About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, February 06, 2008

திண்டுக்கல் 1960..1964

தாத்தாவின் சதாபிஷேகம் 1960 மார்ச் நடந்தது.
அதற்குமுன்னரே அவரது இரண்டாவது மகன் திடீரென இறந்தது அவரை மிகவும் பாதித்து விட்டது.அதனால் தன் எண்பது வயது பூர்த்தியை மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நடத்திக் கொண்டார்.
கொஞ்ச நாளில் தாத்தாவுக்கு அடிக்கடி காய்ச்சல் வர ஆரம்பித்து அவருடைய பழைய கம்பீரம் கொஞ்சம் தொலைந்தது.
தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எங்கள் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே பிடிக்காது எங்களுக்கு,
''முத்தண்ணாவுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும் என்று
விழைந்து விழைந்து தன் அப்பாவைக் கவனித்துக் கொள்வார்.
அடிக்கடி நொந்து கொள்ளும் பாட்டியையும் சமாதானப் படுத்துவார்.
'தப்பு வார்த்தைகள் வேண்டாம்மா.
உனக்கு எவ்வளவு நல்ல மனசு, வாயால கெட்டுப் போயிடாதே; என்பார்.
தாத்தாவின் இறுதி நாளும் வந்துவிட்டது.
எங்களை எல்லாம் மட்டும் அருகில் அழைத்து விதுர நீதி சொல்வது போல ஒரு அரைமணி நேரம் ராமநாம மகிமை, பெற்றொர் சொல்படி நடத்தல் என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும்நினைவிருக்கின்றன.
பிறகு ,,தான் பெற்ற பிள்ளைகளைய்ம் இரண்டு பெண்களையும் அழைத்து ஏற்கனவே தான் எழுதி வைத்த சொத்து விவகாரங்கள் அவற்றை நிறைவேற்றவேண்டிய கடமை நாராயணனுக்கு என்று சொல்லி முடித்தார்.
பிறகு அப்பாவை மட்டும் தனியே அழைத்து,
'நாராயணா, உனக்குப் பொறுமை அதிகம். ஆனா உன்னைச் சோதிக்கிற மாதிரி குற்றம் ஏதாவது நடந்தா கோபிக்கத் தயங்காதே.!
உன் அம்மா பேசுவா. மனசில ஒண்ணும் கெட்ட நினைப்பு கிடையாது. அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு என்று அசதியில் கண்களை மூடிக்கொண்டார்.
பிறகு ஆக்சிஜன் வைக்கப் பட்டது.
அடுத்த நாள் காலையில் தாத்தா அமைதி கொண்டார்.ராமன் வந்து அழைத்துப் போயிருப்பான்.;(
தாத்தாவும் பாட்டியும் குடியிருந்த அந்த ஸ்டோர் வீடுகளில் தாத்தாவின் தெளிவைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை.
நாளைக்கு இருக்க மாட்டேன்னு ஒரு மனுஷன் எப்படி முதல் நாளே சொல்லுவார் என்ற அதிசயம்.
தாத்தா இனிமேல் வாய்ப்பாடு கேட்கமாட்டடர், அறிவுரை சொல்ல மாட்டார் என்ற எண்ணமே என்னை அழுத்தியது. இத்தனூண்டு மெலிந்த தேகத்தில் எத்தனை உரம்! என்றும் நினைத்தேன்.
பேரப்பிள்ளைகள் அனைவரையும் அப்பா வேறு வீட்டில் இருக்க வைத்ததர்.
வீட்டைச் சூழ்ந்த சோகத்தில்,அந்தப் பெண்கள் அழும் காட்சியை எல்லாம் பார்க்க விடவில்லை. இருக்கவும் விடவில்லை.
தாத்தாவுக்குக் கடைசியாக போய்ட்டுவான்னு சொல்லிட்டுப் போயிடுங்கோ எல்லோரும் என்று சொல்லிவிட்டுத் தன் மேல்துண்டில் கண்களை மறைத்துக் கொண்டுவிட்டார்.
ஏன் இத்தனை விவரம் என் மனதில் பதிந்தது என்றும் புரியவில்லை.
அதற்குப் பிறகு திருக்குறுங்குடி நிலம்,வீடு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு எங்கள் திண்டுக்கல் நகர மாற்றலையும் ஏற்று,
திண்டுக்கல் நகரம் வந்து சேர்ந்தோம்.
மேட்டுப்பட்டி என்று ஒரு இடம். அங்குதான் புனித ஜோசஃப் மகளிர் பள்ளி இருந்தது. பக்கத்திலேயே ஒரு மிகச் சிறிய வீட்டையும் வாடகைக்கு எடுத்தார்.
நானும் சின்னத்தம்பியும் அந்தப் பள்ளியில் சேர்ந்து கொண்டோம் .இந்தத் தடவை அப்பா என் கூடவே வந்து
அங்கே தலைமை ஆசிரியை ஆக இருந்த சிஸ்டர் ரெவரண்ட்.ரெடம்ப்டா மேரியிடம்,
''இது வரைத் தமிழில்தான் படித்து இருக்கிறாள்.
ஆங்கிலத்தில் பிழையிருந்தாலும் நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்'
என்றதும் எனக்கு மகா ரோஷமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
எட்டாம் வகுப்பறை வரை என்னைக் கொண்டு வந்துவிட்டுப் போன அப்பாவை இப்போதூம் நினைக்கிறேன். யாருக்குக் கிடைப்பார் இந்த மாதிரி ஒரு தந்தை!!
பெரியவன் புனித மரியன்னைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான்.
படிக்காத மேதை படம் அங்குதான்(சோலைஹால் தியேட்டர்?) பார்த்தோம்.

