About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, June 12, 2007

184 நிறையப் பேசவேண்டும்

உங்களுக்குப் பேச வருமா என்று யாராவது கேட்டால்....
சிரிப்போம்.
சர்வ அலட்சியமாக பேசுவது நமக்குக் கைவந்த கலை.
அதுவும் திருமணம் ஆனபோதில் இருவருக்கும் பகிர்ந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள்.
பிறந்ததிலிருந்து இப்போ திருமணம் ஆகும் வரை நடந்த அத்தனை சேதிகளையும் சொல்ல வேண்டும்.

இது ஒரு ஆறு மாதங்கள் தள்ளும்.
பிறகுதான் கொஞ்சம் தகராறு.
முழுவதும் புரிந்துகொண்ட தம்பதியரைப் பற்றிப் பிரச்சினை இல்லை. புது மோகத்திலிருந்து விடுபடாதவரை தப்பே கண்ணில படாது.
அப்புறம் கணவன் வேலைக்குப் போக ,மனைவி வீட்டிலிருந்தால்
வேலைக்கும் போகாத நிலையில் கொஞ்சமே கொஞ்சம்
அலுப்புத் தட்ட ஆரம்பிக்கும்.அதற்குள் ஒரு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டால் தொந்தரவு இல்லை. எங்க மகனின் சினேகிதன் சொல்றான்,"கல்யாணம் ஆன பிறகு ஒரு நாள் கூட ஹிண்டுவை அக்கடானு படிக்க முடியல்லை. கையில ஒரு குழந்தைனு கொடுத்துட்டா வம்பில்லை!!"எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் போகிறது...திருமண வீடியொக்களில் யாராவது போட்டொ எடுக்கப் பக்கம் வந்தாலேசுளித்தவன் இவன்.ஏன் மனைவியிடம் இவ்வளவு சலிப்பு என்று தோன்றியது.


என்னங்க அம்மா, நீங்களே சொல்லுங்க...போகவர நை நைனு அம்மா அப்பாவுக்கு இவ மேல கம்ப்ளெயிண்ட்....இவளுக்கு
அவங்க மேல...நின்னாங்க உட்கார்ந்தாங்க


வெளில போகக்கூடாதுனு சொன்னாங்க.


அலுப்பாப்போச்சு பிழைப்பு ...என்றான்.

இதம் தெரிந்து நடப்பவர்கள் அவன் பெற்றோர் என்று எனக்குத் தெரியும்.


அதுவும் அவன் ஒரே மகன் என்பதால்


மிகுந்த பாசம். அதே நேரம் பழைய காலம் மாதிரி எல்லாம் அநாகரிகமாக


நடப்பவர்கள் இல்லை.


அவர்களுக்குக் கூட இந்தப் பிரச்சினையா என்று அதிசயமாக இருந்தது.


(கீதா இதுக்குக் கட்டாயம் கமெண்ட் சொல்லுவாங்க)


மதிய வேளை ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போன் செய்து விட்டுப்


போனேன்.

அம்மாவும் அப்பாவும் தனிஅறையில்.


மருமகள் மதிய ஓய்வு.


நான் போனதும் இருவரும் எழுந்து வந்து ஹாலில் உட்கார்ந்து,காபிஉபசாரம் முடிந்ததும் பேச ஆரம்பித்தார்கள்.


உள்ளேஇருந்து செல்போன் அடிக்கும் சத்தமும் உடனே


சின்னக்குரலில் மருமகள் பேசும் சத்தமும் கேட்டது.

உடனே இங்கே இருந்தவர்கள் முகம் மாறியது.


இப்போது வெளில வருவாங்க. அப்புறம் கிளம்பிடுவாங்க அம்மா வீட்டுக்கு.


அவன் வீட்டுக்குத் திரும்பும்போதுதான் அழைத்து வரவேண்டும்.


