About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, December 11, 2006

மாமி ... யார்?(சீனிம்மா)

அட

மாமியார் என்று யார் பெயர் கொடுத்து இருப்பார்கள்?
இந்த மாமி யார்? அவங்களோட மனைவி.
இவங்களோட அம்மா.

இவங்களோட பொண்ணு.(இது அந்தக் காலம்).
ஆரம்ப கால மாற்றுப்பெண் அடக்கத்துடன்,
அழகாகக் கோலம் போடுபவள். அடுக்களைக் கதவு
பின்னாலிருந்து
எட்டிப் பார்த்து(முதுகுப் புடவை போர்த்தி)
அவர் வீட்டில இல்லீங்களே என்று சொல்வதோடு சரி.

கணவனோட அம்மா அப்பா,பெரியவர்கள்,
எல்லோருடைய அனுமதியோடு வெளிலே
கணவனோட போலாம்.
ஆனால் குழந்தைகள் மத்திரம் சீக்கிரம் பிறந்து விட வேண்டும்.
அதற்குள் இன்னோரு ஓரகத்தி வந்துவிடுவாள்.
அவளும் இவளும் சண்டை போடாமல் சமையலறையில் வேலை செய்ய வேண்டும்.

மாமியாருக்கு அடுத்த இடம் முத்ல் மாற்றுப் பெண்ணுக்குத் தான்.

சில வீடுகளில்.
எப்பவுமே இறுதி வரை மாற்றுப் பெண்ணாகவே இருந்து
காணாமல் போனவர்களும் உண்டு.

இதில் அந்த மாமியாரும் அடங்குவார்.
இது மிகவும் சகஜம்.
ஏன் என்றால் மாமியாருக்கு ஒரு வயதான (புக்கக அத்தை, சித்தி)
இருந்தால்...
அவள் குரலும் அடங்கித் தான் ஒலிக்கும்.

அப்படி இருந்தவள் எங்க அம்மாவோட அம்மா.
பாட்டி என்று அழைக்க முடியாது என்று சொல்லி

அவளை நான்தான் ' சீனிம்மா ' என்று பெயர்
வைத்தேன்.
இப்போது அவளை நினைக்கக் காரணம்,
எங்க இரண்டாவது பேரன் கிருஷ்ணா.

இந்த ஊருக் குளிர், மற்றும் நமது வயது,
உடலுக்கு உண்டான உபாதைகள்
எல்லாம் என்னை யோசிக்க வைத்தன.

இறந்த காலம், நம் முன்னோர்கள்
எல்லோரையும் நாம் எப்போதும் நினைக்க
வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் இது போல் முக்கியமான சில சமயம் ஆனந்தமான
சிலசமயம் சிரமமான நேரங்களில் அவள் நினைவு என் அம்மா நினைவோடு சேர்த்து வரும்.

இப்போது நான் அலுத்துக் கொள்வது போல் அவளுக்கு
சொல்லிக் கொள்ள நேரம் கிடையாது.

வேலையை நிறுத்தினால் தானே
யோசிக்க நேரம்.?

ஒரு பெண், நான்கு மகன்கள் அவளுக்கு.

தன் 37 வயதில் தன்னைவிட 18 வயது மூத்த
கணவரை, பாரிச வாயுக்குக் கொடுத்துவிட்டு,
,மறுபடி வாழ்க்கையை ஆரம்பித்தவள்.

கலைமகள்,கல்கியிலிருந்து
அன்றைய தினமணி வரைத் தனக்கு
கிடைக்கும் ப்ரேக் டைமில் முடித்துவிடுவாள்.

அப்படி ஒரு வாசிக்கும் ,தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
அவள் படித்தது 4ஆம் வகுப்புத்தான் என்று நினைக்கிறேன்.
அழகான முகம்,
நரை படியாத, தலைமுடி.
(அப்போ 'லோரியால்' கிடையாது)
அவளும் அதைப் பற்றி யோசித்திருக்கமாட்டாள்.
நல்ல எண்ணைதடவி சிடுக்கு எடுத்து பந்து போல முடிந்து கொள்வாள்.

இரண்டு நூல் புடைவைகள்
அனேகமாக ஒரு காவிக்கலரில் இருக்கும்.
ஒரு வெள்ளை காடா ரவிக்கை.
அதுவும் முதுகு போர்த்தி இருக்கும்.

