Blog Archive

Friday, September 21, 2007

வார்த்தைகள் திரும்பும்




தட தடவென்று வாயில் கேட் சத்தமிடுவதைக் கேட்டு அவசரமாக எழுந்த கருணா, கணவனின் தூக்கம் கலையாமல் வெளியில் வந்து , ஜன்னல் வழியே பார்த்தபோது


அதிர்ச்சியாக இருந்தது.


ஜயம்மாதான் நின்று கொண்டிருந்தார்.


காலை இன்னும் வெளிச்சம் போடவில்லை. கடிகாரம் 5.30


என்று காட்டியது.




என்ன அவஸ்தையோ தெரியவில்லையே என்று நினைத்தபடி வாசலுக்கு விரைந்தாள்.


இந்த வாரத்தில் இது இரண்டாவது தடவையாக பக்கத்துவீட்டு அம்மா வருகிறார்.




தயங்கி நின்றவரை உள்ளே அழைத்தவள்


அவரின் முகத்தில் இருந்த கண்ணீர்த்தடங்களைப்


பார்த்து நடந்ததை ஒருவிதமாக ஊகித்து,


'மறுபடியுமா? 'என்றாள்.'




'ஆமாம்மா. ராத்திரி சாப்பாடு கிடைக்கலை.


சக்கரை அதிகமாயிடுச்சி போல. மயக்கமா வரதுப்பா'




அவசரமாக உள்ளே சென்ற காந்தா,


இரவு உணவில் மீதி இருந்ததைத் தட்டில்


கொண்டுவந்து ஜயம்மாவைச்


சாப்பிட வைத்தாள்.
இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா?
மனம் கோணாமல் வீட்டு வேலைகள் அத்தனையும் பார்த்து இந்த அம்மா சாப்பிடும் நேரம் சொல்லாலயே வாட்டுவது இவர்களுக்குத் தெரிந்த விஷயமே. பிரச்சினை புரியாமல் இவர்கள் விலகி இருப்பார்கள். அந்ததாம்மாவுக்கு ஆதரவாக அவ்வப்போது ஆறுதல்வார்த்தைகள் சொல்லியோ,
மருந்து வாங்கிக் கொடுப்பதோ செய்வார்கள்.


வயதான மூதாட்டியை இப்படியா வதைப்பது.?
உடை மாற்றி,கணவனை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பறந்தாள் தன்அலுவலகத்துக்கு.

வீட்டில் இருந்து தன் அலுவலக வேலை செய்யும்
கணேஷ்,
தர்மசங்கடமாக உணர்ந்தான்.
அடுத்தாற்போல் விசாரித்து வரப் போகும்
வேணுவை நினைத்து, வாயிலை நன்றாகத் திறந்து
வைத்தான்.

சுத்தம் செய்து வேலைகளை முடித்துத் தன் கணினியை எடுத்து வைத்த போது, வந்தான் வேணு.

''வேற வேலையே இல்லியா உங்களுக்கு,நல்லா இருக்கிற கிழவி மனசை இப்படிக் கெடுத்து வச்சிருக்கீங்களே??

ஆனா ஊன்னா உங்க வீட்டுக்கு வந்துடுது."

வா அத்தை, வீட்டுக்குப் போலாம்"

என்று சினத்தோடு வரும் வேணுவைப் பார்த்து மிரளும் ஜயம்மாவை நோக்கி இரக்கத்தோடு,''அம்மா வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டுமே, நானே கொண்டு விடறேன்' என்றான் கணேஷ்.

ஏன் கிழவி கழுத்தில ரெட்டைவடம் உங்களை உறுத்துதோ'
என்றபடி தள்ளாடும் மாமியாரை அழைத்துப் போய் விட்டான் வேணு.

அதற்குமேல் யோசிக்கக் கூட நேரமில்லை கணேஷுக்கு.


என்ன சங்கடம்ப்பா. இருக்கவும் விட மாட்டேங்கறாங்க.

