்ல பிள்ளைதான்!!. சும்மா இருக்காமல்
உங்க வீட்டுக்காரரோட வரலியான்னும் கேட்டேன்.

அவரை எதுக்கும்மா சிரமப் படுத்தணும்னு சொன்னாங்க.
உலகம் பலவிதம்!!

அப்போது பார்த்து அங்கு ரத்தம் சோதிக்கும் பெண் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா.
கதை சொல்லி முடிக்காத கையோடு ,நாங்கள் சுதாரித்துக் கொள்ளும் முன்னால் சோதனை அறைக்குள் இந்த சிவப்புத் தோடம்மா ஓடி விட்டார்.
தான் தான் முதலில் சோதிக்கப் பட வேண்டும் என்பதில் அத்தனை அவசரம்.
நானும் எழுந்து போய், நாங்க அப்பவே வந்துட்டோமே,
நீங்க இப்பதானெ வந்தீங்கனு கேட்டேன்.

அதெல்லாம் கணக்கில்லம்மா. எனக்கு வீட்டுக்குப் போய் தலைக்கு மேல வேல இருக்கு. உங்களை மாதிரி எல்லாம் இல்லை''
என்று போட்டாரே ஒரு போடு. நானும் மற்ற அம்மையார்களும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிந்து கொண்டோம். என்ன செய்வது நாங்கள் எல்லாம் நாகரீக நாரீமணிகளாச்சே.
அவரைத் தட்டிக் கேட்க துணிச்சல் போதவில்லை.
ஒரு சாதாரண ,
எங்களைப் போலவே இருக்கும் மற்றொரு பெண்மணியின் சாமர்த்தியத்துக்கு முன்னால் ஏமாந்துவிட்டோம்.:)
நான் என் முறைக்குக் காத்திருந்து உள்ளே
போய் அங்கிருந்த பெண்ணிடம் என்ன இந்த அம்மா இப்படி ஒரு தாட்சண்யம் இல்லாமல் செய்தாரே என்று கேட்டால்,
அந்தப் பெண் சொல்கிறது... 'அவங்களுக்கு இந்த ஊசியினால் வேற வியாதி வந்துடுமோன்னு பயம்மா.''
''ரொம்ப முன் ஜாக்கிரதை.
நாங்க ஒரு ஒரு பேஷண்டுக்கும் ஊசி மாத்திவிடுவொம், டிஸ்போசபிள் ஊசிதான் போடுவோம் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்' என்றாளே பார்க்கலாம்!!!

22 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

இதுதான் ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையா?

Anonymous said...

அந்த அம்மா அவங்க குழந்தைகள தனிக்குடித்தனம் வச்சதும் அப்பாடின்னு சந்தோஷமா போயிருப்பாங்கன்னு நினைக்கறேன். தப்பிச்சாங்க. ஆனா நீங்க ஏமாந்திடீங்களே

துளசி கோபால் said...

கொத்துச் சங்கிலி கிட்டே இப்படிக் குத்து வாங்கிக்கிட்டீங்களா நீங்க எல்லாம்? :-))))

பரவாயில்லை. பதிவுக்குத் தேத்த எங்கேன்னாலும் முடியும் என்ற என் கட்சியில் இணைந்ததுக்கு நன்றி:-))))))

ரத்தம் பற்றிய பதிவென்பதால் நிறைய 'ஈ' வந்து உக்கார்ந்துருக்கு:-)))

paattiennasolkiral said...

// பொறுப்புகள் முடிந்த பின்னால் பேரன் பேத்திகளொடு ஓடத் தன் வாழ்வில் இடமில்லை எண்றும், நம்மளை நாமே கவனிச்சுக்கலை என்றால் யார் சும்மா இருனு சொல்லப் போறா. நம்ம குழந்தைகள் பின்னால் ஓடியாச்சு. இன்னும் அதுகள் பெத்தது பின்னால் ஓடணுமா???//

மேலோட்டமாகப் பார்த்தா சரின்னு சொல்லலாம். ஆனாலும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
என்று சொல்வது போலே எங்கோ 30000 கி.மி, தூரத்திலே உள்ள பேரப்புள்ள எப்படி இருக்கிறானோ
அப்படின்னு தூக்கம் வராத தாத்தா பாட்டியும் இருக்காங்களே ! இப்படி உடம்பு ஒரு இடத்திலும் மனசு
இன்னொரு இடத்திலும் இருக்கிற முதியோர் எத்தனை ? எத்தனை !

மேனகா சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

யாரை சார் ஒண்ட வந்த [பிடாரி?
யாரு ஊர்ப்பிடாரி:)))
ஹாஹா. அப்படித்தான் ஆச்சு கதை.

வல்லிசிம்ஹன் said...

சின்ன அம்மிணி, எப்படி இவ்வளோ கரெக்கிட்டா சொல்லிட்டீங்க.
என் பெண்ணிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் அவ்ளும் அதையே சொன்னாள். ''போ அம்மா, அந்த மருமகள் து.கா.து.கானு ஓடியிருப்பா. நீ வேற, சரியான அசத்து ''அப்டீனு.:))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா துளசி!! ஈ யைத் தூர ஓட்டிட்டேன்பா.
நல்ல வேளை சொன்னீங்க.
உங்க அட்வைஸ் தான் இப்படி ஓடியிருக்கு. நீங்க தானே கண்ணைக் காதைத் திறந்துவைனு சொன்னீங்க:)0
எப்பவும் உங்க கட்சிதான் தாயே!!!!!

வல்லிசிம்ஹன் said...