அவள் புடைவை கலைந்தோ அழுக்காகியோ
நான் பார்த்தது இல்லை.
இத்தனைக்கும் காலை மூன்று மணிக்குச்
சென்னைக் குடிநீர் வரும் நேரத்தில் பாத்திரங்கள்
கழுவ எழுந்து இருப்பவள்,

வாயில் கௌசல்யா சுப்ரஜா ராமாவோடு,
இடையிடையே கண்ணினுண்
சிறுத்தாம்பு '' என்று வாய் முணுமுணுக்க
அடுப்பு மெழுகிக் கோலம் போட்டு,
காப்பி மஷினில் காப்பிகொட்டை அரைத்து

வாசனையாக டிகாக்ஷன் இறக்கி
வைத்துவிடுவாள்.
அதற்குத் தனி உமியும் சிராய்த்தூளும் போட்ட அடுப்பு.
அழகான வளைந்த நுனிகொண்ட கெட்டில்.
அதில் தண்ணி நிரப்பிக் கொதிக்க வைத்து
ஃப்ல்ட்டரில் இதமாக விட்டு ம்ம்ம்ம்ம்.

அத்தனை மணம் கொண்ட காஃபியை நான் இதுவரைக்
குடிக்கவில்லை.
அப்போது ஆரம்பிக்கும் வேலைகள் குளித்த பிறகு தொடரும்.
வேலைக்குப் போகும் இரு பையன்கள். பள்ளிக்குப் போகும் இரு பையன்கள்.
பிரசவத்துக்கு வந்திருக்கும் மகள்(என் அம்மா),
அவளுடைய முதல் இரண்டு புத்திர ரத்தினங்கள்:-)
(நானும் என் தம்பியும்)
எல்லோருக்கும் வரிசையாகக் காப்பியோ,
கஞ்சியோ வயதுக்கு ஏற்ற மாதிரி கிடைக்கும்.

எட்டரை மணிக்கு மேடையில் இருக்கும் விறகு அடுப்பில்
தயாரித்த சாதமும் பருப்பும் ஸ்வாமிக்குக் கைகாட்டி பிறகு
குழம்பு ,ரசம் ,கூட்டுடன்
தாமரை இலையில் தைத்த சரகுத்தட்டில்

தயாராக இருக்கும்.

அவரவர் வேலைகளை முடித்து, சாப்பிட்டுக் கிளம்பியதும், 11 மணி
வாக்கில் சீனிம்மா சாபிட உட்காரும் அழகே தனி.

கூடவே இருந்து பார்க்கும் எனக்கு அதிசயம் தாங்காது.
ஒரு துளி மிச்சம் வைக்காமல்,
(மிளகாய் வற்றல் தவிர)
அத்தனை சின்ன இலையில் சாப்பிட்டு முடிப்பார்.

ஏன் சீனிம்மா உனக்கு மத்திரம் இலை?:
எங்களுக்கெல்லாம் தட்டு? என்று கேட்டால்

அதெல்லாம் ஒண்ணும் இல்லையே, எனக்குப் பிடிக்கும் இப்படிச் சாப்பிட என்பார்.
வருடங்களுக்கு அப்புறம் தான் அவர் இருந்த
தவம் புரிந்தது.
கணவனுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வராமலேயே
எல்லாரிடமும் உறவு காத்துத் தன் குழந்தைகள் மூலமே எல்லா
வேலைகளையும் செய்து முடித்தார்,.

அவர் பெற்ற புத்திரர்களும் அவர் போலவே
இருந்ததால் ஒன்றுமே தவறி நடக்கவில்லை.

அவரைத்தேடி எல்லோரும் பார்க்க வருவார்கள்.
ஒரு பெரிய லேடிஸ் க்ளப் நடத்தலாம்.

மாசி, புரட்டாசி மாதங்களில் அப்பளம் மாவு இடிக்கப் பட்டு
ஏழு எட்டு அம்மாக்களும் பாட்டிகளுமாக
ஊர்க்கதை பேசிக்கொண்டு அப்பளம் இடுவார்கள்.
மாங்காய் சீசனில் ஒரு நாலு ஐந்து அண்டாக்கள் நிறைய

துண்ட மாங்காய், ஆவக்காய், அடை மாங்காய்,கீத்து மாங்காய்
என்று வகை வகையாய்.
இதைத் தவிர சனி ஞாயிறுகளில்
முறுக்கு,தட்டை என்று ஒரு யாகம் நடக்கும்.