என்று அவர்கள் சொல்லி முடித்ததும்


மருமகள் வெளியில் வரவும் சரியாக இருந்தது.


அந்தப் பெண் என்னைப் பார்த்து அழகாகச் சிரித்துவிட்டு,


நான் கொஞ்சம் வெளில போகணும்மா. சாயந்திரம் ஆகும் வர.

ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது செய்துடுங்க .எங்க ரெண்டுபேருக்கும் சாப்பாடு வெளியில் என்ற மரியாதை வார்த்தைகளோடு


கிளம்பினாள்.


இவர்கள் முகத்தைப் பார்த்தால் கசப்புத் தெரிந்தது.

ஏனென்ற கேள்வியோடு அவர்களை நான் பார்க்கவும்,


"இது தினம் நடக்குதும்மா. பிறந்த வீட்டிலிருந்து போன் வரும்


உடனே போயிடுவாங்க.எங்களோட இருக்கணும்னு தோணலியே


நாங்க என்ன இது போலத் தினமுமா வீட்டைப் போட்டுட்டுப் போவோம்


இல்ல அப்படித்தான் எங்க மாமியார் விட்டாங்களா


சொல்லுங்க"


என்று மனோவோட அம்மா கேட்டார்.

"வீட்டுவேலையில் எல்லாம் உதவியாத்தான் இருக்காங்க. எங்களோட இந்த வரவேற்பறையில ஒண்ணா உட்கார்வது சொல்பம்.

புதுசா ஒரு பொண்ணு வருது.நம்மளோட சந்தோஷமா இருக்கப் போகிறதுனு நினைச்சோம்மா. எங்க கிட்ட என்ன தப்போ"பேசிக்கொண்டே போனார்..எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான்

தெரிந்தது. அது என்னோட வயதைப் பொறுத்ததோ என்றும் சந்தேகமாகவும் இருந்தது.

எதற்கும் புதுப்பெண்ணையும் அழைத்துப் பேசவேண்டும் என்று சிறிது நேரம் அவர்கள் ஆவலாதியைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் மனோவுக்குத் தொலைபேச வந்தேன்.வீட்டுக்கு ஒருநாள் மாலை வருமாறு அழைத்ததும் அவனுக்குச் சிறிது

தயக்கம்தான். நானும் ஏதாவது அறுக்கப் போகிறேனோ என்று பயம் போலிருக்கு. எங்க வீட்டுச் சிங்கமும் வற்புறுத்தியதில் சம்மதித்தான்.

அம்மா அப்பாவையும் அழைத்து வரவேண்டுமா என்றும் கேட்டான்.இந்தப் பசங்களுக்குத்தான் எவ்வளவு சோதனை. பெற்றோரையும் சந்தோஷமா வைத்துக்கணும். பெண்டாட்டி கண்ணும் கலங்கக் கூடாது,பெரிய பொறுப்புத்தான்:-)) ஒரு சனிக்கிழமை மாலை இருவரும் புதிதாக வாங்கிய
ஸாந்த்ரொ காரில் வந்தார்கள். கூடை ஒன்றில் பழங்கள் அலங்கரித்து
,பூங்கொத்து ஒன்றும் வாழ்த்துக்களொடு வரவேற்பரையில் வந்தன.

இங்கிதம் தெரிந்த குழந்தைகள் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
உட்கார்ந்து பேசிவிட்டு உணவு உண்ண வந்தோம்.
மனோவின் மனைவி ஹரிணி உடனே உள்ளே வந்து சமையலறையில் உதவி செய்ய ஆரம்பித்தாள்.அழகாக மேஜையில் எடுத்துவைத்த உணவுவகைகளை
உண்டுமுடித்தபிறகும் கூடவே வந்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தோம்.

