About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, January 09, 2008

அன்பும் அறனும் உடைத்தாயின்..

ஆத்தி
கூகரீ
சட்டை
மொட்டை
குக்கூ
களாக்
லேன்ன்ன்
உம்மாச்சி கோந்தா

இந்த வார்த்தைகளே காதில் நிறைந்து இருப்பதால்
இன்னும் பதிவெழுதும் மோட்(mode) வரவே நாள் ஆகும் என்றே தோன்றுகிறது:))

இந்த நாற்பது நாட்களும் எப்படி ஓடிவிட்டது.
பகல் எது இரவு எது. யார் வந்தர்கள் யார் போனார்கள்.

மார்கழி மாசமா. ஓ.ரெண்டு இழை இழுத்தால் போதும்.
இசை விழாவா. அதனால் என்ன எப்ப வேணும்னாலும் கேட்டுக்கலம்.
அட கடவுளே. கீதை கேட்கவே இல்லையே.
பரவாயில்லை ஒரேயடியா சிடி வாங்கி விட்டால் போகிறது.

தமிழ்மணம் பார்க்கவில்லை.
ஒருவருக்கும் கடிதம் போடவில்லை.
ஜிமெயிலா??ம்ஹூம்.
எங்கள் இருவரின் உலகம் மூன்று குழந்தைகளின் கைகளில் அடங்கிவிட்டது.

ஒன்பது வயது வீட்டுப்பாடங்கள். பள்ளிக்கான ப்ராஜெக்ட்.
கீபோர்ட் பயிற்சி. வயிற்றுவலி. மருத்துவர்.
மருந்துகள்.....

ஒன்றரை வயது பேத்தி. மழலை. திருப்பதி. முடியிறக்கல்.
சளி, காது குத்தல் காதணி விழா.

ஒரு வயது பேரன்.....அதே சளி. காய்ச்சல். தளர்நடை. ஒரு வினாடி அழுகை. அடுத்த நொடி வாய் நிறைய சிரிப்பு.
எல்லாம்
குகரீ செய்யும் மாஜிக்:)

அவர்கள் ஊரில் குகரீ கொடுக்க மாட்டார்கள்.
வயிறு, ஜீரணம் இவை பாதிக்கப் படுமாம்.

மேலே, முதலில் இருக்கும் வார்த்தைகள்
முறையே
குகரீ...ஷுகர்...சர்க்கரை.
ஆத்தி...பாட்டி,நான்,
குக்கூ.....காக்கை
லேன்.......ப்ளேன்
களாக் க்ளாக் கடிகாரம்

என் அகராதி மாற இரண்டு நாட்களாவது ஆகும். மீண்டும் பார்க்கலாம்.
இவர்கள் வெளியூரில் தான் வளர வேண்டுமா?
எங்களுக்கு இந்தப் பாசம் ஏன் மறுக்கப்படுகிறது..
மீண்டும் யாஹூ, வெப்காம்,தொலைபேசி.
உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள்.
ஆனாலும் தொட முடியாத தூரத்தில் இருக்கும்
அடுத்த தலைமுறை.

இதோ அடுத்த வீட்டு சீதாராமன் தன் பேரனை டென்னிசுக்கு அழைத்துப் போகிறார். கொடுத்து வைத்தவர்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

24 comments:

அறிவன் /#11802717200764379909/ said...

/////////இவர்கள் வெளியூரில் தான் வளர வேண்டுமா?
எங்களுக்கு இந்தப் பாசம் ஏன் மறுக்கப்படுகிறது..
மீண்டும் யாஹூ, வெப்காம்,தொலைபேசி.
உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள்.
ஆனாலும் தொட முடியாத தூரத்தில் இருக்கும்
அடுத்த தலைமுறை.

இதோ அடுத்த வீட்டு சீதாராமன் தன் பேரனை டென்னிசுக்கு அழைத்துப் போகிறார். கொடுத்து வைத்தவர்./////////

பொருளாதார முன்னேற்றத்துக்கு நாம் கொடுக்கும் விலை !
இந்த விலைக்கு அந்தப் பொருள் நமக்குத் தேவையா என்பதை உபயோகிப்பாளரே தீர்மானிக்கவேண்டும் !

இலவசக்கொத்தனார் said...

அழகா உங்க மனதில் இருக்கும் எண்ணங்களைச் சொல்லி இருக்கீங்க. அவங்க ஏன் வெளியூரில் வளரும் நிர்பந்தம் என்பதை நாங்கதான் சொல்லணுமா? பேசாம நீங்களும் அங்க போய் இருந்தா சரியா போயிடுமே....