இத்தனைக்கும் அவர் கை நிறையக் காசு வைத்தவர் அல்ல.

மனம் நிறைய அன்பு. எல்லாவற்றையும் சாதித்தது
என்று நினைக்கிறேன்.

எங்கள் திருமணம் முடிந்து அடுத்துப் பிறந்த
மூன்று குழந்தைகளுக்கும்

எங்க அம்மாவீட்டுக்கு வந்து எல்லோரையும்
கவனித்துக் கொண்டு இடையிடையில்
ஒரு கோணல் கண்ணாடியையும் மாட்டிக்கொண்டு
எல்லப் புத்தகங்களையும் படிப்பார்.
சுவைபட பழைய காலக் கதைகளைச் சொல்லுவார்.

கண் முன்னாலே நடப்பது போல ஒரு பிரமை தோன்றும்.

எல்லா நூற்றுக்கணக்கான உறவுகளையும்
(ஓட ஓட) நினைவு வைத்திருப்பார்.
எப்போதோ யாரையோத் திருமணம் செய்து
காசிக்கு ஓடிவிட்டவரைப் பத்தி சொல்லி சிரிக்க வைப்பார்.
மனசு நொந்து நான் நிறைய பார்த்ததில்லை,.
எந்த விழாக்களிலும் அவர் திரை மறைவில் தான்.

யார் முன்னாலும் வரமாட்டார்.
எனக்குத் தான் வருத்தமாக இருக்கும்.

இவளும் இருந்தாள். மறைந்தாள் என்று இல்லாமல் அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.

''சீனிம்மா கொஞ்சம் சிக்காகோ வரியா??''


,

14 comments:

Anonymous said...

நல்லா எழுதி இருக்கிங்க ! தானுண்டு தன் வேலை உண்டு இருப்பவர்கள் எளிதாக தான் பிறர் மனதில் இடம்பிடித்துவிடுவர் !

குமரன் (Kumaran) said...

எங்க அம்மா இல்லாத குறையை பலமுறை நான் அறியாமல் செய்த என் பாட்டியிடம் பேசி ரெண்டு வாரம் ஆச்சு. உடனே தொலைபேச வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது.

மன உணர்வுகளை எந்த வித பாசாங்கும் இல்லாமல் எழுத்தில் வடிக்க உங்களால் மிக நன்றாக முடிகிறது அம்மா. அடியேன் எழுதத் தொடங்கியவுடனேயே ஒரு வித பாசாங்கு வந்துவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கண்ணன்,
நீங்க சொல்றது சரி.
இவங்களும் தன் கடைசி நாள் வரை யாரையும் தொந்தரவு செய்யவ்வில்லை.

வல்லிசிம்ஹன் said...

பல இடங்களில் பாட்டி,தாத்தாக்கள்
எப்படியெல்லாம் அவதாரம் எடுத்து சின்னக் குழந்தைகளைப் பேணுகிறர்கள்.
அம்மா இல்லையா. இதுவரை எனக்குத் தெரியாதே.
கவலை வேண்டாம் குமரன். பெண் இருக்கிறாள்.
அவள் வளர்ந்த பிறகு பாருங்கள்.அம்மாவே திரும்பி வந்த மாதிரி இருக்கும்.
நல்ல வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி.குமரன்.

வடுவூர் குமார் said...

பின் நின்று முன் நடத்தியவர் உங்கள் சீனிம்மா.
கிராமத்தில், அதுவும் ஒரு 40 வருட காலம் பின்னோக்கி போனால் இது போல் பலரைக்காணலாம்.
உடல் உழைப்பு,உடல் உழைப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.
சீனிம்மா செவல் என்னும் நெல்லை கிராமத்திலிருந்து சென்னைக்கு 1935ஆம் வருடம் வந்தவர்.

நான் படிக்காத ஜெஃப்ரி ஆர்ச்சரெல்லாம் கூட , தி.ரா.கி.ரங்கராஜன் படைத்த (தமிழாக்கம்) கதைகளைக் குமுதம் மூலம் படித்து விவரமாக் வாக்குவாதம் செய்வார்.
சும்மா இருக்கத் தெரியாது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

"சீனிம்மா, கொஞ்சம் சிகாகோ வரியா?" என்று நீங்கள் கேட்டு விட்டீர்கள் வல்லியம்மா...

