Blog Archive

Tuesday, February 26, 2008

மஞ்சி விரட்டு

அண்மையில் குடும்பத்தில்
உற்சாகத்தைக் கூட்டும் நிகழ்வுகள்
நடக்கும்போதே
அதைக் குறைக்கும் நோக்கில் சில உடல் பாதிப்புகள்.

இந்த சமயங்களில் அருமருந்தாக அமைவது புத்தகக் கடைகளுக்குப் போவதுதான்.

அப்படி ஒரு நாளில் வாங்கியவை சில புத்தகங்கள்.

நம் கவிதாயினி மதுமிதாவின் சுபாஷிதமும் அவைகளில் ஒன்று.
கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்,.
கவிதைகள் ஒருதடவை படித்தால் ஒரு அர்த்தம் மட்டும் பிடிபடும்.
மீண்டும் ஒரு தடவை அதையே படிக்கும்போது வேறு விதமாகக் காட்சி கொடுக்கும்.
நம்பெருமாளின் அலங்காரக் காட்சிகள் போல.
அடுத்த புத்தகம் கொத்தமங்கலம் ஸ்ரீசுப்பு ஐய்யாவின்
ராவ் பகதூர் சிங்காரம்.

அதில் வரும் செங்கமலம்,கதை நாயகி,அவளின் அழகை
வர்ணிக்கும் போது,
கோபுலு அய்யாவின் கைவண்ணத்தில்
அந்தச் செங்கமலம் கண்வண்ணம் கைவண்ணம் காட்டி
வடிவுடன் வருகிறாள்.
இந்தக் காவியம் நம்நாட்டுப் பொக்கிஷம்.
அந்தக் காலத் தமிழ்நாட்டின் கிராமங்களின் உயிரை மீட்டுக் கொடுத்தவர்களில் சுப்பு சாரும் ஒருவர்.
எனக்கு இந்த அத்தியாயங்களைப் படிக்கும் போது நினைவில் வந்தவர்
தாயார் பத்மாவதிதான்(திருமதி பாலாஜி,திருமலை)
அவர்தான்
நினைவுக்கு வந்தார்.

இப்போது கூட தனியார் டிவியில் காலையில் ஒரு நாள்
திருச்சானூர் தாயார் உத்சவ மூர்திக்கு அலங்காரம் செய்து
ஊஞ்சலில் ஆடும் காட்சி.
அதென்ன காந்தி இந்த அம்மாவுக்கு. வெறும் மஞ்சளாடை அணிந்து திருமஞ்சனத்துக்கு ஆயத்தமான நேரத்திலேயே அருள் பொழியும் அந்த முகத்தை வடித்தவர்தான் யார்?

அதற்குப் பிறகு செய்யப்படும் அலங்காரத்தில் ஏகப்பட்ட விதங்களில் மாலைகளும்,மணிகளும் ஜொலித்தாலும்,
நடுவே உள்ள அன்னையல்லவா கண்ணைக் கவருகிறாள்.

அவள் கண்மலர்ந்து நோக்கும் பார்வை எப்படி நம்மை அரவணைக்கிறது.!!


டிராக் மாறி வேறேங்கோ போகிறேன்,.
நான் எழுத வந்தது, சுப்பு அய்யா மஞ்சி விரட்டு பற்றி எழுதின வார்த்தைகளும் அருமையான் சொற்கட்டும்
அப்படியே கண்முன் நிறுத்துகின்றன அந்தக் காட்சியை!!

இதோ. அந்தப் புத்தகத்திலிருந்த எடுக்கப் பட்ட சில வரிகள்,பாராக்கள்.
படித்து இன்புறலாம்.

ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிடுபவனை நம் நாட்டில் சோற்றாள் என்பார்கள்.
அதுபோலகத்தாழையிலும் சோத்துக்கத்தாழை என்று ஒன்று இருக்கிறது.
ஆனால் இது மருந்துக்காவது உபயோகப்படும்.
இந்தச் சோத்துக்கத்தாழைக்குப் போட்டி ரயில் கத்தாழை.
ரயில் வருவதற்கு முன்னால் இது நாட்டில் எங்கெங்கொ சிதறிக் கிடந்தது.
பாவம்.. பட்டிக்காட்டுப் பிறவி.ஆதலால் ரயிலைப் பார்க்கும் ஆசையில்
தண்டவாளத்தின் இரண்டு பக்கமும் குடியேறிவிட்டது,அதனாலேயே ரயில் கத்தாழை என்ற நாமகரணத்தை அடைந்தது!
முக்கியமாக இந்தக் கத்தாழையில் இருந்து எடுக்கப்படும் நாருக்குப் பேர்தான் மஞ்சி என்பது!!

