About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, October 11, 2006

மஹாபலிபுரம் 1978

ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து எட்டில்
நாங்கள்
முதலில்
பார்த்த
கடற்கரைக் கோவில் காட்சிகள்
இவைகள்

மஹாபலிபுரம் தபால் அலுவலகத்தில்
எங்கள் அப்பா தலைமை அலுவலராக இருந்த 2 வருடங்கள் எங்களுக்கு மிகுந்த சுவாரஸ்யமான நாட்கள்.

பள்ளிபோகும் எங்கள் குழந்தைகளின் விடுமுறை நாட்கள்
அங்கே தான் செலவழியும்.

அப்போது ஒரு அமைதியான , உளிச் சத்தம் அதிகம் கேட்கும்

இடமாக இருந்தது மஹாபலிபுரம்.

எண்ணி முப்பது காரை வீடுகள்.
ஒரு பழைய கோவிலாக தலசயனப் பெருமாள்

பள்ளிகொண்ட திருத்தலம்.
அதை ஒட்டி நவீனத் தோற்றத்தை
அளிக்க முயலும் ஒரு ஜவுளிக்கடை.

நிறைய சிப்பி,சோழி இவற்றால் ஆன பொருட்கள்
விற்கும் நான்கு அல்லது ஐந்து கடைகள்.

வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்காக 'சம்மர்வைன்' என்று பெயர் வைத்த ஒரு இருளும் ஒளியும் கலந்த ஒரு டீக்கடை.

சிற்பக்கூடங்கள்.
ஒரெ ஒரு சின்ன பஸ் ஸ்டாண்ட்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு டிரிப்,
சென்னை செல்லும்
பஸ்.

அதை நம்பி பிழைக்கும் சோடா,பழக்கடைகள்.
மாமல்ல பவன் என்ற பெயர் தாங்கின சாப்பாடு,
டிபன்,காப்பி எப்போதும் கிடைக்கும்
ஹோட்டல் ஒன்று.
மனதுக்கு இதமான ,அதே சமய்ம தூங்கி வழியாத ஊராக இருந்தது.
கத்திரிக்காயும்,இளநீர்,முலாம் பழம் எல்லாம் கோடையில் 50 பைசா விலையில் கிடைக்கும்.
கொஞ்சம் பெரிய தர்பூசணி இரண்டு ரூபாய்.
மாசி மாதம் உற்சவம் போது வெளியூரிலிருந்து
வரும் கிராமத்துவாசிகள்.
பஞ்சி மிட்டாய், பீப்பி ஊதும் சிறுவர்கள்,
கலர் கலராக பனை விசிறிகள்,
ஆந்திராவிலிருந்து வந்து இறங்கும், திருப்பதியில்
முடியிறக்கம் செய்த பக்த கோஷ்டிகள்,.
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் ஆளைத்தள்ளும் கடல் காற்றோடு இவர்களைப் பார்ப்பதே சுவையான பொழுதுபோக்கு.

இப்போது உலகம் மாறிய வேகத்தில் மாமல்லபுரமான மஹாபலிபுரமும்
வேடம் அணிந்த கிராமம் ஆகிவிட்டது.

நேற்று முன்தினம்
உறவினரை அழைத்த்ப் போனபோது அந்த அழகான கிராமம் எங்கெயோ ஓடிப் போயிருந்தது.
பழமையும் போகவில்லை. புதுமையும் விடுவதாக இல்லை.
உளிச் சத்தத்துக்குப் பதில் கட்டிங் மஷின் சத்தம்.
சிற்சில கூடங்களுக்குப் பதில் பெரிய

தூசி நிறைந்த மாஸ் ப்ரொடக்ஷன் செய்யும்
கலை(?)ப் பட்டறைகள்.

ஒரு ஹோட்டல் இருந்த இடத்தில் பல மூன்று நட்சத்திர விடுதிகள். நிரந்தரமாகக் குடியேறிவிட்ட வெளி நாட்டவர்,
போதை மருந்து நடமாட்டம்,

நாற்பதுக்கு மேற்பட்ட சங்கு,சோழி கடைகள்.
புரியாத தமிழ் பேசும் அன்னியர்கள்.

திருத்தி அமைக்கப் பட்ட அழகூட்டப் பட்ட கடற்கரைக்
கோவில்,
உட்கார்ந்து ரசிக்க முடியாத,
அழுக்கு நிறைந்த கடல் மணல்.
ஏமாந்தால் ஆளைத்தள்ளும் குதிரை ஓட்டிகள்.