நான் நியூயார்க் வரும் போதே பாட்டிக்கு 78; இப்பவும் சம்பூரணம்மா, நியூயார்க் என்னோடு வாயேன் என்று ஆசையாய் தான் கூப்பிடுவேன்! ஒரு சிரி சிரித்து விட்டு, புஷ் அவர் வீட்டுப் பூனைக்கு இந்தியான்னு பேர் வச்சாராமே! நம்மள மதியாதார் வீட்டுக்கு நான் எப்படிப்பா வரது ன்னு ஒரு எதிர்க் கேள்வி போடுவாங்க பாருங்க! நாங்க எல்லாம் அப்பீட்டு!

உனக்கு எப்படி அம்மம்மா இதெல்லாம் தெரியும்னு கேட்டா, அதுக்கும் ஒரு சிரிப்பு தான்! தமிழ்மணத்துல அவுங்க பதிவு போடாதது தான் பாக்கி! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன் வல்லியம்மா!

இயல்பாக மன உணர்வுகளை எழுத்தில் வடிக்க உங்களால்!
நீங்க இந்த மாதிரி பதிவுகள் அப்பப்ப போட்டு, எங்கள மாதிரி குழந்தைகளுக்கு எல்லாம் (:-)) ஒரு வித வாஞ்சை உணர்வை உருவாக்க வேண்டும் என்று இங்கே விண்ணப்பம் வைக்கிறேன்!

//தானுண்டு தன் வேலை உண்டு இருப்பவர்கள் எளிதாக தான் பிறர் மனதில் இடம்பிடித்துவிடுவர்//

மாதவிப் பந்தல் தளத்தின் மேல் உள்ள வரிகளும் இதன் இன்ஸ்பிரேஷன் தான்!

//நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?
(They also serve who only stand and wait)//

வல்லிசிம்ஹன் said...

ரவி, சீனிம்மா பெருமாள் கிட்ட போகாமல் இருந்தால் வந்திருப்பார்.
அத்தனை பாசம்.

வாழ்க்கையில் இனிமை இருக்கும்போது அவரை நான் மனம் நிறையப் போய் பார்த்தேன்.அவளுக்கும் எனக்கும் சேர்ந்த ஒரு கவலை வந்தபோது நான் கொஞ்சம் அவளை விட்டு விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ரவி, வாஞ்சை ஒன்றுதான் அளவில்லாமல் அள்ளித் தரலாம்.
அதுவும் ஒரு வயது வந்த பிறகு,
கோபம் குறைந்துவிடும்.

குறையவேண்டும்:-)

சத்சங்கம் என்று வரும்போது
நல்ல உணர்வுதானே மேலிடும்!!

N Suresh, Chennai said...

வணக்கம்

உங்களின் அனைத்து படைப்புகளையும் படித்தேன். நேரடியாக பேசுவது போல் உள்ளது. இறைவன் உங்களுக்கு நல்ல திறமை தந்துள்ளார். தொடர்ந்து எழுத உங்களிடம் விண்ணப்பிக்கிறேன். நமது வாழ்க்கை முடிந்தாலும் நம் படைப்புகள் வாழ்ந்து வெல்லும்.

இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.

பாசமுடன்
என் சுரேஷ்

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் சுரேஷ்.
நீங்களும் மனத்தை ஒளிக்காமல் எழுதியது தான் என்னை உங்களுக்குப் பதில்(பின்னூட்டம்) அனுப்ப வைத்தது.
இந்தப் பதிவுகள் எல்லாம்(முன்னோர்) அவர்கள் கொடுத்த படிப்பு தானே.
நீங்களும் உங்கள் குடும்பமும் மன நிம்மதியோடு வாழப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

ரங்கா - Ranga said...

இந்த விடுமுறையில் தான் விட்டுப்போன பதிவுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க முடிந்தது :-) அழகாக எழுதியிருக்கிறீர்கள். என் தூரத்து உறவினர் 'அத்தைப் பாட்டி' (அவரை அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் கோமளம் - ஆனால் அதைச் சொல்லி யாரும் கூப்பிட்டு நான் கேட்டதில்லை) நினைவுக்கு வந்தார்.

ரங்கா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரங்கா.
உங்க காப்பி,டீ யெல்லாம் படிச்சாச்சு.
ஒரு பசுமாடு பற்றி எழுதுவதாகச் சொன்னீர்கள். அதை எதிர்பார்க்கிறேன்.:-0)