சிறிது சிறிதாக பேச்சு வளர்ந்து தற்போதைய பிரச்சினைக்கு வந்தது.
நான் ஹரிணியிடம் நேரிடையாக விஷயத்தை அணுகும் அளவுக்கு அவள் நெருங்கிவந்துவிட்டாள்.
ஏம்மா என்னத்தினால இந்த மாதிரி தொந்தரவு,
அவங்க வகைதெரிந்த மனுஷர்களாச்சே என்றதும்
"நான் என்ன செய்தால் அவங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று தெரியவில்லை ஆன்டி.என்னால முடிஞ்ச வேலையை செய்யறேன். and I leave them alone,so they can carryon their praivate life
as they have done before our marriage"என்றாளே பார்க்கணும்.
இவள் அவங்க தனிமையை விருன்புகிறார்கள் என்ற நினைப்பில் வீட்டைவிட்டுக் கிளம்ப
வேறு வேறு இடங்களுக்குப் போய்விட்டு வந்திருக்கிறாள்.

வாலண்டரி சர்வீசிலும் இருப்பதால் பல முதியோர் இல்லங்களுக்கும் போய் வருவதாகச் சொன்னதும்
எனக்குக் குழப்பமாக இருந்தது.
இதை அவர்களிடம் சொல்லுவதில்லையா. பிரச்சினையே இல்லாத இடத்தில்
இவ்வளவு அமைதியில்லாமல் போய் விட்டதே,எனவும்
அவள் உடனே அவங்கதான் அவங்க அறைக்குப் போயிடராங்களே ,நான் பிறகு என்ன பேசுவது,
என்றாள். நான் என்ன கௌன்சலரா ,எல்லாருக்கும் புத்திமதி சொல்ல என்று நினைத்தபடி உண்மை நிலையை விளக்கவும் புருஷன் மனைவி இருவர் முகங்களிலும் தெளிவு வந்தது.

எங்கேயோ செய்யற சோஷல் சர்வீஸ் வீட்டிலேயெ நீ ஆரம்பி,
வேணுமான்னா வங்களையும் அழைச்சிட்டுப் போ.
இருவரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக நினைக்கிறார்கள்.
இயல்பாகவே நிறையப் பேச மாட்டார்கள். நீதான் அவர்களை
வெளியில் அழைத்துவரணும் என்றதும்
அவளும் மகிழ்ச்சியாகக் கிளம்பினாள்.
இரண்டு வாரங்கள் கழித்து அவர்கள் அனைவரையும்
மெரினாவில் நடைப்பயிற்சியின் போது சந்தித்தோம்.
மாமியாரும் மருமகளும் முன்னே நடக்க அப்பாவும் மகனும் பின்னே வந்தார்கள்.
மனோவை நான் எப்படியிருக்கு குடும்பம் என்று கேட்டதற்கு
நான் தனியாயிட்டென்மா....என்றான்.
ஏன்ப்பா என்றால் அவங்க எல்லாம் ஒண்ணூ சேர்ந்துட்டாங்க என்றபடி சிரிக்கிறான்.

42 comments:

நாகை சிவா said...

தலைவி கீதா வந்து பதில் சொல்லட்டும்.... அப்பால தான் நான் பேசுவேன்... நானும் நிறைய பேசுவேன்...

துளசி கோபால் said...

புரிஞ்சுக்க முடியாமல் வர்ற குழப்பங்கள்தான் இத்தனையும்.

மனம் விட்டுப்பேச ரெண்டு பக்கத்துக்கும் ஒரு தயக்கம், ஏன்........ பயமுன்னே
சொல்லலாம்.

அதுக்குத்தான் உங்களைப்போல ஒருத்தர் மீடியேட்டரா இருக்கணும்.
நல்ல வேலை செஞ்சீங்க. வாழ்த்து(க்)கள்.

வடுவூர் குமார் said...

