About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, September 28, 2007

தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே...

கண்ணன் வந்து பிறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.
இப்போது அவன் பற்றின விசாரம் எங்கே வந்தது என்று யோசிக்கலாம்.
நண்பர்களுடன், நான் கேட்டதைப் பகிர்ந்து கொள்ளத்தான்.

எல்லோருக்கும் வேளுக்குடி திரு. கிருஷ்ணன் பொழுதுவிடிந்து பொதிகையில் வந்து கண்ணன் அமுது வழங்கும் நிகழ்ச்சி தெரிந்திருக்கும்
.
அந்த வார்த்தைகள் மனதை நெகிழ வைக்கின்றன.
அதில் ஒரு பாகமாகத் தேவகியின் வாழ்வைச் சொல்கிறார்.
தேவகியும் வசுதேவரும் திருமாலை வேண்டித்தான் ,அவர் அவர்களுக்குக் குழந்தையாக
அவதரிக்கிறார்.

தேவகி,
கண்ணனையும் பலராமனையும் கருத்தரித்தவள்.
கண்ணனைப் பெற்றவள்.
கம்சனுக்குத் தங்கை. திருமணத்தேரில் ஏறிப் புக்ககம் கிளம்பும்போது அசரீரி ஒலிக்கிறது
''கம்சா, உன் தங்கையின் எட்டாவது கருவில் தோன்றும் சிசுவின் கைகளில் உன் மரணம்.''
என்ற சப்தம் கேட்டதும், வாளை உருவுகிறான், தன் சகோதரியைக் கொல்ல.
வசுதேவர் பதட்டமில்லாமல் அவனை சம்யோசிதமாகக் கையாளுகிறார்.
கம்சா, இப்போது தேவகியால் உனக்கு ஆபத்தில்லை, அவளது குழந்தை அதுவும் எட்டாவது மகவினால் தானே உனக்கு அழிவு என்று தெரிகிறது. இப்போது இவளைக் கொன்ற பாபம் உனக்கு வேண்டாம்,பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுக்கிறேன் '' என்கிறார்..
சமாதானம் அடையும் கம்சன் கையில் ஆறு சிசுக்களும் மறைகின்றன. ஏழாவது
கரு உருவாகிறது.
திருமால் மனக்குறிப்பின்படி , யோக மாயா அந்தக் கருவை தேவகியினிடமிருந்து பிரித்து
கோகுலத்தில் ,வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹிணியின் கருவில் பலராமனாகச் சேர்த்துவிடுகிறாள்.அப்போதே அந்த யுகத்திலேயே
சங்கர்ஷனணாகப் பலராமன் உருவாகிறார்.

