About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, February 06, 2007

சித்திர ராமன்......2கற்பார் ராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ!
எழுத்திலோ,சொல்லிலோ பொருளிலோ பிழை இருப்பின் மன்னிக்க வேண்டும்.
சில நாட்களாக மன அமைதிக்காக
கதாகாலாட்சேபங்கள் கேட்பதை ஒரு
சட்டமாக வைத்துக் கேட்பது ,
வழக்கமாகி விட்டது.
கேட்பதும் விட்டுவிட்டால் மனம் எப்போதுதான் அமைதியாய் இருக்கும் என்பது சந்தேகம்தான்.
அவைகளில் மிகவும் மனதைக் கவர்ந்தது கம்பரமாயண சொற்பொழிவுகள்.
''வித்லோகா''வில் வாங்கிய 'சிடி'க்கள்
மிகவும் உபயோகமாக இருக்கின்றன.
கதை சொல்பவரின் நா வன்மை பிரமிக்க வைக்கிறது.
அவர் எல்லாவித நலன்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இங்கே வந்ததிற்கும் ஒரு கூடுதல் நல்ல பயன் ,
தொந்தரவு ஏதும் இல்லாமல் கதை கேட்க முடிகிறது;-)
வெளியே மைனஸில் குளிர்,பனி.
11 வருடங்களில் இந்த வருடம்தான் ரிகார்ட்
குளிருக்கும்,காற்றுக்கும்.
1996இல் ஒரு பனிப்புயலாம்.
இந்தவருடம் 2007ல்,
இதுப்போல் பெய்தது இல்லை என்று குளிர்மழை
கொட்டுகிறது.
அடுப்பு பக்கம் ஆசை ஆசையாக இருக்கலாம்.
அங்கே சூடு நிறைய உண்டே!!
அப்பப்போ ஏதாவது சுட வச்சு வயிற்றுக்கும் ஈயலாம்.
சமையல் முடிந்தால் காதுக்கு விருந்து.(?)
இப்போது கேட்கும் உபன்யாசம்.
ராமன், சீதை கதை எல்லோருக்கும் தெரியும்.
அதிலே உட்கதைகள் அனேகம்.
அவைகளை இஙகே குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில் பால காண்டம்.
தசரதன் யாகம் முடிந்து நான்கு புதல்வர்களும் பிறந்தாச்சு.
மாணிக்கம் வைரம் பதித்த நான்கு தொட்டில்கள்.
குழந்தைகள் திடீரென அழத் தொடங்கின.
ஒருவருக்கும் புரிய வில்லை.
தெய்வக் குற்றம் கூட இல்லையே என்று வசிஷ்டரை வரவழைத்தார்களாம்.
அவர் ஒரு நொடியில் தீர்த்து வைத்தாராம்
பிரச்சினையை.
''ராமனையும் லட்சுமணனையும் சேர்த்து ஒரு தொட்டிலில் போடுங்கள்.
இன்னோரு தொட்டிலில் பரதனையும் சத்ருக்கினனையும்
இடுங்கள்.''
ஏனெனில் ராமனுக்காகப் பிறந்தவன், லட்சுமணன்.
பரதனுக்குப் பணிவிடை செய்யப் பிறந்தவன்
சத்ருக்னன்.
இவர்களைப் பிரித்தால் அழுகைதான் என்கிறார்
முனிவர்.
அப்படி ஒரு இணையாக நால்வரும் வளருகிறார்கள்.
விஸ்வாமித்திரர் தாடகை,சுபாகு வதங்களுக்காக
அழைத்துப் போகும்போது அவர்களுக்குப் பன்னிரண்டு
வயது. அந்த நாள் திருமண வயது
காத்திருக்கும் சீதைக்கு ஆறு.
அகல்யா சாபம் தீர்ந்து, மிதிலைக்கு வரும் ராமலட்சுமணர்கண்டு மயங்குகிறார்கள்
மக்கள்.
வில்லைக் காண முனிவரும் சபைக்கு இருவரையும் அழைத்துப் போகிறார்.
வில்லைக் கொண்டுவரச் சொல்லி மன்னனிடம் கேட்க வருகிறது..
சிவதனுசு!
அதைக் கொண்டுவருபவர்களோ ஆயிரக்கணக்கான மல்லர்கள்.
விஸ்வாமித்திரர், 'ராமா வில்லைப் பார்த்துவிட்டு
வா' என்கிறார்.
ராமனும் தன் சிங்க நடையில் கம்பீரமாக ந்அடந்து வில்லிருக்கும் இடத்துக்கு வருகிறான்.
அனாயாசமாக வில்லைத் தொட்டுத் தூக்குகிறான்.
வில்லின் ஒரு நுனியில் தன் ஸ்ரீபாதத்தின்
கட்டைவிரலை வைத்து,
மறுமுனையைக் கையால் எட்டி,நாண் பூட்டப் போகும்போதே வில் முறிந்து வீழ்கிறது.
தன் மாளிகைச் சாளரத்தில் இருந்து பார்த்துக் களித்த
அரசகுமாரன்தான் வில்லையும் முறித்தான் என்று உறுதி செய்த பிறகே,
சீதை மகிழ்கிறாள்.
வரமாலையைக் கையில் எடுத்து சபை நோக்கி வருகிறாள்
.
'இது என் மகள் சீதை அவளை நீ திருமணம் செய் ராமா'
என்று ஜனகன் சொல்ல,
இப்போது இல்லை. தந்தை வரட்டும் பிறகே
சுப காரியம் நடக்கும் என்ற சொல்
வருகிறது ராமனிடமிருந்து.
சீதை சந்தோஷப் படுகிறாள்.
'மெய்யெழில், கையெழில்,கால் எழில் ,தோள் எழிலுடன், ராமன் குரலும் எழிலே. சிந்தனையும் எழிலே'
என்று பூரித்துப் போகிறாள்.
இவர்களின் திருமண விழா அடுத்த
சில தினங்களில் நடக்கிறது.
ஸ்ரீராமசீதாராமனுக்கு மங்களம்.