கத்தாழையை ஊறப் போட்டு கல்லில் நாலு தட்டினால்,கையில் மஞ்சிதான் நிற்கும்.
இந்த மஞ்சியிலே சப்பாத்திக் கள்ளிப் பழத்தின் சாற்றைப் பூசினால் சிவப்பு வர்ணம் தோய்ந்து விடும்
மஞ்சள் பொடியும்,சுண்ணாம்பும், மருதோன்றியும்,அவுரியும்,ஆவாரையும் நிறைந்த தமிழ்நாட்டில் வர்ணங்களுக்கா பஞ்சம்? இந்த வர்ணங்களை மஞ்சியில் பூசி குஞ்சம் கட்டி,
மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவதுதான் மஞ்சி விரட்டு//
//
இந்த நாட்டில் விவசாயம்தான் அதிகம்.மாடில்லாதவன் விவசாயம்,மனைவி இல்லாதவன் குடும்பம் நடத்துவது போலத்தான்
இருக்கும்
ஆகவே மாட்டை நன்றாக பராமரிப்பதற்கும் இந்த வீர விளையாடூ உபயோகப் படுகிறது...//


ஹ்ம்ம்ம் இது எழுத்து.
நீங்களும் படிக்கலாம நம் சிங்காரத்தை.......

உயிரோட்டம் ஓரொரு வரியிலும்.
மேலோட்டமாகப் படிக்கவே முடியாது.
ஏனென்றால் ஏதாவது அற்புத சிந்தனை பளிச்சென்று எந்த மூலையில்
தெறித்து வரும் என்று சொல்ல முடியாது.
அற்புதமான கலைஞர்களால் படைக்கப் பட்ட அருமையான
இலக்கியங்கள், காவியங்கள்.
நன்றியுடன்...










6 comments:

துளசி கோபால் said...

ஹை........


புத்தகம் வாங்கியாச்சா?

சுப்பு சாரை மிஞ்சமுடியுமா?

படிச்சுட்டுப் பத்திரமா எடுத்து வையுங்க. நான் வந்து இரவல் வாங்கப்போறேன்:-))))

வல்லிசிம்ஹன் said...

துளசி,

ஆமாம்.அவரும் தி.ஜானகிராமனும் சொன்ன காவேரிக் கதைகள்,

மேல இருக்கிற மதுரைக் கதை,(அப்படீனு நினைக்கிறேன்)
எல்லாமே மண்வாசனை நிறைந்தவை.
கட்டாயமா எடுத்து வச்சுடறேன்.:)

Geetha Sambasivam said...

ஆமாம், வல்லி, மதுரைக்கு அருகே இருக்கும் எங்கள் பூர்வீக கிராமம் ஆன மேல்மங்கலத்துக்கும், கீழ்மங்கலத்துக்கும் உள்ள உறவு, பகை, குடும்பச் சண்டை என சகலத்தையும், குறித்துச் சொல்லப்பட்டது, எங்க ஊர் என்பதாலேயே ரொம்பவும் விரும்பிப் படித்தது, அப்போ அவ்வளவாப் புரியாட்டாலும், பின்னர் பலமுறை படிச்சிருக்கேன். அருமையான நினைவுகள்.

Karthi said...

வல்லிசிம்ஹன் அவர்களே!

கொத்தமங்கலம் சுப்பு ஐயா அவர்களின் "ராவ் பகதூர் சிங்காரம்" நாவல் எங்கேனும் வாங்க கிடைக்கிறதா? பதிப்பில் உள்ளதா? தாங்கள் எங்கு வாங்கினீர்கள்?

Karthi said...

வல்லிசிம்ஹன் அவர்களே!

திரு சுப்பு அவர்களின் "ராவ் பகதூர் சிங்காரம்" நாவல் பதிப்பில் உள்ளதா? வாங்க கிடைக்கிறதா? தாங்கள் எங்கு வாங்கினீர்கள்?

வல்லிசிம்ஹன் said...

கார்த்தி,
வருகைக்கு நன்றி.ராவ் பகதூர் சிங்காரம் இரண்டு பாகமாகக் கிடைக்கிறது. நான் பழனியப்பா பிரதர்ஸ் அலுவலகத்தில் தில்லானா மொஹனாம்பாள் புத்தகங்களையும் சிங்ஆரத்தையும் வாங்கினேன். நீங்கள் சென்னையில் இருந்தால் மிகவும் சுலபம்.
இருந்தாலும் ,இப்போது இவை இரண்டும் விகடன் பிரசுரமாகவே கிடைக்கின்றன. எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்.