12 comments:

துளசி கோபால் said...

தாத்தா போனது (-:

ஆனாலும், வாழ்க்கை தொடரணும் இல்லே?

அப்பெல்லாம் மனுசங்க நீதி நெறியோடு வாழ்க்கை நடத்துனாங்க. முடிவு எப்பன்னும் தெரிஞ்சுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாழ்வு.

எங்க தாத்தாவும் இப்படித்தான் போனாராம். அம்மா சொல்லிக் கேட்டுருக்கேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வல்லிலயம்மா.. தாத்தாக்களும், பாட்டிமார்களும் பாசத்தைக் கொட்டோ கொட்டோ என்று கொட்டிவிட்டுப் போய் விடுவார்கள். ஆனாலும் நமக்குத்தான் காலம் கடந்தாலும் மனசு மறக்காது.. இந்த பாச உணர்ச்சியில் உங்களுடைய தலைமுறைதான் கடைசி என்று நினைக்கிறேன்.

நானும் திண்டுக்கல்தான்.. நீங்கள் சொல்வது திண்டுக்கல் கோர்ட்டுக்கு எதிரே இருக்கும் பள்ளிதானே.. என்னுடைய சகோதரிகளும் அங்குதான் படித்தார்கள்.

நான் தங்களது சகோதரன் படித்த அதே புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி..

சொந்த ஊர், படித்த பள்ளி என்றதும் வேலைகள் ஓடாமல் ஒரு கணம் நினைவுகள் அவ்விடத்தைவிட்டு அகல மறுக்கி
றது..

தொடருங்கள் உங்களது பயணத்தை..

ambi said...

ம்ம், என் தத்தா மறைந்த போது நடந்தது எல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. எழுத்தில் இவ்ளோ உணர்ச்சிகளை கொண்டு வர முடியும் என இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

//எனக்கு மகா ரோஷமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.//

ஹஹா, அதான் போனில் பேசும் போது இங்க்லீஷ்ல சும்மா வெளுத்து வாங்கறீங்களா? :))

வல்லிசிம்ஹன் said...

துளசி,
வாழ்க்கை தொடரத்தானே நாமே இருக்கிறோம்.
இதை எழுத ஆரம்பித்த போது
இவ்வளவு நினைவுகளையும் எழுத ,மீண்டும் அந்த நாட்களுக்குப் போன உணர்வு வருகிறது.
ஆமாம், அந்த மனிதர்களைப் போல இனி ஏது.தீர்க்கமான புத்தி.
ஆராய்ந்து பேசும் மனம்.

சாமி !! அடுத்த ஐந்து வருடத்தோட கதையை முற்றும் போட வேண்டியதுதான்.:)))அதாவது தொடரும்..முற்றும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் உண்மைத்தமிழன்.

ஒவ்வொரு இடத்திலும் பதிவு நண்பர்கள் வருகிறார்கள்.
நம் உலகம் உண்மையிலேயே நெருக்கமாகி விட்டது.

திண்டுக்கலுக்குப் போய் எல்லா இடங்களையும் பார்க்கணும்னு மிகவும் ஆசையாய் இருக்கிறது.

ஊர்ப்பாசம்
எப்படி இழுக்கிறது பார்த்தீர்களா?
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
திருமங்கலத்துக்கு சௌந்தர் வந்தார். துளசியும் கூட.பாசமலரும்:)
இப்போ திண்டுக்கல்லுக்கு நீங்களும் உங்க சகோதரியும். ஆனால் வருடங்களோடி இருக்கும்.

உண்மையிலேயே இனிய நாட்கள் அவை.பகிர்தலுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ !! அம்பி!!!இப்ப இருக்கிறது கொஞ்சம் பழக்க தோஷத்தினால வந்த இங்க்லீஷ்:))

அந்தப் பன்னிரண்டு வயது அ....கு ஒரு பெரிய பள்ளியின் ஆங்கில மீடியத்தைப் புரிந்து கொள்ள நாள் பிடித்தது:)

தாத்தாக்களும் பாட்டிகளும் உண்மையாகவே அருமைதான்.