பாச மலர் said...

வல்லி மேடம்,

பிரிவுகள் தான் நிஜமாகிப் போகிறது...

//இவர்கள் வெளியூரில் தான் வளர வேண்டுமா?எங்களுக்கு இந்தப் பாசம் ஏன் மறுக்கப்படுகிறது//

என் அம்மாவும், அத்தையும் புலம்புவது போல் ஒலிக்கிறது...

ஷைலஜா said...

ரொம்ப நாள் ஆச்சு உங்க பதிவு வந்து..மன்னிக்கணும். இனி வரேன்
இயல்பா எழுதி
இருக்கீங்கவல்லிமா..

லக்ஷ்மி said...

கேக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் பொருளாதார நிர்பந்தங்கள், Peer pressure எனப்படும் தன்னை ஒத்தவர்கள் செய்யும் விஷயத்தை தான் மட்டும் விட்டுட்டு பின்னாடி ஏமாளிப் பட்டம் கட்டிக்க கூடாதேன்ற ஜாக்கிரதை உணர்வு, அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்கை கொடுக்கணுமென்ற அக்கறை இதெல்லாம்தான் இந்தத் தலைமுறைய ஓட வைக்குது. எங்க பங்குக்கு நாங்களும் இழப்பது நிறைய - அதிலும் குழந்தை வளர்ப்பில் பெரியவர்களோட உறுதுணை இல்லாம போறது எவ்ளோ பெரிய இழப்புன்னு புரியாம இல்ல. இருந்தாலும் என்ன செய்ய? இவை இன்னிய நிலமைல தவிர்க்க இயலாததா மாறிகிட்டிருக்கு. சாத்தியம்னா இ.கொ சொல்றாப்போல நீங்க அங்க போய் இருக்கறதை பத்தி யோசிக்கலாம். ஆனாக்க அப்போ நீங்க இழக்கறது நிறையவா இருக்கும். கோவில், அக்கம்பக்கத்து நட்புகள், உறவுகள், மாறுபட்ட கலாச்சாரத்தை எதிர்கொள்றதுன்னு நிறைய சவால்கள் உங்களுக்கு இருக்கும். எப்படிப் பார்த்தாலும் கஷ்டம்தான். என்ன சொல்றதுன்னு தெரியலை. விரைவில் Cheer up ஆகுங்க, தமிழ்மண ஜோதில வந்து ஐக்கியமாகுங்க. கொஞ்சம் உங்க கவலைகள் தீரும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அறிவன்.
பொருளாதாரத் தேவை என்பதோடு,
தங்கள் அறிவுத்தேவைக்காகவும்
போகிறார்கள் என்றும் புரிகிறது.

1975களில் இது ஆர்வமாக ஆரம்பித்தபோது எங்களுக்கும் அதிசயமாக இருந்தது.
இப்போது இல்லை.
அவர்களுக்கும் பிறகு புரியலாம்.
நன்றி அறிவன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
புரிவதனால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

அவர்களுடைய நிர்ப்பந்தம் தெரிகிறது.:((
குழந்தைகளூக்கு தாத்தா பாட்டியுடைய அரவணைப்பு விட்டுப் போகிறதே....
நாங்கள் அங்கே போவது இரண்டாம் பட்சம்தான்.
விடுமுறையே வாழ்க்கையாகாது இல்லையா:)))

வல்லிசிம்ஹன் said...

நீங்களுமா பாசமலர்!!!

புலம்பல்களில் இந்த விதம் புது விதம்:))
வரவை ரசித்து மகிழும்போது அவர்கள் புறப்படும்போது,
இத்தனை மனம் வருத்தப்படுவதை குறைத்துக் கொள்ளப் பழக வேண்டியதுதான்...
நன்றிம்மா.

முத்துலெட்சுமி said...

எல்லா வீட்டிலும் இதே கதைதான்...
வேற வழியும் இல்லாததது போல் தெரிகிறது. குழந்தை மொழி அழகு தான்...

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா என்னப்பா, மன்னிப்பு அப்படி இப்படி.
நாம் எழுதிக்கொள்ளாட்டாலும் மனசில இருந்து கொண்டுதான் இருக்கோம்:))
கட்டாயம் வாங்க.
இதுதானே இப்போ அன்பு வாழ்வாகி இருக்கிறது!!