இந்தப் பசங்களுக்குத்தான் எவ்வளவு சோதனை. பெற்றோரையும் சந்தோஷமா வைத்துக்கணும். பெண்டாட்டி கண்ணும் கலங்கக் கூடாது,பெரிய பொறுப்புத்தான்:-)
மஹா பெரிய பொறுப்பு.
ஆனாலும் கடைசியா சொல்லிய "நான் தனியாகிவிட்டேன்" என்று சொல்லக்கூடிய அபாயமும் இருப்பதை மறக்க/மருக்க முடியாதே!!

ambi said...

//கீதா இதுக்குக் கட்டாயம் கமெண்ட் சொல்லுவாங்க//

ha haaaa :)))) geetha illa geetha paati. :p

கலக்கிடீங்க போங்க. கைவசம் சரக்கு நிறைய இருக்கும் போலிருக்கே.

பையன்கள் பாடு தான் எப்பவுமே திண்டாட்டம். சரியா சொன்னீங்க. இந்தாங்க சொன்ன வாய்க்கு நெய் மணக்க கேசரி.

வல்லிசிம்ஹன் said...

இப்பப் பெசினதுக்கும் நன்றி அப்பால பேசப்பொறதுக்கும் நன்றி
புலி அவர்களே.
கீதாவுக்கு இந்தப் பிரச்சினை வந்தே இருக்காது.:))))))

வல்லிசிம்ஹன் said...

இந்த விஷயத்துல அந்தப் பொண்ணு தன்மையா எடுத்துக்கிட்டதால சரியாப் போச்சு.
பெருந்தன்மையா இருக்கிற பெற்றோரைப் புரிஞ்சுக்கணும்னா
அவங்களும் மனம் விட்டுப் பேசணும்னு எனக்குத் தோன்றும்.
அட்லீஸ்ட் சொன்னோம்கிற திருப்தியாவது இருக்கும்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.,மனோ சொன்னது விளையாட்டுக்கு.
மத்தபடி அவங்க ரெண்டு பேரும் முன்னைவிட அந்நியோன்னியமா இருக்காங்க.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,வரணும்.
இதெல்லாம் தலை நரைக்கும்போது கூடவே வர அனுபவங்கள் தான்.

எல்லாக் குழந்தைகளும் நல்ல பசங்கதான்.நம்ம பொண்ணுங்களுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் பிறந்துவீட்டு சம்பந்தமானபிரச்சினை வராம இல்லை.
தப்பாப் புரிஞ்சுக்கிறதனால வர குழப்பத்தை மட்டுமே தீர்க்க முடியும்.வேணும்னே செய்யறதெல்லாம்
சுலபமாத் தீராது.
கீதாவுக்கு...அம்பி என்னவோ பேசறார்..நீங்க கண்டுக்கவே இல்லையே.

ambi said...

//கீதாவுக்கு...அம்பி என்னவோ பேசறார்..நீங்க கண்டுக்கவே இல்லையே.
//

@valli madam, i could hear *Narayana! Narayana! background sound. :)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நாரதர் வேலை நமக்குப் பழக்கம்தானே.:-)))

ம்ம்ஹூம். ஷி இஸ் ரியலி பிஸி.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
இது நடந்து எட்டு வருஷமாச்சு.
இப்ப மனோசார் ரொம்ப சுறுசுறுப்பான,
யோசிக்கவே நேரம் இல்லாத அப்பா.
ரெண்டு பொண்ணுங்க.:-))

கீதா சாம்பசிவம் said...

நான் இல்லாத நேரமாப் பார்த்து எல்லாரும் சேர்ந்து என் தலையை உருட்டறாபோலத் தெரிஞ்சது. அதான் ஒரே தலைவலியா நேத்திலே இருந்து? :P

@அம்பி, என்ன அதுக்குள்ளே இந்தப் பிரச்னை உங்களுக்கு ஆரம்பிச்சாச்சா? உங்க பின்னூட்டத்தைப் பார்த்தாலே புரியுதே!:P

@புலி, என்ன இது நீங்களுமா? முதல்லே நான் சொன்ன பொண்ணைக் கல்யாணம் செய்துக்குங்க, பார்க்கலாம். :D

வல்லி, எல்லாருக்கும் எல்லாத்தையும் பேசிப் புரிய வைக்க முடியாது. நாம புத்திமதி சொன்னாலும் சிலர் அதையும் தவறாய்ப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. இடம், மனிதர்கள் எல்லாத்தையும் பொறுத்த ஒரு விஷயம் இது.