//எழுத்தில் இவ்ளோ உணர்ச்சிகளை கொண்டு வர முடியும் என இப்பொழுது தெரிந்து //
இன்னும் 5,6 மாதம் போகட்டும். எனக்குத் தெரிந்த பையன் ஒருத்தர் இருக்கார்,அவர் பாடப் போகும் பாட்டை பதிவுகளில் நீங்களும் பார்க்கப் போகிறீர்கள்.
அன்புதான் காரணம் அம்பி.

கோபிநாத் said...

\\ஏன் இத்தனை விவரம் என் மனதில் பதிந்தது என்றும் புரியவில்லை.\\

ம்ம்ம்...இது எனக்கும் இருக்கு...நான் பார்த்த முதல் இறப்பு தாத்தா தான்...ஒருவேலை முதல் இறப்பு என்பதல் இருக்குமோ!

\\எட்டாம் வகுப்பறை வரை என்னைக் கொண்டு வந்துவிட்டுப் போன அப்பாவை இப்போதூம் நினைக்கிறேன். யாருக்குக் கிடைப்பார் இந்த மாதிரி ஒரு தந்தை!\\

உண்மையில் கொடுத்துவச்சவுங்க...நான் எல்லாம் 5வது படிக்கும் போதே தனியாக பஸ் பிராயணம் தான்...அதுவும் படிக்கட்டுல..;))

கீதா சாம்பசிவம் said...

//எனக்கு மகா ரோஷமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.//
அந்த வயதின் உணர்வை அருமையாகச் சொல்கிறீர்கள் வல்லி, நல்லா இருக்கு மலரும் நினைவுகள், ஞாபகம் வருது, எல்லாருக்கும்./

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா, உண்மையைச் சொல்வது அப்பாவாகவே இருந்தாலும்

ஏத்துக்கறது கஷ்டம் தானே.
பாட்டி சொல்லுவார், மூக்குக்கு மேல இவ்வள்ள்வு ரோஷம் இருந்தால் கல்யாணம் ஆனாட்டு சிரமப்படுவேனு:))
எல்லோருக்கும் பொதுவாத்தான் இந்த நினைவூகள் இருக்கும்னு நினைக்கிறேன்!!!!

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
அத்தனை பாதுகாப்பு கொடுத்து இருக்க வேண்டாம் எங்கள் தந்தை:((

எங்க குழந்தைகளும் நான்காவது வகுப்பிலிருந்து தானே தான் போய்
வந்தார்கள்:))

படிக்கட்டுப் பயணமா, சரிதான்:))

தி. ரா. ச.(T.R.C.) said...

எட்டாம் வகுப்பறை வரை என்னைக் கொண்டு வந்துவிட்டுப் போன அப்பாவை இப்போதூம் நினைக்கிறேன். யாருக்குக் கிடைப்பார் இந்த மாதிரி ஒரு தந்தை!!

தந்தையைப் பற்றி சிலபேர்கள்தான் இப்படி குறிப்பிடுவார்கள். எல்லோரும் தாய்தான் ரொம்ப கஷ்டபட்டதாகவும் தியாகங்கள் செய்ததாக குறிப்பிடுவார்கள். தந்தையின் பங்கை சற்றும் குறைத்து மதிப்பிடக்கூடாது.நீங்கள் செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.நமது இதிகாசங்கள்கூட, ராமாயணத்தில் தந்தை பாசத்தையும்(தசரதர்),மகாபாரதத்தில் தாய் பாசத்தையும்(குந்தி)முன்னிலைப் படுத்தி சிறப்பித்தது.தந்தை தான் படும் கஷ்டத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நாம் ஓட்டலுக்குச் சென்று உணவு அருந்தும்போது மிகவும் கஷ்டப்பட்டு நமக்கு விரும்பும் உணவு வகைகளை ருசியுடன் தயார் செய்து அளித்து விட்டு சமயல்கூடத்திலேயே இருக்கும் சமயல்காரரை விட்டு விட்டு அதை தட்டில் வைத்து நமக்கு கொண்டு வந்து தரும் சர்வருக்குத்தான் பாராட்டும் டிப்ஸும் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்கள் நாம்

வல்லிசிம்ஹன் said...

வரனும் தி.ரா.ச,

உண்மைதான். அன்சங் ஹீரோஸ்
பட்டியலில் அப்பாக்களும் சில சமயம் அம்மாக்களும்

வந்துவிடுகிறார்கள்.

எங்க வீட்ட்ல அப்பாவை நாங்கள் கொண்டாடிய அளவு அம்மாவைக் கொண்டாடவில்லை. அதுதான் உண்மை.
இப்போ அதுவும் வருத்துகிறது.