நல்ல வேளை, கல்லில் வடித்ததால்
மாறாமல் இருக்கும் அர்ச்சுனனும், யானையும்,
சிங்கமும் கறைபடாமல் பாதுகாக்கப் பட்டு இருக்கிறார்கள்.
1300 வருடங்கள் பிழைத்துவிட்ட கலை வண்ணங்கள் என்றும் கதை சொல்லியபடி இருக்கும்.
அதுதான் அங்கெ உண்மை
அங்கே இருக்கும் கல்லில் வடிக்கப்பட்ட விவரங்களைப் படித்தால் பல்லவ மன்னர்கள் ஆயுள்

குறைவாகவே இருந்து இருக்கிறது.
அத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சரித்திரம் படைத்த மா மல்லன் பெயர் நிலைத்து இருக்கும்.

சிவகாமி எந்தப் பாறையில் மானையும், கிளியையும் வரைந்தாளோ என்ற முணுமுணுப்போடு
விடைபெற்றேன்.

6 comments:

லக்கிலுக் said...

அருமையான பதிவு. ரொம்பவும் ரசித்துப் படித்தேன்.

1998லிருந்து இதுவரை 50 முறையாவது மகாபலிபுரம் சென்று வந்திருப்பேன். ஒவ்வொருமுறையும் ஏதாவது மாற்றத்தை உணர்வேன். துரதிருஷ்டவசமாக அது நாம் மகிழக்கூடிய மாற்றமாக எப்பொதும் இருப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

லக்கிலுக்,
நல்வரவு:-0)

அலுக்காதது கடலும், காற்றும்தான் அங்கே.
ஆனால் களை இழந்துவிட்டது.
நாகரீகம் நல்லது இல்லாத வழிகளில் அங்கே நுழைந்து விட்டது.
மாற்றம் தானே என்றும் மாறாதது?
நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நல்ல வேளை, கல்லில் வடித்ததால்
மாறாமல் இருக்கும் அர்ச்சுனனும், யானையும்,
சிங்கமும் கறைபடாமல் பாதுகாக்கப் பட்டு இருக்கிறார்கள்//

நச்சுன்னு சொன்னீங்க வல்லியம்மா! இதப் படிச்சவுடன் எனக்கு ஒரு பெரிய சந்தேகமே வந்து விட்டது!
அப்ப கல்லில் வடித்ததால் இப்ப அக்கால வாழ்வைக் காண்கிறோம் (எந்த இடைச்செருகலும் இல்லாமல்).
அப்பிடின்னா இக்கால வாழ்வை நாளைய தலைமுறை எதில் காணுமோ? (கணிணி எல்லாம் சும்மா...கல் மேல் எழுத்தாகுமா?)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நல்ல வேளை, கல்லில் வடித்ததால்
மாறாமல் இருக்கும் அர்ச்சுனனும், யானையும்,
சிங்கமும் கறைபடாமல் பாதுகாக்கப் பட்டு இருக்கிறார்கள்//

நச்சுன்னு சொன்னீங்க வல்லியம்மா! இதப் படிச்சவுடன் எனக்கு ஒரு பெரிய சந்தேகமே வந்து விட்டது!
அப்ப கல்லில் வடித்ததால் இப்ப அக்கால வாழ்வைக் காண்கிறோம் (எந்த இடைச்செருகலும் இல்லாமல்).
அப்பிடின்னா இக்கால வாழ்வை நாளைய தலைமுறை எதில் காணுமோ? (கணிணி எல்லாம் சும்மா...கல் மேல் எழுத்தாகுமா?)

வல்லிசிம்ஹன் said...

கண்ணபிரான், வாங்க.
ஆமாம் கல்தானே வாழ்கிறது.
நாமோ,
நம்மால் படைக்கப் பட்ட கணினியோ
எத்தனை வருடங்கள் இருக்கும் என்று தெரியாது.

கல் மேல் எழுத்து நாம் கற்ற கல்விதான். வாய் வார்த்தையாக நாம் சொல்லும் சொல்லுக்கும் அந்த
பயன் உண்டு என்று பெரியவர்கள்
சொல்லுவார்கள்.
அப்படித்தானே நம் வேதங்கள் வந்து இருக்கு இல்லையா.
நன்றிம்மா.அழகா கவனிச்சுப் பின்னூட்டம் போடறீங்க.

radhakrishnan said...

அருமையான பதிவு.ஒரு 30 வருடங்களுக்குள் இவ்வளவுஅழகான
சூழலை நம் மக்களால் எப்படிக்கெடுக்க
முடிந்த்து.அதற்கு முன்பு இவ்வளவு
காலம் எப்படி கெடாமல் இருந்த்து?
யாரைத்தான் நோவது.