போகவும் விட மாட்டேங்கறாங்க.
நமக்கு வயசானா என்ன பாடோ தெரியலையே சாமி!!
என்று நினைத்தபடி,
அன்று இரவு மனைவியிடம் நடந்ததை விவரிக்கையில்,அவளும் வருந்தினாள்.
''
எழுபது வயசுக் கிழவிக்கு ஏன் இத்தனை மனக் கஷ்டம்.
வச்சிருந்த பணத்தையும் கொடுத்துட்டு உடம்புல வலுவும் இல்லாம
போக இடம் இல்லாத அனாதையா ஆகிட்டாங்களே'
நாளைக்கு இதற்கு ஏதாவது வழி செய்யணும். நாம பார்த்துகிட்டு சும்மா இருக்ககு கூடாது
என்று முடிவெடுத்து இருவரும் உறங்கினர்,.
காலையில் மறுபடி அமளி. கூச்சல்,அழுகை.
ஜயம்மாவை எதிர்பார்த்து இருவரும் வாசலை பார்த்தார்கள்.
அவரும் வந்தார் கையில் பெட்டியோடு.
இவர்களின் திகைப்பைப் பார்த்துவிட்டு, '' நான் முதியோர் இல்லத்துக்குப் போறேன்பா.
இன்னும் ஒரு சந்தர்ப்பம் அவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சேன்,
இனிமே தாங்க முடியாது. ஆண்டவன் நல்ல வழி விடட்டும்,அவங்களைக் காப்பாத்தட்டும்''
என்ற வண்ணம் கீழே உட்கார்ந்த கிழவியை இருவரும் பார்க்க அவர் மேலே தொடர்ந்தார்.
''எனக்குத் தெம்பு இன்னும் இருக்கும்மா. சர்க்கரை ஒண்ணைக் கட்டுப் படித்திட்டேன்னால் உயிர் இருக்கும் வரை
உருப்படியா ஏதாவது செய்து நாளைக் கழித்துவிடுவேன்.
என்ன,, நான் படுகிற கஷ்டத்தை மகள் பட வேணாமேனு பொறுத்தேன். விதி வேற நினைத்துவிட்டது''
என்றாள்.
ஜயம்மா சொல்வது புரியாமல் இருவரும் அவளைப் பார்க்க, அந்த அம்மாவே
''பழைய கதைப்பா.
நான் என் மாமியாரை மனசு நோகடிச்சேன்.எனக்காவது இன்னுமொரு மக இருக்கு ஆத்தாமை சொல்லிக்க, எங்க மாமியாருக்கு அதுவும் கிடையாது.எங்க வீட்டுக்காரர் ஒரே மகன்.
அவரு என் பக்கமும் பேச முடியாம,அவங்க அம்மாவோடையும் சொல்லாம,
மருகிப் போயிட்டார்.
நான் எங்க அவரைப் பேச விட்டேன். ஏம்பானு மாமி கூப்பிட முன்னாடியே
நானு போயி நின்னுடுவேன்,ஆதரவா எங்கியாவது ஏதாவது சொல்லிப்பிடுவாரோனு ஒரு பொறாமை....
இருந்துச்சு,

