About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, February 16, 2007

எங்கள் குழந்தைகள்-சின்னம் சிறு வயதில் பள்ளி விடுமுறை
எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்சிலி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.
மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.

8 comments:

வடுவூர் குமார் said...

நினைவு தெரிந்து பாட புத்தகத்தை தவிர நான் முதலில் படித்தது படக்கதை "இரும்புக்கை மாயவி".
எங்கூர்காரர் நாவல்கள் நன்றாக இருக்கும் என்று பல பேர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
இன்னும் சமயம் வரவில்லை-- படிக்க.

செல்லி said...

வணக்கம் வல்லி
//டின் டின்// அந்தக் காலத்தில் எனனுடைய ஃப்வறிற் புத்தகம் இந்த புத்தக தொடர்தான்.
பழைய நினைவுகளை மீட்டியிருக்கிறீங்க.
நல்லாயிருக்கு
நன்றி

துளசி கோபால் said...

வல்லி,

ச்சும்மா இருக்கமாட்டீங்களா? எதுக்கு இப்படி என்னைக் கொசுவத்தி சுத்த
வைக்கறீங்க?
டின் டின் எல்லாம் நான் படிச்சது ச்சின்னப்புள்ளையில் இல்லை. ஒரு 31 வருஷத்துக்கு
முன்னாலேதான்னு சொன்னா நம்பணும், ஆமா:-) அதுலே ஸ்நோயி என் ச்செல்லம்.
சமர்த்துச் சக்கரைக்குட்டி.

ஒலி நாடா........... நானூறு கிடக்கு. கேக்க நேரம் இல்லை.

வீடியோ டேப் .......... ஒரு ஆயிரத்துக்கும் அதிகம். டிஸ்போஸ் பண்ணறது
எப்படின்னு முழிச்சுக்கிட்டு இருக்கேன்(-:

வல்லிசிம்ஹன் said...

இரும்புக்கை மாயாவி நல்லா இருக்குமே. வடூரார் கதைகள் ஷெர்லக் ஹோம்ஸின் தமிழ்ப் பதிப்பு போல இருக்கும்.ஹௌண்ட்ஸ் ஆஃப் பாஸ்கர்வில்
பாஸ்கரவிலாஸ் படுகொலை என்று வரும்.
வினோதமாக இருக்கும்.ஈசிச்சேரில் பாட்டி படுத்துக் கொண்டு படிக்கும் காட்சி மறக்கமுடியாது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க செல்லி.
நினைவுகளை அசை போடுவதில் நல்ல சுகம் இருக்கிறது.
நினைவு இருக்கும்போது எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
நீங்களும் படித்துப் பின்னூட்டம் செய்வது நிறைவாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளஸி.
ஃப்ளாஷ்பாக் சொல்லறீங்களா?:-0)

நானும் இந்தப் புத்தகங்களை 1977,க்கு மேல தான் படிச்சேன்.நம்ம கணக்குதான் பக்காவா வருதே.
நீங்க என்னை விட சின்னப் பிள்ளைதானே.சரியாயிருக்கும்.மனசே வரவில்லை தூக்கிப் போட இந்த ரிகார்டை எல்லாம்.
இனிமே புதுசா ப்ளேயர் வாங்கினா கூட பாடாது.:-(

மங்கை said...

வல்லி

எங்க நகர்ல முதல் முதல்ல இந்த ட்ரேட் கேம், நான் தான் வாங்கினேன், அப்போ அடஞ்ச சந்தோஷத்திற்கு அளவே இல்லை வல்லி.. பெருமையும், பீத்தலும்.. ஆஹா.. எப்பவும் என்னை கிள்ளிட்டே இருந்த சுரேஷ்,ட்ரேட் வாங்கின அப்புறம் நான் என்ன சொன்னாலும் செய்ய காத்துட்டு இருந்தான் :-)))..எப்பவும் வீடு நிறைய குட்டீஸ்.. தாத்தாக்கு கோவமா வரும்...

அப்புறம் இந்த புத்தகம் படிக்கிறது எல்லாம் அண்ணாவோட வேலை..நம்ம அந்த பக்கம் தலை வச்சு கூட படுத்ததில்லை,,

பள்ளியில படிக்கும் போது சீனியர்ஸ் குட் புக்ஸ்ல இருக்கனும்னு, அண்ணாவோட ஹெரால்ட் ராபின்ஸ் புத்தகத்த ஒரு தடவை சுட்டுட்டு போய் ஒருத்திக்கு பிரெசன்ட் பண்ண, அவ அத அவ சீனியர்க்கு, (அண்ணாவோட சினேகிதன்) பிரெசன்ட் பண்ண, அது அண்ணாவுக்கு தெரிஞ்சு, ஒரே சண்டை
ஆனா நாம தான் கடை குட்டி ஆச்சே... யாரும் டச் பண்ண முடியாது.. :-)))...

இத அண்ணா இன்னும் சொல்லுவார்

நீங்க எல்லாம் எழுதறது பார்க்கும் போது.. உண்மையில் இந்த புத்தகம் படிக்கிற பழக்கம் எனக்கு இல்லாதது நினச்சு இப்ப வருத்தப்படறேன்.. அதனாலேயே இப்ப எழுதறது இல்லை...நம்ம எழுத்தோட தரத்த உயர்த்தீட்டு தான் இனி எழுதனும்னு இருக்கேன்..வீடு நிறைய புத்தங்கள் இருந்தும் அது தொட்டு கூட பார்த்தது இல்லை.. ஹ்ம்ம்..

நன்றி வல்லி பழைய நினைவுகளை கொண்டு வந்ததுக்கு

வல்லிசிம்ஹன் said...

மங்கை, எங்க வீடில நிறைய வெளியிலே போக அனுமதி கிடையாது.
பெண்கள் வீட்டுக்குள்ளதான் இருக்கணும்னு வெற எழுதப் படாத ரூல்.
அதனால் புத்தகங்களும்,கைவேலை,பாட்டுமே எனக்குப் பழக்கமாகி விட்டது.

நீங்கள் எல்லோரும் சமூக சிந்தனையோடு நிறைய எழுதுகிறீர்கள்.
வெளி உலகமும் நிறையத் தெரியும்.
பாருங்கள் உங்களுக்கும் படிக்க நேரம் கிடைக்கும்.ஆரம்பித்துவிட்டால் அப்புறம் சொல்லுவீர்கள்.:-)
நன்றி மங்கை.