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி,
கட்டாயம் இது காலத்தோட கட்டாயம்தான். நல்லா புரியறது.
ஜீரணிக்கத்தான் கஷ்டமா இருக்கிறது.தமிழ்மண ஜோதி இருக்கறதனாலத் தான் நான் இந்தப் பதிவே உங்களோட பகிர்ந்து கொள்ள முடிகிறது.
ஐக்கியம் ஆகிறது சிரமமே இல்லை:))
பின்னூட்டம் படிச்சதே நாலு ரிவைட்டல் சாப்பிட்ட எஃபெக்ட்!!!
நன்றிப்பா.

காட்டாறு said...

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். ம்ம்ம்.... அழகா எளிமையா உருக வச்சிட்டீங்கம்மா.. லஷ்மி அழகா சொல்லிட்டாங்க... cheer up!

கோபிநாத் said...

மழலைகள், மழலை மொழி, மகிழ்ச்சி...;)))

பதிவுல மழலைகள் இருக்கோமே விரைவில் வருங்கள்;))

துளசி கோபால் said...

//இந்த நாற்பது நாட்களும் எப்படி ஓடிவிட்டது.//

இதுதான் 'இனியவை நாற்பது'ன்னு சொல்லிவச்சுருக்கு:-)))))

ஒரு மண்டலம் எங்களைவிட்டுப் பிரிஞ்சு இருந்தீங்க.

என்ன செய்யறது வல்லி. எல்லாருக்கும் அவரவர் காரணங்கள் & காரியங்கள்.

வல்லிசிம்ஹன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் காட்டாறு.
நல்ல
குளிர் ஆரம்பித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்:))

ஏர்போர்ட்டில் ஆரம்பித்த சோகம் தமிழ்மணத்தில் பாதி குறைந்துவிட்டது!!
உண்மைதான் ஏதாவது எழுதினால்தான்
பாரம் குறையுமென்றுதான் ஆரம்பித்தேன். தெய்வம் குழந்தை உருவத்தில என்பதில் சந்தேகமே இல்லை.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க வலையுலகக் குழந்தைகளே:))

உண்மைதான் கோபிநாத்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
ஒரு மண்டலம் என்னாலயும் தமிழ்மணம் பார்க்காமல் இருக்க முடிந்ததே:))

எத்தனை விட்டுட்டேனோ.
இன்னும் வீடு பழைய நிலைக்கு வர ரெண்டு நாள் ஆகும்னு தோன்றுகிறது.
எங்க பார்த்தாலும் குட்டி குட்டி பொம்மைகள்.மறந்து போன உடைகள்.:((
அவரவருக்குக் காரண காரியம்தான்.

நமக்குத்தான் அஞ்ஞானம்:))

கீதா சாம்பசிவம் said...

//எங்களுக்கு இந்தப் பாசம் ஏன் மறுக்கப்படுகிறது..
மீண்டும் யாஹூ, வெப்காம்,தொலைபேசி.
உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள்.
ஆனாலும் தொட முடியாத தூரத்தில் இருக்கும்
அடுத்த தலைமுறை.

இதோ அடுத்த வீட்டு சீதாராமன் தன் பேரனை டென்னிசுக்கு அழைத்துப் போகிறார். கொடுத்து வைத்தவர்.//

மனதைத் தொட்ட வரிகள், மீண்டும் வந்ததுக்கும், மீண்டு வருவதற்கும் வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@யாரும் இருக்கும்இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னதில் அர்த்தம் உள்ளது..
என் நிலையும் அதே நிலைதான்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க முத்துலட்சுமி.


உங்க பிள்ளைகள் வளரும்போதாவது நிலைமை மாறட்டும்:))

வல்லிசிம்ஹன் said...

கீதா நன்றி.

அநேகமா எல்லோருக்கும் பழகப்பட்ட பிரிவுதான்.

முன்னைவிட இப்ப அது பெரிதாகத் தெரிய வயதுமொரு காரணம்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தி.ரா.ச.

இருக்கும்மிடம் வைகுண்டம்.

வேடந்தாங்கல்னு கூட வச்சுக்கலாம்:))0

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓ வேடதாங்கல் விஷயம் அங்கேயும் வந்து விட்டதா?

வல்லிசிம்ஹன் said...

வேடந்தாங்கல் விஷயமா????
அது என்ன??


நாம ஒரு ரிசார்ட் மாதிரி
தயார்ப் படுத்திக்கணும்னு சொன்னேன்.

நமக்கும் ஒரு வேடந்தாங்கல் இல்லையேனு இருக்கு:((