About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, December 28, 2006

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலா
இடுப்பில் கைவைத்துச் செங்கல் மேல் கால் வலிக்க நிற்கும் பெருமான் யார்?
நமது கண்ணன்தான்.
பார்க்கக், கேட்க வேண்டிய எத்தனையோ புராணங்களில் இந்தத் திருவிளையாடலும் அடங்கும்.

பண்டரீபுர விட்டலன் பரம குறும்புக்காரன்.
அவனோடு விளையாடின பக்தர்களும் எத்தனையோ.
அவர்கள் புராணமோ அவனை விடப் பெரியது. தொண்டர்தம் பெருமை இல்லையா.
பகவானை விட பகவானின் நாமத்துக்குப் பெருமை.

ராம நாமத்தை ஜபித்தேக் கடலைத் தாண்டியவன் நம் அனுமன்.
இங்கே பண்டரிபுரத்தில் இருக்கும் கிருஷ்ணன்
எப்படி இது போல நிற்க நேர்ந்தது?
துவரகையை விட்டு எங்கே இந்த வனாந்தரத்துக்கு வந்தான்?

அதுவும் ஒரு சின்னச் செங்கல் மேல் ஏன் நிற்கிறான்.!!

சில வருடங்களுக்கு முன்னால் கேட்க வாய்ப்புக் கிடைத்த
செய்தியை உங்களுக்குத் தருகிறேன்.
புண்டலிகன் என்று ஒரு சாதாரண மனிதன்.
அவனுக்கும் திருமணமாகி மனைவி வந்தாள்.


உலக வழக்கப் படி-----சில மனிதர்கள் செய்வது போல,
தன்னைப் பேணிக் காத்த பெற்றோரை
மறந்தான்.அவர்களைத் துன்புறுத்தவும் ஆரரம்பித்தான்.
இவன் தொல்லை தாளாமல் அவர்கள்
காசிக்குப் போய்விடலாம் என்று கிளம்புகிறார்கள்.

புண்டரீகனின் மனைவிக்கும் காசிக்குப் போகும் ஆசை வந்துவிட்டது.
புத்திர பாக்கியம் வேண்டுமே என்று கனவனை நச்சரித்து

முன்னால் போகும் பெற்றோரைத் தொடரும்படி சொன்னாள்.
போகும் பாதையில் பெற்றொரக் காணும் புண்டாலிகனுக்கு அவர்களை ஏளனம் செய்வதும் எடுபிடி ஆட்களாக
துன்புறுத்துவதும் வழக்கமாகிறது.
அவர்களும் பெற்ற பாவத்திற்கு அவனை அனுசரித்துப் போகிறார்கள்.

வாழ்க்கையும் மாற வேண்டும் அல்லவா?
துயரமே தொடர விதிப்படி முறை இல்லையே.

அதுபோல் புண்டலிகனுக்கும் ஒரு அதிசயம் நடந்தது.
ஒரு இரவு தூக்கம் பிடிக்காமல்
விழித்திருந்தவன் கண்களில் அழுக்குப் படிந்த ஆனால் அழகிய மங்கையர் கண்ணில் பட்டனர்.
அவர்கள் விரைந்து நடப்பதைப் பார்த்து, தன் விபரீத

புத்தியின் விளைவாக அவர்களைத் தொடர்ந்தான்.

அவர்கள் அருகிலிருந்த தவப் பெரியாரின் குடிலில் மறைந்து அந்த ஆசிரமத்தைச் சுத்தம் செய்து அழகான ஒளிபொருந்திய தேகப் பொலிவுடன் வெளி வருகிறார்கள்.

இத்தனைக்கும் அந்த மஹரிஷி அவ்ர்களைத் தியானம் கலைத்துத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அந்த மங்கையர் அவரை வலம் வந்து வணங்கிவிட்டு
வெளியே வரும்போது
அவர்களை வழி மறிக்கிறான் புண்டலிகன்.

அவர்கள் சொல்லும் விவரம் அவனைத் தெளிவிக்கிறது.
அவர்கள் அனைவரும் புண்ணிய நதிகள்.
இவனைப் போல பாப ஆத்மாக்களின்
அழுக்கு அவர்கள் உடலில் ஒட்டிக் கொள்ள,
அந்த பாபங்களைப் போக்க இந்த மஹரிஷியின்

தவ வலிமை அவர்களுக்கு உதவி செய்கிறது
என்றும் புரிந்து கொள்கிறான்.

