About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, January 22, 2008

தனிக்குடித்தனம் ஆரம்பம்......1945 ..1


திருமணம் முடிந்து அவரவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு ஸ்ரீகாகுளம் ஊரில் முதல் போஸ்டிங்.
நெல்லையைத்தவிர,மதுரையும் சென்னையுமே கொஞ்சம் தெரிந்த அந்த பையனுக்கு,
நிறைய புத்திமதி சொல்லித் தாத்தா வண்டி ஏற்றிவிட்டார்.
அங்கு நடந்த சம்பவங்களை எங்கள் அப்பா சுவைபடச் சொல்லுவார். எனக்குத்தான் மறந்துவிட்டது.


அங்கிருந்த நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற கிராமத்துக்கு தபால் ஆபீஸ் குமாஸ்தாவாகப்
பொறுப்புக் கொடுத்தார்கள்.
அப்பா(நாராயணன்) பாளையங்கோட்டையில் படித்தததாகச் சொல்லுவார். அவருடய கல்லூரிப் படிப்பும் அங்குதானா என்று தெரியவில்லை.
அந்தக் காலகட்டங்களில் இண்டர்மீடியட் இரண்டு வருடமும், இளங்கலைப் பட்டதாரியாவதற்கு இன்னும் இரண்டு வருடமும் தேவை.

அப்பாவின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த ஆளுமையும் என்னை எப்பவுமே வியக்க வைத்திருகின்றன.

இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அவர்களும் அதுப்போல அனஸ்ஸ்யூமிங் வகைப்பட்ட மனிதர்களாக,வெகுளியாகக் கருமமே கண்ணாயினார் டைப்பாக இருந்திருக்க வேண்டாம்.
சரி கயத்தாறுக்குப் போகலாம் வாருங்கள்.

அங்கு ஒரு தனி வீடு பார்த்துக் குடித்தனம் வைக்க அப்பாவின் அம்மா பையனையும் அழைத்து வந்து விட்டார்.
அம்மா அதான் நம்ம கதா நாயகி சேச்சிப்பாப்பா அலையஸ் ஜெயா, தன் மாமாவின் துணையோடு,
புது வீட்டுக்கான பாத்திரப் பொட்டி,
கார்த்திகை விளகுகள் ...ஒரு பெரிய வாழைத்தண்டு விளக்கு என்பார்கள். திருவனந்தபுரம் டைப்.
அதே போல குட்டி அகல்கள் வெண்கல,பித்தளையிலானவை,
காரைக்குடி டப்பா என்று சொல்லக் கூடிய அரிசி,பருப்பு போட்டு வைக்கிற பெரிய டப்பாக்கள்.
ஊறுகாய் போட மஞ்சளும் வெள்ளையுமாக உயர ஜாடிகள்.
கொலு வைக்க பண்ருட்டிப் பொம்மைகள் என்று
ரெண்டு குதிரை வண்டியில் வந்து இறங்கிய பொருட்களைப் பார்த்துத்
திருவேங்கடப் பாட்டி சிரித்தாராம்.
தாத்தாவும் பாட்டியுமாக புதுத் தம்பதிகள் செட்டில் ஆக உதவி விட்டு,
அதலப் பாதாளத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் சேந்தும் முறையும்
சொல்லிக் கொடுத்தாராம்.
மெட்ராஸ் பொண்ணு கிணத்தை எங்க பார்த்திருக்கப் போகிறது என்று அவர்களுக்கு வருத்தம்.
அத்ற்காக உதவிக்கு ஒருவயலில் வேலை செய்பவரிடம் சொல்லித் தினமும் இரண்டு குடம் தண்ணீர் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு வண்டி ஏறி திருநெல்வேலிக்குப் பயணமானார்கள்.
ஒன்பது கஜம் நூல் புடவையும் கட்டிக் கொண்டு ஒரு செல்லுலாய்ட் பொம்மை போல அம்மா நின்னதாக உறவுக்காரர் சொல்லுவார்.
அப்புறம் அம்மாவும் அப்பாவும் செய்த குடித்தனம் எப்படி என்பது அப்புறம் பார்க்கலாம்.:))