சரியாச் சொன்னீங்க மேனகா.
பேரனோ பேத்தியோ கொஞ்சம் சுருதி குறைவாப் பேசினாலும் மனசு கேக்காது. திருப்பைத் திருப்பி போன் செய்வதைப் பார்த்துடு எங்க வீட்டுல, நீ போன் சேய்யற செலவில ஒரு நடை அவங்க ஊருக்கே போயிடலாம் என்று சிரிப்பார்.
இப்படியும் இருக்கும்பா. தள்ளி இருக்கிறதனாலேயே அன்பு கூடத் தெரியுதோனு தோன்றுகிறது.

கோபிநாத் said...

:))))))

அவுங்க கணவனின் நிலைமையை நினைச்சேன் சிரிப்பு தானா வருது...அய்யோ பாவம் அவரு ;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத் ஒல்லியா உசரமா தலை முடியெல்லாம் கொட்டி,பல்லு விழுந்து பரிதாபமா ஒருத்தர் அம்மாவைக் கூப்பிட வந்தார். அவரையும் அம்மா ஏன் வந்தீங்கனு பிடி பிடிச்சிட்டடங்க.

ambi said...

ஹஹா, ரொம்ப சுவையா எழுதி இருக்கீங்க. அந்த சிவப்பு தோடு அம்மாவும் பிளாக் படிக்கற/எழுதறவங்களா இருந்தா எப்படி இருக்கும்..? :p

போன பதிவு இப்ப தான் பார்த்தேன், உங்க வீட்டு சிங்கம் சிங்கிளா இருக்கற படம் சூப்பர். :))

வல்லிசிம்ஹன் said...

நல்லாத்தான் இருக்கும். எனக்கென்னவொ அவங்க பையன் எழுதுவாரோனு தோணித்து அம்பி:)

சிங்கிள் சிங்கம் ஜோர் தான்:)

குமரன் (Kumaran) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லியம்மா.

நானானி said...

வல்லி!
நேற்று கடலூர் VIT சலேஜ் போயிருந்தேன். தமிழ்மணத்தில் கமழ்ந்த உங்கள் பிறந்தநாள் பற்றிய தகவல் பார்க்கவில்லை.

உங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!ஆ...ஷஷ்டியப்தபூர்த்தி ஆசிகள்!!!!
ஆம்! நான் ஆசி கூறும் இடத்திலிருக்கிறேன்!!(இரண்டரை வயசு அதிகமாக்கும்!!)
சிங்கமும் நீங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!!

அது சரி சிங்கமும் வாகனாரும் எங்கே
அழைத்துப்போனார்கள்?

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு பதிவும் சரி, சிங்கத்தின் படமும் சரி, எழுதறதை நிறுத்திடாதீங்க வல்லி. இம்மாதிரியான சுவையான அ.வ.சி. கிடைக்காமல் போயிடும். :))))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,
நன்றிம்மா. நீங்க எல்லோரும் நிறய எழுதி,
நானும் அவைகளைப் படிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா. அப்படியா, இரண்டு வயசு கூடுதலா. ஹ்ம்ம் நான் நம்ப மாட்டேன்.
இத்தனை சிக் லேடி :))

வாகனாரும் பிள்ளைகளும் சிங்கமும் என்னை அன்னலக்ஷ்மி சாப்பாட்டுக்க் கூடத்துக்கு அழைத்துப் போனார்கள். சுற்றமும் அங்கே வந்திருந்தார்கள். நலமே எல்லாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்புகீதா, தொலைபேசி அழ்ஐப்புக்கும், வவழ்த்துகளுக்கும் ந்அன்றிம்மா.
எழுதத் தான் வேண்டும். புது கணினி வருது. அதிலேயே ஆரம்பிக்கலாம்:)

இலவசக்கொத்தனார் said...

அதெப்படி விட்டீங்க? நானா இருந்தா சாப்பிடாம இருக்கும் எரிச்சலையும் சேர்த்து வாங்கி இருக்க மாட்டேன்...

//பரவாயில்லை. பதிவுக்குத் தேத்த எங்கேன்னாலும் முடியும் என்ற என் கட்சியில் இணைந்ததுக்கு நன்றி:-))))))//

அதானே!! :)))

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
பசிக் கோபம் தலைக்கு மேல ஏறித்தான் இருந்தது:)

இந்த மாதிரி ப்ரகிருதிகளைப் பார்க்கும்போது, சிரிப்பு வருது. அந்த ஐந்து நிமிட வேகத்தில் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியாது.போனப் போகிறதுனு விட்டுட வேண்டியதுதான்.
நம்ம கட்சி எப்பவும் ஒரே கட்சி. அது கொத்ஸ் பரோட்டா,உப்புமாக் கட்சி.
:)நன்றிம்மா. நாந்தானே உங்க நம்ம கட்சியோட செயலாளர்?????????

நானானி said...

அட! இதுக்காக நான் பிறப்புச்சான்றிதழா
தர முடியும்? உண்மையைச் சொன்னா
நம்போணும் ஆராய்ச்சி பண்ணக்கூடாது.

அன்றையநாள் நல்லவிதம் கழிந்தது பற்றி மகிழ்ச்சி!
நான் ஒரு பதிவே போட்டிருக்கிறேனே பாக்கலையா?

வல்லிசிம்ஹன் said...

நானானி!!
அட ஒரு உண்மையைச் சொன்னா ஒத்துக்க மாட்டாங்களே!!!:)
இப்பவே பார்க்கறேன். ரொம்ப நன்றிப்பா.