இங்கே ஏழாவது கரு கலைந்ததாகத் தேவகி உணர்ந்து சொல்கிறாள். அடுத்ததாக
எட்டாவது கருவும் உருப்பெற்றுத் தேவகி பொலிவுடன் இருக்கிறாள்.
இப்போதும் யோகமாயாவுக்குத் திருமாலிடமிருந்து செய்தி வருகிறது,கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் நந்த கோபன் அரண்மனையில் அவன் யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறக்கவும்,
வசுதேவர் கண்ணனைக் கொண்டுவருகையில்
அவருடன் சென்று கம்சன் கைகளை அடையவும் உத்தரவாகிறது.
கண்ணனும்
அவதரிக்கிறான்,ஆவணி ரோகிணி தேய்பிறை அஷடமியில் சங்கம்,சக்கரத்தோடு,நான்கு திருக்கைகளோடு,பீதாம்பரதாரியாய்ச்
சிறையில் பிறக்கிறான்.
இவனுக்கும் ராமனுக்கும்தான் என்ன வித்தியாசம்.
ராமன் அரசன் தசரதச் சக்கிரவர்த்திக்கு மூத்த புதல்வனாய்,காத்திருந்து பெற்ற வரமாய்ப் பகலில் சூரியவம்சம் செழிக்கத் தோன்றினான். அரச மரியாதைகள் ஆர்ப்பாட்டாங்கள், அன்புமழை அவனுக்கு.
இங்கே நம் கண்ணனோ நட்ட நடு இரவில்,கட்டுண்ட தாய்தந்தையருக்கு, சிறையில் பிறக்கிறான். அதுவும் கண்கட்டும் மாயனாக, ஒளிவெள்ளத்தில் அவர்களை மூழ்கவைத்து, அவர்களைக் கட்டியிருந்த சங்கிலிகள் அறுபட,
பிறப்பறுக்கும் பெருமானாக, துன்பம் களையும் குழந்தையாக,
மாயை அகற்றும் மாயாவியாக
வருகிறான்.
வசுதெவருக்குக் குழந்தையை எப்படியாவது யமுனையின் அக்கரைக்கு நந்தகோபன் அரண்மனைக்குக் கொண்டு போய்விடத் துடிப்பு.
கம்சன் கைகளிலிருந்து காப்பாற்றவேண்டுமே.
தேவகிக்கோ, குழந்தையின் அருகாமை ஆறுதலை விட மனதில்லை.
அழுகிறாள்.
குழந்தையைக் கையிலேந்தும் வசுதேவரோடு பின் நடக்கிறாள்.
இந்தக் குழந்தையாவது தன்னிடம் நிலைக்காதா,மீண்டும் எப்போது பார்ப்போம், இவனை?
பெற்றோமே,
அவன் லீலைகளை அனுபவிக்க முடியாதே.
என்ற மாயைச் சட்டென்று அவளை விட்டு வீலகக் கண்ணன் அருள் அவளைக் காக்கிறது
சுய நிலைக்கு வருகிறாள்.
கண்ணன் கடவுள். அவன் எங்கிருந்தாலும் நலம் பெறுவான்.
எல்லோரையும் காப்பான்.
காப்பதற்காகவே அவன் கோகுலம் ஏக வேண்டும் என்று உண்மை நிலை புரிந்து
சிறைக்குள் அமைதியாகிறாள்.
வசுதேவர் நடக்கக் ,குழந்தை அவர் தலையில் ஒரு கூடையில் ,தளிர்க்கால்கள் வெளியே தெரிய,அடர் மழை பொழிய, ஆதிசேஷன் குடை பிடிக்க,
யமுனை அவன் குட்டிப்பாதங்களை வருடி நம்ஸ்கரித்து வசுதேவருக்கு வழிவிட
வசுதேவரும் நந்தன் அரண்மனையை அடைகிறார்.
அங்கு பிரசவித்த மயக்கத்தில் இருக்கும் யசோதையின் அருகில் குதுகலமாகக் கிடக்கிறாள்
யோகமாயா சின்னக் குழந்தையாக.
கண்ணனை முத்தமிட்டு யசோதையின் அருகில் கிடத்தி, யோக மாயாவைக் கையில் தழுவி ,மீண்டும் கம்சன் அரண்மனை வந்ததும் விழிக்கின்றனர் காவலாளிகள்.
பெண் குழந்தை என்று தெரிந்ததும் தயங்குகிறானாம் கம்சன்.
ஒரு நிமிடம்தான். அடுத்த கணமே
வாளை உயர்த்திக் குழந்தையை மறுகையில் பிடிக்கிறான்.
அவள் மாயாதானே.!!!! நழுவுகிறாள் வானத்தில் எட்டாத தூரத்திலிருந்து கம்சனை விளிக்கிறாள்.
''அறிவு குறைந்த கம்சனே, உன்னை அழிக்கப் போகிறவன் மறைந்து வளருகிறான் ''
என்று கலகல சிரிப்புடன் மறைகிறாள்.

இந்தக் கண்ணன் சரிதை,அவன் பிறந்த வண்ணம்... சொன்னால் படித்தால் நமது முற்பகல் வினைகளும்
அழியும், இனிப் பிணைக்க முடியாத தூரத்துக்கு நம்மை அழைத்துப் போய்விடும், அஞ்ஞானம்,
நாம்தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்லுகிறோம் என்ற அறியாமை இருள் விலகும் என்று, கீதை உரை வழங்கும் ஸ்ரீ வேளுக்குடி உரைத்தார்.
பின்குறிப்பு.
அவர் சொன்ன வண்ணமே கொடுக்க முயற்சித்தும் ,,முடியவில்லை.சில பல குறைகளை மன்னிக்க வேண்டும்.
இது இன்று 55ஆவது பிறந்தநாள் கொண்டாடியிருக்கவேண்டிய என் இளைய தம்பிக்குச் சமர்ப்பிக்கிறேன்.
இந்தப் பதிவை எழுத மௌலியாகிய மதுரையம்பதி ஒரு காரணம்.
அவர்தான் பிணைக்கும் சங்கிலிகள் பற்றி வினா எழுப்பி இருந்தார்.
நன்றி மௌலி.