உடம்புக்கு நோவுனு தெரிஞ்சும் சொல்லாமலே சகிச்சுக்கிட்டு
நெஞ்சு வலி மிஞ்சிப் போனதும் மயக்கம் போட்டுடுச்சு.
ஆசுபத்திரிக்கு அழைச்சுட்டுப் போனாரு
எங்க வீட்டுக்காரரு, பலன் இல்லை. கொடுத்த வைத்த உயிரு, ஏழு நாள்ள போய்ச் சேர்ந்துடுச்சு.
அத்தை அனுப்பிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து வாயை மூடினவருதான் எங்க வீட்டுக்காரரு,ஆத்தாவை நினைச்சே நாலு வருஷத்தில போயிட்டாரு.
பணத்துக்குக் குறைவில்ல ரெண்டு மகளையும் கண்ணா வளர்த்தேன்.
அதுங்க மனசில என்ன குரோதம் ஏறிக்கிச்சோ தெரியலை
ரெண்டுமா என்னை சொல்லாலேயெ அடிக்குதுங்க.
ஏண்டி இப்படி செய்யறீங்கனு கேட்டா, அப்பத்தாவைக் கொஞ்சமா நீ வதச்சே,
உன்னை வச்சிருக்கிறதே பாவம்னு சொல்லுதுங்க.
சரி எனக்குத்தான் இப்படி ஒரு நோயும்,சொல்லும் வந்திட்டதே இதுங்களுக்காவது உழைச்சுப்
புண்ணியம் தேடுவோம், பாவத்தைக் கழிப்போம்னு நினைச்சு இருந்தேன்.
ஆனா சாமி என் பாபத்தை இவங்க தலையிலேயும் ஏத்திட்டாரு, மனசு கெட்டு அலையுதுங்க,.
இதுங்களுக்குப்
புள்ளையும் பொறக்கலை..என்ன செய்யலாம்?
நாந்தான் விலகணும்.
.மனசு கோணாமத்தான் நான் போறேன் அம்மா. இதுங்களை
நானும் சபிக்க வேணாம்.
இந்தத் தலமுறையோட பாபம் ஒழியட்டும்,
என்னை திருவான்மியூர்ல முதியோரில்லத்தில கொண்டு போய் விட்டுருப்பா. அங்கதான் அறுபத்து ஐந்து
வயசுக்கு மேல சேர்த்துக்கிறாங்களாமே, இங்க செய்யுற வேலையை அங்க செய்யறேன்,
கையில இருக்கிற சங்கிலியையும் கொடுத்துடறேன்.
நோய் வருத்தாம நான் உயிரை விட மாட்டேன்,ஏன்னா எனக்கு உண்டான் தண்டனைதான் நோயா வந்திருக்கு. சந்தோஷமா ஏத்துக்கறேன்... .
இன்னோரு ஜன்மம் எடுத்துக் கேடு நினைக்க எனக்கு ஆசையில்லை.
அனுபவிச்சிட்டே போறேன்''
என்று கிளம்பத் தயார் ஆனார் ஜயம்மா.
இதுவும் நடந்ததுதான்





34 comments:

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப ஈஸியா முற்பகல் செய்யின் அப்படின்னு சொல்லிடலாம். ஆனா இப்படி கதையெல்லாம் கேட்க பாவமாத்தானே இருக்கு.....

Geetha Sambasivam said...

ஜயம்மாவை நினைத்து வருத்தமாக இருக்கும் அதே நேரத்தில் தன்னோட தப்பை உணர்ந்துட்டாரேன்னு சந்தோஷமாவும் இருக்கு. ஆனால் மாமியார், மாமனாரை நல்லாப் பார்த்துக்கிட்டுக் கடைசி வரை அவங்களைக் கண்ணின் கருமணியா நினைச்சவங்க கூடக் கடைசிக் காலத்திலே பிள்ளை, மாட்டுப் பொண்ணு கிட்டேயோ அல்லது, பொண்ணு, மாப்பிள்ளை கிட்டேயோ கஷ்டம் படறதும் உண்டு. இதைத் தான் "பூர்வ ஜென்ம வினை" என்று சொல்லுவார்கள். :(((((((

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ். அதேதான்.
ரொம்பப் பேருக்கு அந்தச் சமயத்தில் தெரிவதில்லை.

இப்போது அந்தப் பெண்ணும் பயணித்து விட்ட அம்மாவை நினைத்து அழத்தான் செய்கிறாள்.

இது தொடராமல் இருக்க அந்தச் சங்கிலியை அப்போதே அறுத்து இருக்கலாம். ஒரு நிமிடச் சிந்தனையில் வாழ்க்கையே மாறி இருக்கும்.
ஆனால் நமக்குத் தெரிவதில்லை.

ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நிஜம்தான் கீதா.

நாம் தான் நேரிலியே பார்க்கிறோமே.

கழிவிரக்கம் கொண்டாலாவது விதி மாற சந்தர்ப்பம் கிடைக்கலாம் இல்லையா?

ஒன்றா இரண்டானு மேற்கோள் காட்ட நிறைய மாமியார்கள், முன்னாள் மருமகள்கள் இருக்கிறார்கள்.