8 comments:

Mathuraiampathi said...

நான் இப்போதே சீதா கல்யாண வைபோகமே!, ராமா கல்யாண வைபோகமே என்று பாடிவிட்டேன்....
அடுத்தபதிவினை எதிர்பார்த்து...நன்றி வல்லியம்மா.

நான் பாடல்கள் கேட்டும், பூஜைகள் செய்தும் மன அமைதி பெறுகிறேன், நீங்கள் காதால் கேட்டு பெறுகிறீர்கள்...ஆஹா, இதுதான் வானபிரஸ்தமோ?..

வடுவூர் குமார் said...

நாங்க இந்த காதாகாலட்சேபம் எப்படி கேட்டோம் தெரியுமா?
நடுத்தெருவில் கோவிலுக்கு முன்பு ஒரு சின்ன மேடை & மைக்.பள்ளி விடுமுறை என்பதால் மொத்த குடும்பமும் வந்துவிடுவார்கள்.
யாருடைய கதாகாலட்சேபம் "திரு.கீரன்" மற்றும் பலர்.
எங்கு?நாகப்பட்டினம் கிருஷ்ணன் கோயில் முன்பு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
வானப்ரஸ்தம் இப்படி இருந்தாலே போதும். கண் பார்க்க ராமன்,காது கேட்க ராமன்,மனம் நினைக்க ராமன். நா பேசுவதற்குப் பதிலாகப் பதிவில் எழுதுகிறேன்.
அக்கறையாக நீங்களும் படித்துச் சொல்லுகிறீர்கள்.இந்த நன்மையும் மன அமைதியும் அவன் எங்களுக்குக் கொடுக்கத்தான் பலன் எதிர்பார்த்த இந்தப் பாராயணம்.
பலன் பாராமல் கடமை செய்ய இன்னும் பக்குவம் வரவில்லை.
ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரவேண்டும் குமார்.
கீரன் சொல்லிக் கேட்டீர்களா.
என்ன ஒரு குரல்வளம் அவருக்கு.
ஆணித்தரம் என்றால் அதுதான்.
நாமெல்லாரும் கோவில் உள்ள ஊரில் குடியிருப்பது ஒரு புண்ணியம்தான்.
அழகன் ராமன் ஊரிலிருந்து வருகிறீர்கள். நான் இன்னும் பார்த்ததில்லை வடுவூர் ராமனை.
சீக்கிரம் அழைப்பான் என்று நம்புகிறேன்.
நன்றி.

துளசி கோபால் said...

அதி சூப்பர்!!!!

'சீதா கல்யாண வைபோகமே'

வல்லிசிம்ஹன் said...

துளசி,
நிகழும் தை மாசம் சீதாராமன் திருமண வைபவத்துக்கு வந்துட்டீங்களா/?

வாங்க வாங்க.
அதிசுந்தரன் அதிசுந்தரியைக்
கல்யாணம் செய்துகொள்கிறான்.:-)

Mathuraiampathi said...

நன்று சொன்னீர்களம்மா! ஆனால் நான் இந்த வானபிரஸ்தத்தை அனுபவிக்க இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்தபதிவை படித்த உடன் எனக்கு தோன்றிய பாடல்,

"அதிநிருபம சுந்தரனானனா" - கண்ணன் பாடல், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்.

வல்லிசிம்ஹன் said...

மௌலி, மனத்தளவில் வானப்ரஸ்தம் சாத்தியமே.
எப்படி அம்மா,அப்பாவை நினைக்கையில் குழந்தை ஆகிறோமோ ,
அதுபோல எல்லாப் பருவங்களும் மனசில் இருக்கிறது.