வல்லிசிம்ஹன் said...

கீதா, இந்தப் பையன் கேட்டுக்கொள்கிற டைப். மேலும் ரொம்பப் பழகின குடும்பம்.

சொன்னால் கேக்காதவங்க கிட்ட ஓண்ணும் பலிக்காது. அதெல்லாம் ஒரே வழிப்பாதை.
தான் சொன்னதையே சொல்லி அதுதான் சரியான பாதைனு முரண்டு பண்ணும்.

இந்தப்பசங்களுக்கும் எனக்கும் உறவு இல்லை,அதனாலியே அதுகள் காது கொடுத்ததுனு நினைக்கிறேன்.
தலைவலி போச்சா_:))))))

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல படியா வந்து ஒரு தீர்வு சொல்ல ஆள் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! :))

மதுரையம்பதி said...

நல்ல அனுபவம்தான் வல்லியம்மா.....

மோகன் காந்தி said...

புரிஞ்சுக்க முடியாமல் வர்ற குழப்பங்கள்தான் இத்தனையும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எடுத்துச் சொன்னபோது; பிரச்சனையைப் புரிந்து கொண்டது. இவர்களது சிறப்பு...மனந்திறந்து பேசவேண்டும். பக்குவமாக அணுக வேண்டும். நமக்கும் நல்ல அனுபவம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், கொத்ஸ் ரெடிமேட் நிவாரணம் :-)).

சிலசமயம் நடக்கிறது.சிலசமயம் முடியாது.
நேரம்,காலம்தான் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. நல்ல அனுபவம்தான்.
இது எனக்கும் இப்போது உதவுகிறது:-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மோகன் காந்தி,
நன்றி.

கண்மணி said...

you hv done a wonderful job வல்லியம்மா.அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கிறோம்னு நெனச்சாத்தான் சங்கடம்.ஆனா ஒரு வெல்விஷரா நீங்க செஞ்சது100% கரெக்ட்.
அதுக்கு இப்படியொரு நல்ல ரெஸ்பான்ஸும் இருந்தா நாம் செஞ்சது தப்பில்லைன்னு நிம்மதி வரும்.

வல்லிசிம்ஹன் said...

கண்மணி வாங்க.
கொஞ்சம் பயமாத்தான் அணுகினேன்.
எங்க வீட்டிலேயும் அம்மாஅப்பாவுக்கு அந்த மாதிரிப் பிரச்சினை வந்தது.இருவரும் அன்பான ஆனால் கம்யூனிகேட் பண்ணத்தெரியாத மக்கள்.
கடைசி வரை அவர்களை யாரும் புரிந்துகொண்டார்களா என்பதுதான் எனக்கு வருத்தம். இந்தத் தம்பதிக்கும் அது நடக்கக் கூடாது என்ற ஆதங்கம்தான். பாராட்டுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோகன்,
நல்ல குழந்தைகள் இருவரும்.

அறியாமையினால செய்யற தவறைப்புரிந்து கொண்டார்கள்.
என் வார்த்தைக்கும் மதிப்புக் கொடுத்தார்கள்..

நேரம் நல்ல நேரமாக இருந்திருக்கிறது.
நன்றி யோகன். மனசுவிட்டுப் பேச எல்லாருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறதானு தெரியலை.

நானானி said...

வல்லி!
'தகவல் இடைவெளி' எப்படி நல்ல உள்ளங்களின் வாழ்கையை புரட்டிப்
போடுகிறது? தெளிவான பெண்..சொன்ன அறியுரையை ந்ல்லமுறையில் எடுத்துக்கொண்டு
புரட்டியதை நேராக்கிவிட்டாள்.
உங்களுக்கும் அவளுக்கும் வாழ்த்துக்கள்!!