இருந்தார்கள்:((
காலம்தான் மாறுமோ...தெரியாது..
ஜயம்மாவின் போட்டோவோடு மறைந்த செய்தியும் வந்தது.
இதுதான் வாழ்க்கை..

யாருக்கும் வருத்தம் இருக்காது என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு டிஸ்கி:))
பெயர்களை மாற்றும் அவசரத்தில் ஒரேஆளுக்கு இரண்டு பெயர் வைத்துவிட்டேன். அது காந்தாவோ கருணாவோ.:))

துளசி கோபால் said...

வல்லி,
நிறைய ஜயம்மாக்களைப் பார்க்கிறோம்.

விட்டுக்கொடுத்துப்போகத்தெரிஞ்சுருந்தா...............வாழ்க்கையெ நல்லா இருக்கும். ஆனா விட்டுகொடுக்கரது யார்ன்னு ஒரு விவாதம்.
அதுதான் பொஸசிவ்னஸ் ஆயிருதோ?

வல்லிசிம்ஹன் said...

அது நிஜம். முன்னாடி மாமியார் பொஸசிவ் நிறைய கேள்விப்படுவோம். இப்ப உல்டா:(

பாகவதத்தில வரும் இல்லையா. நாலு யுகத்துக்கு நாலு வித மனிதர்கள்னு.
அதுபோல சுழற்சி முறையில நீ இப்ப, நான் அப்புறம்னு வரும்னு தோணறது துளசி.

நாகை சிவா said...

கால சூழற்சியில் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே தீருகிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவா.
கால சுழற்சி நிற்பது இல்லை.
அது தெரியாமல்தான் நிறைய தவறுகள் நடக்கின்றன.

nemisis.

இந்த வார்த்தை எங்க மாமியார் அடிக்கடி சொல்வது, சொன்னது. அப்படியே மனசில் பதிந்து விட்டது..

அபி அப்பா said...

மனசு கஷ்டமாகிடுச்சு பதிவை படிச்ச பின்ன:-((

மெளலி (மதுரையம்பதி) said...

//இது தொடராமல் இருக்க அந்தச் சங்கிலியை அப்போதே அறுத்து இருக்கலாம்//

மேலே சொன்னது அவ்வளவு சுலபமல்லவே?.. வினைக்கான விளைவினை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமே?...எங்கோ 1000ல் ஒரு ஆத்மாதான் அவ்வாறு வினைத் தொடரை அறுக்கும்படியான நிலைக்கு உயர்கிறது.

ramachandranusha(உஷா) said...

வல்லிமா, மனசின கெரே என்ற மலையாள படம். நம்ம நயந்தாரா முதல் முதலில் நடித்த படம். அதுல ஷீலா (பழைய நடிகை)
வயசான அம்மாவாக வருவார். நீங்க கதையில கடைசியா சொல்லுகிற அதே வசனத்தை சொல்லுவார். இன்னிக்கு எம் பிள்ளைங்க என்னை மதிக்கிறதில்லை. ஆனா நா என் பெத்தவங்களை மதிச்சேனா, அவங்களுக்கு நான் என்ன செஞ்சேனோ, இன்னைக்கு எம் புள்ளைங்க எனக்கு செய்யுதுங்க என்று சொல்லுவார். அருமையான படம்,
கிடைச்சா பாருங்க.

Unknown said...

இதே போன்ற கதை என் குடும்பத்திலும் நடந்தது. "ஜயம்மா"வுக்கு நான் உதவி செய்யக் கூடாது என்று அவரால் கஷ்டப்பட்டவர்கள் (emotional blackmail) என் கைகளைக் கட்டிப் போட்டார்கள். இதுக்கு மேல பதிவுல சொல்ல முடியல... கடைசியில கொள்ளி போட்டது முதியோர் இல்லத்துக்காரர்கள் தான்.
:‍‍‍(((((

காலச் சுழற்சி என்று சொன்னது சரிதான்.

துளசி கோபால் said...

காலச்சுழ்ற்சின்னதும் நான் நினைச்சது முற்பகல் செய்யின்.......