முன்னோர்களின் ஆசியினால் அவனுக்கும் தன் தவறை உணர வழி கிடைக்கிறது. ஏனெனில்
தவறுகிறோம் என்று உணர நல்ல நேரம் வேண்டுமில்லையா?
பெற்றோரை வணங்கி காசி போகும் எண்ணத்தையும் விடுகிறான்.
அவர்களைக் காப்பாற்றுவதைவிடக் காசிக்குப் போவது பெரிதாகத் தோன்றவில்லை அவனுக்கு.

இங்கே தான் கண்ணன் பிரவேசம் நடக்கிறது.
துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் ,
அங்கு சென்று ,அவனைத் தரிசனம் செய்யச்
சென்றவர்கள்
நாட்டு நடப்புகளைச் சொல்லும்போது புண்டலிகனைப்
பற்றியும் சொல்கிறார்கள்.


கன்னனுக்கு ஒரே ஆவல். இந்த அதிசயத்தையும் பார்த்து விடவேண்டும். பெற்றோர்களை அவர்களின்
அந்திம கால நோய் நொடிகளின் போதும் முகம் சுளிக்காமல் பாதுகாக்கும் மனிதன்,
இவனை நாம் கண்டுகொள்ளவேண்டும் என்று
தன் பக்கம் பிரியா ருக்குமணியுடன்
சந்திரபாகா நதிக்கரைக்கு விரைகிறான்.

அங்குள்ள மக்களுக்கு கிருஷ்ணனையும் அரசி ருக்குமணியையும் பார்த்து களிப்பு
பொங்குகிறது.
அவர்களிடம் விசாரித்துக் கொண்டுப்
புண்டாலிகன் குடிசைக்கும் வந்து வெளியே

நிற்கிறான்.
அவனோ அன்னை , தந்தையருக்குப் பாத சேவை புரிந்து கொண்டு இருக்கிறான்.

கண்ணன் அவனைக் கூப்பிடுகிறான்.
நான் துவரகை மன்னன் கண்ணன் என்றும் சொல்கிறான்.
புண்டலிகனோ சேவையிலேயே கவனம் கொள்கிறான்.
கண்ணன் மீண்டும் அவனை அழைக்கிறான்.

அவனோ தன் பணியை விட்டு வர மறுக்கிறான்.
''நான் துவாரகை மன்னன் கண்ணன் வந்துஇருக்கிறேன்' என்று கண்ணன் உரைத்தாலும்

''காத்து இருக்கலாம்.'' கவலை இல்லை.''
என்று சொல்லிவிடுகிறான்,. போதாதற்கு
ஒரு செங்கலையும் தூக்கிப் போட்டு இதில் நீங்கள் நிற்கலாம் என்கிறான்.

அன்னைதந்தை சேவையில் சொல்பவனின்
வாக்குக்குக் கட்டுப்பட்டு கண்னனும் அந்த கல்லின் மேல் நிற்கிறான்.

வெளியே வந்த புண்டலிகனுக்க்க் கண்ணனும் ருக்குமணியும் அலங்காரத்தோடு காத்து நிற்பது
தெரிகிறது.
மகிழ்ச்சி,பயம்,திண்மை இத்தனை உணர்வுகளும் மனதில் பொங்க அவன் திண்டாடுகிறான்.

கண்ணனும் அவனை மெச்சி,
பெற்றோர் சேவையின் மகிமைகளைக் கொண்டாடுகிறான்.
தனக்கு இங்கேயே கோவில் வேண்டும் என்று சொல்லி
மனசார ஆசீர்வாதங்கள் செய்து
துவாரகைக்குக் கிளம்புகிறான்.

அப்படிப் பிறந்ததுதான் இன்றைய
பண்டரீபுர கோவில்.

அந்தரங்கன்,இந்தரங்கன்
எல்லோரும் நம்மிடம் அருள் செய்யட்டும்.

ஜய ஜய விட்டல பாண்டுரங்கா.
ஹர ஹர விட்டல பாண்டுரங்கா
பாண்டுரங்கா
பண்டரிநாதா.