G.Ragavan said...

என்னடா வல்லியம்மா பெரிய பதிவாப் போட்டுட்டாங்களேன்னு படிச்சா முடிவு மகிழ்ச்சியா இருந்தது :) நல்லது. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

தலைமுறை இடைவெளிக்கு இப்போதெல்லாம் ஐந்து வருடங்களே போதும்.
பெரிய பள்ளம் ஆகிவிடுகிறது.

பேசலைனா கணவன் மனைவிக்கே பிரச்சினை வரும்போது,
மருமகள் மாமியார் கேட்பானேன்.நன்றி நானானி.
பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.தாமிரபரணிக்கதை ஒண்ணும் காணோமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன். பதிவு பெரிசாத்தான் வந்து விட்ட்டது.
கதை அளந்து அளந்து சுருக்கமா சொல்லவே தெரியவில்லை.:)))
ஆமாம் சுபம் போடலை என்றால் எனக்குத் தூக்கமே வராது!

நானானி said...

வல்லி!
தாமிரபரணிக் கதைகளுக்கு முன்
குங்குமம் நீட்டி அழைக்கிறேன்.
வாருங்கள்!

வல்லிசிம்ஹன் said...

இதோ குங்குமம் எடுத்துக் கொண்டுவிட்டேன்.
உட்கார்ந்தாச்சு.கதை வேணும்.
ம்ம்ம்ம்ம்.:)))

காட்டாறு said...

ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்தது பெரிதல்ல வல்லியம்மா... பெரியவர்களோட சேர்த்து வைத்தது..ம்ம்ம்... நன்றி உங்களுக்கு. தனியாக போகனுமின்னு நினைக்கும் இக்காலத்தில் பெரியவர்களுடன் சேர்ந்து வாழும் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க காட்டாறு, ஏற்கனவே ஒரே பையன் என்கிறதால அப்பா,பையன் ரெண்டு பேரிலதான் வீடும் இருக்கு.
கொஞ்ச நாள் இதே போலப் போயிருந்தால் நீங்க சொல்கிற தனிக்குடித்தனம் வந்து இருக்கும்.
அந்தப்பையன் எங்க கிட்டப் பேசப்போயிதான் ஏதோ புரிந்தது.
அவனாவே குமுறிகிட்டு இருந்தால் ஒண்ணும் நடந்து இருக்காது.
நன்றிப்பா.

குமரன் (Kumaran) said...

இந்தப் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு இதோ கீழே போறேன். மாமியாருக்கு மருமகன் தங்களோட உக்காந்து பேசாம அடிக்கடி மேலே போய் வேலை/தமிழ்மணம்ன்னே பொழுதைப் போக்கறார்ன்னு ஒரு குறை இருக்குன்னு எங்க வீட்டுல சொல்லிக்கிட்டே இருக்காங்க. அப்புறம் பேசலாம் அம்மா. பை பை. :-)

Aruna Srinivasan said...

அருமையான காரியம் செஞ்சிருக்கீங்க ரேவதி. உறவுகளில், வெளிப்படையா பேசினாலே பாதி பிரச்ச்னை பறந்து போயிடும். பலருக்கு இதில் ஏனோ தயக்கம்!

Thekkikattan|தெகா said...

என்னுடைய அணுகுமுறை இந்த communication gapகளுக்கு குடும்பத்தில் ஒரு ஜோக்கராக இருப்பது. நினைப்பதை படீர்ரென்று எல்லோரின் முன்பும் போட்டுடைத்து ஒரு வித இறுக்கத்தை தளர்த்துவது முதலில்.

எல்லோரையும் take it easy பாலிசியில் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்... பேசணும், பேசணும் மனசு விட்டுப் பேசணும்.