நான் சின்னப்புள்ளையா இருந்த காலத்துலெ சாப்புடக்கூப்புட்டா தட்டை எடுத்துக் கழுவிக் கொண்டு போகச் சோம்பல் பட்டு, சோறே வேணாமுன்னு சொல்லிருவேன். பாவம் அக்கா. அவுங்களே
எல்லாம் செஞ்சுட்டு, சோறு தட்டுலே போட்டாச்சு வான்னு சொல்வாங்க.

இப்ப என்னன்னா, ஜிகே,பக்கத்து வீட்டு பூனி, முள்ளி, இன்னும் பேர் தெரியாத எல்லார் தட்டையும் தினம் தேய்ச்சுக் கழுவறேன். இதையெல்லாம் டிஷ்வாஷர்லே போடமுடியாது:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க அபி அப்பா.
வருத்தப்பட வேண்டாம்.. கொஞ்சம் நிலைமையைப் புரிஞ்சுகிட்டாப் போதும்.
என்னடா இப்படி நடக்கிறதேனு யோசிச்சிட்டு முடிவு எடுக்கணும். நான் சொல்றது சுலபம்.:))))
செய்யறது கஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
நம்ம அம்மா அப்பாவைப் பார்த்துத் தானே நாம வளருகிறோம்.

யதா ராஜா ததா ப்ரஜா.
நல்ல பெற்றோர் சங்கிலினு ஒண்ணு இருக்குன்னாவது சொல்லிவிடுவார்கள். பிறகு நம்ம இஷ்டம். உண்மையான வார்த்தை,அறுத்துவிட முடியாது என்பது.
தளைப் பட்டிருக்கிறோம் என்றாவது புரிந்து கொள்ளணும்.அதுதான் சொன்னேன்:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் உஷா, கிடைத்தால் கன்டிப்பாப் பார்க்கிறேன். துபாய்னா உடனே கிடைக்கும்.

அந்த அம்மா படம் பார்த்ததும் வந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

குற்றம்னு தெரிந்த பின்னால் கூட செய்தா we have to face the tune:)))

ஆடுமாடு said...

ரொம்ப சோகமாயிடுச்சு. வயசானவங்க பிரச்னைய நாம உணரதான் முடியுது. ஆனா, அவங்க அனுபவிக்கிறது நமக்கு தெரியாது. நமக்கும் ஒரு காலம் (வயசான காலம்தான்) இருக்குங்கறதை ஞாபகப்படுத்திச்சு உங்க கதை. அப்புறம் வயசானவங்க, வேலைக்காரம்மான்னாலே ஐயம்மாங்கற மாதிரி பேரு வச்சிடறீங்களே...

வல்லிசிம்ஹன் said...

கெக்கெபிக்குணி,
நிஜ வாழ்க்கை சினிமாவைவிட
பயங்கரமா இருக்கு.
முதியோர் இல்லங்களாவது உண்மையா இயங்கணும்னு வேண்டிக்குவோம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
(ரொம்பச்)
சின்ன வயசில செய்யற தப்பெல்லாம் (நல்ல ்வேளை ) அப்ப யாரும் ரிகார்ட் செய்ய மாட்டாங்கனு நினைக்கிறேன்:)))
அதனால இப்ப பூனி,முள்ளி,ஜிகே எல்லாரையும் பார்த்துக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆடுமாடு,
அவங்க ஐய்யம்மா இல்லை.
ஜயம்மா.

அய்யம்மா எங்களுக்குப் பழம் கொண்டு வரவங்க:)))
நல்லாவே இருக்காங்க.

வயசானவங்களா இருக்கிறதனால வர உடல் நலப் பிரச்சினைகளைவிட மன சங்கடங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாகின்றன.

மடல்காரன்_MadalKaran said...

சுமக்கும் போது பாரம் தெரியாது
சுமை இறக்கும் போதுதான் அதன் பாரம் தெரியும்
இளமையில் செருக்கு முதுமையில் உரைக்கும்
காலம் போனபின் தான் கண்களே கலங்கும்
இளமையில் வறுமை எவ்வளவு கொடியதோ அவ்வளவு கொடியது முதுமையில் தனிமை
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது எத்தனை உண்மை.!

படத்தோடு ஜயம்மாவை உங்கள் வரிகளில் பார்த்தேன்.