சுபம்!! :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன். தாமத பதிலுக்கு மன்னிக்கணும்.
ஒரே தளத்திலே இருந்தாலே பேச்சு குறைந்துவிடுகிறது.

இதில தமிழ்மணமும் மாடியும் சேர்ந்து கிட்டா கேக்கவா வேணும்... தினம் எல்லாரும் ஒரு நேரத்தில கூடிப் பேசணும்.

முன்ன ஏதோ கதைல படிச்சிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அருணா.
ரொம்ப ஜெண்டில் இந்தப் பெற்றோர்.

இந்தளவாவது பேசுறாங்களேனு சந்தோஷமா இருக்கு. பாவம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தெ.காட்டான்,

ஜோக்கரில்லாம எந்தக் குடும்பம் கலகலப்பா இருக்கும்???

சிலசமயம் ஜோக்கருக்குக் கேலிகள் வந்துவிழும்.. என் தம்பி இறுக்கமான சூழ்னிலைல
இப்படித் தைரியமா ஆட்டம் போட்டு ரொம்ப லைட்டா செய்துடுவான்.
கோபமா வரும்,ஆனா சிரிச்சுடுவோம்.
அம்மா அப்பா செல்லங்களே இப்படித்தான் இருக்கும்:))

நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும் தெ.கா.

தம்பி said...

ஆஹா! இது நல்லா இருக்கு. ஆனா ஹரிணி மாதிரியே எல்லாருக்கும் கிடைப்பாங்களா? இல்ல மனோ மாதிரி எல்லாருமே இருந்துடுவாங்களா?

மனசுதாங்க எல்லாத்துக்குமே காரணம்.

ரொம்ப நல்லா இருந்தது பதிவு.

வல்லிசிம்ஹன் said...

தம்பி,
நான் சொன்னது அவங்க லைஃபில ஒரே ஒரு ஆறு மாதம்.

ஒருத்தரை ஒருத்தர் நம்பிக்கைவச்சிட்டாங்கன்னா மத்ததெல்லாம் சுலபமாயிடும்.
கஷ்டம்தான்.
மனோ எல்லாத்தையும் லகுவாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டுவிட்டான்.
ஹரிணிக்கு இன்னும் கொஞ்சம் பிரச்சினை இருக்கத்தான் செய்யுது.
மாமியார் வெளிப்படையா பேச ஆரம்பிச்சுட்டாங்க.

சரியாப் போயிடும்.

Sumathi. said...

ஹாய் வல்லி மேடம்,

உங்களோட இத பதிவு என்ன ரொம்ம்பவே பாதிச்சிடுச்சு.உங்களை மாதிரி ஒருத்தர் எனக்கும் கிடைசிருந்தா நான் கூட எவ்வளவோ
பிரச்சனைகளை கடந்திருப்பேன். ஹும் காலம் கடந்து போச்சு.
ரொம்ம நல்லாயிருக்கு மேடம்.

வல்லிசிம்ஹன் said...

சுமதி,வரணும்......

ஏம்பா அந்த மாதிரி நினைக்கணும்.
ஒரு சந்தர்ப்பம் விட்டா இன்னோண்ணு வரும்.

எப்படி இருந்தாலும் யாருமே நூத்துக்கு நூறு வாழ்க்கையில் ஜெயித்ததாக வரலாறே கிடையாது.
சந்தர்ப்பம் வாய்த்தால் வெற்றி. இதெல்லாம் இருக்கட்டும்,எங்க மாமியார் இப்போ இருந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்னு யோசிக்கிறேன்:)))

நானானி said...

குங்குமம் எடுத்துக்கொண்டு கதை கேட்க ஒக்காந்தாச்சா..? நல்ல கதையாயிருக்கே!!!நான் அழைத்தது என் குங்குமம் பற்றிய பதிவைப் பார்க்க. ஊட்டாண்ட வரது