அன்புடன், கி.பாலு

வல்லிசிம்ஹன் said...

வரணும் கி.பாலு.
வேண்டுமென்றே இன்னோரு உயிரைத் துன்புறுத்த நமக்கு அதிகாரம் கிடையாது.
இளமைவேகத் தவறெல்லாம் அனேகமாகத் தெரியாமல் செய்யும் குற்றங்கள் தான்.
நடுத்தர வகுப்புப் பெற்றோர்களுக்கு வறுமை தெரிந்தது.
தனிமையும் வராமலிருக்கத் தர்மம்தான் துணையிருக்க வேண்டும்.
வெகுவாக உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றிப்பா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

G.Ragavan said...

வல்லீம்மா என்ன சொல்றதுன்னு தெரியலை..... படிக்கக் கஷ்டமா இருந்தது. முருகா!

கபீரன்பன் said...

ஜெயம்மாவின் நிஜக் கதைக்கு ஒரு குட்டிக்கதை. வயதான தாத்தாவை பழைய அலுமினியத் தட்டில் வேறே அமர்த்தி, பழையதை பரிமாறி அதைச் செய்வதே ஏதோ பெரிய உபகாரம் என்பது போல் தனது தாயார் நடந்து கொள்வதை கண்டான் சிறுவன். காலப்போக்கில் தாத்தா இறந்ததும் அந்த பழைய தட்டை எடுத்து பத்திரப் படுத்தினான். "தூக்கிப் போடுடா அதை" என்று சொன்னாலும் மறுத்து விட்டான். "நாளை நீ பாட்டியானதும் உனக்கும் வேணுமில்ல" என்று யதார்த்தமாக பதில் சொன்னான் சிறுவன். :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச,
நாமளும்ம் பிற்பகலுக்கு வந்த்ட்டதுனால இப்ப எல்லாமே

மலரும் நினைவுகளா வந்துடறது:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன்,
,வருத்தம் வேண்டாம். நல்லதே நினைக்கலாம்.

Unknown said...

காவோலை விழும் போது பச்சை ஓலை சிரிக்குமாம்.. பின்னொரு நாளில் தானும் கா(காயந்த) ஓலை ஆவோம் எனப் புரியாமல்.. அந்தப் பழமொழி தான் வல்லியம்மா நினைவுக்கு வருது...

வல்லிசிம்ஹன் said...

வரணும் கபீரன்பன்,

ஆமாம் இந்தக் கதை வழக்கத்தில் இருக்கிறதுதான்:))

சின்னவர்களைக் குறை சொல்ல வேண்டாம்னூ ்இந்த நிகழ்ச்சியை எழுதினேன்.
வாங்கி வந்த வரம்னு
இருக்கில்லியா அது நல்லதாக இருக்கட்டும்.
ரொம்ப நன்றி. கபீரன்பன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தேவ்.
விழுவதற்கு முன்னாலிய்யெ இளம்
ஓலைகளுக்கும் பாடம் எடுப்பது காவோலையின் கடமை.:)

கோபிநாத் said...

வல்லிம்மா கஷ்டமாக இருக்கு...:(

இந்த நிகழ்ச்சியை படித்தவுடன் இந்த படமும் பதிவும் தான் ஞாபகத்துக்கு வந்துச்சி..

http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html

வல்லிசிம்ஹன் said...

ஜீரணிக்கக் கஷ்டமான பாடங்களை வாழ்க்கை நமக்குக் கொடுக்கீறது.
சிலசமயம் பு்ரிகிறது.
சில வேளைகளில் புரிவதில்லை:((

நல்லவர்க்குக் கெடுதி வராது என்றே நம்புவோஒம்.

radhakrishnan said...

காலத்திற்கேற்ற நல்ல பதிவு.
முதியோர்களைப் பாதுகாக்கும் அழகு
லா.ச.ரா.வின் பாற்கடல் கதையில்
அருமையாக கூறியிருப்பார்.இவை
கூட்டுக்குடும்பத்தில்வழிவழியாக காணக்கிடைக்கும்.இப்போது எங்கே
அவற்றைப்பார்ப்பது?